வியாழன், 5 செப்டம்பர், 2019

ஜெயகாந்தனும் ஜோதிஜியும் – கிண்டில் வாசிப்பு



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்சனைகளே இல்லைசார்லஸ் டிக்கன்ஸ்.
 
சற்றே இடைவெளிக்குப் பிறகு “கிண்டில் வாசிப்பு” பதிவு மூலமாக இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சென்ற இரண்டு வாரங்களாக கிண்டில் வாசிப்பு பற்றி எழுத இயலவில்லை. பயணத்தொடர் வாரத்தின் மூன்று நாட்களை பிடித்துக் கொள்வதால், மற்றவை எழுத முடியவில்லை. பயணத்தொடரை விரைந்து முடிக்கவே மூன்று நாள் அதற்கே ஒதுக்கி இருக்கிறேன். சரி கடந்த சில வாரங்களில் கிண்டிலில் படித்த புத்தகங்கள் பற்றி இன்றைக்குப் பார்க்கலாம்! கிண்டில் கருவியில் தரவிறக்கம் செய்திருந்த புத்தகங்களில் கடந்த சில நாட்களில் நான்கு மின்னூல்களை படித்து முடித்தேன் – சில எத்தனாவது முறை வாசிக்கிறேன் என்பதற்குக் கணக்கில்லை – குறிப்பாக ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளும் கல்கியின் சில புதினங்களும்.

ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்புகள்:



கிண்டில் மூலம் ஜெயகாந்தன் அவர்களின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். WWW.PROJECTMADURAI.ORG தளத்தில் தரவேற்றம் செய்ததை கிண்டில் மூலமாகவும் இலவச மின்னூல்களாக படிக்க முடிகிறது. அவரது சிறுகதைகளை நான் எத்தனையோ முறை படித்ததுண்டு – குறிப்பாக முதல் தொகுப்பில் முதல் கதையாக கொடுத்திருக்கும் “யுகசந்தி” கதை! எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று இது. எனது ஊரான நெய்வேலி கதையில் வருவதாலோ, அல்லது கதையின் முக்கிய கதாபாத்திரமான கௌரிப் பாட்டி போன்ற ஒரு அத்தைப் பாட்டி [அம்மாவின் அத்தை] எங்கள் வீட்டில் இருந்ததாலோ என்னமோ அந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். முதல் தொகுப்பில் இருக்கும் பத்து கதைகளில் இந்த முதல் கதை – முதலாவது இடத்தில்! மற்ற கதைகளும் பிடிக்கும் என்றாலும்! பாட்டியின் சிந்தனைகளாக வரும் வரிகள் எனக்கு அத்தைப் பாட்டியை நினைவுக்குக் கொண்டு வரும்…

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால் தான் என்ன?”

இரண்டாவது தொகுப்பிலும் பத்து கதைகள் தான். இந்தத் தொகுப்பில் இருக்கும் பத்து கதைகளில் நந்தவனத்தில் ஓர் ஆண்டியும், அக்னிப் பிரவேசம் மற்றும் டிரெடில் கதைகளும் பிடித்தவை.  நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையில் வரும் அந்தப் பாடலை நானும் அவ்வப்போது பாடுவதுண்டு! :) மனதைத் தொட்ட கதை. சந்தோஷமாக இந்தப் பாடலைப் பாடிய நாட்களிலும் அழுது கொண்டே இப்பாடலைப் பாடிய காலங்களிலும் ஊரார் அவனை “ஒரு மாதிரி” என்று தான் சொல்லுகிறார்கள்! ஊராருக்கு என்ன – ஆண்டியின் துயரம் புரியவா போகிறது.

டிரெடில் – அச்சகம் ஒன்றில் வேலை பார்க்கும் வினாயகமூர்த்தியின் கதை. அச்சகத்தில் வரும் பலருடைய கல்யாணப் பத்திரிகைகளை அடித்துத் தரும் தனக்கும் எப்போது கல்யாணம் நடக்கும்? எப்போது பத்திரிகை அடிக்கலாம் என்று கனவுலகில் சஞ்சரித்த வினாயகமூர்த்தி.  ஒரு முறை, அச்சடிக்க வந்திருந்த பத்திரிகையில் மணமகன் பெயரை மாற்றி தன் பெயரை அச்சுக்கோர்த்து ஒரே ஒரு பத்திரிகை அடித்து மகிழ்ந்தவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதைப் பற்றிய கதை. மனதைத் தொட்ட கதையாக இதுவும் உண்டு.  அக்கினிப் பிரவேசம் – “ம்… வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குச் சேதம்”  என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.

“நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே”

ஜெயகாந்தனின் இந்த சிறுகதைத் தொகுப்புகள் இரண்டுமே கிண்டிலிலும், ப்ராஜெக்ட் மதுரை தளத்திலும் உண்டு.  விருப்பம் இருந்தால் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் – கிண்டில் தான் வேண்டுமென்ற அவசியம் இல்லை – கணினி/அலைபேசியில் கூட தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதும் ஒரு வசதி.

50 வயதினிலே – ஜோதிஜி திருப்பூர்:



வலைப்பதிவுகளில் சிறப்பாக எழுதி வரும் நண்பர் ஜோதிஜி அவர்களின் பத்தாவது மின்னூல் “50 வயதினிலே” – புத்தகம் பற்றிய முன்னுரையில் ஜோதிஜி சொல்லும் வரிகளையே இங்கே தருவதில் உங்களுக்கும் ஒரு வசதி.  புத்தகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அவை என்ன என்பதை ஆசிரியரின் வார்த்தைகளிலேயே படிக்கலாமே…

இந்த மின் நூலில் ஒரு குடும்பத்தலைவன் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் சவாலைப் பற்றி இரண்டு பகுதிகளாக எழுதி உள்ளேன். தற்போதைய மாறிய சூழலில் குழந்தைகளின் மனோபாவம், அவர்களின் பள்ளிச் சூழல், இதன் மூலம் அப்பா, அம்மா எதிர்கொள்ளக்கூடிய சவால்களைப் பற்றி முதல் பகுதியில் எழுதி உள்ளேன். குழந்தைகள் வளரும் போதும், கல்லூரியில் நுழையும்போது உருவாகும் தலைமுறை இடைவெளியும், அதனால் உருவாகும் மனம் சார்ந்த விசயங்களையும் இரண்டாவது பகுதியில் எழுதி உள்ளேன்.

கல்வி பற்றிச் சொல்லும் போது அவர் சொன்ன இந்த வார்த்தைகள் – வணிகமயமாகிவிட்ட கல்வியைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் வணிக நிறுவனங்கள் விரும்பும் வளர்ப்பு போலவே இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிதல் என்பது பின்னுக்குப் போய்ப் பிழைத்தல் என்பது முக்கியமாக மாறியுள்ளது” நூற்றுக்கு நூறு உண்மை. நானும் ஐம்பதை நெருங்குவதால், என்னை அந்த ஐம்பதில் நிறுத்திப் படித்தேன் என்பது உண்மையானது. நிறைய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நான் சொல்வதை விட நீங்களே படித்து உணர்வது நல்லது.  இந்தப் புத்தகமும் இலவசமாக WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து படிக்கலாம். இந்த நூலுக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு - இந்த தளத்தின் மூலம் வெளியிடப்பட்ட 400-வது மின்னூல் இது!

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    ஆம். இப்போது ஒரு மணி நேரமாவது தினமும் வாசிக்க முடிகிறதா என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      எப்படியாவது கொஞ்சம் பக்கங்களாவது வாசித்து விடுகிறேன் தினமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஜேகே சிறுகதைகள் என்னிடம் புத்தகமாகவே பைண்ட் செய்யப்பட நிலையில் இருக்கிறது. ஜோதிஜி புத்தகம் இறக்கி வைத்துக் கொள்கிறேன், எப்போது படிப்பேனோ! ஆசை இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு நானும் இப்படி புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது வாங்குவதை குறைத்திருக்கிறேன் - பராமரிப்பு கஷ்டமாகி இருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலையில் 4 மணிக்கு எழுந்திருந்து இரவு 12 மணிக்கு தூங்க செல்கிறேன்.... அதனால் இப்ப படிக்கவே நேரமில்லை. உங்களை கண்டால் பொறாமையாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் ஒரே மாதிரி தான். ஆனால் பத்து முதல் பத்தரைக்குள் உறங்கச் சென்று விடுவேன்.

      நீக்கு
    2. ஹலோ ஜோதிஜி வேலையில் இருந்து நீங்கள் வீட்டிற்கு வந்த பின் உங்களுக்கு டிவி பார்க்க படிக்க நேரம் கிடைக்கும் ஆனால் எனக்கு வீட்டிற்கு வந்த பின் அடுத்த ஷிப்ட் வேலை ஆரம்பிக்கும் (சமைக்கா பாதிரம் கழுவ நாய்க்குட்டியை வாக்கிங்க் கூட்டி போக இப்படி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா

      நீக்கு
    3. காலையில் 4 மணிக்கு எழுந்து இரவு 12 மணி வரை உழைப்பு - உழைப்பாளிக்கு வாழ்த்துகள். சில நாட்களில் எனக்கும் இப்படி உண்டு! அந்த நாட்களில் ஒரு மணி நேரம் படிப்பது கடினம் தான் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. பத்து பத்த்ரைக்குள் உறங்கச் செல்வது நல்ல விஷயம் ஜோதிஜி. நானும் பெரும்பாலான நாட்களில் பத்தரை மணிக்குள் உறங்கி விடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. ஹாஹா... அது சரி... உங்களுக்கு வேலைகள் அதிகம் என்று பதிவர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியுமே மதுரைத்தமிழன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை.

    புத்தக விமர்சனங்கள் நன்றாக இருக்கிறது.
    ஜெயகாந்தன் கதைகள் படித்து இருக்கிறேன்.
    ஜோதிஜி புத்தகத்தை வாசிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசியுங்கள் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. ஜெயகாந்தன் கதைகள் முன்பு படித்திருக்கிறேன். இப்பொழுது இமயம்,பெருமாள் முருகன் நாவல்கள்,சிறுகதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன்.
    ஜோதிஜி வாசிக்கவேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  6. நண்பர் ஜோதிஜி அவர்களின் எழுத்து ஈர்ப்பு சக்தியுடையது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகுந்த அன்பும் நன்றியும்.

      நீக்கு
    2. ஆமாம் கில்லர்ஜி. அவருடைய எழுத்து எனக்கும் பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தினமும் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது நல்லதொரு கருத்து.

    முன்பெல்லாம் நிறைய நேரங்கள் இருந்த மாதிரி இப்போது இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. நேரந்தான் வேகமாகச் செல்கிறதா? இல்லை, நாம்தான் ஒவ்வொரு செயலுக்கும் அதிக பொழுதுகள் எடுத்துக் கொண்டு நேரத்தை குறை சொல்கிறோமா ? தெரியவில்லை.

    தங்களது புத்தக விமர்சனங்கள் நன்றாக உள்ளது. ஜெயகாந்தன் கதைகள் ஒரளவு படித்துள்ளேன். சகோதரர் ஜோதிஜி புத்தகங்களும் படிக்கிறேன். தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் எடுத்துப் படிப்பது - நம் மனதுக்குப் பிடித்ததாக இருந்தால் நேரமும் தானாகவே கிடைத்து விடுகிறது இல்லையா கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. டிரெடில் கதையைத் தழுவி சேரன் ராமன் தேடிய சீதை படத்தை எடுத்தார் அதாவது கதாநாயகன் ஒரு அச்சக உரிமையாளர். அவருக்கு திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருக்கும்.. துவக்கம் மட்டுமே இந்த சிறு கதையைப் போல் இருக்கும்.

    என்னால் இப்போதெல்லாம் மின் புத்தகங்களை வாசிக்க முடிவதில்லை. கண் வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டில் முயற்சித்துப் பாருங்கள்.

      நீக்கு
    2. டிரெடில் கதையைத் தழுவிய சில காட்சிகள் ராமன் தேடிய சீதை படத்திலும்... இப்போது தான் எனக்கும் தோன்றுகிறது இந்தப் படக் காட்சிகள் ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஜோதிஜி சொல்வது போல கிண்டில் பயன்படுத்திப் பார்க்கலாம் ஜோசப் ஐயா.

      நீக்கு
  9. ஆஹா அருமை...
    ஜோதி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  10. வெங்கட் உங்கள் தளத்தில் தேவையில்லாதவற்றை கொஞ்சம் நீக்கி விடுங்க. ஒவ்வொரு முறையே உள்ளே வர தடுமாறுகிறேன். விமர்சனம் எழுத அது வெளியிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜோதிஜி.... சில சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது. பெரும்பாலானவை நீக்கி விட்டேன். ஆனாலும் நேரம் எடுக்கலாம். கணினியில் பயன்படுத்தும்போது வலைப்பூ முகவரியின் பின்னர் ?m=1 என்று சேர்த்து திறக்கலாம் - விரைவில் திறக்கும் - உதாரணத்திற்கு இப்பதிவின் முகவரியை https://venkatnagaraj.blogspot.com/2019/09/blog-post_5.html?m=1 என்று தேடினால் தளம் விரைவில் திறக்கும். முயற்சித்து சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....