செவ்வாய், 3 டிசம்பர், 2019

கதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்




சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கதம்பம் பதிவு வெளி வந்தது அக்டோபர் ஏழாம் தேதி! இன்றைக்கு டிசம்பர் மூன்று – நீண்ட இடைவெளி தான்! முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு – இங்கேயும் ஒரு சேமிப்பாக!


இந்த வலைப்பூவில் நேற்றைய பதிவின் சுட்டி – வாசிக்காதவர்களின் வசதிக்காக மீண்டும் இங்கே!!


வாருங்கள் இன்றைய கதம்பம் பதிவுக்குப் போகலாம்!

சமயபுரத்தாளும், அகிலாண்டேஸ்வரியும்!! – 4 October 2019



நெடுநாட்களாகவே சமயபுரம் மாரியம்மனை கண்டு வர வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருந்தேன். கண்மலரை சேர்ப்பிக்க வேண்டும். வெள்ளியில் கண்மலரும் வாங்கி என் பர்ஸில் வைத்துக் கொண்டு நாளாயிற்று. டெல்லிக்கு ரயிலில் போகும் போதோ, வரும் போதோ பர்ஸிலிருந்து விழுந்து என் கண்ணுக்கே தட்டுபட்டு விட்டது.

பொதுவாகவே இங்கு எப்போதும் கும்பல் தான். செவ்வாய், வெள்ளியில் கேட்கவே வேண்டாம். ஆனாலும் செவ்வாயன்று காலையிலேயே கிளம்பி சமயபுரம் சென்றோம். அம்பாளுக்கு சாற்ற மலர்கள், அர்ச்சனைக்கு குங்குமம், உப்பு மிளகு எல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். அருமையான தரிசனம். கண்மலரை உண்டியலில் சேர்ப்பித்தேன். எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டேன்.

அங்கிருந்து பேருந்தில் திருவானைக்காவல் வந்து அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் தரிசித்து அருள் பெற்றோம். அங்கு கோவிலில் வைத்திருந்த ஒன்பது படி கொலுவை கண்டுகளித்தோம். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். கோவில் யானை 'அகிலா' பாகனின் 'பதுக்க நடக்கு' ( மலையாளத்தில் ) என்ற சொல் கேட்டு பூஜைக்காக அம்பாள் சன்னிதி நோக்கிச் சென்றது. நாங்களும் வெளியே வந்தோம்.

ஆதியின் அடுக்களையிலிருந்து - பூரி லாடு – 10 October 2019:



பூரி லாடு!! பாட்டி காலத்து இனிப்பு இது. தஞ்சாவூர் பக்கங்களில் மாப்பிள்ளை தலைதீபாவளிக்கு விருந்து சாப்பிட வந்தால் இந்த பூரி லாடும், பூரியை வைத்து பாயசமும் செய்து தருவார்களாம். நேற்று இணையத்தில் தேடிய போது இந்த தகவல் கிடைத்தது. கடையில் வாங்கிய பானிபூரி கைவசம் இருந்தது. முயற்சித்து பார்க்கலாமே என்று செய்தேன்.

பூரியையும், சர்க்கரையும் பொடி செய்து கொண்டு அதனுடன் ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து உருண்டை பிடிக்கவும். செய்வது எளிது தான். சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். இதனுடன் கண்டெண்ஸ்டு மில்க்கும் சேர்த்து லாடு பிடிக்கலாம்.

உலக உணவு தினம் – 16 October 2019:



அன்றாட உணவு கூட கிடைக்காமல் அல்லாடுவோர் பலர் இருக்க ஹோட்டல்களில் பகட்டுக்காக சிறிதளவே கொறித்து உணவை வீணடிப்போரும் இங்கு உண்டு. திருமணம் போன்ற நிகழ்வுகளில் பந்தியில் தலைவாழை இலையில் வேண்டியதை கேட்டு கேட்டு பரிமாறிய கலாச்சாரம் போய் பஃபே என்ற பெயரில் தனக்கு வேண்டுமோ வேண்டாமோ எல்லாவற்றையும் அள்ளி தட்டுகளில் நிரப்பிக் கொண்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு களேபரமாகி கடைசியில் குப்பையில் சேர்ப்பவர்களும் உண்டு.

நம்ம ஊர் உணவுகளே ஏராளமாக இங்கு இருக்க, அதை விடுத்து துரித உணவுகளை விரும்பி உண்டு உடல்நலனை கெடுத்துக் கொள்வோரும் இங்கு நிறைய உண்டு. இப்படி நமக்கே தெரியாமல் உணவை பலவாறு வீணடித்து உடல்நலனுக்கு தீங்கு விளைவித்துக் கொள்கிறோம். அன்றாடம் சுத்தமான உணவை சமைத்து, சாப்பிட்டு, நமக்கு மிஞ்சியதை அவை நல்ல நிலையில் இருக்கும் போதே இல்லாதோருக்கு கொடுத்து உதவுவோம். குளிர்பதன பெட்டிகளில் வைத்தெடுத்து உண்பதை தவிர்ப்போம். மைதா, வெள்ளை சர்க்கரை போன்றவற்றின் உபயோகத்தை முடிந்தவரை தவிர்ப்போம். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றுவோம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

தீபாவளியும் மணி ஆர்டரும் - 16 October 2019:



தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அப்பாவை பற்றிய நினைவு. தீபாவளிக்காக சரியாக ஒரு மாதம் முன்பே என் கைக்கு பணம் கிடைக்கும் படி மணியார்டர் பண்ணி விடுவார். Money transfer பற்றியெல்லாம் அப்பாவுக்குத் தெரிய வராத நாட்கள் அன்று. உடனே க்ரெடிட் ஆகி விடும் என்றெல்லாம் தெரிந்திருந்தால் மணியார்டரில் மணி மணியாக அப்பாவின் கையெழுத்தில் நாலு வரியை வாசித்திருக்க இயலுமா என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன்?

தீபாவளி மட்டும் இல்லை பொங்கல், கார்த்திகை, திருமண நாள் என்று ஒவ்வொன்றிற்கும் தன்னால் இயன்ற பணத்தை மணியார்டர் செய்து அதில் நாலு வரியில் விசாரித்து, ஆசீர்வதித்து, அறிவுரை செய்து என்று அழகான நாட்கள். நேற்று தம்பி என் அக்கவுண்ட்டிற்கு தன்னால் முடிந்த பணத்தை தீபாவளிக்காக டிரான்ஸ்பர் செய்து வைத்திருந்தான். நான் எப்போதும் போலவே 'எதுக்காக இவ்வளவு அனுப்பி விடறடா! ' என்று கடிந்து கொண்டேன் :) 'அப்பா இருந்திருந்தா உனக்கு இன்னும் நிறைய செய்திருப்பா!! என்னால முடிந்தது இது!! சந்தோஷமா இரு! 'என்று சொல்லி வைத்தான். ஐந்து ரூபாயானாலும் பிறந்த வீட்டிலிருந்து கிடைத்தால் அது தனி ரகம் அல்லவா?

ரோஷ்ணி கார்னர் – ஓவியம் – 17 October 2019:



மகள் வரைந்த பென்சில் ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.


44 கருத்துகள்:

  1. கதம்பத்தை ரசித்தேன்.   எங்களுக்கும் ஒரு பிரார்த்தனை நிலுவையில் இருக்கிறது.  பூரிலாடு பார்க்கவே இழுக்கிறது.  செய்முறையும் எளிமை.   பிறந்த வீட்டு சீர் - நேற்று கூட நானும் என் பாஸும் சென்று என் அக்காவுக்கு கார்த்திகை சீர் கொடுத்து வந்தோம்!  ரோஷ்ணியின் ஓவியம் டாப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் சுவாரஸ்யம். அகிலாவின் கொலு படம் போட்டதற்கு
      மிக மிக நன்றி.
      நான் பார்த்ததே இல்லை.

      சமயபுரத்தம்மாள் சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் அருள் நம்மோடு இருக்க வேண்டும்.

      பூரிலட்டு மஹா சுவை. நன்றி ஆதி.
      ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு.
      வாழ்த்துகள் வெங்கட்.

      நீக்கு
    2. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். சில பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதில் தடங்கல்கள்... விரைவில் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்.

      கார்த்திகை சீர் - அடுத்து பொங்கல் வரப் போகிறது! நினைவாக நானும் அனுப்ப வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. அகிலாண்டேஸ்வரி - அனைவருக்கும் அவளின் அன்பும் அருளும் கிடைக்கட்டும் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. //அன்றாடம் சுத்தமான உணவை சமைத்து, சாப்பிட்டு, நமக்கு மிஞ்சியதை அவை நல்ல நிலையில் இருக்கும் போதே இல்லாதோருக்கு கொடுத்து உதவுவோம்.//
    அருமை.
    கதம்பம் அருமை.
    ரோஷ்ணியின் ஓவியம் ரோஷ்ணி மாதிரியே இருக்கிறது சாயல். வாழ்த்துக்கள் ரோஷ்ணிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணி மாதிரியே இருக்கிறது சாயல் - :) மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதம்பத்தின் ஒவ்வொரு இணுக்கையும் ரசித்தேன். பூரிலாடு புது விஷயம். கடிதம், மணியார்டர் காலங்களை எண்ணி நானும் மருகுகிறேன். இப்போதெல்லாம் யாருடைய கையெழுத்து எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி.

      கையெழுத்து - இப்போதெல்லாம் யார் கையெழுத்தும் நமக்குத் தெரிவதில்லை என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சொல்ல மறந்துவிட்டேனே.. ரோஷ்ணியின் பென்சில் ஓவியம் வெகு அழகு. ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த பென்சில் ஓவியம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபால்ன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் அருமை. மணிஆர்டரில் பணம் அனுபும்போது ஒரு பர்சனல் டச் இருந்தது. பென்சில் ஒவியம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி ஆர்டர் அனுப்பி, அது சேர வேண்டியவர்களுக்குச் சேர்ந்து விட்டது எனத் தெரியும் போது கிடைத்த மகிழ்ச்சி அளவிலாதது... பென்சில் ஓவியம் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. கதம்பத்தை ரசித்தேன், இருந்தாலும் பழைய டச் விரைவில் வந்துவிடும்.

    சமயபுரம் கோவில் சென்ற நினைவு இல்லை.

    பானிபூரியை சிறிது சர்க்கரைப் பாகு இட்டு கட்டென்ஸ்ட் மில்க்கில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்குமோ?

    மகளின் ஓவியம் அருமை. அவளுக்கு ஓவியப் பயிற்சி பொடுத்தால் நல்லதே. ஃப்ரொஃபஷனலாக வரையும் திறமை சட்னு வந்துடுமே. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Also, a good practice is to put sign, date/time under each drawing. அப்போதான் பின்னால பார்க்கும்போது எந்த வயசுல, எப்போ போட்டோம்னு தெரியும். நான் இதை பெரும்பாலும் கடைபிடிப்பேன்.

      நீக்கு
    2. பழைய டச்... :) வரும் வரும்! சற்றே இடைவெளிக்குப் பிறகான பதிவு என்பதால் இங்கே சில விஷயங்கள் சேர்க்க முடியவில்லை நெல்லைத் தமிழன்.

      ஓவியப் பயிற்சி - பாடங்களே அதிகம் என இருக்கும்போது ஓவியத்திற்கென அவரால் நேரம் ஒதுக்க இயலவில்லை என்பதே உண்மை.

      பானிபூரி - கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து - நல்ல ரசனை - சுவைத்துப் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஒவ்வொரு படத்திலும் கையெழுத்து இட்டு தேதியைக் குறிப்பிடும் பழக்கம் மகளுக்கும் உண்டு நெல்லைத் தமிழன். இங்கே கொடுக்கும்போது க்ராப் செய்து வெளியிடுவதால் அது தெரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மணி ஆர்டர் பற்றி குறிப்பிட விட்டுவிட்டேன். தாளில் எழுதி அனுப்பும் கடிதம் தரும் உணர்வை நாம் அனைவரும் மிஸ் செய்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாளில் கடிதம் எழுதி அனுப்பும் போது கிடைக்கும் உணர்வு அலாதியானது தான் நெல்லைத் தமிழன். தில்லி வந்த புதிதில் நிறைய கடிதப் போக்குவரத்து இருந்தது. எப்போது கடைசியாக கடிதம் எழுதினேன் என்று நினைவு கூட இல்லை :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் வழக்கம் போல மணத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. கதம்பம் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவண்ணன்.

      நீக்கு
  13. சமயபுரத்தாளும், அகிலாண்டேஸ்வரி தரிசனமும் ....மகிழ்ச்சி ..

    ரோஷ்ணியின் பென்சில் ஓவியம் அழகு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த பென்சில் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. கதம்பத்தின் மணம் உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. கதம்பம் மணம் வீசுகிறது. அந்த காலத்து மணியார்ட‌ர்களும், நீண்ட கடிதங்களும்..ம்ம். பெருமூச்சு தான் வருகிறது. நான் இன்னும் என் பாட்டியின் கடிதத்தைக்கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

    ரோஷிணியின் ஓவியம் அருமை! திரு.நெல்லைத்தமிழன் சொன்னது போல ரோஷிணி ஒரு முறையான ஓவியப்பயிற்சியை ஆரம்பிப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் கடிதம் உங்களிடம் இருப்பதில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      முறையான ஓவியப் பயிற்சி - செய்யலாம்! படிப்பிற்கே நிறைய நேரம் ஆகிவிடுகிறது அவருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    கதம்பம் நன்றாக இருந்தது.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் கொலு அழகாக உள்ளது. நானும் தரிசித்துக் கொண்டேன்.

    அந்த காலத்து கடிதங்களின் போக்குவரத்து அருமையாகத்தான் இருந்தது.

    பூரி லாடு அழகாக உள்ளது. செய்து சாப்பிடும் ஆவலை உண்டாக்கியது.

    தங்கள மகள் ரோஷ்ணியின் ஓவியம் கணகளை கவர்கிறது. மிக அழகாக வரைகிறார் அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. Money order gave attachment between brothers and sisters. Now the emotional feelings is missing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை.... மகிழ்ச்சி கயல் ராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. கதம்பம் நன்றாக இருக்கிறது. அகிலாண்டேஸ்வரி கோவிலை உங்கள் காமிராவில் படம் பிடியுங்கள். சமயபுரத்தில் இப்போது நிறைய மாற்றங்கள். எப்போதும் கும்பல்தான். 
    ரோஷினியின் ஓவியம் அழகு.  பூரி லாடு சுவைக்கத்  தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகிலாண்டேஸ்வரி கோவிலில் வெளி பிராகரங்களில் மட்டுமே படம் எடுக்க அனுமதி! உள் பிரகாரங்களில் அனுமதி இல்லை. அடுத்த முறை செல்லும்போது படங்கள் எடுக்க முயற்சிக்கிறேன் பானும்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. கதம்பம் மணக்கிறது. மகள் வரைந்த ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....