வியாழன், 2 மே, 2019

சாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ


பனீர் – இதை நம் ஊரில் என்னவோ பன்னீர் என்று சொல்கிறார்கள்! பன்னீருக்கும் பனீருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு! வேற்று மொழி வார்த்தையை நம் மொழியில் எழுதும்போதும், பேசும்போதும் இப்படி நிறைய தடுமாற்றங்கள்!



பன்னீர் கே ஃபூல் - படம் இணையத்திலிருந்து...

ஹிந்தியிலும் பன்னீர் உண்டு – அந்த பன்னீர் ஒரு பூ! பன்னீர் கே ஃபூல் என்று சொல்லும் அந்தப் பூ சர்க்கரை நோய்க்கு ஒரு சிறப்பான மருந்து. இரவு ஐந்து முதல் எட்டு பன்னீர் பூக்களை தண்ணீரில் நனைத்து வைத்து அடுத்த நாள் காலை அந்தப் பூக்களை, கைகளால் நன்றாக அழுத்திப் பிசைய கரைந்து விடும். தண்ணீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும். நல்ல மாற்றம் தெரியும். அமேசானில் கூட கிடைக்கிறது என்றாலும் விலை அதிகம். தில்லியில் கிலோ முந்நூறு ரூபாய்க்குக் கிடைக்கிறது.

நாம் இன்று பார்க்கப் போகும் விஷயம் பன்னீர் அல்ல! பனீர்! ஆங்கிலத்தில் இதை Cottage Cheese என்று சொல்கிறார்கள். இந்த பனீர் குளிர் காலத்தில் நிறையவே கிடைக்கும். கோடை காலத்தில் கிடைத்தாலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது – ஏனெனில் சூடு நாட்களில் விரைவில் கெட்டு விடும். ஒரு வித புளிப்புச் சுவை வந்து விடும் என்பதால் தவிர்ப்பது நல்லது! இந்த பனீர் வைத்து நிறைய சப்ஜி செய்வது உண்டு – மட்டர் பனீர், கடாய் பனீர், ஷாஹி பனீர், பனீர் புஜியா என பல விதங்கள். சாதாரணமாகவே பனீரை தண்ணீரில் நன்கு கழுவி, மேலே காலா நமக் தூவி சாப்பிடுவது கூட உண்டு. பனீர் டிக்கா என்று குச்சியில் சொருகித் தருவது கூட மிகவும் நன்றாக இருக்கும்! விதம் விதமான வகைகளில் இந்த பனீரை சாப்பிடுவது குளிர் கால வழக்கம் இங்கே. குறிப்பாக பஞ்சாபிகள் இந்த பனீருக்கு அடிமை!

குளிர் காலத்தில் பனீர் வாங்கி மட்டர் பனீர், கடாய் பனீர் போன்றவற்றை நானும் வீட்டிலேயே செய்வதுண்டு. இந்த வாரம் மட்டர் பனீர் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பனீர் – 150 கிராம்
மட்டர் எனும் பச்சை பட்டாணி – 1 கப்
முந்திரி பருப்பு – 10-15
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது அல்லது இஞ்சி ஒரு துண்டும், பூண்டு ஒரு சில பற்களும். பூண்டு பிடிக்காதவர்கள் இஞ்சி மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
மில்க் க்ரீம் – 2 ஸ்பூன் [அ] ½ கப் பால்
ஜீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – ½ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
கொத்தமல்லி தழை – பொடிப்பொடியாக நறுக்கியது கொஞ்சமாக.
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு
கஸூரி மேத்தி – ½ ஸ்பூன்

எப்படிச் செய்யணும் மாமு?

மட்டர் எனும் பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளுங்கள் – ரொம்பவும் குழைந்து விடக்கூடாது. குளிர் காலங்களில் நன்கு ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கும். கோடைக்காலங்களில் ஃப்ரோசன் மட்டர் கிடைக்கும். அதனை ஃப்ரீசரில் வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். ஆனால் சமைப்பதற்கு அரை/ஒரு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைக்க வேண்டும்!

வாணலி/அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பைச் சேர்த்து வதக்கவும். பிடித்தால் வெள்ளரி விதைகளையும் சேர்க்கலாம். முந்திரி சேர்ப்பது Gக்ரேவி திக்-ஆக இருக்க உதவும்.

கொஞ்சம் சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதியைச் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு வதக்கியவற்றை சூடு குறையும் வரை காத்திருக்கவும். ஆறிய பிறகு மிக்சி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் ஜீரகத்தினைப் போட்டு வெடித்ததும், மீதியிருக்கும் நறுக்கிய வெங்காயத்தினைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கசூரி மேத்தி மற்றும் கொஞ்சம் உப்பு. வதக்கிய பிறகு நன்கு நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து வதக்கவும்.

அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், அதில் இரண்டு ஸ்பூன் மில்க் க்ரீம் சேர்க்கவும். க்ரீம் சேர்ப்பது நல்ல சுவை தரும். க்ரீம் இல்லை என்றால் ½ டம்ளர் பால் சேர்க்கலாம் – ஆனால் அத்தனை சுவை தராது! தேவை எனில் நீளமாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

வேக வைத்திருக்கும் மட்டரை தண்ணீர் இல்லாமல் சேர்த்து கொஞ்சம் வதக்கவும். பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

கொதி வந்த பிறகு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பனீர் சேர்க்கவும்.

கடைசியாக ½ ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

சப்பாத்தி, பூரி, பராட்டாவுடன் இந்த மட்டர் பனீர் ரொம்பவே சுவையாக இருக்கும்.

நீங்களும் சமைத்துச் சுவைத்துப் பாருங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. வாழ்க நலம்...

    பனீர் மசாலா அடிக்கடி செய்வேன்...
    மற்ற மற்ற தயாரிப்புகள் கிடைத்தாலும் அமுல் பனீர் மட்டுமே வாங்குவேன்..

    இனிய பதிவு... மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி!

      குளிர் காலத்தில் மட்டுமே செய்வது வழக்கம். இங்கே அமுல் பனீர் கிடைப்பதில்லை. மதர் டைரி பனீர் தான். அதுவும் நன்றாக இருக்கும். கடைகளில் கிடைக்கும் பனீர் வாங்குவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    முதல் படத்திலேயே சப்பாத்தியைத் தேட வைத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.

      ஹாஹா... மட்டர் பனீர் படம் மட்டுமே இருப்பதால் சப்பாத்தியைத் தேட வேண்டியதாகி விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பன்னீர் கே ஃபூல் - படத்தைப் பார்த்தால் நுங்கு மாதிரி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுங்கு? இல்லை. வேறு மாதிரி இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நல்ல குறிப்பு. பனீர் போட்டுச் செய்யும் பண்டங்கள் பிடிக்கும். ஆனாலும் வீட்டில் செய்யும் சந்தர்ப்பங்கள் குறைவு. பட்டாணி எனக்குப் பிடிக்காத லிஸ்ட்டில் வருவது. அதை ஒதுக்கிவிட்டுதான் சாப்பிடவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் சேர்த்து நிறைய சப்ஜிகள் செய்வதுண்டு. எனக்கு மிகவும் பிடித்தது கடாய் பனீர் மற்றும் பனீர் டிக்கா....

      பட்டாணி ஃப்ரெஷ்-ஆக நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பனீர் மட்டுமல்ல, கசூரி மேதியைக் கூடப் பல முறை சொல்லியும் கஸ்தூரி மேதி என்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சிகளில் சில சமையல் விற்பன்னர்கள் கூடக் கஸ்தூரி மேதி எனச் சொல்வதைப் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசூரி - கஸ்தூரி ! :) வேற்று மொழி வார்த்தைகளை எழுதும்போதும், பேசும்போதும் இப்படித்தான் குளறுபடி நிறையவே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  6. அந்தச் சர்க்கரை நோய்க்குச் சொல்லி இருக்கும் பூ பெயரே ஹிந்தியிலும் பன்னீர்ப் பூ தானா? ஏனெனில் இங்கே உள்ள பன்னீர்ப் பூக்கள் வேறே மாதிரி இருக்குமே!

    இந்தப் பனீர் எனக்குத் தான் பிடிக்கும். ஆகவே பண்ணினாலும் போணி ஆகாது. குழந்தைகள் இங்கே வரச்சே பனீர், சீஸ் எல்லாம் வாங்குவேன். சில சமயங்களில் ரொம்பவே போர் அடிச்சால் சீஸ் மட்டும் வாங்கி பராத்தா அல்லது சீஸ் சான்ட்விச் எனச் செய்வது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பனீர் ரொம்பப் பிடிக்கும். நான் வந்தால் போணியாகும்... மறந்துடாதீங்க

      நீக்கு
    2. நம் ஊரில் பன்னீர் பூக்கள் வேறு மாதிரி இருக்கும். திருவரங்கம் கோவில் வளாகத்தில் கூட இருக்கிறது. இது வேறு.

      எங்கள் வீட்டில் பனீர் போணி ஆகும்! அதனால் பிரச்சனை இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    3. நீங்க கீதாம்மா வீட்டுக்குப் போனால் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. நான் உணவகத்தில் சாப்பிட்டதோடு சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் காலத்தில் வீட்டில் செய்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. மில்க் க்ரீம் சேர்க்கணும்--- அதற்கு அப்புறம் எழுதினது சரியா வரலை. எப்போ கடாய்ல இருக்கற விழுதோட மிக்ஸ் செய்யணும்னு போடலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுது சேர்த்து வதக்கிய பிறகு தான் க்ரீம் சேர்க்கணும் என்று எழுதி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. சுவைத்துப் பாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. yummy தொடருங்கள் உங்கள் சமையலறை சாகசங்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரலாம்! முடிந்த போது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  11. செய்முறை அருமை...

    பன்னீர் கே ஃபூல் பூ வாங்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரிலும் கிடைக்கலாம். ஆன்லைனில் கிடைக்கிறது என்றாலும் விலை அதிகமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. நல்லதொரு சமையல் குறிப்பு! பன்னீர்ப்பூ பற்றிய தகவல் இதுவரை அறியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  13. செய்முறை அருமை.

    பன்னீர் கே ஃபூல் பூ விவரம் அருமை. நல்ல பயனுள்ள குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. பட்டாணி பனீர் சப்பாத்திக்கு நன்றாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. பனீர், இங்கே டோஃபு
    எல்லாமே கொலஸ்ட் ரால் அளவைக் குறைக்கப்
    பயன் படுத்துகிறார்கள்.
    அழகான விவரங்களை அருமையாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

    வெய்யில் காலத்தில் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும். இங்கே ஃப்ரீசரில் இருக்கும்
    பனீரையே பார்த்து தான் வாங்க வேண்டும்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோஃபு! ஆமாம் இப்படித்தான் சிலர் அழைக்கிறார்கள் இங்கேயும்.

      கோடைக்காலத்தில் பனீர் பயன்பாடு தவிர்ப்பது நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  16. பனீர் என் மருமகளுக்கு பிடித்த ஐட்டம் என்பதால் அடிக்கடி வீட்டில் கிடைக்கும். எனக்கு பனீரில் பிடித்தது ஷாஹி பனீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷாஹி பனீர் மற்றும் கடாய் பனீர் எனக்கும் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    நல்ல சிறப்பான உணவு செயல்முறையை பகிர்ந்திருக்கிறீர்கள். செய்முறை படங்களுக்கு நன்றி. சப்பாத்திக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ்.
    நானும் அவ்வப்போது செய்துள்ளேன். தங்கள் செய்முறையில் இதைப்போலவே செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....