வியாழன், 23 மே, 2019

உழைப்பாளிகள் – தில்லி – நிழற்பட உலா



தலைநகரின் பிரதான பொழுது போக்கு ஸ்தலங்களில் ஒன்று இந்தியா கேட் பகுதி. அதன் பக்கத்திலேயே இப்பொழுது மிகப்பெரிய வளாகத்தில் தேசிய போர் நினைவுச் சின்னம் ஒன்றினை அமைத்து பார்வையாளர்களுக்கு திறந்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஃபிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்ட இந்த இடமும் இராணுவத்தினரால் பராமரிக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாகப் பராமரிக்கிறார்கள். இந்த இடம் பற்றியும், வேறு சில விஷயங்களையும் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த நாளில் இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தும் மனிதர்கள் சிலரைப் பற்றி மட்டும் பார்க்கலாம்!

Bபேட்டரி கார் ஓட்டலாம் வாங்க....



மாலை வேளைகளில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தான் இந்த மனிதர்களின் இலக்கு! ரிமோட்/பேட்டரி மூலம் இயங்கும் சிறு பொம்மை கார்களை சாலையில் இழுத்தபடியே கொண்டு வந்து இந்தியா கேட் பகுதியில் இராஜ பாட்டையில் வைத்துக் கொண்டு நிற்பது இந்த உழைப்பாளிகள் வேலை. குழந்தைகளுக்கு இந்த கார்களைப் பார்த்தால் குதூகலம் – சில பெரியவர்களுக்கும்! கார்/மோட்டார் பைக்-ல் அமர்ந்து பேட்டரி மூலம் இயங்கும் இந்த சிறு வாகனங்களை இராஜபாட்டையில் இயக்கும்போது, குடியரசு தினம் அன்று இச்சாலையில் இயக்கப்படும் போர் விமானங்களையே இயக்கி விட்ட மகிழ்ச்சி பலருக்கும்! நிறைய குழந்தைகளையும், பெரியவர்களையும் இப்படி பார்க்க முடிந்தது. இந்தச் சிறு வாகனங்களை சாலை ஓரத்தில் இழுத்துக் கொண்டு வரும்போது, படம் பிடிக்க முடிந்தது! அந்தப் படம் தான் மேலே இருக்கும் படம்! அரை மணி நேரத்திற்கு இவ்வளவு என காசு வாங்கிக் கொள்கிறார்கள். நான் அவற்றை இயக்காததால், எவ்வளவு எனக் கேட்க வில்லை!

சோப் தண்ணீர் – அலை அலையாய் குமிழ்கள்.....



சிறு வயதில் வீட்டில் இருக்கும் துணி தோய்க்கும் சோப்பைக் கரைத்து, சிறு குழாய் மூலம் குமிழ்கள் ஊதி, கொஞ்சம் தவறி வெளியே ஊதுவதற்கு பதிலாக உள்ளே இழுக்க, சோப் கலந்த தண்ணீர் உள்ளே போக.... அது தெரிந்த அப்பாவிடம் இருந்து அடி வாங்கி இருக்கிறேன்! நான் ஏதோ வால் தனம் செய்ததாக அவருக்கு எண்ணம்! கொஞ்சம் வித்தியாசமாக, சற்றே பெரிதாக இருந்த இந்தக் குழல் பார்த்த போது, வாங்கி சோப் குமிழ்கள் விடலாம் என ஆசை வந்தது – கூடவே கொஞ்சம் வெட்கமும் வந்தது! மனைவி மற்றும் மகளுடன் உலா சென்று இருக்கும் போது இந்த மாதிரி செய்து பார்க்க முடியுமா என்ன! விற்பனை செய்து கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்க்கக் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது! நாள் முழுவதும் இதே விளையாட்டு தான் அவருக்கு! விளையாட்டே வேலையாக! ஆனால் அவரைக் கேட்டால் தானே அவரது கஷ்டம் தெரியும்/புரியும்!

சமோசா சமோசா....



ஒரு பக்கெட் நிறைய சின்னச் சின்னதாய் சமோசா... பக்கத்தில் எவர்சில்வர் தூக்கு ஒன்றில் இனிப்பு கலந்த சட்னி. “சமோசா... சமோசா...” என்று குரல் கொடுத்தவாறே உலாத்தல்! ஒரு பக்கெட் சமோசா விற்றால் அன்றைய பொழுது ஓடிவிடும் என்று தோன்றுகிறது! இரண்டு சமோசா பத்து ரூபாய்! சற்றே சிறிதாக இருப்பதால் இந்த விலை! பெரியதாக இருந்தால் ஒரு சமோசா பத்து ரூபாய்க்கு மேல்! பொதுவாக திறந்த வெளி உணவகங்களுக்கு தலை நகர் தில்லியில் வரவேற்பு அதிகம் – Street Food என அழைக்கப்படும் உணவுகள் – குறிப்பாக பானிபூரிக்கு இங்கே இருக்கும் வரவேற்பு அமோகமானது – அதுவும் பஞ்சாபி பெண்களுக்கு இந்த பானிபூரி கிடைத்தால் சாலையோரத்தில் நின்றவாறு அடித்து ஆடுவார்கள்!  ஒரே சமயத்தில் பத்து பன்னிரண்டு பூரிகளும், இரண்டு தொன்னை புளித்தண்ணீரும் அருந்தும் சிலரைப் பார்த்து வியந்தது உண்டு – தில்லி வந்த புதிதில்! இரண்டு சமோசாக்களை உள்ளே தள்ளி ஒரு கப் தேநீர் அருந்தினால் ஆஹா... ஆனந்தம்!

Bபுdடியா கா Bபால்....



பஞ்சு மிட்டாய்.... இந்த பொருளைத் தான் ஹிந்தி மொழியில் Bபுdடியா கா Bபால் என அழைக்கிறார்கள். சற்றே நீளமான குச்சியின் மீது கொஞ்சமாக, பஞ்சு மிட்டாய் சுற்றி, அதன் மீது நெகிழி பை ஒன்றை மாட்டி வைத்தால் ஒரு காட்டன் கேண்டி ரெடி. ஒவ்வொரு உழைப்பாளி கையிலும் இப்படி பத்து இருபது பஞ்சு மிட்டாய் இருக்கும். அது விற்ற பிறகு அடுத்த செட்! பஞ்சு மிட்டாய் வேறு இடத்தில் தயார் செய்து எடுத்து வருகிறார்கள் என்பதால் கொஞ்சம் பழசு தான். உடனுக்கு உடன் தயாரித்துத் தராமல், காலை/மதிய நேரத்தில் ஒரு தொழிற்சாலை போன்ற இடத்தில் தயாரித்து மொத்தமாக எடுத்து வந்து விற்பனை. மற்ற இடங்களில் ஒரு குச்சி/பாக்கெட் ரூபாய் இருபது என்றால் இந்தியா கேட் பகுதியில் ரூபாய் நாற்பது! காரில் வந்து இறங்கும் சில கனவான்கள் பேரம் பேசுவதும் உண்டு! இவர்களுக்கும் வாழ்க்கை ஓடுகிறது!

Gகோலா Gகரி......



தேங்காய் பத்தை – இதைத் தான் இங்கே Gகோலா Gகரி என அழைக்கிறார்கள். பெரும்பாலும் நம் ஊரில் இப்படி தேங்காய் பத்தை போட்டு தெருவில் விற்பனை செய்வதை பார்க்க முடியாது. இங்கே சமையலுக்கு தேங்காய் பயன்பாடு முற்றிலும் இல்லை என்றே சொல்லிவிடலாம்! வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு பிரதான காய்கறி! தேங்காய் பயன்பாடு என்று பார்த்தால் இப்படி வீதிகளில் விற்பதை வாங்கி பச்சையாக சாப்பிடுவது மட்டுமே! தேங்காய் விலை ரூபாய் 25-30 வரை இருக்கிறது. எங்கள் பகுதியில் இருக்கும் சந்தையிலும், வட இந்தியர் கடை ஒன்றிலும் இந்த விலை. மொத்தமாக வாங்கும்போது கொஞ்சம் குறையலாம்! ஒரு தேங்காய் உடைத்தால் ஆறு-ஏழு பத்தைகள் போடலாம்.  ஒரு பத்தை 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு தேங்காயை இப்படி பத்தை போட்டு விற்றால் குறைந்தது ஐம்பது ரூபாய் கிடைக்கும். லாபம் இருபது முதல் முப்பது வரை! ஆனால் ஒரு தட்டு  Gகோலா Gகரி விற்க நாள் முழுவதும் சுற்ற வேண்டியிருக்கும் – அதுவும் இந்த பதைபதைக்கும் வெய்யிலில்!

இந்தியா கேட் பகுதியில் உலாவிய போது பார்த்த சில உழைப்பாளிகள் பற்றிய தகவல்களுடன் உங்களை இந்த நாளில் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பகிர்வுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை....


நட்புடன்


வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    உழைப்பாளிகள் படம் அதுவும் கடைச் அந்த தேங்காய்ப் பத்தை படம் சூப்பரா இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங்.... பேட்டரியிலேயே இயங்கிக்கொண்டு சென்றால் பட்டரை காலியாகி விடும் என்றோ 'இழுத்து'க்கொண்டு செல்கிறார்கள்?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். ஆமாம் பேட்டரி தீர்ந்து விட்டால் அவர்களால் சம்பாதிக்க முடியாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பாவம் பலூன் பெரியவர். ஒரு பக்கெட் சமோசா விற்றால் போதுமா? இனிப்பும் காரமும் கலந்த வாழ்க்கை! street food எல்லா ஊர்களிலும் ப்ரசித்தம்தானே? மக்களுக்கு விருப்பம் அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கெட் தான் அங்கே வைத்திருந்தார். வேறு எங்கேனும் இன்னும் ஒரு பக்கெட் வைத்திருக்கலாம் அல்லது ஒரு பக்கெட் விற்று கிடைக்கும் பணம்/சம்பாத்தியம் போதும் என்ற எண்ணமோ என்னவோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பஞ்சுமிட்டாய் அஞ்சுரூபாய்தானே? யாராவது பாதித் தின்று போட்டால் லட்ச ரூபாய்!!!!! பாடல் நினைவிருக்கிறதா?

    தேங்காய் பத்தையை பச்சையாகச் சாப்பிடுவார்களா?

    எப்படி?

    அது வெள்ளையாய்த்தானே இருக்கிறது?!!!!

    ஹிஹிஹி சும்மா ஜோக்... கடுப்பாயிடாதீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலன் பாடல் - மறக்க முடியாத அளவு பல இடங்களில் போட்டுக்கொண்டே இருந்த பாடல்! :(

      பச்சையாக - வெள்ளையாக - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மனைவி மற்றும் மகளுடன் உலா சென்று இருக்கும் போது இந்த மாதிரி செய்து பார்க்க முடியுமா என்ன!//

    ஜி நோ நோ!! நீங்க வெட்கப்படாம ஹேய் ரோஷிணி நீ இந்த மாதிரி எல்லாம் சோப் பலூன் விட்டு விளையாடலையே அவ்வளவா வா நான் கத்து தரேன் ஜாலியா இருக்கும் சும்மா ட்ரை பண்ணு என்று சொல்லி ரோஷினியையும் பார்ட்னரா சேர்த்துக்கிட்டு எஞ்சாய் செஞ்சுருக்கணும் ஹா ஹா ஹா...

    எல்லாம் மை அனுபவந்தேன் மகனோடு...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ட்ரை செய்திருக்கலாம்! ஆனாலும் ஏனோ ஒரு தயக்கம். உங்களுக்கு அனுபவம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  6. தில்லியில் ஸ்ட்ரீட் ஃபுட் போலவே மும்பையிலும் ஃபேமஸ் ஜி.

    பானிபூரி ஆமாம் செம டிமான்ட் அங்கு. தில்லி பா பூ/கோல்கொப்பா ஃபேமஸ் ஜி. எனக்குத் தெரிந்து அந்தச் சுவை வேறு எங்கும் இல்லை என்றே தோன்றியது. மும்பை, பூனே, சென்னை, இங்கு பங்களூரிலும் - இங்கு வீட்டுக்கு எதிரில் வீட்டிலிருந்து கை நீட்டினால் கிடைக்கும் பானி பூரி. இருந்தாலும் தில்லி போல இல்லை..

    பாவம் சமோசா விற்பவர். அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையே கஷ்டம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானி பூரி இப்போது பல ஊர்களில்/மாநிலங்களில் கிடைக்க ஆரம்பித்து விட்டது - எங்கே பார்த்தாலும் பீஹாரிகள் பானி பூரி விற்கிறார்கள்!

      அன்றாடங்காய்ச்சிகள் - பாவம் தான் அவர்களது நிலை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  7. இம்மாதிரி உணவுகள் சாப்பிடும்போது ருசித்தாலும் பின்னால் வயிற்றை ஒரு வழி பண்ணி விடுகிறது! பானி பூரி பற்றிய வீடியோ பார்த்ததில் இருந்து அது பக்கமே போறதில்லை. பேல் பூரி எல்லாம் வீட்டிலேயே பண்ணிடுவேன். ஆனால் அன்றாடம் காய்ச்சிகளும் பிழைக்கணும்! இது மாதிரி விற்பனையாளர்களிடம் வாங்கிச் சாப்பிடுபவர்கள் இருந்தால் தான் அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படியான உணவுகள் தொல்லை தரும். நானும் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. ஆனால் எப்போதாவது சாப்பிடுவதுண்டு.

      அவர்களுக்கும் பிழைப்பு ஓட வேண்டுமே! உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. நானெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் சோப் தண்ணீரை வைத்துக் கொண்டு குமிழிகள் ஏற்படுத்துவதோடு குழந்தைகளோடு போட்டியும் போட்டிருக்கேன். வாங்கிக் கட்டிக் கொண்டும் இருக்கேன். அப்படியும் புத்தி எல்லாம் வந்தது இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா குழந்தைகளோடு போட்டி போட்டு குமிழ் விட்டது அறிந்து மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. உழைப்பாளிகள் படம் எல்லாம் அழகு.
    அவர்களின் வாழ்க்கை படகு ஓடுவதை பகிர்ந்து கொண்டது அருமை.
    சோப் தண்ணீர் விற்பவரிடம் வாங்கி வந்து அவருக்கு உதவியது போலும் இருக்கும், நீங்கள் வீட்டில் வந்து ஊதி உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டது போலும் இருக்குமே!

    பான் போடுபவர்களின் பற்களின் கரையை இந்த தேங்காய் சில் எடுத்து விடுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிற்கு வந்து ஊதி விளையாடி இருக்கலாம்! :) அட ஆமாம்... ஏனோ தோன்றவில்லை!

      பற்கரை போக்க தேங்காய் - புதிய தகவல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. சமோசா சமோசா விற்பவர் சிரித்த முகமாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பில் வந்த மகிழ்ச்சியாக இருக்கட்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. தேங்காய் பத்தை விற்பவரும் பாவம்தான்...தேங்காய் பத்தை பார்க்க அழகாக இருக்கிறது. பெரிசா இருப்பது போல் இருக்கிறதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியது தான்... ஒரு பத்தை சாப்பிடவே கஷ்டப்பட்டேன் - எனக்கு ஒரு முறை நண்பர் வாங்கிக் கொடுத்தபோது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  12. அப்போல்லாம் அதாவது சுமார் 40 வருடங்கள் முன்னர் வரை தேங்காய்க் கீற்று வாங்கித்தான் எங்க வீட்டில் சமைப்பார்கள். தேங்காய் வாங்கியே பார்த்ததில்லை. முழுத்தேங்காயைப் "பட், பட்" என்று ஆளாளுக்கு இஷ்டத்துக்கு உடைத்துக் கீறிச் சாப்பிடுவதைக் கல்யாணம் ஆகி வந்து தான் பார்த்தேன். மயக்கமே வந்தது. சமையலுக்கே என் மாமியார் சுமார் 2,3 தேங்காய்கள் உடைப்பார்! துருவிட்டு மிச்சம் இருப்பதை மூடியோடு நான் அடுத்த நாளைக்குனு பத்திரப்படுத்தினாச் சிரிப்பாங்க! அவங்க துருவிட்டு அப்படியே குழந்தைகளிடம் அதைச் சுரண்டிச் சாப்பிடுனு கொடுத்துடுவாங்க! எனக்கு அதைப் பார்த்தால், "ஆஹா, இன்னும் 2,3 நாள் ஓட்டலாமே, இதை வைச்சுனு தோணும்!" :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடியாக வாங்கி பயன்படுத்திய நினைவு - பக்கத்து கோவில் ஒன்றில் மூடியாக விற்பார்கள்... பத்தை வாங்கியது இல்லை ஊரில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. பஞ்சுமிட்டாய் எப்பொழுதாவது ஒன்றை வாங்கி எல்லோரும் சுவைப்பதுண்டு.
    சோப் தண்ணீர் நாமும் விட்டுக்கொண்டு இருக்கிறோம்.:)

    நம்ஊரில் முழுத்தேங்காய்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  14. சின்ன வயசுல இந்த பஞ்சு மிட்டாய் வாங்க பஞ்சாய் பறந்திருக்கோம். இப்போது பார்த்ததுமே பஞ்சாய் பறக்கிறோம் எப்படி செய்தானோன்னு பயந்து.

    தேங்காய் இல்லாவிட்டால் எங்க ஏரியாகாரங்களுக்கு சமைக்கவே வராதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. I have not seen anybody buying the coconut. But their effort to sell in the hot summer is terrible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பேர் வாங்கிச் சுவைப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....