வெள்ளி, 15 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்தகயா - தாய்லாந்து கோவில் – நாளொரு உண்டியல் – நாளொரு பலன்




எங்கள் பீஹார் பயணத்தில் முக்கியமாக நாங்கள் பார்க்க நினைத்த ஒரு இடம் என்றால் அது புத்தகயா. புத்தருக்கு ஞானம் பிறந்த இடம். அங்கே அமைந்திருக்கும் புத்தர் வழிபாட்டுத் தலம் ரொம்பவே சிறப்பானது. புத்தகயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் என நிறையவே இருக்கிறது. புத்த மார்க்கத்தினை தழுவிய பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். 


அப்படி பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்களும், அந்த நாட்டின் அரசும், புத்தகயாவில் தங்களுக்கென ஒரு இடம் வாங்கி அங்கே அவர்கள் பாணி புத்தர் வழிபாட்டுத் தலங்களையும் அமைத்து இருக்கிறார்கள். தாய்லாந்து, ஸ்ரீலங்கா, ஜப்பான், சீனா, பங்க்ளாதேஷ், கொரியா, பாகிஸ்தான் என பல நாடுகளில் இருக்கும் புத்தமதத்தினர் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத் தலத்தினை இங்கே அமைத்திருக்கிறார்கள்.



இப்படி அமைக்கப்பட்டு இருக்கும் பல நாட்டு வழிபாட்டுத் தலங்களையும் பார்க்க நடந்தே சென்று விடலாம் என்றாலும், ஒரு பேட்டரி ரிக்‌ஷா வைத்துக் கொள்வது நல்லது! முன்னூறு ரூபாய் கொடுத்தால் அங்கே இருக்கும் பல வழிபாட்டுத் தலங்களைக் காண்பித்து விடுகிறார்கள். இது நல்லதொரு வசதி. நிறைய பேட்டரி ரிக்‌ஷாக்கள் இருக்கின்றன என்பதால் போட்டி நிறையவே இருக்கிறது. கொஞ்சம் பேசினால் குறைவான வாடகையில் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாக ஒரு ரிக்‌ஷாவில் அமர்ந்து பயணிக்க முடியும். எல்லா இடங்களிலும் நின்று நிதானமாக பார்த்து முடித்த பின்னர் உங்களை எந்த இடத்தில் ஏற்றிக் கொண்டார்களோ அங்கேயே விட்டு விடுகிறார்கள். நாங்கள் சென்ற போது நான்கு பேர் குழுவாக இருந்ததால், ஒரே ரிக்‌ஷாவில் நிறைய இடங்களைப் பார்க்க முடிந்தது.  


பல தலங்களுக்குச் சென்றாலும், இன்றைக்கு நாம் பார்க்கப் போவது தாய்லாந்து நாட்டினர் புத்தகயாவில் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலம் பற்றி தான். வாருங்கள் உள்ளே போகலாம்! பிரதான சாலையிலேயே அமைந்திருக்கும் இந்த வழிபாட்டுத் தலத்தில் எல்லா புத்தர் கோவில் போலவே அமைதி. பக்தர்கள் தத்தமது வழிபாடுகளை அடுத்தவருக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். நம் ஊர் கோவில்களில் கோயில் வாயிலில் துவாரபாலகர்கள் இருப்பது போலவே இந்தக் கோவில்களிலும் நுழைவாயிலில் இரண்டு சிலைகள் நம்மை வரவேற்கின்றன. கெட்ட சக்திகள் உள்ளே நுழையாமல் பாதுகாக்க இப்படி இரண்டு வாயில் காப்போன்கள் என்று படித்தேன்.



மிகவும் அழகான சூழலில் தாய்லாந்து கட்டிடக்கலையில் மிகச் சிறப்பாக இருக்கும் இந்த வழிபாட்டுத் தலம் புத்த கயாவில் அமைக்கப்பட்ட ஆண்டு 1957! அதாவது சுமார் 62 ஆண்டுகள் முன்னர். ஆனால் இந்த வழிபாட்டுத் தலம் மிகவும் சிறப்பாகவே பராமரிக்கிறார்கள் என்பதால் இன்றைக்கும் அழகாகவே இருக்கிறது. புத்தர தங்கத்தின் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிகவும் அமைதியான சூழல். ஒரு பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கிறார்கள். மற்ற இடங்களில் புத்த பிக்குகளுக்கு மட்டுமே அனுமதி. ரொம்பவே அழகாக இருந்த அந்த இடத்தினை விட்டு அகல மனதில்லை.  அங்கே பார்த்த இன்னுமொரு விஷயம் என்னைக் கவர்ந்தது – அந்த விஷயம் பற்றியும் சொல்கிறேன்!

நாங்கள் அங்கே சென்றபோது இரண்டு தாய்லாந்து பெண்மணிகள் – ஒருவர் மூதாட்டி மற்றொருவர் இளைஞி. இருவரும் அங்கே இருந்த உண்டியல்களில் – மொத்தம் ஏழு உண்டியல்களில் – இந்திய மதிப்பில் ரூபாய்களை போட்டுக் கொண்டிருந்தார்கள்! அதிலும் அந்த இளைஞி கற்றையாக, எத்தனை நோட்டுகள் எனப் பார்க்காமல் கைப்பையிலிருந்து எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். மூதாட்டி, ஒவ்வொரு உண்டியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டிருந்தார். தோராயமாக அந்த இளைஞி அன்றைக்கு உண்டியலில் போட்ட பணம் பதினைந்தாயிரத்திற்கும் மேல் இருக்கும். எதற்கு ஏழு உண்டியல்? ஒரே ஒரு உண்டியலாக வைக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம் – அந்த விஷயம் தான் என்னைக் கவர்ந்த விஷயம்.



வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு உண்டியல் வைத்திருக்கிறார்கள் அங்கே – திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு உண்டியல். திங்களுக்கான உண்டியல் மீது ”திங்கள் கிழமை – உணவு மற்றும் நீருக்காக தானம் செய்யுங்கள்” பலன்: நிறைவான வாழ்க்கை”! செவ்வாய் கிழமை – வழிபாட்டுத் தலத்தினை மேம்படுத்த” பலன் – நிறைவான மனம் மற்றும் உடல் நலன்! இப்படி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கான பணத்தினை உண்டியலில் போட, அதற்குரிய பலன் கிடைக்கும் என எழுதி வைத்திருக்க, அந்தப் பெண்மணிகள் இருவரும் ஒவ்வொரு உண்டியல் மீது இருந்த பதாகையைப் படித்து அவர்களுக்கு எது தேவையோ அதற்குத் தகுந்த தொகையை தானமாகச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உண்டியல் என்பதை வேறு எந்த வழிபாட்டுத் தலத்திலும் பார்த்ததில்லை. நீங்கள் யாரும் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  புத்தகயாவில் பார்த்த மற்ற இடங்கள், அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை பிறிதொரு பகிர்வில் எழுதுகிறேன். இன்றைய பதிவில் சொன்ன விஷயங்கள், சேர்த்திருக்கும் படங்கள் ஆகியவற்றை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. குட்மார்னிங். அழகான கோவில் என்று தெரிகிறது. அமைதியான கோவில் என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      அமைதியான, அழகான கோவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஏப்ரல் மாதம் மாமாக்கள் மூவருடன் நான் செல்லும் டூரில் (அலகாபாத், கயா, அயோத்தி, வாரணாசி) கயா என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த இடம்தானா என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஏப்ரல் மாதத்தில் இந்தப் பக்கம் வருகிறீர்களா? மகிழ்ச்சி. கயா, புத்த கயா இரண்டும் அருகருகே தான். கயாவில் விஷ்ணுபாத்(dh) என்ற கோவில் இருக்கிறது - பித்ரு காரியங்கள் இங்கே செய்வார்கள். புத்த கயாவில் நிறைய புத்தர் வழிபாட்டுத் தலங்கள். தில்லி வழியாகவா பயணம்? நேரடியா காசிக்கா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்! அலஹாபாத், வாரணாசி, பின்னர் கயா சென்று அதன் பின்னர் அயோத்தி செல்லலாம். அல்லது முதலில் அயோத்தி சென்று பின்னர் அலஹாபாத் வந்து வாரணாசி, கயா செல்லலாம். மனைவியுடன் சென்றால் உத்தமம். பித்ரு காரியங்களை நன்றாகச் செய்யலாம். எப்படிச் செய்தாலும் கயா கடைசியில் செல்ல வேண்டிய ஒன்று. முதலில் வாரணாசி போனாலும் பின்னர் பிரயாகை-அலஹாபாத் சென்று அதன் பின்னர் மீண்டும் வாரணாசி வந்து அங்கிருந்தே கயா செல்ல வேண்டும் என்பார்கள். நீங்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் புரோகிதர் எப்படிக் கூறுகிறாரோ அதன்படி செய்ய வேண்டும்.









      நீக்கு
    3. அயோத்தியில் சுற்றுவட்டாரங்களை எல்லாம் மறக்காமல் பாருங்கள். சீதா கி ரசோயி, தசரதர் மாளிகை, புத்ரகாமேஷ்டி யாகம் நடந்த இடம்! அங்கே பாயசப் பிரசாதத்துக்குப் பணம் கட்டினால் நம் பெயரில் ஒரு நாள் விநியோகம் செய்வார்கள். நாமே தேதியையும் கொடுக்கலாம். சரயூ நதிக்கரையில் ராமர் மறைந்த இடம், லக்ஷ்மணன் மறைந்த இடம், நந்திக்கிராமம், சரயூ நதிக்கரையில் உள்ள தென்னிந்தியப் பாணியில் கட்டப்பட்டிருக்கும் கோயில் இன்னும் நிறைய இருக்கு! எல்லாம் அயோத்திக்குள்ளேயே! நிறைய நடக்க வேண்டும். சில இடங்களுக்கு ஆட்டோ செல்லாது. துணிகள், கைப்பை, அலைபேசி முதலியவற்றைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அங்கே போனாலே தெரிந்து விடும்.

      நீக்கு
    4. நீங்க ரெண்டுபேரும் ஶ்ரீராமைச் சந்தித்திருக்கீங்க, பழகியிருக்கீங்க, பலப்பல வருஷம் அவரோட தளத்தின்மூலம் தொடர்ந்திருக்கீங்க. ஆனா, இங்க என்னவோ அவரே திட்டம்போட்டு டூர் ஆர்கனைஸ் பண்ணியருக்கறமாதிரி எழுதியிருக்கீங்க.

      என் அனுமானம் சரி என்றால், ஶ்ரீராம் அவங்களோட ஜாயின் பண்ணியிருப்பாரே தவிர, டூர் புரோக்ராம் பற்றி முழுமையாத் தெரிந்திருக்காதுன்னு நினைக்கறேன்.

      என் அனுமானம் தவறு என்றால் ஶ்ரீராம் என்னைக் கலாய்த்துஙிடுவார்

      நீக்கு
    5. மேலதிகத் தகவல்கள் ஸ்ரீராம் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. அயோத்தி, காசி இரண்டு இடங்களிலுமே பாதுகாப்பு சோதனைகள் நிறைய. அலைபேசி, கேமரா போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. வெளியே கடைகளில் அதை வைத்துக் கொள்வார்கள்... கடையில் பூஜைக்கான பொருட்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் தரிசனம் முடித்து வரும் வரை கொஞ்சம் பதட்டமாகதான் இருக்கும் - வைத்த பொருட்கள் பத்திரமாக இருக்குமா என்று!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    7. //என் அனுமானம் சரி என்றால், ஶ்ரீராம் அவங்களோட ஜாயின் பண்ணியிருப்பாரே தவிர,//

      கரெக்ட் நெல்லை. யாரோ அரேஞ் செய்யும் டூரில் நானும் செல்கிறேன். அவ்வளவே.

      நீக்கு
    8. நெல்லைத் தமிழன் - இதுவரை நான் ஸ்ரீராம் அவர்களைச் சந்தித்ததில்லை! சில மாதங்களுக்கு முன்னர் சந்திக்க திட்டமிட்டும் நடக்கவில்லை - வேறு சில வேலைகள் அவருக்கு வந்து விட்டதால்!

      அவர் திட்டமிடாவிட்டாலும், திட்டமிட்டவர்களிடம் சொல்லலாம்!

      நீக்கு
    9. இப்படி யாரோ திட்டமிடும் பயணத்தில் இருப்பதும் நல்லது தான் பல சமயங்களில் - எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பயணிக்கலாம்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு உண்டியல்கள்... நல்லயோசனை. நல்ல கலெக்ஷன் ஆகும் என்றுதான் முதலில் தோன்றியது! ஹா... ஹா... ஹா... பத்திரிகை ராசி பலன் போல ஒவ்வொரு உண்டியலுக்கும் ஒவ்வொரு பரிகாரம் வேறு சொல்லப்பட்டிருக்கிறதே... எவ்வளவு பணம் போட்டால் நிம்மதி கிடைக்கும்?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு பணம் போட்டால் நிம்மதி கிடைக்கும்? ஹாஹா.... அது தெரிந்தால் அனைவரும் வாங்கிடலாம் நிம்மதி..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அன்று கருப்பு புத்தர், இன்று தங்க புத்தர்... இரண்டு புத்தரையும் பார்த்தாச்சு. முனைவர் ஜம்புலிங்கம் ஸார் இந்தப் பதிவுகளை மிகவும் ரசிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான புத்தர் சிலைகள் இங்கே தங்க வண்ணத்தில் தான்.

      ஆமாம் முனைவர் ஐயா மிகவும் ரசிப்பார்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பீஹார் சென்றதில் ஒரு மகிழ்ச்சியான விசயமே புத்தகயாதான். மிகவும் அழகான புத்தர் கோயில் மற்றும் பிற நாடுகளின் கோயில்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பீஹார் அனுபவம் கொஞ்சம் கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  6. அழகான அருமையான பதிவு.
    உண்டியல் விவரம் வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
    இந்த பதட்டமான காலத்தில் எல்லோருக்கும் நல்லது நடக்க புத்தர் அனைவருக்கும் அருள்புரியட்டும்.
    மனநோய்கள் நீங்கி அன்பும், அமைதியும் குடிபுக வேண்டும் அனைவர் மனதிலும்.
    படங்கள் எல்லாம் அழகு.
    யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துனபம் தராத அறநெறியை கடைபிடிக்க அருள்புரியவேண்டும் புத்தர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் அறநெறிப் பாதையில் செல்ல அருள் புரிய வேண்டும். எத்தனை பிரச்சனைகள் இங்கே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வட நாட்டுப் பயணத்தின்போது நான் அதிகம் ரசித்த, லயித்த இடம் புத்தகயா. நிம்மதி. அமைதி. மகிழ்ச்சி. வேறு எங்கும் கிட்டாதது அங்கு எங்களுக்குக் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான அமைதி அங்கே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. புத்தகயா நாங்க போகமுடியலை. நாட்களைக் கணக்குப் பண்ணாமல் பயணச் சீட்டு வாங்கியதால் கயாவிலிருந்து உடனே திரும்பும்படி ஆயிற்று. எங்களை அங்கே அனுப்பி வைத்த ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்து சாஸ்திரிகள் திரும்பி வரவும் ஏற்பாடு பண்ணி விட்டார். புத்தகயாவை அவரும் பயணப்பட்டியலில் சேர்க்கலை! சாரநாத்தும் போகலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகயா நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். புத்தர் கோவிலில் இருந்த அமைதி ரொம்பவே பிடித்திருந்தது எனக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  10. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உண்டியல் - சிறப்பு - வியப்பான செய்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. தாய்லாந்து கட்டிடக்கலையில் இக்கோவில் அழகா உள்ளது ...

    தகவல்களும் மிக புதிது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கோவில் தான் அனுராதா ப்ரேம்குமார் ஜி. பார்க்க வேண்டிய இடமும் கூட...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. படங்களும் விவரங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. வெங்கட்ஜி படங்கள் செம அழகு!!!

    தகவல்களும் அருமை. தாய்லாந்து கட்டிடக் கலை அழகா இருக்கிறது ஜி!! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  14. வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு உண்டியல் வைத்திருக்கிறார்கள் //

    அட நல்ல விஷயமாக இருக்கிறதே...

    இப்படி நான் அரிந்த வரையில் எங்கும் பார்த்ததில்லை...ஜி

    3, 4 வது படங்கள் செமையா இருக்கு...ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உண்டியல் - புதிதான விஷயம் தான்... வேறு எங்கும் இப்படி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. கோயில் மிக அமைதியாக இருப்பது இதுதான் மிக முக்கிய விஷயம் ஜி. பொதுவாகவே புத்த கோயில்கள் அமைதியாகவே இருக்கும். தியான வழிபாட்டிற்கு நல்ல சூழலாகவும் இருக்கும். மிகவும் பிடிக்கும்...

    அப்படியான ஓர் அமைதியை விவேகாந்தர் பாறையிலும், அப்புறம் மைலாப்பூர் இராமகிருஷ்ணர் கோயிலிலும் பார்க்கலாம்...ஆனால் விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் அது தனிதான்...கடல் ஒலி மட்டுமே!! அழகான ரம்மியமான இடம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியானத்திற்கு ஏற்ற இடங்கள் - உண்மை. விவேகானந்தர் பாறை - இப்போது அங்கேயும் அதிக அளவில் மக்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். படகுப் போக்குவரத்திற்கு எத்தனை பெரிய வரிசை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  16. உண்டியல் பற்றிய தகவல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. கோவில் அழகு, அழகினை படமெடுத்த விதம் பேரழகு. உண்டியல் தகவல் புதுசு. ஆச்சர்யமும்கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....