செவ்வாய், 1 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – சாங்க்ளா – கோட்டையும் கோவிலும்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே, இந்த உலகத்தையே சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் – விவேகானந்தர்.



கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:

















சாங்க்ளாவின் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கே உள்ள பணியாளரிடம் அடுத்த நாள் எத்தனை மணிக்கு எங்களுக்கான பேருந்துகள் கிடைக்கும் என்பதை விசாரித்துக் கொண்ட பிறகு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தோம். எதிரில் பார்த்த உள்ளூர் வாசியிடம் சாங்க்ளாவில் இருக்கும் கோட்டைக்கு எப்படிச் செல்வது என்று கேட்க, அவர் வழி சொன்னார் – கூடவே பத்து நிமிடங்களில் நீங்கள் கோட்டையை அடைந்து விடலாம் என்றும் சொன்னார்! அட பத்தே நிமிடத்தில் கோட்டைக்குச் சென்று விடலாம் என்ற போது எங்களுக்கு மகிழ்ச்சி. நிறைய நேரம் இருக்கிறது – நின்று நிதானித்து கோட்டையைப் பார்த்து வேறு சில இடங்களையும் பார்க்கலாம் என அவர் சொன்ன திசையில் நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிடத்திற்கும் மேலாக நடந்தும், கோட்டை கண்ணுக்குப் படவே இல்லை!


சரியான வழியில் தான் செல்கிறோமா என்ற எண்ணமும் மனதில் தோன்ற எதிரே வந்த ஒரு பெண்மணியிடம் விசாரித்தோம் – அவரும் இங்கேயிருந்து பத்து நிமிடத்தில் நீங்கள் கோட்டை வாயிலை அடைந்து விடலாம் என்று சொன்னார்! அட இந்த ஊர்காரர்கள் சொல்லும் பத்து நிமிடத்திற்கான அர்த்தம் எவ்வளவு என்று புரியவில்லையே என்று மேலே நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இந்தப் பயணத்தில் இதுவரை பார்த்த ஊர்கள் போலவே இங்கேயும் வழியெங்கும் ஆப்பிள் தோட்டங்கள். ஆப்பிள்கள் மரம் முழுவதும் காய்த்துக் குலுங்குகிறது!  ஒரு சில இடங்களில் மின்சாரக் கம்பி வேலிகள் போட்டு இருக்கிறார்கள் – ஆப்பிள் தோட்டத்திற்குள் யாரும்/எதுவும் அத்து மீறி நுழையக் கூடாது என்பதற்காக! எப்படியெல்லாம் காபந்து செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்! சில சுற்றுலாப் பயணிகள் பறித்து விடுவார்களாம்! குரங்குகளும் பறித்து வீணடித்து விடும் என்று சொன்னார் ஒரு உள்ளூர்வாசி!



நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். ஒரு வழியாக ஒரு நுழைவாயில் எங்களை வரவேற்றது – கோட்டைக்குப் போகும் வழி அந்த நுழைவாயில் வழி! மேலே ஏதோ கட்டுமான வேலை நடக்கிறது போலும். நுழைவாயில் அருகே சிமெண்ட் மூட்டைகளும், மணலும் குவித்து வைத்து இருந்தது. மணலை மூட்டைகளாக்கி, ஆண்-பெண் இருபாலரும் முதுகில் சுமந்து கொண்டு மலையேறுகிறார்கள். சாதாரணமாக மலைப்பாதையில் நடப்பதே கடினம் எனும்போது இப்படி முதுகுச் சுமையோடு மலையேற்றம் மிகவும் கடினம்! எங்கள் முதுகில் இருந்த பையின் சுமை ஒன்றுமே இல்லை என்று நினைக்க வைத்தது அவர்கள் முதுகுச் சுமை. ஆண்கள், பெண்கள் என இருவருமே மூட்டைகளை முதுகில் சுமந்தபடி படிகளையும், பாதையையும் மாற்றி மாற்றி கடக்கிறார்கள் – சில இடங்களில் படிகள், சில இடங்களில் செங்குத்தான பாதை.


நுழைவாயில் உள்ளே இரு பக்கமும் ஓவியங்கள் இருந்தன. அவற்றின் அழகை ரசித்து, சில படங்களும் எடுத்துக் கொண்ட பிறகு அங்கிருந்து மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐம்பது படிகள் தொடர்ந்து ஏற, மூச்சு வாங்கியது! எங்களைக் கடந்து தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு சிறுவன்! அனாயாசமாக மலைப்பாதையில் சுமையோடு நடக்கிறான் அந்தச் சிறுவன்! இன்னும் எவ்வளவு தூரம் எனக் கேட்டபோது கிடைத்த பதில் – ஹாஹா… அதே பத்து நிமிட நடை என்பது தான்! எத்தனை தூரம் போக வேண்டும் என்றாலும் பத்து நிமிட நடை என்று தான் சொல்வார்களோ என்ற சந்தேகம் மனதுக்குள் வந்தது!  நாங்கள் சில படிகள் ஏறிச் செல்வதற்குள் அந்தச் சிறுவன் பார்வையிலிருந்து மறைந்து விடும் தூரத்தினைக் கடந்து சென்று விட்டான்! நாங்களோ சில படிகள் ஏறி, கொஞ்சம் ஓய்வு எடுத்து, பிறகு மீண்டும் ஏறுவது என்றே கடந்தோம். 


நகர வாழ்க்கையில் சில நேரங்களில் நடப்பது உண்டு என்றாலும் பெரும்பாலும் சமதளத்தில் நடப்பது தானே – மலைப்பாதையில் நடப்பது அத்தனை சுலபமல்ல! மேல் நோக்கிய செங்குத்தான பாதையிலும் படிகளிலும் மேலே ஏறிச் செல்லும்போது நெஞ்சம் படபடவென, வேகமாக அடித்துக் கொள்வது போல ஒரு உணர்வு. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், நேரமானாலும் பரவாயில்லை என, நானும் நண்பர் ப்ரமோத்-உம் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தோம். இருவருமே 80 கிலோவிற்கு மேல் என்பதால் எங்கள் உடல் எடையோடு முதுகுச் சுமையும் சேர்ந்து தூக்கிக் கொண்டு செல்வது கடினமாகவே இருந்தது. வழியெங்கும் ஒரு புறத்தில் வீடுகளும், மறு புறத்தில் ஆப்பிள் தோட்டங்களும், மற்ற பழங்கள், மரங்கள் என பார்க்கவே அழகாக இருந்தது. அழகினை ரசித்தபடியே நாங்கள் மெதுவாக ஏறிச் சென்று கொண்டிருந்தோம். 


முதலில் சென்றடைந்தது பத்ரிநாதர் கோவில். அழகான மரத்தினால் ஆன கதவுகள். மூடியிருந்த கதவுகளைத் திறந்து கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். கதவு முழுவதுமே மரச் சிற்பங்கள் – இந்தச் சிற்பங்களின் படங்களை ஏற்கனவே ஞாயிறு நிழற்பட உலாவாக வெளியிட்டு இருந்தது நினைவிருக்கலாம். சிற்பங்களின் அழகை ரசித்து சில படங்கள் எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் மூடி இருந்தது. அங்கே யாருமே இல்லை! யாரிடம் விசாரிப்பது என்று பார்க்க, ஒருவர் கோவில் கதவுகளைத் திறந்தபடி உள்ளே வந்தார். அவரிடம் விசாரிக்க, மதிய நேரம் என்பதால் கோவில் மூடி இருக்கிறது என்றும் மாலை நேரம் அல்லது காலை நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் என்றும் சொல்லிக் கொண்டு பிரஹாரத்தினைச் சுற்றி வந்தார் – எங்களையும் இப்படித்தான் சுற்ற வேண்டும் என்று சொல்லியபடி!


கோவிலின் உள்ளே இருக்கும் பத்ரிநாதரை தரிசிக்க முடியவில்லை – திரைச்சீலையால் மூடி இருக்க, அங்கே சில படங்கள் எடுத்துக் கொண்டு, அந்த நபரிடம் கோட்டை பற்றிக் கேட்க, கோவிலின் உள்ளேயிருந்து வெளியே செல்லும் பாதையைக் காண்பித்து இப்பாதையில் இன்னும் சில நிமிடங்கள் நடந்தால் கோட்டை வந்து விடும் என்று சொல்லி அவரது வீட்டிற்குச் சென்று விட்டார்.  நாங்கள் மலைப்பாதையில் மேலும் நடந்தோம். கோட்டை வரும் வழியாக இல்லை! இத்தனைக்கும் நீண்ட நேரம் நடந்து விட்டது போலத் தோன்றியது. எதிரே மூன்று பெண்மணிகள் நடந்து வந்தார்கள் – ஒவ்வொருவர் தலையிலும் பெரிய பெரிய மரங்களிலிருந்து வெட்டப்பட்ட அடிப்பாகம் – விறகுக்காக எடுத்துச் செல்கிறார்களாம்! சுலபமாக சுமையோடு மலைப்பகுதியில் ஏறிச் செல்லும் அவர்கள் நாங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவது பார்த்து – “உங்களுக்குப் பழக்கமில்லை போலும்!” என்று சொல்லிச் சென்றார்கள்.


இன்னும் சிறிது தூரம் தான் செல்ல வேண்டும் – மெதுவாகச் செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்! நாங்கள் மேலே நடந்தோம். கோட்டை பற்றிய தகவல்கள், மற்ற அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  என் உடன் மலையேற்றம் வந்த மாதிரி உங்களுக்கும் மூச்சு வாங்குகிறது போலும்! கொஞ்சம் ஓய்வெடுங்கள். நாளை மறுநாள் இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    இதை ஒட்டிய பழைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன் ஜி. செம இடம் இல்லையா...படங்களும் அப்படியெ. இதோ இப்பதிவை வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மதிய வணக்கம் கீதாஜி.

      பழைய பதிவுகளையும் படித்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல உத்வேகம் கொடுக்கும் விவேகானந்தரின் வரிகள்!

    ஆனால், சுமைகள் சில சமயம் அதிகமாக அழுத்தும் போது மனமும் உடலும் சோர்ந்துதான் போகிறது. நாம் சாதாரண மனிதர்கள்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது உண்மைதானே?

      நீக்கு
    2. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைதான் அந்த அனுபவங்கள் நமக்கு நிறையக் கற்றுத் தருவதால்...!!!!!!

      கீதா

      நீக்கு
    3. நாம் சாதாரண மனிதர்கள் தானே... சுமைகள் தரும் அழுத்தம் உண்மை. அதிலிருந்து விடுபடுவதில் தான் இருக்கிறது சாமர்த்தியம் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - அதே அதே ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. அனுபவங்கள் தான் நமக்கு பாடங்கள்... உண்மை கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மலையேற்றம் அதுவும் முதுகுச்சுமையோடு போவது மிகவும் சிரமம் நம்மைப் போன்றவக்ளுக்கு. அவர்களுக்கு அது அனாயசமாக இருக்கும் அதனால்தான் 10 நிமிடம் என்று சொல்கிறார்க்ளோ?!!!!!

    படங்கள் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையேற்றம் பழக்கம் இல்லாத நமக்கு கடினம் தான் கீதாஜி... படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பூமியைப் போல வெறும் மண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் தாங்கலாம். ம்ம்ம்ம்....  விவேகா நம்மை சமாதானப்படுத்திகிறார்!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூமியைப் போல வெறும் மண்ணாக இருந்தால்... இருந்தால் தானே ஸ்ரீராம். வெற்று மண் பயன்படுவதில்லையே! சத்து இருந்தால் தான் அதற்கும் பயன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பத்து நிமிஷம் பத்து நிமிஷம் என்று சொல்லி எத்தனை நிமிஷங்களில்தான் அங்கு அடைந்தீர்கள்!

    பத்ரிநாதரை பூட்டி இருந்தாலும் தரிசிக்கும் வண்ணம் கம்பி கேட் போட்டு மூடலாம்.  ம்ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அங்கே நாங்கள் சென்று அடைய இருபது நிமிடத்திற்கும் மேலானது ஸ்ரீராம். பத்ரிநாதரை கம்பி கேட் போட்டு மூடியிருந்தால் தரிசித்து இருக்கலாம்! ஆனால் தரிசிக்க முடியவில்லை என்பதில் எங்களுக்கும் வருத்தம் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  6. //இன்னும் சிறிது தூரம் தான் செல்ல வேண்டும் – மெதுவாகச் செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்! நாங்கள் மேலே நடந்தோம்.//

    சின்ன வயசுல விளையாடுவோமே...   "அம்மா வீடு எங்கருக்கு?   ஆத்துக்கு அந்தாண்ட..."  அது நினைவுக்கு வருகிறது!   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மா வீடு எங்கருக்கு? ஆத்துக்கு அந்தாண்ட....// ஹாஹா நல்ல விளையாட்டு தான். நான் விளையாடியதில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் நன்றாக இருந்தது. சுமைகள்தான் நம்மை பக்குவப்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இப்படி கஷ்டப்பட்டு உலா வருவதற்கும் ஒரு மனத்துணிவு வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டு உலா - அப்படி இல்லை கில்லர்ஜி. பயணம் பிடித்தமான செயல் என்பதால் எந்தக் கஷ்டமும் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பத்து நிமிட நடைதான்..சிறுவன் சொன்னதை நினைத்துப்பார்த்தேன். களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் அதிக தூரம் சென்றது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் களப்பணி நினைவுகள் - மீட்டு எடுக்க இந்தப் பதிவு உதவியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிகவும் அழகான வாக்கியம். பதிவு அற்புதமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் வாக்கியமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மலை ஏற்றம் அங்குள்ளவர்களுக்கு இலகுவானது நமக்குத்தான் .... அதுவும் நீங்கள் இருவரும் முதுகுச் சுமையுடன். பிரயாணங்களில் பல அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலை ஏற்றம் பழகியவர்களுக்கு சுலபம் தான். நமக்கு பழக்கமில்லை என்பதால் கடினமாகத் தான் இருந்தது மாதேவி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஒரு மலையாள் திரைப்படம்நினைவுக்கு வந்தது “இதோ இவிடம்வரே “

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ இவிடம்வரே... கேள்விப்பட்டிராத சினிமா. பொதுவாக எனக்கு சினிமா ஞானம் குறைவு தான் ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நல்ல மலையேற்றம். படிக்கையிலேயே மூச்சு வாங்குகிறது. படங்கள் எல்லாமும் அழகு, அருமை!கோட்டையைப் பார்க்கும் ஆவலில் காத்திருக்கிறேன். பத்ரிநாதரைப் பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. திரும்பி வரும்போது பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்ரிநாதரை பார்க்க இயலவில்லை என்பதில் வருத்தம் தான். திரும்பி வரும்போதும் பார்க்க இயலவில்லை - கோவில்கள் குறைவான நேரமே திறந்து இருக்கும் எனத் தெரிகிறது கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. "இதோ பத்து நிமிடம்" "இதோ பத்து நிமிடம்" எனச் சொன்னது, "வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்ச தூரம்" என்னும் வழக்குச் சொல்லை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்சம் தூரம்// புதிய வழக்கு. நான் கேள்விப்பட்டதில்லை கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. மலையின் பாதையே பிரமிப்பாக இருக்கிறது. அங்கே கோவிலும் கட்டி,கோட்டையையும் கட்டி இஎஉக்கிறார்களே. மலையேறும் போது ஆக்சிஜன் குறைவது ,மூச்சு வாங்கத்தான் செய்யும்.
    அதுவும் பழக்கம் இல்லாவிட்டால் கடினம தான். அவர்கள் ஆரோக்கியம் பிரமிக்க வைக்கிறது. சிமெண்ட் மூட்டையைச் சுமந்து கொண்டு ஏறினார்கள் என்றால் அதிசயமாக இருக்கிறது.
    நல்ல அநுபவம் தான் உங்களுக்கு.
    பத்ரினாத் கோவில் வெளியே பார்க்க அமைப்பாக இருக்கிறது. திரை ஓவியமும்
    அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் திரை ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.... அனுபவங்கள் பல கிடைத்த பயணம் தான் இது வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. மலைபகுதியில் வாழும் மக்களுக்கு பழக்கத்தால் விரைவில் பாதையை கடப்பார்கள்.
    நமக்கு பழக்கம் இல்லாத காரணத்தால் மூச்சு வாங்கும்.

    பத்ரி நாதர் கோவில் வாசல் அருமையாக இருக்கிறது.
    கோட்டையை பார்த்து விட்டு வந்து பத்ரி நாதரை பார்த்தீர்களா என்று பார்க்க வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பி வரும் வழியிலும் பத்ரிநாதரை பார்க்க இயலவில்லை கோமதிம்மா... கோவில் குறைந்த நேரமே திறந்திருக்கும் என்று தெரிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....