செவ்வாய், 8 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – பயணத்தின் முடிவு


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்…

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!


கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:




















காம்ரூ கோட்டை பார்த்த பிறகு சாங்களாவிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குபா எனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த நண்பரும் நானும், அங்கே இருந்த Hotel Rock View எனும் தங்குமிடத்தில் அறை எடுத்துத் தங்கினோம். அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு அங்கேயிருந்து பேருந்தில் புறப்பட வேண்டும் என்பது திட்டமாக இருந்தது.  எப்போதும் போல, காலை ஐந்தரை மணிக்கே விழித்து விட்டோம். சிறிது நேரம் வெளியே வந்து பலகணி வழியே இயற்கைக் காட்சிகளை ரசித்தபிறகு இருவரும் தயார் ஆனோம்.  கீழே சிப்பந்தி எழுந்து விட்டது தெரிந்தது.  கீழே சென்று தேநீர் வேண்டும் எனக் கேட்க, பத்து நிமிடத்தில் அழைக்கிறேன் என்று சொன்னார்.  வெளியே நின்று கொண்டு தங்குமிடத்தின் அருகே இருந்த ஆப்பிள் தோட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆப்பிள் பறித்துச் சாப்பிடலாமா எனக் கேட்க, இன்னும் பழுக்கவில்லை என்பதால் நன்றாக இருக்காது – சில வாரங்கள் கழித்து தான் பழுக்கும் என்று சொல்லி விட்டார் சிப்பந்தி!

தேநீர் அருந்திய பிறகு அறைக்குச் சென்று எங்கள் உடமைகளைச் சரிபார்த்து புறப்படத் தயாராகக் காத்திருந்தோம். பேருந்து வருவதைப் பார்த்துவிட்டு அழைக்கிறேன் என்று சிப்பந்தி சொல்லி இருந்தார். பேருந்து சப்தம் கேட்க, நாங்களாகவே கீழே இறங்கினோம் – பார்த்தால் நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து அது இல்லையாம்! ஹாஹா… சரி கீழேயே காத்திருக்கலாம் என காத்திருந்தோம். கிராமத்தினர் சிலர் சாலை வழி வந்து சாலை மூலையில் இருந்த பெரிய மணியைச் சுழற்றி பிரார்த்தனை செய்து, தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள். நாங்களும் பேருந்துக்குக் காத்திருந்த வேளையில் அந்த மணியைச் சுழற்றி எங்கள் பயணம் நல்லவிதமாக முடிந்து தில்லி திரும்ப வேண்டும் எனவும் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என்றும் மனதில் வேண்டிக்கொண்டோம்.  சில நிமிடங்களில் எங்களுக்கான பேருந்து வந்து சேர்ந்தது. சாங்க்ளாவிலிருந்து சண்டிகட் வரை செல்லும் பேருந்து! நாங்கள் வழியில் இருக்கும் ராம்பூர் bபுஷர் வரை பயணிக்க இருந்தோம். ஏற்கனவே ராம்பூரிலிருந்து தில்லி வரை பயணிக்க வேறு பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம்.

நாங்கள் பேருந்தில் பயணிக்க, முதல் நாள் சாங்க்ளாவில் எங்களிடம் இருந்து பிரிந்து பேருந்தில் தொடர்ந்து பயணித்த கேரள நண்பர் ப்ரஷாந்த் தானும் சண்டிகட் நோக்கி பயணிக்க தயார் என்று வாட்ஸப் வழி செய்தி அனுப்பினார். அவர் முதல் நாள் எங்களிடமிருந்து விடைபெற்று கார்ச்சம் என்ற கிராமம் வரை பயணித்தார். அங்கே தங்கிய அவர் ஷிம்லா வரை சென்று அவர் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்த பேருந்தில் தில்லி செல்ல வேண்டும்.  நாங்கள் வரும் பேருந்தும் கார்ச்சம் வழி தான் ஷிம்லா செல்லும் எனச் சொல்ல, அதே பேருந்தில் அவரும் வருவதாகச் சொல்லி எங்கள் பேருந்திற்காகக் காத்திருந்தார்.  கார்ச்சம் சென்று சேரும் சமயத்தினை பேருந்தின் நடத்துனரிடம் கேட்டு அவருக்குச் சொல்ல, அவரும் காத்திருந்தார்.  கார்ச்சம் என்ற இடத்தில் ஒரு ராணுவ முகாம் உண்டு – அங்கே இருந்து இரண்டு பேர் ப்ரஷாந்த் நின்ற இடத்திலேயே காத்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவர் கேரளம்! மற்ற பெண்மணி [அவருடைய கணவர் அங்கே ராணுவத்தில் பணிபுரிபவர்!] கன்னடம். அவர்களும் பயணத்தில் எங்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்கள்!




வழியில் சில இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. வழியில் உணவுக்காக ஓரிடத்தில் நிற்க அங்கே நாங்களும் உணவு உட்கொண்டோம் – வேறென்ன – நண்பர் மோமோஸ் சாப்பிட நான் பராண்டா தான்! சுடச் சுட தேனீரும் அமிர்தமாய் இருந்தது.  தொடர்ந்து பயணித்து நாங்கள் ராம்பூர் Bபுஷர் வந்தடைந்த போது மதியம் 12 மணி தான் ஆகியிருந்தது.  நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த பேருந்து அங்கே இருந்து மாலை ஐந்து மணிக்கு தான்! ஐந்து மணி நேரம் அங்கே இருந்து பெரிதாக ஒன்றும் பார்க்கப் போவதில்லை. சும்மாவே அங்கே இங்கே திரிய வேண்டும்! அதற்கு பதிலாக அதே பேருந்தில் தொடர்ந்து பயணித்து சண்டிகட் வரை பயணிக்கலாம் எனத் தோன்றியது. நண்பரும் அதையே நினைக்க உடனடியாக முன்பதிவு செய்திருந்த பயணச் சீட்டை ரத்து செய்தோம் – கொஞ்சம் பிடித்தம் போக இரண்டு நாட்களில் பணம் வந்து விட்டது வங்கிக் கணக்கில்! நடத்துனர் எங்களை இறங்கவில்லையா எனக்கேட்க, ”இல்லை உங்களுடனேயே சண்டிகட் வரை பயணிக்க இருக்கிறோம்” எனச் சொல்லி பயணச் சீட்டு வாங்கிக் கொண்டோம்.



சின்னச் சின்னக் கிராமங்கள், மலைப்பாதை என மிகவும் ரம்மியமான பயணம் தான். வழியில் இருக்கும் நார்க்கண்டா போன்ற இடங்களில் ஆப்பிள் அறுவடை ஆரம்பித்து அவற்றை நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்ததால் நிறைய இடங்களில் சரக்கு வண்டிகள் நடமாட்டம் அதிகம்! அதனால் பேருந்து சீரான வேகத்தில் பயணிக்க முடியவில்லை. கூடவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.  நல்ல வேளையாக மலைச்சரிவுகள் ஏதும் ஆகவில்லை.  மலைச்சரிவுகள் இருந்தால் எங்கள் பயணம் நிச்சயம் தடைபட்டிருக்கும். அடுத்த நாள் செய்திகளை படித்த போது ஹிமாச்சலத்தின் பல பகுதிகளில் மலைச்சரிவுகள் ஏற்பட்டது தெரிந்தது.  நல்ல வேளையாக சரியான நேரத்தில் எங்கள் பயணத்திட்டத்தினை மாற்றிக் கொண்டதால் எந்த வித தொல்லையும் இன்றி தில்லி நோக்கி பயணிக்க முடிந்தது என்று புரிந்தது.

சண்டிகட் நகரின் 42-ஆம் செக்டரில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போது இரவு 10.30 மணி! கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து பயணித்து அங்கே வந்து சேர்ந்திருந்தோம். சண்டிகட் நகரிலிருந்து தில்லி நோக்கிச் செல்லும் பேருந்துகள் அங்கேயிருந்து புறப்படாது! செக்டர் 17-இல் இருக்கும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தான் செல்லும் என்பதால் 42-ல் இருண்டு 17-க்கு நகர பேருந்து பிடித்து அங்கே பயணித்தோம். அங்கே வரிசையாக ஹரியானா ரோட்வேஸ் பேருந்துகளும், பஞ்சாப் ரோட்வேஸ் பேருந்துகளும் நின்றிருந்தன.  ஒருவரும் பேருந்து எப்போது புறப்படும் எனச் சரியான நேரம் சொல்லத் தயாராக இல்லை! பொதுவாகவே ஹரியானாவாசிகளிடம் கேள்வி கேட்டால் நேருக்கு மாறாகத் தான் பதில் சொல்வார்கள் – “இந்தப் பேருந்து எப்போது புறப்படும்?” என்று கேட்க, “போறப்ப தானா போகும்! உனக்கு இதுல போகணும்னா புறப்படும் போது ஏறிக்கோ!” என்று பதில் கிடைத்தது! அதே நேரத்தில் ஒரு ஹிமாச்சல் ரோட்வேஸ் பேருந்து வந்தது – அதில் இடமும் இருக்க அதிலே தில்லி வரை பயணித்தோம்.

தொடர்ந்து மழை பெய்தபடியே இருந்தது. நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர்! மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அந்த அடர் மழையிலும் ஓட்டுனர் பேருந்தை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார்! பேருந்து சீறிக் கொண்டு போக, இரண்டு பக்கமும் தேங்கியிருந்த நீரை பக்கவாட்டில் சிதறடித்துக் கொண்டு சென்றதைப் பார்க்க படகில் பயணிப்பது போன்ற உணர்வு! இந்த மழையில் இவ்வளவு வேகமாகச் செல்வது சரியல்ல என்று தோன்றியது. சொன்னால் கேட்கவும் மாட்டார்கள்! நாம் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவோம் என கடைசி இருக்கையில் காலை நீட்டி படுத்துக் கொண்டேன். நண்பர் அமர்ந்து கொண்டே உறங்கினார். அதிகாலை நான்கரை மணிக்கு தில்லி வந்து சேர்ந்து விட்டோம்! பதினொன்றரை மணிக்கு சண்டிகடிலிருந்து புறப்பட்ட பேருந்து ஐந்து மணி நேரத்தில் தில்லி வந்து சேர்ந்து விட்டது! கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர்! அதுவும் இரவு நேரம், தொடர் மழையிலும், இடையில் சில இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஒரு இடத்தில் தேநீருக்கு அரை மணி நேரம் நிறுத்தியும் ஐந்து மணி நேரத்தில் தில்லி வந்து சேர்ந்து விட்டார் அந்த ஓட்டுனர்! பயணம் இனிதே முடிந்தது. 

இந்தப் பயணம் நான் மேற்கொண்ட பல பயணங்களில் கொஞ்சம் வித்தியாசமானது.  இனிமையான இடங்கள், நல்ல அனுபவங்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான இடங்கள், மனதுக்கு அமைதி தந்த அனுபவங்கள் என பலவும் ஒரு சேரக் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி. எப்போதுமே பயணம் பிடிக்கும் என்றாலும் இந்தப் பயணம் அதிகமாகவே பிடித்தது என்று சொல்ல வேண்டும். இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களையும், பார்த்த இடங்களைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்களும் இத்தொடரில் வெளியிட்ட தகவல்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  தொடர்ந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் வேறு ஒரு பயணத் தொடர் அமையலாம்! அப்படி அமைந்தால் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. இந்தப் பேருந்து எப்போது புறப்படும்?” என்று கேட்க, “போறப்ப தானா போகும்! உனக்கு இதுல போகணும்னா புறப்படும் போது ஏறிக்கோ! /

    அடடா.. சூப்பர் பதில். தமிழ்நாடே பரவாயில்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி மாநிலங்களில் - குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இருக்கும் பேருந்து வசதிகள் பார்க்கும்போது தமிழகத்தின் வசதிகள் எவ்வளவோ மேல் ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஹா.. ஹா.. எடக்கு மடக்கு பதிலாகத்தான் வருமோ... ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதம்.

    ஸ்விஸில் நான் மட்டும் சுற்றியபோது வழி கேட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அங்கு பெண்கள் உதவினார்கள்.

    மீண்டுமொரு பயணத்தொடருடன் வாருங்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி... இங்கே ஹரியானா ஆட்கள் என்றாலே எடக்கு மடக்கு பதில்கள் தான் வரும்! நிறைய அனுபவங்கள் கிடைத்தது அப்படியான ஆட்களிடமிருந்து.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எடக்கு மடக்குப் பதில் எல்லா இடத்திலும் இருக்கும் போல...
    நல்லதொரு பயணப் பகிர்வு...
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடக்கு மடக்கு எல்லா இடங்களிலும் உண்டு - ஹரியான்விகளுக்குக் கொஞ்சம் அதிகம் தான் பரிவை சே. குமார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மழைநேரத்தில் வேகபயணம் ஆபத்துதான் ஓட்டுனர்கள் அதை உணர்வது இல்லையே.

    மறு பயணத்துக்கு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகமான பயணம் நல்லதல்ல என்பதை ஓட்டுனர்கள் உணர்வது இல்லை தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //மணியைச் சுழற்றி எங்கள் பயணம் நல்லவிதமாக முடிந்து தில்லி திரும்ப வேண்டும் எனவும் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என்றும் மனதில் வேண்டிக்கொண்டோம். //

    நல்ல வேண்டுதல் நன்றி.

    பயணம் பயமாககொஞ்சம் இருந்தது மழை சமயத்தில் வேகமாக் பயணம் என்றால் பயம் தான்.
    கூட்டம் இல்லையா? பஸ்ஸில் படுத்து தூங்க முடிந்தது மகிழ்ச்சி.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்தில் கூட்டம் இல்லாததால் படுத்துத் தூங்க முடிந்தது கோமதிம்மா.., பயணம் மிகவும் சிறப்பாகவே இருந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உங்கள் பயணங்களிலேயே இது தான் ஆபத்தான பயணமும் கூட என நினைக்கிறேன்.யாரும் செல்லாத மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். நாங்களும் நன்றாக ரசித்தோம். வடகிழக்கே தான் மோமோஸ் பிரபலம் என நினைத்தேன். இங்கேயுமா? ஆனால் தமிழ்நாட்டுக்கே வந்து விட்டதே! எனக்கு என்னமோ அவ்வளவு பிடிக்கலை. தொடர்ந்து உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயணங்கள் அமையட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணாச்சலப் பிரதேசம் கூட ஆபத்தான பயணம் தான் செய்தேன். ஆனால் அதை விட இது கொஞ்சம் அதிக ஆபத்து - அழகான ஆபத்து கீதாம்மா... ஹிமாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் இப்போது மோமோஸ் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. மலைப் பிரதேசங்களில் அதிகமாகவே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இனிய மாலை வணக்கம் வெங்கட்ஜி!! என்றும் காலை என்பது இன்று மாலை!!!

    முயல் ஆமை முயலாமை அறிந்த ஒன்று. நல்ல வாசகம்...

    பதிவு முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... காலையும் இல்லாமல் மாலையும் இல்லாமல் நான் மதிய வேளையில் உங்கள் கருத்துரைக்கு பதிலிடுகிறேன் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கூடவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக மலைச்சரிவுகள் ஏதும் ஆகவில்லை. //

    நல்ல காலம் ஜி. நல்லபடியாகப் பயணம் அமைந்தது குறித்து மகிழ்ச்சி.

    எனக்கும் உங்களின் பயணங்களில் இது கொஞ்சம் கூடுதலாகவே பிடித்தது ஜி. நானும் மகனும் பேசிக் கொள்ளும் ஒரு விஷயம் இது. யாரும் அதிகம் செல்லாத சிறு ஊர்கள் இயற்கைக் காட்சிகளுடன் அமைதியாக இருக்கும் ஊர்களுக்குச் சென்று நடந்து செல்லும்படி ஜஸ்ட் மிகச் சிறிய முதுகுப் பையுடன், நினைத்தபடி பயணம் செய்வது என்று...

    இப்போது கூட நான் நடைப்பயிற்சியின் போது தினமும் ஒரே வழியில் செல்வதில்லை.
    நாங்கள் இருக்கும் பகுதியில் வெவ்வேறு பகுதிக்குச் சென்று அங்கு என்ன இருக்கின்றன என்று பார்ப்பதில் ஆர்வம்...

    அருமையான பயணம் வெங்கட்ஜி. நிறைய விஷயங்கள் கிராமங்கள் அவர்கள் வாழ்க்கை என்று பல தெரிந்துகொள்ள முடிந்தது. குறித்தும் வைத்துக் கொண்டிருக்கிறேன் ஜி.

    இன்னும் உங்கள் பயணங்கள் இது போன்று தொடரட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பயணங்களில் இந்தப் பயணம் மிகவும் பிடித்தது - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      வெவ்வேறு வழியே நடைப் பயணம் - பல விதங்களில் இப்படிச் செய்வது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ரசித்த பயணம். இன்னும் படங்கள் சேர்த்திருக்கலாம். ஆப்பிள் மரங்கள் க்ளோஸப் படங்கள் மிஸ்ஸிங்.

    வேறொரு பயணம் ஆரம்பிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னும் படங்கள் சேர்த்திருக்கலாம்!// ஹாஹா... சேர்த்ததே அதிகம் என்று தோன்றியது! மொத்தம் 1000 படங்களுக்கு மேல் எடுத்திருந்தோம். அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் பதிவுக்கு 50 படங்களுக்கு மேல் சேர்க்க வேண்டியிருக்கும். ஆப்பிள் மரங்கள் க்ளோஸ் அப் - சேர்த்த நினைவு நெல்லைத் தமிழன்.

      அடுத்த பயணம் - பார்க்கலாம் அமையுமா என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஆஹா... இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி ப. கந்தசாமி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முயலாமை...    சின்ன வயதில் சங்கேதமாகக் கேட்கும் கதை.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிய வணக்கம் ஸ்ரீராம்.

      முயலாமை - கதையாகக் கேட்டது இன்றும் நினைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சரியான நேரத்தில் பயணத்திட்டத்தை உங்கள் மனதில் மாற்றியமைத்தார் கடவுள்.  இல்லாவிட்டால் தாமதமாகியிருக்கும்!  நீங்கள் மணி அடித்து வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான நேரத்தில் பயணத்திட்டத்தை உங்கள் மனதில் மாற்றியமைத்தார் கடவுள்... உண்மை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... உண்மை தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நேற்று மதியம் அமேஸான்ப்ரைமில் And soon the Darkness என்கிற படம் பார்த்தேன்.  சைக்கிளில் சுற்றுலா செல்லும் இராணு இளம்பெண்கள் காலை எட்டு மணிக்குப்புறப்படும் ஒரே பஸ்ஸை தவற விடுவதால் வரும் திகிலனுபவம் பற்றிய கதை.   காலை புறப்படும் ஒரே பஸ் என்றதும் உங்கள் நினைவு வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நான் படங்கள் பார்ப்பதில்லை. நன்றாக இருக்கிறது என நீங்கள் சொல்வதால் இந்தப்படம் இணைய வழி பார்க்க முடியுமா எனத் தேட வேண்டும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. //எப்போதுமே பயணம் பிடிக்கும் என்றாலும் இந்தப் பயணம் அதிகமாகவே பிடித்தது என்று சொல்ல வேண்டும்.//

    ஆம்...    இதைதான் நடுவில் ஒருபதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்.  படித்துக்கொண்டு வரும்போது அப்படியொரு Feel உங்களுக்கு இருப்பது போல எனக்குத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்... செய்த பயணங்களிலேயே இந்தப் பயணம் அதிகமாகவே பிடித்தது - பதிவிலும் உங்களுக்குத் தெரிந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. அருமையான ஆனால் சிறிதே ஆபத்தான பயணம் நல்ல படியாக முடிந்ததே மகிழ்ச்சி. ப்ரமோத், பிரஷாந்த் எல்லோரும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

    கடவுளை வேண்டித் தொடங்கிய பயணம். வாயு வேகத்தில் வந்தாலும், பாதுகாப்பாக வர முடிந்ததே,.
    நம் ஊரிலும் பஸ் இப்படித்தானே பறக்கிறார்கள்.
    நஷ்டம் ஒன்றும் இல்லாமல் பத்திரமாக இருக்க வேண்டும்.
    எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. இல்லாவிட்டால் எனக்கெல்லாம்
    இந்த இடங்கள் பார்க்கக் கிடைக்குமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரமோத் எட்டு வருட நண்பர் - ப்ரஷாந்த் இந்தப் பயணத்தில் தான் சந்தித்தோம் வல்லிம்மா...

      இந்தப் பகிர்வுகள் மூலம் உங்களுக்கும் சில புதிய இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது என்று அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. ஆம், வித்தியாசமான அனுபவங்களைக் கொண்ட பயணம். மழைநேரத்தில் இது போன்ற இடங்களில் பேருந்துப் பயணம் ஆபத்து நிறைந்ததே. தன்னம்பிக்கை இருந்தாலும் ஓட்டுநர்கள் வேகத்தை மிதமாக்கலாம். கேட்க மாட்டார்கள் என்பது வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சென்று கொண்டிருக்கும் பயணம் மாறுவதற்கு ஒரு நொடி போதும் என்பதை இந்த ஓட்டுனர்கள் உணர்ந்து கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம் தான் ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. மனதுக்கு அமைதி தந்த அனுபவங்கள் என பலவும் ஒரு சேரக் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி....


    இந்த இடங்களுக்கு எங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது ..

    ஆனாலும் உங்கள் படங்களின் வழி, செய்திகளின் வழி பல புதிய தகவல்களையும் , இடங்களையும் அறிந்துக் கொண்ட மகிழ்ச்சி எங்களுக்கும் ...

    முடிந்த வரை எல்லா பதிவுகளையும் வாசித்து விட்டேன் ...

    என்ன ஒரு அமைதியான இடம் ...


    உங்களின் அடுத்த பயணம் இன்னும் மகிழ்வாக அமைய வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இது போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமையட்டும் அனுப்ரேம் ஜி.

      விடுபட்ட பதிவுகளை வாசித்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....