திங்கள், 30 செப்டம்பர், 2019

பத்தோடு பதினொண்ணு - வலைப்பயணம்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவக்கலாமா?

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும். எண்ணம் போல வாழ்க்கை!
 
***


பலரும் வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. திரட்டிகளில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை சில சமயங்களில் நூறுக்கும் மேலாக இருக்கும்! பல பதிவர்கள் பிரபலங்களாக உலா வந்த நேரம் அது – கருத்துப் பரிமாற்றங்கள், போட்டிகள், தொடர் பதிவுகள், கதைகள், கவிதைகள், அரசியல் என பல தரப்பட்ட விஷயங்களும் வலைப்பூக்களில் தினம் தினம் எழுதப்பட்ட காலம்.  பத்தோடு பதினொண்ணு அத்தோட இது ஒண்ணு” என்ற கணக்கில் தான் எனது வலையுலகப் பயணம் ஆரம்பித்தது! ஆரம்பித்த நாளில் தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை! நான் வலைப்பூ ஆரம்பிக்கக் காரணமாக இருந்த எனது சித்தப்பா ரேகா ராகவன் இப்போது வலைப்பூ பக்கமே வருவதில்லை! அப்போது எழுதிக்கொண்டிருந்த பலர் இப்போது எதுவுமே எழுதுவதில்லை.

ஆரம்ப காலத்தில் எனது பதிவுகளை யார் படிக்கிறார்களோ இல்லையோ, நான் பலருடைய தளங்களுக்குச் சென்று படித்து முடிந்தவரை நான் பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஒரு பின்னூட்டமும் அளித்து வந்திருக்கிறேன். பொதுவாகவே பதிவுலகிலும் Give and Take Policy தான் – நீ வந்து என் பதிவுக்கு கருத்துச் சொன்னால், நான் உன் பதிவுக்கு வந்து கருத்து சொல்வேன்! அப்படித்தான்! பல பதிவர்கள் அப்படி அல்ல! அவர்கள் பதிவுக்கு வரும் அனைவருடைய பதிவுகளையும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை! இப்போதும் கூட அப்படியே தான்! நான் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும் ஆனால் மற்றவர்கள் எழுதும் பதிவுகளைப் படிக்க முடியாது – எனக்கு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்று சொல்பவர்கள்/நினைப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து இன்றைக்கு பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பித்த காலத்தில் பலருடைய பதிவுகளில் தனபாலன் அவர்களின் பின்னூட்டம் கண்டு ரொம்பவே பிரமிப்பாக இருக்கும்! அத்தனை பேருடைய தளத்திலும் சென்று தன் வருகையை பதிவு செய்து வருவார். நான் தொடரும் பதிவர்களில் அனைவருடைய புதிய பதிவுகளையும் படித்து விடுவது உண்டு – படிக்க முடியாத நாட்களில் அன்றைக்கு வெளியான பதிவுகளை வரும் நாட்களில் படித்து விட முயற்சித்து படித்ததும் உண்டு.  இப்போது நான் தொடரும் பதிவர்களில் [அது இருக்கும் இருநூறு பதிவர்களுக்கு மேல்!] பலர் இப்போது பதிவுகள் எழுதுவதே இல்லை! புதிய பதிவர்கள் எழுதுவது தெரிந்தால் முடிந்தவரை அவர்கள் தளத்திற்குச் சென்று பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பதிவர்கள் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் என வேறு தளங்களுக்குச் சென்று விட்டார்கள். நீண்ட பதிவுகளை எழுதுவதில் அவர்கள் யாரும் ஆர்வம் காண்பிப்பதில்லை. அவர்கள் எழுதுவதை விட மற்றவர்களின் தளத்திலிருந்து ஷேர் செய்வதும், ஃபார்வார்டு செய்வதும், லைக் செய்து விட்டு போய்க் கொண்டே இருப்பதும் தான் அதிகமாக இருக்கிறது. வெகுசிலரே முகநூலில் பதிவுகளை எழுதுகிறார்கள் – உடனுக்குடன் அங்கே கிடைக்கும் ”லைக்”குகளில் வலைப்பதிவுகள் பக்கமே வருவதில்லை! என்னதான் முகநூலில் இப்படிச் சில விஷயங்கள் உண்டு என்றாலும் எழுதிய பல விஷயங்களை அங்கே நாம் தேடினால் கிடைப்பதில்லை – பதிவுகள் போல சுலபமாக நாம் எழுதியவற்றை மீண்டும் படிக்க முடியாது என்பது பெரிய குறையாக எனக்குத் தோன்றுகிறது.  

இதே நாளில் 2009-ஆம் வருடம் ஆரம்பித்த இந்த வலைப்பயணம் பத்து வருடங்களைக் கடந்து பதினொன்றாம் ஆண்டில்… இந்தப் பதிவையும் சேர்த்து 2047 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் பயணப் பதிவுகள் மட்டுமே எழுதுவதாக சிலர் குறை சொன்னாலும் எனக்குத் தெரிந்த அளவு பல விஷயங்களையும் பதிவில் எழுதி வருகிறேன். தொடர்ந்து ஆதரித்து வரும் நண்பர்கள் இருக்கும் வரை எழுதுவேன் என்ற நம்பிக்கையும் உண்டு! இது வரை ஆதரித்தது போலவே இன்னும் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு! இன்றைய நாளில் வெளியிட வேண்டிய பயணக் கட்டுரை நாளை வெளிவரும் என்ற அறிவிப்புடன் இன்றைக்கு பதிவை முடித்துக் கொள்வோம்.

இந்தப் பதிவு பற்றிய உங்கள் சிந்தனைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  நாளைய பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

50 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஆஜர்.

    அழகான வாசகம். எண்ணங்களே நம் வாழ்க்கையை நல்லதாக அமைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை.... மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  2. தில்லி திரும்பியாச்சா?!!!!!!

    ஆமாம் ஜி நாங்களும் எழுதுவது இல்லை. அதுவும் நான் கொஞ்சம் ஓட்டிக் கொண்டிருந்தேன் அதுவும் இடையில் தடைபட்டு விட்டது. இனி கொஞ்சம் கொஞ்சமேனும் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

    ஆம் முன்பெல்லாம் டிடி பிரமிக்க வைப்பார். இப்போது அவரும் அவரது தொழிலில் பிசி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று (06.10.2019) தில்லி திரும்புகிறேன் கீதாஜி. பலர் எழுதுவது குறைந்து விட்டது..... டிடி தொழிலில் பிசி.... ஆமாம். அது தான் முக்கியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆமாம், வலையுலகிலும் மொய் வைக்கும் பழக்கம் தான். நாங்களும் யார் வரவில்லை என்றாலும் பல தளங்களுக்கும் சென்று வாசித்து, நமது எண்ண அலைகளோடு ஒத்துப் போனதென்றால் கருத்து பதிந்ததுண்டு. கருத்து பதிய முடியாமல் போனாலும் வாசித்ததுண்டு. இப்போதும் அப்படித்தான் வாசிப்பு தொடர்கிறது.

    நான் வாட்சப் தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இல்லை தான்...வாட்சப்பிலும் கூட பெயர் இடாமல் ஒரு நன்றி கூடச் சொல்லாமல் எழுதியவரின் பெயர் இடாமல் வலைத்தள பதிவுகள் அல்லது முகநூல் பதிவுகள் சுற்றுகின்றன...

    பதினொறாவது ஆண்டில் அடி எடுத்துவைத்தமைக்கும் 2047 பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஜி! மேலும் மேலும் நீங்கள் எழுத வேண்டும் என்ற வேண்டு கோளுடன்...

    வலைப்பதிவுக்கே எனது ஆதரவு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பதிவுக்கே உங்கள் ஆதரவு என்று அறிந்து மகிழ்ச்சி. தொடர் வாசிப்பு மகிழ்ச்சியான தகவல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட்.

    பதினொராம்  ஆண்டில் அடி எடுத்து வைத்தமைக்கும் 2047 பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  மென்மேலும் வளரட்டும் பதிவுகள். உங்களுடைய தளம் மிக சுவாரஸ்யமான தளங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். உங்கள் வாழ்த்துகள் பார்த்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. 2047 ஆம் பதிவுக்கு வாழ்த்துகள். என்னோட "எண்ணங்கள்" 2600 தாண்டி இருந்தாலும் அதில் மீள் பதிவுகள் 100 இருக்கலாம். நானும் உங்களைப் போல் பழைய பதிவுக்குச் சுட்டி கொடுக்கத் தான் நினைப்பேன். ஆனால் எல்லோரும் போய்ப் படிப்பது குறைவு என்பதால் மீள் பதிவாகப் போட்டு விடுவேன். இது பதினைந்தாம் ஆண்டு நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எனக்கெல்லாம் முன்னோடி கீதாம்மா. எனது பக்கத்தில் பெரும்பாலும் மீள் பதிவுகள் வெளியிடுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பல நல்ல தகவல்களைத் தொடர்ந்து அளித்து வரும் உங்கள் பதிவுகளோடு ஒப்பிடுகையில் நான் எழுதுவது எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனாலும் என்னாலும் பல சமயங்களில் பல பதிவுகளுக்குச் செல்ல முடியாமல் போவது உண்டு. இருந்தாலும் உங்களைப் போன்ற நண்பர்கள் பலர் நான் வராட்டியும் தொடர்ந்து வந்து கருத்துச் சொல்வதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் எழுத வந்த புதிதில் இருந்த பலரும் இப்போது எழுதுவது இல்லை. தொடர்பில் மிகச் சிலர் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் எழுதுவது எல்லாம் ஒன்றுமே இல்லை. // - படிக்கும் நான் சொல்றேன்... நல்லா எழுதறீங்க... திருவரங்கம் பற்றி எழுதுவது, உணவு இவைகளெல்லாம் சிறப்பா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க. 'எண்ணங்கள்'ல வரும் பதிவுகளும் தொடர்ந்து படிக்கிறேன்.. அதுல இன்னும் நல்லா நிறைய விஷயங்களை எழுதணும்னு கேட்டுக்கறேன்.

      நீக்கு
    2. ஒப்பிடுகையில்....:) ஒப்பீடு செய்வது சரியல்ல.... என் பதிவுகள் அப்படி ஒன்றும் பிரபலமானது அல்ல கீதாம்மா. பதிவுகள் படிக்க முடியாமல் போவது சூழலைப் பொறுத்து... பயணங்களிலும் திருவரங்கத்தில் இருக்கும் சமயத்திலும் படிக்க முடிவதில்லை. தில்லி திரும்பிய பின்னர் பெரும்பாலும் படித்து விடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லைத் தமிழன். கீதாம்மா நிறைய விஷயங்களை சிறப்பாக எழுதுகிறார்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தினம் ஒரு பதிவு என்று இன்றும் தொடரும் உங்கள் பதிவுலக வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  8. வெங்கட்... உங்கள் தளத்தின் இடுகைகள் நன்றாக ரசித்துப் படிக்கும்படி இருக்கு. நானும் சிலரின் தளங்களை (இருபதுக்குள்தான் இருக்கும்) தொடர்ந்து படிக்கிறேன். பின்னூட்டங்களுக்கு மறுமொழி வந்தால் மட்டுமே பின்னூட்டமிடுகிறேன். சில சமயங்களில் ஒரு தளத்துக்குச் சென்று விட்டுப்போனவைகளை கட கடவென படித்து எது இன்டெரெஸ்டிங் ஆக இருக்கோ அதுக்கு பின்னூட்டம் இடுவேன்.

    10 இடுகைகள் ஒரு நாளில் படித்தாலே அதிகம்னு தோணுது. இதுல ஶ்ரீராம், நீங்க-கொஞ்சம் குறைவு, கீசா மேடம்-ஏகப்பட்டது எழுதறாங்க, வல்லிம்மா, துரை செல்வராஜு சார், கோமதி அரசு மேடம், மதுரைத் தமிழன், கில்லர்ஜி.....லிஸ்ட் நீண்டுக்கிட்டே இருக்கு.... எப்படித்தான் தளங்களையும் மேனேஜ் பண்ணி மற்ற தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறீர்களோ... ஆச்சர்யம்தான்...

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொடரும் பதிவர்கள் அதிகம் என்றாலும் தற்போது எழுதுபவர்கள் குறைவுதான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. //நான் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும் ஆனால் மற்றவர்கள் எழுதும் பதிவுகளைப் படிக்க முடியாது – எனக்கு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்று சொல்பவர்கள்/நினைப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்//

    பதிவுலக அழிவுக்கு இவர்களே மூலகாரணம் ஜி.

    பத்தாண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    நான் இன்னும் எழுத தயார் ஆனால் வருகையாளர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதுவே எனக்கு மனஅயர்ச்சியை கொடுத்து விட்டது. ஆனாலும் வழக்கம் போல எல்லோரது பதிவுக்கும் போய் வருகிறேன்...ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... அப்படி நினைக்கக்கூடாது. தொடர்ந்து நீங்க எழுதணும். சில இடுகைகள் சுமாரா வந்திருக்கும், பல ரொம்ப நல்லா வந்திருக்கும். அதைப் பொறுத்துத்தான் வருகை இருக்கும். நீங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி கொடுத்துடறீங்க.. நகைச்சுவை உணர்வு ஜாஸ்தியா இருக்கு. தொடர்ந்து எழுதணும்.

      /மற்றவர்கள் எழுதும் பதிவுகள்/- யார் யார் என்ன என்ன இண்டெரெஸ்டிங் ஆக எழுதியிருக்காங்க, யார் நல்ல பதிவுகள் எழுதுவது என்று எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லுங்க. நான் பெரும்பாலும், எபி அல்லது நான் செல்லும் தளங்களில் 'நான் தொடர்பவர்கள்' என்று இருக்கும் இடுகைகளுக்குத்தான் சென்று படிப்பேன்.

      சில சமயம், தொடரா எழுத ஆரம்பித்து அம்போன்னு விட்டுட்டாங்கன்னா, கடுப்பாயிடுவேன். திருப்பதி மகேஷ் (னு நினைக்கறேன்) சிங்கப்பூர் பயணம்னு எழுத ஆரம்பித்து அம்போன்னு பாதில விட்டுட்டார்.

      நீக்கு
    2. நான் எழுதும் பதிவுகளில் எப்பொழுதும் போலவே தரம் கூடிக்கொண்டு வரத்தான் முயற்சிக்கின்றேன்.

      ஆனாலும் தரமான பதிவுகளுக்கு வருகை குறைவாக இருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

      நான் எழுதிய ஒரேயொரு கவிதை மட்டுமே 125,000 (ஒரு லட்சத்து, இருபத்து ஐந்தாயிரம்) பார்வைகளை தொட்டு இருக்கிறது.

      இக்கவிதையில் சிறப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை நண்பரே...

      நீக்கு
    3. ஆஆஆஆஆ நல்லவேளை நான் அமெரிக்க பயணத்தை எல்லாம் பாதியில நிறுத்தமாட்டேன் ஜாமீஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. அயர்ச்சி வேண்டாம் கில்லர்ஜி. தொடர்ந்து எழுதுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. ஆமாம் கில்லர்ஜி அவர்களின் திறமை கண்டு பலமுறை வியந்தது உண்டு. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் எனது ஆசையும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. 125000 ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம்..... அப்பாடி... இருந்தும் அயர்ச்சியா கில்லர்ஜி. எனது பதிவுகளில் இதுவரை மூன்றே மூன்று பதிவுலள் மட்டுமே பத்தாயிரம் (10,000) பக்கப் பார்வைகள் பெற்றது... அப்படிப் பார்த்தால் நான் எழுதவே கூடாது..... ஹாஹா... தொடர்ந்து எழுதுங்கள் கில்லர்ஜி. அயர்ச்சி வேண்டாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    7. ஹாஹா.,.. அந்த பயம் இருக்கட்டும் அதிரா. விரைவில் எழுதி வெளியிடுங்கள். உங்கள் இடுகைகள் இரண்டு இன்னும் படிக்க பாக்கி இருக்கிறது. தில்லி திரும்பியதும் படித்து விடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //2009-ஆம் வருடம் ஆரம்பித்த இந்த வலைப்பயணம் பத்து வருடங்களைக் கடந்து பதினொன்றாம் ஆண்டில்… இந்தப் பதிவையும் சேர்த்து 2047 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன்.//

    அருமையான சாதனை. வாழ்த்துக்கள்.
    நானும் 2009 ல் தான் ஆரம்பித்தேன் வெங்கட், ஆனாலும் இன்னும் 500 ரை எட்டி பிடிக்கவில்லை.

    நெல்லைத்தமிழன் சொல்வது எல்லோர் தளங்களுக்கும் சென்று கருத்து இட்டுக் கொண்டு பதிவும் போடுவது இப்போது எங்கள் ப்ளாக் மட்டும் தான். நண்பர்கள் வட்டம் கொஞ்சம் தான் வைத்து இருக்கிறேன். நான் கருத்து போடும் சில நண்பர்களும் இப்போது எழுதுவது இல்லை.

    நிறைய புது பதிவர்களையும் ஆதரித்தவர்கள், திண்டுக்கல் தனபாலன், மறைந்த இராஜராஜேஸ்வரி அவர்கள். எந்த பதிவு போனாலும் அவர்கள் பின்னூட்டம் இருக்கும். உங்களை போல் தினம் பதிவு போடுவார் இராஜராஜேஸ்வரி அவர்கள். விழா காலங்களில் அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இராஜராஜேஸ்வரி அம்மா இருந்த வரை அவரும் அனைத்து பதிவர்களுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் அளிப்பார். அப்போது எழுதிய பலர் இப்போது இல்லை என்பதில் எனக்கும் வருத்தமே.... விழாக் காலங்களில் அவர் பதிவுகள் மிகவும் சிறப்பானவை தான் கோமதிம்மா. நிறைய கோவில்கள் பற்றி அவர் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முடிந்தவரை படிக்கவும், கருத்து கூறவும் முயற்சிக்கிறேன். வரையறை வைத்துக்கொள்வதில்லை. நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் உங்களுடையதும் ஒன்று. எழுத்து ஒரு சுகத்தைத் தருகிறது.அதனை உணர்கிறேன். பௌத்தம் வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளும், ஜம்புலிங்கம் வலைப்பூவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் என எழுதி வருகிறேன். முடிந்தவரை பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்க ஜம்புலிங்கம் சார்... உங்க இடுகைகளை நான் ரசித்துப் படிக்கிறேன்.

      நீக்கு
    2. உங்கள் பக்கம் ஒரு தகவல் களஞ்சியம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. இரண்டு வலைப்பூக்களுமே சிறப்பான விஷயங்களைச் சொல்லும் தளங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. முனைவர் ஐயா தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் எனது விருப்பமும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வாழ்துகள். தொடர்க உங்கள் பதிவுகள்.வெற்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  13. உண்மையைச் சொல்லியிருக்கிறீங்க வெங்கட்....
    நானும் உண்மையைச் சொல்கிறேன்.... என்னிடம் வராதோரிடம் நான் போனதில்லை:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... வைர அட்டிகை இன்னும் கொண்டுவந்து தரலைனு பழனிமலை, கந்தகோட்டம்... இன்னும் பல இடங்களில் உள்ள வள்ளி தெய்வானை, முருகன்லாம் இப்படி நினைச்சுட்டா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர்களும் அப்படித்தான் நினைச்சுக்கொண்டிருக்கினமாம்:))..

      போகக்கூடாதென்றெல்லாம் இல்லை, அது ஏனோ ஒரு பயம், அவர்கள் விரும்பாவிட்டால், போனதை பெரிதாக நினைத்து கவனிக்காமல் வரவேற்காமல் விட்டால்.. இப்படி பல யோசனைகள்..

      சின்ன வயசிலிருந்தே என்னை வீட்டில் சொல்வார்கள்.. ..அழையா விருந்தாளியாக நுழையா வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என.. இது ஏதோ பயமொயி தப்பா வருதே:))

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    4. வைர அட்டிகை.... :)) ஹாஹா... பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. விரும்ப மாட்டார்களோ என்று போகாமல் இருக்க வேண்டாம். பல தளங்களுக்கு நான் சென்று படித்து, பின்னூட்டம் இடுவதுண்டு - அவர்கள் ஒரு முறை கூட என் தளத்திற்கு வந்ததில்லை என்றாலும்! நாம் போடும் பின்னூட்டத்திற்கு பதில் கூட எழுதாத பலர் இங்கே உண்டு அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. மனம் நிறை வாழ்த்துகள் வெங்கட்.
    உங்கள் எழுத்துகள் எப்பொழுதும் ஒரே சீராகச் சென்று கொண்டிருக்கின்றன.
    எழுத்து என்னைப் பொறுத்த வரை ஒரு இணைபிரியா தோழி.
    உங்கள் வலைப்பூவுக்கு 10 வயது பூர்த்தியானதும் ,இடுகைகள்
    2047ஐத் தொட்டதும் மிகவும் பிரமிப்புக்கு உரிய சாதனை.

    நல்ல உழைப்பாளிகளின் உழைப்பு வீண் போகாது.

    மன உற்சாகத்தைப் பொறுத்து நான் பின்னூட்டம் இடுவது
    செல்லும்.
    உங்கள் பதிவையோ, கீதாம்மா,எங்கள் ப்ளாக் ஐ விடுவதில்லை.
    இன்னும் வளர ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வலைப்பூ உங்களுக்கும் பிடித்த ஒன்று என்பதில் மிக்க மகிழ்ச்சி வல்லிம்மா... தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் எனது ஆவலும். பார்க்கலாம் எத்தனை தூரம் பயணிக்க முடிகிறது என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. இருவரும் ஒரே வருடத்தில் தான் 2009 தொடங்கி உள்ளோம். 900 கூட நான் வரவில்லை. அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள். இந்தப் பதிவு எழுத்து நடை வெகு சிறப்பாக வந்துள்ளது வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் ஒரே வருடத்தில் தொடங்கி இருக்கிறோம்! ஆஹா மகிழ்ச்சி ஜோதிஜி. நீங்களும் தொடர்ந்து எழுதுவதில் மகிழ்ச்சி.

      இப்பதிவின் நடை நன்றாக வந்திருப்பது என்று உங்கள் மூலம் கேட்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அருமையான வாசகம். எண்ணங்கள் சிறப்பானால் எல்லாமே சிறப்புத்தான். ரசித்தேன்.

    /இதே நாளில் 2009-ஆம் வருடம் ஆரம்பித்த இந்த வலைப்பயணம் பத்து வருடங்களைக் கடந்து பதினொன்றாம் ஆண்டில்… இந்தப் பதிவையும் சேர்த்து 2047 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன்./

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுடைய எழுத்தார்வம் மேலும் சிறந்து இன்னமும் பல ஆயிரக்கணக்கான பதிவுகளை தாங்கள் எங்களுக்கு தர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தங்களின் அற்புதமான எழுத்தாற்றல் என்னையும் மிகவும் கவர்ந்தது. என்னால் இயன்றவரை நான் பதிவுலகிற்கு வந்ததிலிருந்து தங்கள் பதிவுகளை விடாமல் படிப்பேன். என் பதிவுகளுக்கு ஆரம்பம் முதற் கொண்டு வந்து என் எழுத்துக்களை ஊக்குவித்த/இப்போதும் ஊக்குவித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது கமலா ஹரிஹரன் ஜி. பெரும்பாலும் உங்கள் பதிவுகள் படித்து விடுகிறேன். மின்னஞ்சல் மூலம் தொடர வசதி வைத்தால் நீங்கள் புதிய பதிவு எழுதியதும் தெரிந்து விடும். அந்த வசதி நீங்கள் வைக்கவில்லை என நினைக்கிறேன். தற்போது, உங்கள் வலைப்பூவிற்கு எங்கள் பிளாக் வழியாகவே வந்து படிக்க முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. மகிழ்ச்சியான மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி.

    எங்கள் பதிவுகள் எத்தனை என்று கூடப் பார்க்கவில்லை. இப்போது எழுதுவதும் இல்லை. அதற்கான சூழல் இல்லை தற்சமயம்.

    நீங்கள் இன்னும் எழுத வேண்டும். நிறைய. உங்கள் பதிவுகள் அனைத்தையும், அதே போன்று மற்ற நண்பர்கள் சகோதரிகளின் பதிவுகளையும் வாசிக்கின்றேன். கருத்துகள் அனுப்ப கீதாவால் வெளியிட முடியாமல் போனது. அதனால் வாசிப்போடு நிறுத்திக் கொண்டேன். கணினியில் வாசிப்பதில்லையே. மொபைலில் தான் வாசிக்கிறேன். தமிழில் தட்டச்சுவது கொஞ்சம் சிரமமாக இருப்பதால் அதுவும் வேலைப்பளுவிற்கிடையில் என்பதால் இயலவில்லை. மொபைல் பழக்கம் இன்னும் எளிதாகவில்லை எனக்கு.

    உங்கள் தரமான எழுத்து மேலும் வளர்ந்திட வாழ்த்துகள்.

    வாசகம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல் வழி கருத்திடுவது சுலபம் தான் என்றாலும் கணினி போலச் சுலபம் இல்லை. தட்டச்சு கொஞ்சம் சிரமம் தான். சிலர் மொபைல் வழி பதிவே கூட எழுதி விடுகிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  18. இனிய நல்வாழ்த்துகள் சகோதரரே. நான் வலைப்பூவில் எழுதுவது வெகுவாக குறைந்து விட்டது.ஆனாலும் எப்போதேனும் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதுகிறேன். தங்களது தொடர் ஊக்கத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி தமிழ்முகில் ப்ரகாசம். தொடர்ந்து எழுதுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....