வியாழன், 7 பிப்ரவரி, 2019

பாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்






சமீபத்தில் தான் எங்களுடைய சதாபிஷேகம் திருக்கடையூரில் நடைபெற்றது. நிகழ்வு முடிந்த பிறகு உறவினர்கள் உடன் சேலம் நோக்கி வண்டியில் திரும்பினோம். வண்டியில் போகும்போது, பொழுது போக வேண்டுமே, எனக்கு மருமகள் முறையாகும் தீபா எனும் பெண் ஒரு கதையைச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தாள். அந்தக் கதை.....

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். அவருக்கு, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. விருந்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர ஆட்களை அனுப்பினார். வெளியூரிலிருந்து தயிர் வாங்கி வர ஒரு பெண்மணியை அனுப்பி வைத்தார். அந்தப் பெண்மணியும் ஒரு பானையில் தயிர் வாங்கி, அந்தப் பானையை ஒரு துணியால் மூடி, தன தலை மீது வைத்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில், வானத்தில் ஒரு கழுகு பாம்பைக் கவ்விக் கொண்டு பறந்து வந்தது. பாம்பு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பின் வாயிலிருந்து விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் கீழே வரவும், பானையை மூடியிருந்த துணி காற்றில் விலக, பானையில் இருந்த தயிரில் விழுந்தது. இதை அறியாத பெண்மணியும் தயிரை பெரிய மனிதர் வீட்டில் கொடுக்க விருந்து தடபுடலாக நடந்தது.

சமையல் ரொம்பவே ருசியாக இருக்க, அனைவரும் விரும்பி உணவு உண்டனர்.  கடைசியாக, பெண்மணி வாங்கி வந்த தயிர் கலந்த தயிர் சாதம் பரிமாறப்பட்டது. விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவினை உண்டு முடித்தனர். சிறிது நேரத்தில், விருந்தினர் அனைவருமே மயங்கி அங்கேயே இறந்து போகின்றனர்.  ஊர் பெரிய மனிதருக்கு பயங்கர அதிர்ச்சி – தன வீட்டில் விருந்து உண்ணவந்து இப்படி ஆகிவிட்டதே எனக் கலங்குகிறார். ஊர் மக்கள் அனைவரும், பெரியவரை ஏசுகிறார்கள் – இப்படி விருந்து உண்ண அழைத்து அனைவரையும் கொன்று விட்டார் என திட்டுவதோடு, “நீ நல்லா இருப்பியா?” எனச் சாபமும் கொடுக்கிறார்கள். மனம் வருந்திய பெரியவர் மனது வேதனை அடைந்து உணவே உண்ணாமல் தன உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

இத்தனை பேர் இறந்து போக, மேல் உலகில் சித்ரகுப்தனுக்குக் குழப்பம், இந்தப் பாவக் கணக்கை யாருடைய பேரில் எழுதுவது என்ற குழப்பம். கழுகின் மீது பாவக் கணக்கை எழுத முடியாது – பாம்பை வேட்டையாடுவது அதன் இயல்பு. வேண்டுமென்றே செய்த காரியமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய போது தான் விஷம் கக்கியது. இதில் பாம்பின் தவறு ஏதும் இல்லை என்பதால் பாம்பின் மீதும் பாவக் கணக்கைச் சேர்க்க முடியாது. தயிர்க் குடத்தினைச் சுமந்து வந்த பெண்மணிக்கு, வானில் கழுகு பறந்ததோ, அதன் வாயில் அகப்பட்ட பாம்பு விஷம் கக்கியதோ, துணி விலகி, பானையில் விஷம் விழுந்ததோ எதுவும் தெரியாது. அவளால் ஏற்பட்ட தவறு அல்ல என்பதால், அவள் மீதும் பாபக் கணக்கைச் சேர்க்க முடியாது. கடைசியாக ஊர் பெரியவர் – விஷம் விழுந்த விஷயமே அவருக்குத் தெரியாது. நல்ல மனதுடன் அனைவருக்கும் விருந்தளித்த அந்த நல்ல மனிதர் மீது எப்படிப் பாபக் கணக்கைச் சேர்க்க முடியும்...

பெரிய சிக்கலாகப் போக, யமதர்மராஜனிடம் சென்று ஆலோசனைக் கேட்கிறார். விஷயத்தினை முழுவதும் கேட்ட யமதர்மராஜன், நன்கு ஆலோசித்து கழுகு, பாம்பு, தயிர் வாங்கி வந்த பெண்மணி, விருந்து வைத்த பெரியவர் என நான்கு பேர் மீதும் பாவக் கணக்கைச் சேர்க்க முடியாது. ஆனால், விஷயம் தெரியாமல், பெரியவரை யாரெல்லாம் ஏசி, அவருடைய இறப்புக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் அனைவர் பேர் கணக்கிலும், சரி சமமாக இந்தப் பாபக் கணக்கை எழுத வேண்டும் எனச் சொல்கிறார் யமதர்மராஜன். சித்திரகுப்தனும் குழப்பம் விலகி பாபக் கணக்கை பங்கிட்டு எழுதி விடுகிறார்.

இந்தக் கதையைச் சொன்ன பிறகு எங்கள் குழுவில் இருந்த குழந்தைகளிடம், இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு என்ன நீதி கிடைத்தது எனக் கேட்க, என் மகன் சொன்னது இது தான் – “எப்ப சாப்பிட்டாலும், கடைசியாக தயிர் சாதம் சாப்பிடக் கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், நன்கு மூடி வைத்த தயிரையே சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்” என்று சொல்ல அனைவரும் சிரித்தோம். இந்தக் கதையிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் நீதி – “எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.

இது போன்ற நீதிக் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்வது நல்லது. அவர்களை நல்வழிப்படுத்த இவை உதவும். வேறு ஒரு பகிர்வுடன் உங்களை மீண்டும சந்திக்கும் வரை....

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங். விக்ரமாதித்தன் - வேதாளம் டைப் கதை!

    பதிலளிநீக்கு
  2. ஏற்கெனவே படித்திருக்கிறேன். பாவக்கணக்கை எழுதுவது எவ்வளவு சிக்கலான விஷயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பாவம் மக்கள்... அவர்கள் மட்டும் எப்படி பாவம் செய்த்தவர்களாவார்கள்?!! அவர்களைப்பொறுத்தவரை அவர் விருந்துக்கு கூப்பிட்டு, அங்கு சென்று உணவு உண்டவர்கள்தான் மாண்டார்கள். அவர்கள் கோபத்தை அவர்கள் அவரிடம்தான் காட்ட முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நல்ல கதை. ஏற்கெனவே படிச்சிருக்கேன். இதிலே பாவக்கணக்கு என யாரையும் சொல்ல முடியாது! ஆனால் அனைவருக்கும் ஒரே சமயம் விதி இப்படி வருமா? வந்திருக்கு! ஆகவே விதி தான் காரணம். மனிதர்களைக் குற்றம் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. இண்டெரெஸ்டிங் கதை. நான் இதுவரை படிக்காததால் மிகவும் ரசிக்க முடிந்தது.

    புண்ணியம் பாவம் இவற்றை விளக்குவது மிகவும் கடினம்.

    அது சரி.. புலி பசிக்காக மானைத் துரத்துகிறது. இப்போ மானைக் காப்பாற்றினால் நமக்கு புண்ணியமா பாவமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. முதல் முறையாக படித்தேன். மிக நன்றாக இருந்தது. நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  10. “எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.//

    நல்ல நீதி.

    யாரை நோவது. விருந்து அளித்தவர் விதி அவருடன் சேர்ந்து விருந்துக்கு வந்தவர்களும் இறக்கவேண்டும் என்பது விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. யாருக்கும் விருந்து வைக்க ஆசைப்படக்கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. சித்திரபுத்திரன் என்கிற தலைமை கணக்காளர் வேலை ரொம்ப கஷ்டம்தான். எமதர்மனுக்கு மேல, தலைமை ஆடிட்டர் ஜெனரல், அதுதான், சிவபெருமான் என்ன முடிவு எடுப்பாரோ, தெரியலையே.

    (கம்ப ராமாயணத்தில் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று நினைவு வந்தது.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
    பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழையன்று மகன் பிழை யன்று மைந்த
    விதியின் பிழை .......)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதியின் பிழை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. //“எப்ப சாப்பிட்டாலும், கடைசியாக தயிர் சாதம் சாப்பிடக் கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், நான்கு மூடி வைத்த தயிரையே சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்”//

    இப்ப உள்ள பொடிசுகள் நல்ல விவரமானவர்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  14. ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கு! :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  16. எப்படியெல்லாம்பாவம் புண்ணியம் என்று கணக்கு பார்க்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. இந்தக் கதை ஏற்கனவே அறிந்த ஒன்று தான்....

    “எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.//

    நல்ல விளக்கம்தான். என்னவோ மீ க்கு இந்த விதி, பாவம் புண்ணியக் கணக்கு அந்த சித்திரகுப்தனைப் போல புரிவதில்லை...மண்டைக்கு எட்டுவதில்லை...

    நல்லதை நினைப்போம்....நல்லதைச் செய்ய விழைவோம்....

    ஏசுநாதரின் வசனம் என்று அடிக்கடி சொல்லப்படும் ஒன்று நினைவுக்கு வந்தது...நீ ஒருவரைச் சுட்டிக்காட்டி பழி/குற்றம் சொன்னால் உன்னை நோக்கு மூன்று விரல்கள் சுட்டுகின்றன என்பது நினைவில் வேண்டும் என்பது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  18. இக்கதை இதற்கு முன் அறிந்ததில்லை. இப்போதுதான் அறிந்தேன். நாம் படித்த கணக்கை விட இந்தப் பாவ புண்ணியக் கணக்கு ரொம்ப கடினம் என்றே தோன்றுகிறது.

    நல்ல கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....