சனி, 6 அக்டோபர், 2018

காஃபி வித் கிட்டு – ராம் லட்டு – பரபரத்த கைகள் – மாரு மன் மோஹிகயோ - முதுமை


காஃபி வித் கிட்டு – பகுதி – 9

சாப்பிடலாம் வாங்க – ராம் லட்டு:


ராம் லட்டு....

வடக்கில் “ராம் லட்டு” என்ற பெயரில் ஒரு லட்டு விற்பனை செய்கிறார்கள். லட்டு என்றதும், ஆஹா இனிப்பு தானே, அதுவும் ராம் பெயரில் இனிப்பு என்ற ஆர்வத்துடன் நீங்கள் படிக்கலாம். ஆனால் இது இனிப்பு அல்ல! பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வித ஸ்னாக்ஸ் இது. நடைபாதைக் கடைகளில் இந்த ராம் லட்டு தில்லியில் நிறையவே கிடைக்கும். ஒரு தொன்னையில் நான்கு ஐந்து ராம் லட்டு போட்டு, மேலே பச்சை சட்னி [தனியா சட்னி] சற்றே விட்டு, முள்ளங்கியை பச்சையாகத் துருவிப் போட்டுத் தருவார்கள்! பத்து ரூபாய் தான் ஒரு தொன்னை! நன்றாகவே இருக்கும். சமீபத்தில் எடுத்த ராம் லட்டு படம் மேலே!

சாலைக் காட்சி – படம் எடுக்க பரபரத்த கைகள்:

இந்த வாரம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு நடை – அப்படிச் சென்ற போது பார்த்த ஒரு காட்சி – ஒரு முதியவரும் அவரது துணைவியும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். முதியவர் தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். கடைத்தெருவில் பழம் விற்பவர் அவர். சைக்கிளின் பின் ஒரு பெரிய மூங்கில் தட்டு வைத்துக் கட்டியிருந்ததால் நடந்தே வருகிறார்கள். சைக்கிள் முன் இருக்கும் கம்பியில் மூதாட்டியை அமர வைத்து ஓட்டி வர வயது இடம் தரவில்லை போலும்! இது சாதாரண காட்சி தானே என்று உங்களுக்குத் தோன்றலாம். இதற்கடுத்து நான் சொல்லப்போவது தான் என் கைகளை பரபரக்கச் செய்தது – கேமரா இல்லையே என்று மனதில் நினைக்கத் தோன்றியது! என்ன தான் அலைபேசி இருந்தாலும், ஏனோ கேமரா போன்ற திருப்தி அலைபேசி மூலம் படம் எடுக்கும் போது வருவதில்லை.

என் கைகளை பரபரக்க வைத்த அந்தக் காட்சி – சைக்கிள் பின்னால் வைத்திருந்த மூங்கில் தட்டில் பெரியவரின் பேரனோ/பேத்தியோ படுத்துக் கொண்டு காட்சிகளை ரசித்தபடி வந்து கொண்டிருந்தது! ஒரு வயதுக்குள் தான் இருக்கும் அந்தக் குழந்தைக்கு – பெரிய கண்கள், துருத்துருவென இருந்தது – பார்த்தபடியே சில நிமிடங்கள் நானும் கூடவே நடந்து கொண்டிருந்தேன்.  இப்படியான காட்சிகளைச் சிறைப்படுத்த நினைப்பது தானே வழக்கம்! எப்போதும் கேமராவை மாட்டிக்கொண்டே சுற்ற முடியுமா என்ன!  

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - Gujarati:

இந்த வார ரசித்த பாடலாக ஒரு குஜராத்தி பாடல்! முகேஷ் அவர்களின் குரலில் ஒரிஜனல் பாடல் என்றாலும் நாம் இன்று பார்க்கப் போவது ஐஸ்வர்யா என்ற பாடகியின் குரலில்… கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் பிடிக்கும்.



இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் எங்கள் பகுதியில் நடந்த ஒரு விழாவில் படங்கள் எடுத்தேன். சில முதியவர்கள், சில குழந்தைகள் என தேடித்தேடி எடுத்த படங்கள். எல்லாவற்றையும் இங்கே வெளியிட முடியாது – ஒரு முதியவரின் கைகளை மட்டும் தனியாக zoom செய்து எடுத்த படம் – கற்பூர ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள – கைகளை நீட்டிய போது எடுத்த படம். கைகளில் உள்ள சுருக்கமே அவரின் முதுமையைச் சொல்லும். கற்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளும்போது அந்த முதியவர் கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டிருப்பார் என்ற எண்ணம் எனக்குள் – உங்களுக்கு என்ன வேண்டியிருப்பார் என்று தோன்றியது? சொல்லுங்களேன் பின்னூட்டத்தில். சமீபத்தில் தானே முதியவர் தினம் வந்தது – அதற்கான படமாக இருக்கட்டுமே!  படம் உங்களுக்குப் பிடித்ததா என்றும் சொல்லுங்களேன்!

இந்த வாரத்தின் ராஜா காது கழுதைக் காது:

இந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டினருகே நடந்து வந்த போது – எதிர்புறம் மடித்துக் கட்டிய வேட்டி, தோள்களில் தொங்கும் ஜோல்னா பை சகிதம் இரண்டு பேர் தமிழில் பேசிக் கொண்டு வந்தார்கள் – இது வரை எங்கள் பகுதியில் பார்த்திராத தமிழர்கள் – அவர்கள் பேசியது! “நாலாயிரம் ரூபாய் மாச வாடகை! எங்கேருந்து கொடுக்கறது? காசோட அருமை எங்கே தெரியுது அவங்களுக்கு!” யாரைப் பற்றியோ குறை சொல்லிக்கொண்டு போகிறார் ஒரு பெரியவர் மற்றவரிடம்!

இந்த வாரத்தின் அறிமுகம் – இராஜேஷ் சங்கரபிள்ளை:

நண்பர் பத்மநாபனின் உறவினர்.  ஆசிரியராக பணிபுரிபவர். நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர். நண்பர் மூலம் அறிமுகமானது அவர் எழுத்து. எடுத்துக்காட்டாக அவரது ஒரு முகநூல் பதிவிலிருந்து கொஞ்சம்… 

ஒரு ஆண் மகனுக்கு வேலை தேடலே; வாழ்வினில் பெரிய சவாலாக இருக்கும், இது நானறிந்த உண்மை. வசதியான குடும்பத்தில் பிறந்த நான், வாழ்வியல் சூதுகளால், நிலபுலன்களை இழந்த நிலையில் பெற்றோர் .பொருட்செல்வத்தையும்; குழந்தை செல்வத்தையும் அதிகமாய் வாய்க்கப் பெற்ற குடும்பம்; கடைசியாய் நான்... எப்படியோ, தட்டு தடுமாறி முதுகலை மற்றும் ஆசிரியர் பட்டதாரி படிப்பை முடித்த நிலை. அம்மாவும்; அப்பாவும்; திரு நிறு பூசி; வண்டி ஏற்றிவிட்டாச்சு பெரு நகருக்கு. பெருமையா போறேன். போகையிலே, எங்கம்மா, சொன்னா; லே, சித்தி இருக்கா, மாமா இருக்கா, எல்லார்ட்டையும், பாத்து, பதமா நடந்து ஒரு வேலையை பிடிச்சிடுன்னு. அவனவன் குளத்தங்கரை பக்கத்துல மீன் பிடிக்கதை தான் பாத்துருக்கேன், எப்படி போய்; வேலையை பிடிக்கதுன்னு கேள்வி கேட்டேன்; அம்மாவும் சிரிச்சா; நானும் சிரிச்சேன்.

அங்க போன பிறகு தான் தெரிஞ்சது; அவனவன் பாடை கழிக்கது க்கு தான் நேரம் பத்தும்; இந்த லொடுக்கு பாண்டியை கண்டுக்கிறதுக்கு நேரம் இருக்கும் தெரிஞ்சது. எப்படியோ, சென்னை போயாச்சு, உறவுகளின் வீட்டு படிகளை நாடி; நடுத்திண்ணையில் காப்பியை உறிஞ்சும் போது தான் தெரிந்தது அவர்களும் பெரு நகர கைதிகளே என்று. எப்படியோ; தங்கி, வேலை தேடும் படலம் ஆரம்பித்தது; குமரிக்கும் அந்த இங்கிலி பிஷ்க்கும் வெகு தொலைவு. என்னை மாதிரி, திராவிட எழுச்சி காலத்தில் பிறந்த குருத்துக்களுக்கு; தமிழும் தொங்கலு; இங்கிலி பிஷ்யும் தொலைவு. இதுல வேற முற்பட்ட இனம், மண்டை முழுக்க அறிவு.அப்படி தான் எல்லாரும் சொல்லுவா. (வெறும் பெரும் காய டப்பா) ஆனா, வெளிக்காட்ட தெரியாது.

முத இன்டர் யூ போயாச்சு; எழுத்து தேர்வு; வேதம்; புராணம், .இராசா, எல்லாரும் கேள்வில புரண்டு எழுப்புகா; எல்லாம் அத்து படி; பாஸாகி ஆச்சு; அதுக்கு பெறகு; வகுப்புல பாடம் நடத்த னும், 40 பசங்க, முதல்வர் பின் இருக்கைல பக்குவமா; என்னை பாக்குறார். நான் அவரை பார்க்க, First World War என தலைப்பை எழுதிட்டு ; வியர்த்து ஊத்த; சட்டை நனைய ; ரெண்டு வரியை : இங்கிலி பிஷ் ல பாக்க மா சொல்லிட்டு முழிக்கேன். எனக்கும் டைப்படிக்கு, பையலுக, பேந்த மாறி, இவன எங்க பிடிச்சானுக பாக்கது; மாதிரி இருந்தது. சாக்பூஸை வைச்சிட்டு வெளியே வந்துட்டேன். முதல்வர் திரும்ப, திரும்ப கேட்டாரு; நான் ஒன்னுமில்ல சாரு என சொல்லிட்டு வெளிய வந்துட்டேன்.

இப்படி பல நேர் முகங்கள். எப்படியோ, கடிச்சு பிடிச்சு; மெட்ராஸை சுத்தி சுத்தி; சாப்பிட்டும்; சாப்பிடாலமலும்; சொந்த பந்தங்களும்; தெரத்தி; அதுல ஒரு நல்ல உறவு வழி கடத்த; எப்படியோ, ஒரு பள்ளிக் கூடத்தை பிடிச்சிட்டேன். அங்க படுக்க, பாடம் நடத்த எடம் குடுத்தா ; பின்னால, அங்க உள்ள பயலுகிட்ட இங்கிலி பிஷ் படிச்சு (இப்படி என்னை மாதிரி ஏகப் பட்ட கூட்டம் இருக்கு) ; ஒரு வருசத்தை தள்ளி விட்டேன். பின்னால ரெட் ஹில்ல, ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில, நாலு வருசம் தள்ளிட்டேன்... அந்த கூத்தை எழுதினா; சிரிச்சு, சிரிச்சு வயறு புண்ணாகிறும். பின்னால, 2006ல் யாரு செய்த புண்ணியமே, தேர்வு எழுதி அரசுப் பள்ளிக்கு வந்துட்டேன். அங்கை பல சின்ன மாணிக்க கூத்தெல்லாம் பண்ணிட்டு, உங்க முன்னால கிறுக்கிட்டு இருக்கேன். வாழ்க்கையின்னா ; ஒவ்வொரு நொடி சவாலு தான் ; சுவைத்து ப் பார்; அதன் ரகசியம் தெரியும். இனிப்பும் கசப்பும் கலந்தது தான் பயணம்; அதில் கலந்தே பயணிப்போம்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அட திருவரங்கம் வந்திருக்கீங்களா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கீதா ஜி.

      ஆமாம் நேற்று காலை வந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. கிட்டு லட்டுவோடு வந்திருக்காரா...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா கிட்டுவும் லட்டுவும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ராம் லட்டு ஒரே ஒரு முறை டேஸ்ட் செய்ததுண்டு...என் தங்கை வீட்டிற்கு வந்திருந்த போது...

    நன்றாகவே இருந்தது அப்புறம் ரெசிப்பி அறிந்து கொண்டு வீட்டில் செய்ததுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் இருப்பதால் நிறைய சாப்பிட்டதுண்டு. இப்போதெல்லாம் சாப்பிடுவது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட். குட்மார்னிங் கீதா.

    முள்ளங்கியைத் துருவிப் போட்டால் ஒரு மாதிரி இருக்குமே.. பச்சையாகத்தானே? பத்தையாக நறுக்கி உப்பு தொட்டு சாப்பிடும் வழக்கம் உண்டு எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      குளிர்காலத்தில் முள்ளங்கி அப்படியே சாப்பிடுவது நல்லது. தில்லியில் கிடைக்கும் முள்ளங்கி நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ப்போதும் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சூத்ரா முடியாது.. ஆனால் அலைபேசி இருந்திருக்குமே வெங்கட் கையில்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. எப்போதும் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சுத்த முடியாது! :)

      அலைபேசி காமிராவில் எடுக்க அத்தனை பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஒரு கஷ்டம்... முந்தைய பதிவில் எ விட்டுப்போச்சு.. முடிந்தால் இதை அங்கே தூக்கி வைத்து விடுங்களேன்... காபி பண்ணும்போது இப்பல்லாம் அப்படி ஆகிவிடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி ஏன் பண்ணணும்? என்னோட த.எ. அந்தப் புது மடிக்கணினியில் சுரதா மூலம் தான் கொடுக்க முடியும்! அதனால் காபி, பேஸ்ட் பண்ணுவேன். இதிலே அப்படி இல்லை! நேரடியாத் தட்டச்சறேனே! அப்படி நீங்களும் நேரடியா அடிங்க! :)

      நீக்கு
    2. காபி பேஸ்ட் நிறைய சமயங்களில் அனர்த்தமாகி விடுவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

      நீக்கு
    3. நேரடியாக தட்டச்சு செய்தாலும், சில சமயங்களில் காபி பேஸ்ட் தேவையும் இருப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. அழகிய படம். முதியவர் "நாம் தொடும்போது அந்த தீபம் நம் கை (காற்று) பட்டு அணைந்து விடாதிருக்கவேண்டுமே.." என்றுதான் முதலில் வேண்டியிருப்பார்! ஹா.. ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கற்பனை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. மாசவாடகை நாலாயிரம் ரொம்ப சீப் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைவு தான். அவருக்கு அதிகமாக இருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. ராம்லட்டு, சாப்பிட்டேனா, சாப்பிடலையானு தெரியலையே! போனால் போகட்டும். அலைபேசியில் படம் எடுத்திருக்கலாம் இல்லையோ? திருவரங்கம் வந்திருக்கீங்களா? நவராத்திரிக்கு இங்கே தானா? கற்பூரத்தை ஒத்திக்கும்போது எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்னு வேண்டி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  11. ராம்லட்டு பார்த்தவுடன் லட்டு என்று சொல்கிறார் ஆனால் போண்டா போல் இருக்கே என்று நினைத்தேன். ராம் லட்டு அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பல்சுவைப் பதிவு. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. முதியவர் எல்லோரையும் நல்லாவைப்பா என்று வேண்டி இருப்பார்.
    ஒரு முதிய அம்மா பிரதோஷம் வரும் போதெல்லாம் மேல் சுகத்தை கொடு, கை,கால் சுகத்தைக் கொடு என்றுதான் வேண்டுவார் சத்தமாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. இனிப்பும் கசப்பும் கலந்தது தான் பயணம்; //
    உண்மைதான்.
    நண்பர் நல்லா எழுதி இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. ராம் லட்டு புதிய தகவல்.

    சிறைப்பிடிக்க முடியாமல் போன காட்சியை உங்கள் எழுத்துநடை அழகாகச் சிறைபிடித்துக் காட்டி விட்டது.

    ஆரத்தி படம் அழகு.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. நண்பரின் நண்பர் எழுத்து நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள் அவருக்கு! நாகர்கோவில் வட்டார வழக்கு!! அருமை. எங்களுக்கும் ஊர் நினைவுகள் பல வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....