வியாழன், 6 டிசம்பர், 2018

பீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்





கண்ணாடி ஜாடிகளில் தின்பண்டம்...



முன்பெல்லாம் நம் ஊரிலும் பெட்டிக் கடைகளில் பிஸ்கெட் முதல் பட்டாணி வரை, ஊறுகாய் முதல் சோன்பப்டி வரை, என பல விதமாகச் சொல்லிக் கொண்டு போகும் அளவுக்கு எல்லாமே கண்ணாடி ஜாடிகளில் தான் வைத்திருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் அரக்கன் இந்த ஜாடிகளை ஒதுக்கி ஓரம் தள்ள எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் பல்லை இளிக்கிறது! உடைஞ்சா தூக்கிப் போட்டு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார் கடைக்காரர். தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் மண்ணில் அப்படியே பல வருடங்கள் ஆனாலும் அழியாமல் நச்சுப் படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னமும் நம் ஊரில் சில கிராமங்களில் கண்ணாடி ஜாடிகளில் பொருட்களை வைத்து விற்கும் கடைகள் இருக்கலாம். நகரங்களில் பெரும்பாலும் இல்லை.


கடை முன் மண் அடுப்பு.

பட்னா நகரில் நான் தங்கியிருந்த ஹாலிடே ஹோம் ஊழியர்கள் மற்ற வட இந்தியர்களைப் போலவே ரொம்பவே சுறுசுறுப்பு! காலையில் எழுந்திருப்பதே ஏழு மணிக்கு மேல் தான். மாலை நேரத்தில் தேநீர் கேட்டால் கிடைக்கிறது – பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு. அதுவே ஏழு மணிக்கு மேல் என்றால் தேநீர் கிடைக்காது – இரவு உணவு தயாரிக்க வேண்டும் என அங்கேயும் இங்கேயும் சென்று வந்தார்கள். சரி வெளியில் சென்று தேநீர் அருந்தலாம் என்று வெளியே ஆசியானா - தீகா சாலையில் நடக்க, அங்கே பார்த்த கடை ஒன்று எங்களை ஈர்த்தது. இத்தனைக்கும் அங்கே தேநீர் இல்லை. வெளியே மண்பூசிய மேடை ஒன்றில் நடுவே ஒரு பெரிய வட்ட வடிவ துளை – அதன் கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்க, துளையின் மீது இரும்பு வாணலி.


அவல் பொரிக்கும் உழைப்பாளி....

ஒரு மனிதர் அமர்ந்து அவல் பொரித்துக் கொண்டிருந்தார். அவலை இந்தப் பக்கங்களில் போஹா எனவும், Chசிdட்வா எனவும், Chசூடா எனவும் அழைக்கிறார்கள். பீஹாரில் பொரித்த Chசிdட்வா உடன் தயிர் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அதனால் இந்த அவல் பொரிக்கும் கடைகள் சில இங்கே இன்னமும் இருக்கின்றன. அப்படி ஒரு கடை தான் நாங்கள் பார்த்தோம். இரவே இப்படி பொரித்து மூட்டைகளில் கட்டி வைத்தால், காலையில் வந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வார்களாம். அவர் அவல் பொரிப்பதை அங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நெருப்பின் அருகே இருப்பதால் கால்களில் சூடு நன்கு ஏறும் என்றாலும் அமர்ந்தபடி வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார் அந்த உழைப்பாளி.


எல்லா ஜாடியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம்...

கடையைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பல வருடங்களாகவே இது தான் தொழில் என்றும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்தால் தான் நமத்துப் போகாமல் இருக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். வெறுமனே நின்று பேசி, படங்கள் எடுத்துக் கொண்டிருந்த எங்களிடம், அவர் கடையில் இருக்கும் தின்பண்டங்களைச் சுவைத்துப் பார்க்கச் சொன்னார் – அதானே… சும்மா நின்று பேசிவிட்டு, படங்கள் எடுத்துக் கொண்டு போனால் வியாபாரம் ஆகவேண்டாமா? ஜாடிகளில் விதம் விதமான பொருட்கள் – பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, பொரி, கடலை மாவில் செய்த காராசேவு, ஓம்பொடி பொன்றவை, ஊறுகாய் என எல்லாமே இருந்தது. என்ன சாப்பிடுவது என எங்களுக்குத் தெரியவில்லை. நீங்களே ஏதாவது கொடுங்களேன் என அவரிடமே தேர்வை விட்டோம்.


எல்லாம் கலந்த கலவையாக..... பதினைந்து ரூபாய்க்கு...

கால் கிலோவா, அரை கிலோவா எனக் கேட்ட அவரிடம், இல்லை இல்லை இப்போது சாப்பிட மட்டும் கொடுங்கள் போதும் எனச் சொல்ல, பதினைந்து ரூபாய்க்கு தருகிறேன் என ஒரு கரண்டியைக் கையில் எடுத்தார்! கூடவே பேப்பரில் செய்த கவர் [உறை]. ஒவ்வொரு ஜாடியாகத் திறந்து பல்வேறு பொருட்களை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து கவரில் போட்டார் – சுமார் பத்து ஜாடிகளைத் திறந்து தின்பண்டங்களை எடுத்து இருப்பார். எல்லாவற்றையும் கவரில் போட்ட பிறகு, கரண்டியைக் கீழே வைத்து விட்டு, கவரை நன்கு குலுக்கினார் – மசாலா சேர்க்கவா எனக் கேட்க, வேண்டாம் எனச் சொல்லி விட்டோம். எங்கள் கையில் கொடுத்த பிறகு பதினைந்து ரூபாய் கொடுத்தேன். சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றார் கடைக்காரர்.


கடையில் நானும் நண்பரும்....

சாப்பிட்டுப் பார்க்க, நன்றாகவே இருந்தது – இந்த ஊரில் chசட் pபடா என்று சொல்வார்கள் – அதாவது கார சாரமாக இருந்தது. பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய தின்பண்டம் – நன்றாகவே இருந்தது. கடைக்காரருக்கும், அங்கே இருந்த உழைப்பாளிக்கும் நன்றி சொல்லி, தேநீர் கடையைத் தேடினோம். கடையும் இருந்தது. அங்கே இருந்த உழைப்பாளியும் கவர்ந்தார். தேநீர் கடை விஷயங்கள் தனிப்பதிவாக பிறிதொரு சமயத்தில்!  

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    பதிவு வாசிக்க பின்னர் வருகிறேன்...இன்று கொஞ்சம் வேலைப்பளு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். கண்ணாடி ஜாடிகள் விஷயம் கவர்ந்தது. நாம் பிளாஸ்டிக் அரக்கனை எப்போது ஒழிக்கப்போகிறோமோ... முடியுமா என்பதும் கேள்விக்குறி... நமது பின்னர் தலைமுறைக்கு துரோகம் சித்து கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரோகம் செய்து கொண்டிருக்கிறோம். உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. வட மாநிலங்கள் மட்டுமில்லை. இங்கேயுமே பல ஊர்களில் இப்போதெல்லாம் காலை ஆறுமணிக்குக் காஃபி, தேநீர் கிடைப்பதே இல்லை. நீங்க எழுதி இருக்கும் இந்தச் சட்படா அநேகமா எல்லா ஊர்களிலும் கிடைக்கும். சமயங்களில் ரயிலில் கூடக் கொண்டு வராங்க. ஆனால் ரயிலில் வாங்கிச் சாப்பிட பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. மிக அருமையான அனுபவம்.
    ஜாடிகள் கண்ணை கவர்ந்தன.
    தின்பண்டங்கள் கலந்த கலவை சுவையாக இருந்தது என்று சொன்னவுடன் கடைக்கார்ர் மகிழ்ந்து இருப்பார்.
    உழைப்பை பாராட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது.
    மிகவும் சுத்தமாய் அழகாய் அடுக்கிய டப்பா, பாட்டில்கள் கண்ணைக்கவருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. முதல் கண்ணாடி படம் ஸூப்பர் ஜி டீக்கடை விடயம் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. அந்தக் காலத்தில் கண்ணாடிப் போத்தலில்தானே இனிப்பு வைத்து விற்பார்கள். படங்கள் பார்க்க நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் நான் மாவடு ஊறுகாய் மற்ற ஊறுகாய்கள் எல்லாம் கண்ணாடி பாட்டிலில் தான் வைப்பேன். இல்லைனா கல்சட்டி(மாக்கல் சட்டி)

      நீக்கு
    2. கீதாக்கா நானும் அதே அதே...கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடி அல்லது மாக்கல்சட்டியில்....அல்லது மண் ஜாடிகளில் என்றுதான் வைப்பது...

      கீதா

      நீக்கு
    3. இப்போது சில இடங்களில் மட்டுமே இப்படி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    5. எங்கள் வீட்டில் சில ஜாடிகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. அதிகாலையில் தேநீர் கிடைக்காததால் நாங்கள் கஷ்டப்பட்டோம். கண்ணாடிக் ஜாடியில் சாப்பிடக்கூடிய பொருட்களை வைத்திருக்க கடைக்காரரை நாங்கள் மதிக்க வேண்டும். அது அழகாக இருக்கிறது. இது ஆரோக்கியமானதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. சட்படா...ஆஹா....அவர் செய்தது ஒரு படத்தில் ஜனகராஜ் என்று நினைக்கிறேன் அவர் கடையில் மிக்சர், காராசேவு என்று எல்லாவற்றிலும் 100 கிராம் போடச் சொல்லி "கலக்கு நல்லா கலக்கு" என்று சொல்லி அதிலிருந்து ஒரு 100 கி ல்லது கால் கிலோ வாங்குவார் என்று நினைவு அது போல இந்தக் கடைக்காரரும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜனகராஜ்.... ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. என் அம்மாவின் அண்ணா என் மாமா மாமி பீஹாரில் தான் இருந்தார்கள் டாட்டா நகரில் இருந்தார்கள். குழந்தைகள் கல்லூரி வரும் வரை அங்குதான் இருந்தார்கள். மாமி இந்த சட்பட், ஸ்னாக்ஸ் பற்றி சொல்லியிருக்கிறார். பீஹார் பற்றிய பிற விஷயங்களும் சொல்லியிருக்கிறார்.

    பாட்டிலில் போட்டால் நமுத்துப் போவதில்லை. பார்க்கவே அழகா இருக்கு சட்பட்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. இந்தக் கண்ணாடி குவளைகளைப் பார்த்ததும் எனக்கு எங்க ஊர் அரசாங்க மருத்துவமனை (ஆசுபத்திரி) நினைவு வந்தது. இதைப் போல இரண்டு மூன்று மடங்கு பெரிய குவளைகளில் கலர் கலராக தண்ணியை வைத்து மருந்துன்னு தருவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. கடைக்காரரும், பாட்டிலும் அவர் தந்த சட்-பட்டும் அருமை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருமாதிரி இருக்கு. ஆமாம் இனிப்புக்கு காலைல எதுவும் கிடையாதா? (கொல்கட்டாவில் ஜிலேபி காலை உணவு என்பதுபோல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் இனிப்பு உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. அழகான கண்ணாடி ஜாடிகள். அதன் மகிமையே தனி.
    அதவும் அந்த வியாபாரி கலக்கிக் கொடுத்த அழகு ,
    உடனே சாப்பிட ஆசையாக இருக்கிறது. நல்ல நல்ல விஷயங்களை அழகாகப் பகிர்கிறீர்கள் வெங்கட். என்றும் நலமாக இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  15. திண்பண்டங்கள் இருக்கும் கண்ணாடி ஜாடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுமாதிரி வீட்டுக்கு வாங்கனும்ன்னு ஆசை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. Very interesting, to get to know people and the interesting things they do. Glass jar with lid perfect for preserving food. I love too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....