செவ்வாய், 6 நவம்பர், 2018

தீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.


 
தலைநகரில் நாளைக்கு தான் தீபாவளி! இன்றைக்கு அலுவலகம் உண்டு. நாளை தான் விடுமுறை. தீபாவளி கொண்டாட்டங்கள் இந்த முறை எங்களுக்கு இல்லை என்பதால் தமிழகம் வரவில்லை. இங்கே நாளை முழுவதும் கொண்டாட்டம் தான். ஏற்கனவே தலைநகரில் மாசுத் தொல்லை அதிகம். இன்னும் இரண்டு நாட்களுக்கு ஏகப்பட்ட மாசு தான். இங்கே வெடி வெடிப்பது போல வேறு எங்கும் இல்லை. இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு கூட வெடிச்சத்தம், விதம் விதமான ஓலங்களோடு விண் நோக்கிப் பாயும் வெடிகளும், வண்ணங்களும் எனத் தொடரும் கொண்டாட்டங்கள். என்னதான் நீதிமன்றம், காவல் துறை தடைவிதித்தாலும், இந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.


இந்த முறை வெடிக்கடைகள் பல திறக்கவே இல்லை. சில வருடங்களாக சீனப் பட்டாசுகளின் ஆதிக்கமும் ரொம்பவே இருந்தது. இந்த முறை சில நாட்கள் முன்னர் வீட்டின் அருகே இருக்கும் சதர் பஜார் சென்ற போது சீனப் பட்டாசு விற்பனை சில இடங்களில், சின்னச் சின்ன கடைகளில் பார்க்க முடிந்தது. பெரிய கடைகள் அப்போது திறந்திருக்கவில்லை. இங்கே இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும். தீபாவளி என்றாலே தலைநகர் வண்ணமயமாக மாறி விடும். நம் ஊரில் பொங்கலுக்கு முன்னர் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பார்கள் என்றால், இங்கே தீபாவளிக்கு முன்னர் வெள்ளை அடிப்பார்கள். வீடுகளின் வாயில்களிலும் பின்புறத்திலும் நிறைய தொடர் விளக்குகளை [Serial Lights!] எரிய விடுவார்கள். சீரியல் விளக்குகள் அத்தனையும் சீனத் தயாரிப்பு!



வாசல்களில் முன்பெல்லாம், மெழுகுவர்த்தி – வண்ண வண்ணமான மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பார்கள். இப்போதும் இவை உண்டு என்றாலும், தொடர் விளக்குகளுக்குத் தான் அதிக வரவேற்பு – அதிலும் எத்தனை எத்தனை ரகங்கள். மாறி மாறி அவை ஒளிவீச ரொம்பவே அழகாக இருக்கும். எங்கள் வீட்டில் கூட முன்னரெல்லாம் சீரியல் விளக்குகளை சரம் சரமாகத் தொங்க விட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் போடுவதில்லை. விதம் விதமான மெழுகுவர்த்திகள் இந்த நாட்களில் கிடைக்கின்றன. பல மாற்றுத்திறனாளிகளில் இந்த மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ததாக இருக்கும் என்பதால் மெழுகுவர்த்திகள் வாங்கி வைப்பதுண்டு. மெழுகுவர்த்தி தவிர வண்ணத் தோரணங்கள் கட்டியும், லக்ஷ்மியின் பாதங்கள், ரங்கோலி ஸ்டிக்கர்கள் போன்றவற்றை வீட்டு வாயிலில் ஒட்டியும் மகிழ்ச்சி கொள்வார்கள். நாம் பொங்கலில் ரங்கோலி போடுவது போல இங்கே தீபாவளிக்கு ரங்கோலி உண்டு!






நம் ஊர் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமே! இங்கே ஐந்து நாள் கொண்டாட்டம். முதல் நாள் தன் தேரஸ். அன்றைக்கு எல்லோரும் ஏதாவது ஒரு பாத்திரமாவது வாங்குவார்கள் – பணம் படைத்தவர்கள் தங்கம் வாங்குவார்கள்.  அடுத்த நாள் Cசோட்டி தீவாளி [இது தான் நம் ஊர் தீபாவளி]. அடுத்த நாள் தான் இங்கே தீவாளி – அதாவது Bபடி தீவாளி! அதற்கும் அடுத்த நாள் கோவர்த்தன் பூஜா. ஐந்தாம் நாள் Bபாய் dhதூஜ்! ஐந்து நாட்கள் கொண்டாட்டம் என்றால் பாருங்கள் – பெரும்பாலான வீடுகளில் விழாக்கோலம் தான்! தன் தேரஸ் அன்று பாத்திரம் வாங்குவார்கள் எனச் சொன்னேன் அல்லவா, அதற்கும் ஒரு கதை இருக்கிறது. எதற்காக பாத்திரம்? ஏன் அந்தக் கொண்டாட்டம்…..





பாற்கடலை கடைந்த கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படிக் கடையும் போது வந்தவர் மேலுலகத்தினரின் மருத்துவரான தன்வந்த்ரி – இந்த நாளில் தான் அமிர்தக் கலசத்துடன் அவர் வந்ததாக ஐதீகம். அதனால் தான் இந்த நாளில் ஒரு பாத்திரமாவது வாங்குகிறார்கள். இரண்டாம் நாள் நரக சதுர்த்தி. மூன்றாம் நாள் தீவாளி – இராமன் வனவாசம் முடிந்து, இராவணனை வதம் செய்து, சீதை மற்றும் இலக்குவனுடன் அயோத்தி திரும்பிய நாள் என்பதால் இந்தக் கொண்டாட்டம். நான்காம் நாள் கோவர்த்தன் பூஜா – விருந்தாவனத்தில் இந்தப் பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கிருஷ்ண பரமாத்மாவினை வணங்குபவர்கள் பூஜை செய்து, chசப்பன் Bபோக்g எனப்படும் 56 வகை உணவுகளை பகவானுக்குப் படைத்து விநியோகம் செய்வார்கள்! அன்னக்கூட் நிகழ்ச்சியும் நடைபெறும்.



ஐந்தாம் நாள் Bபாய் dhதூஜ் – ரக்‌ஷா bபந்dhதன் போலவே சகோதர-சகோதரிகளின் பாசத்தினை மேம்படுத்தும் ஒரு பண்டிகை. தங்களின் சகோதரர்களின் நல்வாழ்விற்காக, சகோதரிகள் இறைவனை வணங்கி கொண்டாடும் ஒரு பண்டிகை. ஐந்து நாட்களும் இங்கே கொண்டாட்டம் தான். பெரும்பாலான அலுவலகங்களில் இந்த ஐந்து நாட்களும் வேலை ஓடாது. ஒருவருக்கொருவர் இனிப்புக்களையும் உலர் பழங்களையும் கொடுத்து வாழ்த்துவதிலேயே நேரம் போய்விடும். உலர் பழங்கள் விதம் விதமான தட்டுகளில் வைத்து இங்கே விற்பனை செய்வார்கள். மேலும் மிட்டாய் வகைகள், கார வகைகளின் பெட்டிகள் பல வடிவங்களிலும், விலைகளிலும் கிடைக்கும். அவற்றை வாங்கி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள்.



தலைநகரின் பல பகுதிகளில் தீபாவளி மேளா எனக் கொண்டாட்டங்கள் உண்டு. CRPF நடத்தும் தீபாவளி மேளா தலைநகரில் ரொம்பவே பிரபலம். சில முறை அங்கே சென்றதுண்டு. இந்த முறை செல்ல நினைத்திருக்கிறேன். அப்படிச் சென்றால் கிடைக்கும் அனுபவங்களையும், இந்தக் கொண்டாட்டத் தினங்களில் கிடைக்கும் சுவையான அனுபவங்களையும் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்….





மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். சீனத் தயாரிப்புகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் நாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      கடைத் தெருவில் முக்கால் வாசி சீனத் தயாரிப்பாகத் தானே இருக்கிறது....

      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஊரே விழாக்கோலமாக இருக்கும் என்பது சிறப்பு. நாம் முன்னர் திருமண வைபவங்களை ஐந்து நாட்கள் செய்வதுண்டு. இப்போது அதெல்லாம் குறைந்து விட்டது. அங்கு தீபாவளிக்கு கொண்டாட்டங்கள் ஐந்து நாட்கள் என்றால் ஐந்து நாட்கள் அரசுமுறை விடுமுறையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பாட்டி/பெரியம்மா திருமணம் ஐந்து நாட்கள் நடந்தது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஒரு நாள் ஆகிவிட்டது பல திருமணங்கள்....

      ஐந்து நாட்கள் விடுமுறை அல்ல! ஒரே ஒரு நாள் அதுவும் இந்த ஊர் தீபாவளியான நாளை மட்டும்! நம்ம ஊர் தீபாவளியான இன்றைக்கு அலுவலகம் உண்டு!

      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படங்களையும் தகவல்களையும் ரசித்தேன்.

    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    தீபஒளி நல்வாழ்த்துகள் தங்களுக்கும் ஆதி மற்றும் ரோஷினி குட்டிக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. ஆமாம் வட இந்தியாவில் ஐந்து நாட்கள்....கோலாகலமாக இருக்குமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஐந்து நாட்களும் கொண்டாட்டம் தான்.....

      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. அப்புறம் வரே பதிவு வாசித்துக் கருத்திட...ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையாக வாங்க.... நிறைய வேலை இருக்குமே....

      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. இங்கு மூன்று நாட்கள் விடுமுறை...6,7,8

    பட்டாசு சத்தம் அவ்வளவாக இல்லை.

    சென்னையில் இரண்டு மணி நேரம் தான் வெடிக்கலாம் என்று ஆர்டராம்...போலீஸ் ரோந்து போகனும் என்றும் சொல்லப்பட்டிருக்காம்...ஸ்ரீராம் தான் சொல்லணும் நடைமுறையில் என்ன என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே நாளை தான் தீபாவளி என்பதால் பட்டாசு சப்தம் இல்லை.

      இங்கேயும் வெடி வெடிக்க சில கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.

      சென்னை பற்றிய தகவல்கள் இதுவரை எதுவும் படிக்கவில்லை.

      மூன்று நாட்கள் விடுமுறை - மகிழ்ச்சி....

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் வெங்கட்ஜி!

    எங்களுக்கு இங்கு இன்று லீவு. ஒரு நாள் லீவு.

    ஆமாம் வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடுவார்கள் என்று அறிந்திருக்கிறேன்...

    இங்கு பட்டாசு வெடிப்பதில்லை. கோயில் திருவிழாவின் போது சில இடங்களில் வேட்டு வைப்பார்கள்..

    தீபாவளிக் கதையும் அறிந்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட உங்களுக்கும் ஒரு நாள் தான் லீவா.... கேரளத்தில் தீபாவளி அத்தனை விசேஷமாகக் கொண்டாடுவதில்லை தானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  10. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

    சீன வெடி இறக்குமதிக்கு பின்னால் சதி இருக்கிறதாக கேள்வி (புகை வழியே வியாதியை பரப்புவது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகை இருக்கிறதோ இல்லையோ பகை இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. தீபாவளிக்கு ஶ்ரீரங்கத்தில் இல்லையா?

    உங்கள் மூவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.... தலைநகரில் தான் இருக்கிறேன். இம்முறை தீபாவளி எங்களுக்கு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. அனைவருக்கும்
    அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    பதிவு மிக அருமை.
    படங்கள் அழகு.
    உங்களுக்கும் இந்த முறை தீபாவளி கிடையாதா?
    எங்களுக்கும் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா... எங்களுக்கும் தீபாவளி கிடையாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. படங்கள் அனைத்தும் வொண்டர்ஃபுல் வெங்கட். ரொம்ப சந்தோஷம்.
    அடுத்ததீபாவளிக்கு ரோஷ்ணி, ஆதியை அங்கே அழைத்துச் செல்லுங்கள். மிக அருமையான விவரிப்பு. இனிய நன்னாள் வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  15. தீபஒளித் திருநாள் நலவாழ்த்துகள்.

    வர்ண மொழுகுதிரி புகைப்படம் அழகு. அனைத்து புகைப்படங்களுமே அசத்தல், விபரங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்துமே இணையத்திலிருந்து எடுத்தவை தான் நிஷா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....