வெள்ளி, 11 ஜனவரி, 2019

கதம்பம் - மைசூர்பாக் - பிளாஸ்டிக் தடை – தோரணம் – வேஷ்டி தினம் – அரசு அலுவலகங்கள்

சாப்பிட வாங்க – மைசூர்பாக் – 10 ஜனவரி 2019




டெல்லியில் இருந்த வரை அடிக்கடி சோதனை முயற்சி செய்து பார்ப்பேன். வீட்டிலேயே எடுக்கும் நெய் நிறைய இருக்கும். கடலைமாவும் கோதுமை மாவு வாங்கினால் கிடைக்கும். அப்புறம் என்ன சர்க்கரையைப் போட்டு நினைத்த போதெல்லாம் மைசூர்பாக் தான். இனிப்பு சாப்பிட காரணம் வேறு வேண்டுமா என்ன!!!
 
இங்கு வந்த பின்னர் வீட்டில் எடுக்கும் நெய் குறைவு தான். கடையிலும் நெய் வாங்கினால் எந்த ப்ராண்டாக இருந்தாலும், மணல் மணலாக இருந்தாலும் பிடிப்பதில்லை. அதனால் மைசூர்பாக் செய்வதேயில்லை.

சமீபத்தில் மகள் செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தாள். அதனால் கொஞ்சமா மாவு போட்டு செய்தேன். நான் ஒரு இ்னிப்பு ப்ரியை. மகள் பள்ளியிலிருந்து வரும் வரை வைத்திருக்கணுமே என்று கவலையாக இருந்தது!

இந்த மயில் தட்டு வேறு ரொம்ப நாளா என்னை யாருக்குமே காண்பிக்க மாட்டேங்கிறியே என்று குறைபட்டுக் கொண்டது..:)) எல்லாரும் இருக்கும் இனிப்பை அடிதடி சண்டையில்லாமல் எடுத்துக்கோங்க பார்க்கலாம்..:))

பார்க்க கல் போல இருக்கலாம். ஆனால் நல்ல சாஃப்டாக தான் இருக்கிறது.

பிளாஸ்டிக் தடை - 4 January 2019

நேற்றைக்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தரவில்லை. மக்கள் தங்கள் பைகளில் தான் வாங்கிச் செல்கின்றனர். நான் எப்போதுமே பை கொண்டு போவது தான் வழக்கம் என்பதால் எதுவும் எனக்கு தொந்தரவாக இல்லை. இந்த தடையை தளர்த்தாமல் இருக்கணுமே என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.

ஏப்ரல் மாதத்திலிருந்து மாநகராட்சிக்கு குப்பைகளை தரம் பிரித்து தான் தந்து கொண்டிருக்கிறோம். எங்கள் குடியிருப்பு வாட்ஸப் க்ரூப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தியதில் குடியிருப்பு வாசிகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.

குடியிருப்புகளுக்கு இப்போ QR code தந்திருப்பதால், அன்றாடம் மாநகராட்சியிலிருந்து குப்பை எடுக்க வரும் போது ஸ்கேன் செய்து கொள்கின்றனர். ஒருநாள் இந்த பதிவு வரவில்லை என்றால், மாநகராட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும்.. அப்போது இன்று குப்பை இதுவரை எடுக்கலை என்று புகாரை தெரிவிக்கலாம்.

அது போல் பிளாஸ்டிக் ஒழிப்பை பற்றியும் வாட்ஸப் க்ரூப்பில் பதிந்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை தரம் பிரித்து அகற்றினாலே சமுதாயத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எங்கள் வீட்டிலேயே சுற்றிச் சுற்றி அலசியதில் தவிர்க்க முடியாமல் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர வேறு இல்லை. அவ்வப்போது ஒழித்துக் கொண்டே தான் இருப்பேன்.

சில வருடங்களாகவே மண்பாண்டச் சமையல் தான்.. கடைகளுக்கு எடுத்துச் செல்லவும், காய்கறிகள் வைக்கவும் துணிப்பைகள் தான். துவைத்த துணிகளை உலர்த்தக் கூட மர க்ளிப் தான்.

இந்தத் திட்டம் நல்லமுறையில் செயல்படணும். பூமியை மாசுபடுத்தியதில் பெரும்பங்கு நம் எல்லோருக்குமே உண்டு. இனியாவது அதை சீர்ப்படுத்த முனைவோம்.

படித்ததில் பிடித்தது – வலைப்பூ - 5 January 2019

என் முகநூல் நட்புவட்டத்தில் இருக்கறவங்க கட்டாயம் இந்த பதிவுகளை பொறுமையா படிச்சுப் பாருங்க. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது. ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்தது.



மைக்ரோ சிம் - 5 January 2019

இன்று bsnl அலுவலகத்துக்கு செல்லும் வேலை இருந்தது..சாதா சிம்கார்டை மைக்ரோ சிம்மா மாற்றக் கேட்டால், ஆதார் நகலை காண்பித்தாலும் யார் பேரில் இருக்கோ அவரையே அழைத்து வரச் சொல்கிறார்கள். என் மாமனார் பேரில் இருக்கிறது. அவருக்கோ வயது 80+... சரி!! அவ்வளவு சின்சியராவா வேலை செய்யறாங்க???

அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். எங்களுடைய லேண்ட் லைன் இணைப்பை சரண்டர் செய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. இன்னும் டெபாசிட் வரலை என்பதைக் கேட்டால். மெயின் ஆஃபீசுக்கு போய் கேளுங்க என்றார் அங்கிருந்த பெண்மணி. அங்கேயும் கேட்டாச்சு!! ஃபண்ட் இல்லைன்னு சொல்றாங்க. இதை நம்பற மாதிரி இருக்கா??? என்றேன். எங்களுக்கு சம்பளமே வருவதில்லை மேடம் என்கிறார்...:))

அங்கிருந்து கடுப்புடன் வெளியே வந்தேன். பின்னாடியே மின் வாரிய அலுவலகம். மத்திய அரசின் நியாய விலையில் அபார்ட்மென்ட் அசோஸியேஷனுக்காக 5 led பல்புகளை ஆதார் எண்ணைக் காண்பித்து வாங்கிக் கொண்டேன். 9 w பல்பு 70 ரூ. மூன்று வருட கேரண்டியுடன்.

அங்கே ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது.. பெயர் விஜயவல்லி. சீனியர் சிட்டிசன். இந்த பல்பை பற்றி கேட்டார். நான் விலாவரியா பிரசங்கம் செய்ததும் அவர் வீட்டுக்காகவும் வாங்கிக் கொண்டார். பொது சேவை.

வேட்டி தினம் - 6 January 2019

இன்று சர்வதேச வேட்டி தினமாம். சில வருடங்களாகத் தான் இந்த மாதிரி கொண்டாடுகிறோம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், இளைஞர்களிடம் நம் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றவும் என நல்ல எண்ணத்தோடு கொண்டாடுவதால் யாருக்கும் இது இடையூறாகத் தோன்றவில்லை என்பது நல்ல விஷயம்.

வேட்டி என்றதும் என் முதல் ஹீரோவான என் அப்பாவின் நினைவு வந்தது. அப்பா பாங்காக வேட்டிக் கட்டிக் கொள்வார். அதை அவரே துவைத்து, அளவாக சொட்டு நீலம் போட்டு அதை உதறி நிழலில் உலர்த்தி எடுத்து வைப்பார். எதையும் சீராக செய்யும் இந்தக் குணம் அப்பாவிடமிருந்து எனக்கும் ஒட்டிக் கொண்டது.

அப்பாவைப் போலவே என் இன்னொரு ஹீரோவான என்னவரும் அழகாக பாந்தமாக வேட்டி உடுத்திக் கொள்வார். அவரின் உயரத்திற்கு அது கம்பீரமான தோற்றத்தைத் தரும். இங்கு நான் அவரின் வேட்டிகளை சுத்தமாக துவைத்து அளவாக நீலம் போட்டு உதறி உலர்த்தி எடுத்து வைப்பேன்.

பல மணிநேரங்கள் வேட்டியில் இருந்தாலும் அப்பாவுக்கும் சரி, என்னவருக்கும் சரி அது இடையூறாக இருந்ததில்லை. அவிழுமோ என்ற எண்ணமும் தோன்றியதில்லை. அந்தளவுக்கு இருவருமே நேர்த்தியாக உடுத்திக் கொள்வர்.

ஒருசிலர் பழுப்பாகவும், சுருக்கங்களுடன் , கறைகளுடன் முக்கால் காலுக்கு வேட்டி உடுத்தியிருப்பார்கள்.

ஒருசிலருக்கோ இறுக்கி கட்ட இயலாமல் அவர்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடத்தை தருமளவு உடுத்தியிருப்பார்கள். அதற்கும் தான் இப்போது "வெல்க்ரோ" வேட்டிகள் வந்துள்ளனவே.

ஆகவே 'கந்தையானாலும் கசக்கி கட்டு' என்ற வாக்குக்கு ஏற்ப கந்தலே ஆனாலும் சுத்தமாக துவைத்து நேர்த்தியாக உடுத்தி நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவோம்!!!

வேட்டி தின வாழ்த்துகள்!!

கால்நடைகளின் அவதி - 7 January 2019

நேற்று துவைத்த மிதியடிகளையெல்லாம் மாடியில் வெயிலில் உலர்த்தப் போயிருந்தேன்.

அங்கேயிருந்து அருகே புதிதாக கட்டிட வேலைகள் நடப்பதையும், இளைஞர்கள் சிலர் காலியிடங்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததையும், மாடுகள் மேய்ச்சலுக்கு வந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு குதிரையும் அதன் குட்டியும் கூட மேய்ந்து கொண்டிருந்தது.

பூக்கள் பூத்துக் குலுங்கும் போது மணம் பரப்பும் நாகலிங்க மரமும் அதனருகில் சிறுவயதில் இன்னொரு நாகலிங்க மரம் கஜா புயலின் விளைவால் விழுந்து கிடந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது.. இலைதழைகளுக்கு நடுவே பாலீதீன்களும் கிடந்தன. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்கள்!! இதை சாப்பிட்டு விடப் போகிறதே!!! என்று நினைக்கும் போதே.

மாடு ஒன்று அலுமினிய ஃபாயிலையும், பாலித்தீனையும் சாப்பிடத் துவங்கி விட்டது..:( அது உனக்கு கெடுதல்!!! செரிக்காது!! சாப்பிடாதே!! சாப்பிடாதே!! என்று வாய் விட்டு கத்திக் கொண்டிருக்கேன்...:(

இந்த பாவப்பட்ட மனிதர்களின் மொழி அவைகளுக்கு புரிந்தால் தான் நன்றாக இருந்திருக்குமே!!!

கண்ணுக்கு தெரிந்தது ஒன்று!!! இன்னும் எத்தனை உயிரினங்களின் உயிரைப் பறிக்கிறதோ இந்த அரிய கண்டுபிடிப்பான பிளாஸ்டிக்!!!

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம். சுற்றுப்புறங்களில் குப்பைப் போடாமல் அதற்கென இருக்கும் கூடைகளில் அப்புறப்படுத்தவும். பூமியை காப்போம்.

இந்த வாரத்தில் கோலங்கள்:



காகிதக் குவளை தோரணம் - 8 January 2019:



காகிதக் குவளைகள் என்னிடம் முன்பு வாங்கியது இருந்தது. இனி அது கடைகளில் கிடைக்காது. இருக்கும் குவளைகளில் ஏதேனும் செய்யலாமே என்று யோசித்ததில் தோன்றியது இது. செய்வதும் எளிது தான். நானும் மகளும் இணைந்து உருவாக்கியது.

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்


36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி வெங்கட் அண்ட் வெங்கட்ஜி!!

    இன்று கூடாரை ...முதலிலேயே இனிப்பு போட்டு வரவேற்பு...இனிய...கலர்ஃபுல் கதம்பமாக இருக்கே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      ஆமாம்... அக்காரவடிசல் சாப்பிட வேண்டும் என்ற ஆசை.... கோவிலுக்கு போலாம்னா குளிர்ல போக மனசு வரல.... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஆதி வெங்கட் அண்ட் வெங்கட்ஜி!!

    இன்று கூடாரை ...முதலிலேயே இனிப்பு போட்டு வரவேற்பு...இனிய...கலர்ஃபுல் கதம்பமாக இருக்கே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அடடா ரெண்டாவது கருத்து அடிச்சு போட்டா அது வராம முதல் கருத்தே மீண்டும் வந்துருக்கே ஆஆஆஆஆஆஆ...

    ஆதி நானும் இப்ப வீட்டில் வெண்ணை எடுத்து நெய் காச்சறேன். நந்தினி பால் நல்லாருக்கு. கறந்த பால் கேட்கனுன்னு இருக்கேன்....மாடுகள் பார்க்கறேன்...ரெண்டு வீட்டுல இருக்கு....ஆனால் இன்னும் விசாரிக்கவில்லை..

    நானும் இனிப்பு பிரியை ஆனால் நானே ஸ்வீட் பொண்ணாக்கும்!!!

    மகள் வரும் வரை வைத்திருக்கனுமே// ஹா ஹா ஹா ஹா ஹா அதானே!!!! எங்கள் வீட்டிலும் ஸ்வீட் செய்தால் கண் மூடித் திறப்பதற்குள் காலியாயிருக்கும். என் மாமியார் சொல்லுவாங்க பசங்க சின்ன வயசுல (குடும்பம் பெரிது பசங்க நிறைய) ரெண்டு பேர் சட்டிய கூட க்ளீய்ன் பண்ணிடுவாங்களாம் அதனால மத்த பசங்களுக்குக் கிடைக்கனுமேன்னு ஸ்வீட்டை ஒளிச்சு வைப்பாங்களாம் ஆனா அந்த ரெண்டு பேரும் எப்படியோ கண்டு பிடிச்சு சாப்பிட்டுருவாங்களாம்...ஹா ஹா

    ஸாஃப்ட்டா தான் இருக்கு பார்க்கவும்..சரி எல்லாருக்கும் வேனுமே அதனால நான் ஒரு சின்ன பீஸ் உடைச்சு எடுத்துக்கறேன்...ஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு முறை - கட் காபி பேஸ்ட் செய்யும்போது இபபடி ஆவது உண்டு. :)

      நந்தினி பால் நல்லா இருக்கும். ஆனா தில்லியில் கிடைக்கும் திக்கான எருமைப் பால் சாப்பிட்ட பிறகு வேறு எந்தப் பாலும் பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. மாடுகள் ப்ளாஸ்டிக் தின்பது ஹையோ சொல்லாதீங்க நிறைய செய்திகள் வருதே..இத்தனை கிலோ ஃப்ளாஸ்டிக் மாட்டின் வயிற்றில் இருந்ததுனு...

    ப்ளாஸ்ட்டிக்கை அறவே ஒழிக்க முடியாது என்று ஆன நிலையில் டிஸ்போஸல் எப்படி என்று அரசு சிந்திக்கவேண்டும்...

    கோலங்கள் சூப்பரா கலர்ஃபுல்லா இருக்கு..

    காகிதக் குவளைத் தோரணம் ரொம்ப அழகா இருக்கு ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடுகள், ஆடுகள், கடல் வாழ் உயிரினங்கள் என பலவும் பிளாஸ்டிக் பொருட்கள் உண்டு இறப்பது கொடுமை.

      தயாரிப்பதை நிறுத்தும் வரை பயன்படுத்தத் தடை செய்து பயன் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. குட்மார்னிங். மைசூர்பாக் பற்றி இன்று காலைதான் பேஸ்புக்கில் படித்தேன்! கேஜிஜி பார்சல் கேட்டிருந்தாரே, அனுப்பியாச்சா?!!! ரிஷபன் ஜியும் இருக்கா, தீர்ந்து விட்டதா என்று கேட்டிருந்தார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை பணக்கம் ஸ்ரீராம்.

      கே.ஜி.ஜி. அவர்களுக்குஇணைய வழி பார்சல் அனுப்பி வைக்கலாம்! ரிஷபன் ஜி வந்தால் மைசூர் பாக் சாப்பிட்டு இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. QR code என்றால் என்ன? என்ன பயன் அதனால்? அபுரி! நாங்கள் நேற்று ஸ்விக்கியில் (திருந்த மாட்டோமே....!!!) பனீர் க்ரஞ்சி வாங்கிச் சுவைத்தபோது பேப்பர் காரில்தான் பார்சல் வந்தது. உள்ளே சீலிட்ட அலுமினியம் பேக்கிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. QR code - உங்கள் பக்கத்தில் கூட QR Code உண்டு. எங்கள் பிளாக் வாட்சப் குழுமத்தில் இணைய two dimensional bar code கொடுத்து இருந்ததே.... அலஒபேசி/code reader மூலம் ஸ்கான் செய்து ஒரு பணியைச் செய்ய முடியும். இப்போது எங்கும் இருக்கிறது.

      Swiggy அல்லது மற்ற செயலிகள் பயன்படுத்தி உணவு வரவழைத்தது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. BSNL அனுபவங்கள் எனக்கும் உண்டு. ப்ளஸ்ஸும் மைனஸும் 50;50! மின்சார அலுவலகத்தில் கிடைக்கும் இவ்வகை பல்புகள் பற்றி கே ஜி எஸ்ஸும் சொல்லி இருந்தார். வாங்கியும் இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. BSNL/MTNL இரண்டிலும் கசப்பான அனுபவங்கள் தான் எனக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வேட்டி தினம் எனக்கு அந்நியம். நான் வேட்டி கட்டுவது விசேஷங்களுக்கு மட்டும்தான்!!! பளக்கமில்லீங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளக்கமில்லீங்க.... ஹாஹா... நான் வீட்டில் வேட்டி தான். வேட்டி என தட்டச்சு செய்ய "வெட்டி" என suggestசெய்கிறது அலைபேசி... ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. // வேட்டி என தட்டச்சு செய்ய "வெட்டி" என suggestசெய்கிறது அலைபேசி... //

      கூகிளும் அப்படியே செய்தது! நான் வேட்டி என்று ஒவ்வொரு முறையும் நீட்டினேன்.

      நீக்கு
    3. பல சமயத்தில் இந்த suggestions தொந்தரவு தான்.... நேற்று கூகிள் பாபாவிடம் ஒரு முகவரி தேட அது வேறு எதையோ காண்பிக்கிறது.....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. கோலம் சூப்பர். காகிதக்குவளை பேஸ்புக்கில் பார்த்தேன். கால்நடை மேய்ச்சலுக்கு அங்கே படித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. நானும் இனிப்பின் அடிமை ...

    வித்தியாசமான செய்திககளின் தொகுப்பு ...கோலங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  12. கதம்பம் அனைத்தும் சிறப்பான செய்திகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  13. பிளாஸ்டிக்கினால் வரும் கேடு மட்டுமில்ல. நாம பயன்படுத்தி வீசும் பிளேட், கத்தி, உடைஞ்ச பாட்டில்களாலும் வாயில்லா பிராணிகள் பாதிக்குது. ஒரு மாடு குப்பையில் மேயும்போது கூர்மையான தகரம் குத்தி ரத்தம் வடிஞ்சதை கண்கூடா பார்த்திருக்கேன். பிளாஸ்டிக்கூட மாற்று வந்திடும். இந்த கூர்மையான பொருட்களை எப்படி டிஸ்போஸ் பண்றதுதான்னு தெரில.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூர்மையான பொருட்களாலும் ஆபத்து தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. மாடுகள் இப்போது ப்ளாஸ்டிக் சாப்பிடுவதைக் காட்டி ஒரு விளம்பரம் வருகிறதுவிளம்பரங்கள் பார்த்தா நாம் திருந்தப் போகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. கதம்பம் அனைத்தும் அருமை சகோதரி.

    கோலங்கள் அழகாக இருக்கின்றன. அதே போல் தோரணமும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    மைசூர்பாகு மிகவும் நன்றாக உள்ளது. எனக்கும் இனிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் பார்த்தவுடன் ஒரு துண்டு எடுத்துக் கொண்டேன். நன்றாக வாயில் கரைந்தது.

    அந்த மயில் தட்டும் மிகவும் அழகாக இருந்தது. இனிப்போடு கலந்து எங்களை சந்திக்கும் நேரத்திற்காக காத்து கொண்டிருந்தது போலும்.!

    பிளாஸ்டிக் அரக்கனை எப்படி முழுதாக விரட்டப் போகிறோமோ.! கால்நடைகள்தான் பாவம்..

    பாரம்பரியங்களை நினைவூட்ட ஒரு நாள் என்று ஒதுக்கி கொண்டாடுகிறோம். அந்த அளவுக்கு பாரம்பரியங்கள் நிலை ஆகிவிட்டது வருத்தப்பட வைக்கும் ஒரு விஷயமே..

    கோலங்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.
    பேப்பர் கப் தோரணங்கள் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள். தங்களுக்கும், தங்கள் மகளுக்கும் பாராட்டுக்கள்.

    கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....