வியாழன், 28 பிப்ரவரி, 2019

பந்தா பரமசிவம் – கதை மாந்தர்கள்




”ஹலோ, உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்… நீங்க டீச்சரா?”
 
இப்படித்தான் என்னிடம் பேச ஆரம்பித்தார் பந்தா பரமசிவம். நாற்பதுகளின் மத்தியில் இருக்கலாம் அவரது வயது. அவரது தோற்றம் திரும்பிப் பார்க்கவைக்கும் தோற்றம் – அவ்வளவு அழகா என்று கேள்வி கேட்டால் – அழகு தோற்றத்தில் இல்லையே! அவர் நெற்றியில் அணிந்திருந்த மூன்று வண்ண திருநீறு – மேலே ஒரு பச்சை வண்ணக் கீற்று, நடுவே ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு கீற்று, கடைசியாக, கீழே சிகப்பு வண்ணத்தில் ஒரு கீற்று! வித்தியாசமாக ஹோலி பொடிகளை வைத்து நெற்றியில் கீற்று! பொதுவாக இருக்கும் விபூதியோ இல்லை திருமண்ணோ அல்ல அது! அதே வண்ணங்களில் கைகளிலும் கயிறு! எனது இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் வந்த அமர்ந்தபோது முதலில் கவனித்தது இதைத் தான்.

முதலில் வேறு இடத்தில் தான் இருந்தார். ஒரு பெண்மணிக்கு இடம் கொடுக்க வேண்டி, காலியாக இருந்த என் பக்கத்து இருக்கைக்கு வந்து அமர்ந்தார். வந்த உடன் கேட்ட கேள்வி தான் இந்தப் பதிவின் ஆரம்பித்தில் எழுதி இருந்தேன்.  “இல்லை… நான் டீச்சர் இல்லை” என்பதாக தலையை ஆட்டினேன். உடனே அடுத்த கேள்வி – “நீங்க விருத்தாஜலத்துல வேலை பார்க்கிறீங்களா?” இல்லை என்பதாகவே என் தலையாட்டல். அவர் விடுவதாக இல்லை! ”ஒரு வேளை திட்டக்குடில உங்கள பார்த்திருக்கேனோ?” அதற்கும் இல்லை என்பதே என் பதில். இது வரை நான் வாயே திறக்கவில்லை! அனைத்தும் சைகையில் தான். பொதுவாக முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு மனிதரிடம், இப்படி கேள்வி கேட்பதை நான் விரும்பாதவன். அவர் தொடர்ந்து கேட்டபடி இருக்க, கொஞ்சம் கோபமும் வந்தது!

”நான் உங்களைப் பார்த்ததே இல்லை, நான் இந்த மாநிலமே இல்லை. நான் வேற மாநிலத்தில இருக்கேன், என்னை நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை” என்று சொல்லி, அலைபேசியில் மூழ்கிவிட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்பது எனக்குப் பிடிக்கவில்லை. அவரால் பேசாமல் இருக்கவே முடியாது போலும். அலைபேசியில் இருக்கும் ஒவ்வொரு எண்ணாக எழுத்தி பேச ஆரம்பித்து விட்டார். ஒவ்வொரு நபருக்கும் பேசும்போது தன்னால் ஒருவர் சில நொடிகளில் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டதாகச் சொல்லிக் கொண்டே வந்தார். தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஒரே விஷயம் தான் அனைத்து நபரிடமும் பேசினார்.

நடுநடுவில் புதிய அலைபேசி எண்ணை எழுத்தி, “ஹலோ யாரு சி.எம்.ஆ? உங்களுக்கு தெரியுமா என்னால ஒருத்தன் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிச்சான், நீங்க வந்தீங்கன்னா நீங்களும் சம்பாதிக்கலாம், நாளைக்கு நான் வரேன், என்கூட வந்தா நீங்களும் சம்பாதிக்கலாம்!” பேருந்தில் உள்ள பலரும் “ஓ பெரிய ஆள் போல, சி.எம்.கிட்ட டைரக்டா பேசறாரே” எனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அடுத்த அழைப்பு – வேற யாருக்கு? – பி.எம்.-க்கு தான்! “ஹலோ பி.எம்.ஆ, இப்பதான் சி.எம். கிட்ட பேசினேன், அவருக்கு சொன்ன அதே விஷயம் தான் உங்களுக்கும் – என் கூட வந்தால் சுலபமா ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்! சின்ன பையன் ஒருத்தன் நேத்திக்கு வந்தான் எங்கூட! இரண்டு மூணு நிமிஷத்துல சம்பாதிச்சிட்டான்… நான் எல்லாரையும் கூப்பிடறேன், நீங்களும் வாங்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். பேருந்தில் இருந்த பலரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திட்டக்குடியிலிருந்து விருத்தாஜலம் வருவதற்குள் இருபது பேரையாவது அழைத்திருப்பார் அந்த பந்தா பரமசிவம். என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தது! நான் கேட்காமலேயே பதில் கிடைத்தது. அவர் வீடு, கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் R.O. மற்றும் தண்ணீர் சுத்திகரிப்புக்கான ஃபில்டர்களை அமைப்பவராம். அவர் பி.எம்., சி.எம். என பேசியதெல்லாம் Chief Minister-ஓ, Prime Minister-ஓ இல்லை.! சி.எம். என்பது சீஃப் மேனேஜர், பி.எம். என்பது ப்ராஞ்ச் மேனேஜர்! B-என்பதெல்லாம் அவருக்கு P-என்று தான் வருகிறது! பேசித் தள்ளிய அந்த மனிதர் விருத்தாஜலம் வந்தவுடன் அலைபேசியில் பேசியபடி இறங்கினார் – இறங்கும் போது மீண்டும் ஒரு முறை என்னிடம் சொல்லிக் கொண்டே போனார் – “உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்!”

பேருந்து திட்டக்குடியிலிருந்து விருத்தாஜலம் வரும் வரையில் என்னால் அலைபேசியில் எதுவும் பார்க்கவோ, எழுதவோ முடியவில்லை! அவர் சென்ற பிறகு அவர் பற்றிய சிறு குறிப்புகளை சேமித்து வைத்ததன் விளைவு – இதோ இந்த கதை மாந்தர் பதிவு! பயணங்களில் இப்படி பல கதை மாந்தர்களை சந்திக்க முடிகிறது. சிலரால் எந்தவித Inhibition-உம் இல்லாமல் மற்றவர்களிடம் பேச முடிகிறது. என்னால் அப்படி பேசவோ, பழகவோ முடிவதில்லை! உங்களுக்கு எப்படி – பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஓ இன்று கதை மாந்தரா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      ஆமாம் கதை மாந்தரே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஹா ஹா ஹா செம ஸ்வாரஸ்யமான மனிதராத்தான் இருக்கார்.

    ப ப வை முதலில் ஓ மன நிலை சரியில்லாதவரோ என்று நினைத்து கொஞ்சம் பாவம் என்று நினைத்தேன்...அப்புறம் தெரிந்தது நிஜமாவே ப ப தான் ..ஹா ஹா

    இப்படி சிலர் உண்டு தான் ஜி. தங்களாலதான் எல்லாம் நிகழுதுனுஅதையும் சத்தமாஅ தம்பட்டம் அடிப்பவங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாரஸ்யமான மனிதர் தான். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது சுயதம்பட்டத்தினால் வெறுப்பு வந்து விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    மக்கள் பலவகை. இவர் ஒருவகை. இவர் வகையில் நானும் சிலபேரைச் சந்தித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பல வகை மனிதர்கள்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சிலபேரால் பேசாமல் இருக்கவே முடியாது. உண்மை. என் பாஸ் கூட இந்தரகம். ஆனால் இபப்டி அலட்டல், பொய் எல்லாம் இருக்காது. வீட்டில் பெரும்பாலும் மௌனமாக இருக்கும் என்னைப்பார்த்து உம்மணாமூஞ்சி என்பார். என் பாஸும், பெரியவனும் வீட்டையே கலகலப்பாக வைத்திருப்பவர்கள் என்றும் சொல்லலாம். ஆனால் பொது இடங்களில் இபப்டிப் பேசிக் கூடாதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிக் கொண்டே இருப்பவர்கள்! எனக்கும் இப்படி சில நண்பர்கள் உண்டு.

      ஆஹா சந்தடி சாக்கில் பாஸ் பேசிக் கொண்டே இருப்பதையும் சொல்லி விட்டீர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பஸ்ஸில் இருந்த அனைவருக்கும் அவர் ஒரு பீலா பேர்வழி என்று மனதில் பட்டிருக்கும். தன்னைப்பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர்களால் எப்படி இப்படி நடந்துகொள்ள முடிகிறதோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர்களைப் பற்றி பலருக்கு கவலை இல்லை! தன்னைப் பற்றிய சிந்தனையே எப்போதும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அவர் இறங்கியதும் உங்களுக்கு மட்டுமல்ல, பஸ்ஸிலேயே ஒரு அமைதி நிலவியிருக்கும். அமைதி திரும்பியிருக்கும்!!!! மழைபெய்து ஓய்ந்தாற்போல!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை பெய்து ஓய்ந்தாற்போல! ஹாஹா... அதே உணர்வு தான் எனக்கும் இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இந்த மாதிரி மனிதர்களை பாரத்து இருக்கிறேன். பிஎம் சிஎம் ஒரு வேடிக்கையான விசயம். தில்லி மெட்ரொவில் ஒருவர் இந்த மாதிரி இந்தியில் பேசிகொண்டு வந்தார். ஆனால் அவர் மனநல நோயாளி எனபதை புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி மெட்ரோவிலும் பல காட்சிகளை பார்க்க முடியும். உங்களுக்கு தினம் மெட்ரோ பயணம் ஆயிற்றே! சுவையான காரக்டர்கள் பற்றி நீங்களும் எழுதலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  8. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலர்! உண்மை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. சிலரால் பேசாமல் இருக்கவே முடியாது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசாமல் இருப்பது சிலருக்கு முடியாத விஷயம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. இவ்வாறு உள்ளோர் பெரும்பாலும் மனதில் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது என் எண்ணம். சகஜமாகப் பழகுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. அவரின் நெற்றிப் பட்டையை நீங்கள் விவரித்த விதத்தை வைத்து மனக்கண்ணில் பார்த்து சிரித்துவிட்டேன்...

    நானும் பயணம் செய்யும் போது சுற்றிப் பார்ப்பதுண்டு. ஆனால் அதே தான் inhibitions உண்டு அதனால் நானாக வலியப் பேசுவது என்பது ரொம்ப அபூர்வம். யாராவது பேசினால் அவர்கள் கேட்பதோ அல்லது சொல்லுவதையோ கேட்பதுண்டு ஒற்றை வரியில் பதில்...

    நானும் சமீபத்தில் பயணத்தில் பங்களூர் டு சென்னை பயணத்தில் ஒரு இளைஞர் னான் ஸ்டாப் பேச்சு...எனக்கு அதிசயமாக இருந்தது அதைப் பற்றி பாதி எழுதி வைச்சுருக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக வலியப் பேசுவது குறைவு.

      நீங்கள் சந்தித்த இளைஞரைப் பற்றியும் எழுதுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  12. பதிவிற்கான படம் செம ..ப்ளா ப்ளா ...ஹையோ முடிலப்பா..கண்ணைக் கட்டுது..பேசியே கொன்னுருவான் போல நு அந்தப் பெரியவர் நினைப்பது போல...!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிற்கான படம் - இரசித்ததில் மகிழ்ச்சி.

      சிலர் இப்படித்தான் பேசியே கொல்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. சில பயணங்களில் இப்படிதான் சில மனிதர்கள் மண்டையை காய்ச்சுடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்டையைக் காய்ச்சும் மனிதர்கள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  14. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள். பேசி, பேசியே நம் குலம், கோத்திரம் முதலியவற்றை கறந்து விடுவார்கள். இல்லையென்றால் அவர்களைப்பற்றிய பிரதாபங்களை கேட்டுத்தான் ஆக வேண்டும். சுவாரஸ்யமான பதிவு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிப் பேசியே எல்லாவற்றையும் கறந்து விடுவார்கள். ஹாஹா... ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. பயணங்களில் சில சமயம் இப்படித்தான். நான் பொதுவாக பயணத்தின் போது அருகில் இருப்பவரிடம் ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் மட்டும் பேசுவேன் இல்லை என்றால் பேசுவது குறைவு. நான் தனியாகப் பயணம் செய்வது என்பதே அபூர்வம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக பயணம் செய்வது அபூர்வம் - எனக்குப் பல பயணங்கள் தனிமையில் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  17. என் மாமியார், கடைசி நாத்தனார் எல்லாம் வலியப் போய் அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டே வருவார்கள். ஒருவருக்கொருவர் விலாசம், தொலைபேசி எண் பரிமாறிக்கொள்ளும் அளவுக்குப் போயிடும். இதனால் சில, பல தொல்லைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி சில தொல்லைகள் உண்டு. உண்மை. எல்லோரையும் நம்பிவிட முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  18. எனக்கும் பயணத்தின் போது இந்த மாதிரி வாய் மூடாமல் பேசுகிறவர்களை கண்டால் எரிச்சல் வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எரிச்சல் வந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!

      நீக்கு
  19. //பொதுவாக முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு மனிதரிடம், இப்படி கேள்வி கேட்பதை நான் விரும்பாதவன்//

    இது யாருக்கும் பிடிப்பதில்லைத்தான், பொதுவாக நம்மவர்களில் இருக்கும் கெட்ட பழக்கம் இது. விடுப்புக் கேட்பது.. வேர்க் பண்ணுகிறாயா? எங்கே? திருமணமாகிட்டுதோ? கணவர் என்ன பண்றார்? குழந்தைகள்? இப்படி அடிக்கிக் கொண்டே போவார்கள். இங்கு சில பியூட்டிப் பாலர்கள் நம்மவர்கள் வைத்திருக்கிறார்கள்.. அங்கு போனால் இந்த தொல்லை இருக்கும்.

    வெள்ளையர்கள் எனில், ஹலோ ஹவ் ஆ யூ.. நைஸ் வெதர்.. என வெதர் பற்றி மட்டும் பேசுவார்கள், குடும்பத்துள் நுழையவே மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா விஷயத்தினையும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எப்படிப் பேச முடிகிறது என எனக்கும் தோன்றும். பியூட்டி பார்லரில் தொல்லை! ஹாஹா...

      பெரும்பாலான நம்மவர்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது தெரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  20. ஒரு திரைப்படத்தில் வரும் காமெடி காட்சி நினைவிற்கு வருகிறது (சிங்கமுத்துவும் இது போல் பேசுவார் ( திரைப்படம் பெயர் ஞாபகம் இல்லை )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அவரது டைனசோர் பற்றி பேசுவார் என நினைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

      நீக்கு
  21. மனிதர்கள் பலவகை, அதில் இவர் ஒரு வகை.
    உலக விஷயம், பொது விஷயம் பேசினால் பரவாயில்லை.
    அதை விட்டு சொந்த பிரதாபங்கள் அளந்து !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது விஷயங்கள் பேசுவதைக் கூட ஒப்புக் கொள்ளலாம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....