எங்க அம்மா, கத்திரிக்காயை சின்னச் சின்ன துண்டா வெட்டி, கடலைப் பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை சேர்த்து கூட்டு செய்வாங்க பாருங்க, "ஆஹா பேஷ் பேஷ்!"--ன்னு சொல்றமாதிரி ரொம்ப நல்லா இருக்கும். நான் ருசிச்சு சாப்பிடற கத்திரிக்காய் சமையல் அது மட்டும் தான். இப்ப எங்க வீட்டு அம்மணி செய்யற வட இந்திய சப்ஜியான “பேங்கன் கா பர்த்தா”வும் அந்த வகையில சேர்ந்துடுச்சு.
அடடா நெய்வேலி நிகழ்வு பத்தி சொல்ல ஆரம்பிச்சு தில்லிக்கு வந்துட்டேனே!…
ஒரு நாள் நெய்வேலியில் எங்க வீட்டு வாசல் முன்பு குரங்காட்டி ஒருத்தர் ஒரு குரங்கை வைத்துக்கொண்டு “ஆடுறா ராமா, ஆடுறா ராமா”ன்னு வித்தை காட்டிக்கிட்டிருந்தார். குரங்கு அவரோட குச்சிக்கு ஆடிச்சோ இல்லையோ, நானும் சக வாண்டுகளும் ஆடியபடியே அதை பார்த்துக்கிட்டிருந்தோம்.
வித்தை காட்டி முடிந்ததும் குரங்கிடமே ஒரு தட்டைக் கொடுத்து எல்லோரிடமும் காசு வாங்க அதைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்தார் குரங்காட்டி. அம்மா கத்திரிக்காய் சாம்பார் போட்டு சாதம் பிசைந்து ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுக்க, அதை அவர் குரங்குக்கு சாப்பிடக் கொடுத்தார்.
குரங்கும் தன் கையால் சாதத்தினை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தது. நாங்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது சாதத்துடன் வந்த ஒரு கத்திரிக்காய் துண்டினை எடுத்து, அதன் தோலை அழகாய் உரித்து வீசி விட்டு வெறும் சதைப்பாங்கான பகுதியை மட்டும் உண்டது அது . எங்களுக்கெல்லாம் ஆச்சரியம், “பார்ரா இதை, எவ்வளவு விவரம் இதுக்கு!” என்று.
எங்களுடன் கீழே உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பாட்டி, சும்மா இல்லாம, “ஐ, என்ன அழகா சாப்பிடுது!” என்று சொன்னபடி, குரங்கின் கன்னத்தில் தடவிக்கொடுத்தார். கொஞ்சம் அழுத்தமாகவே தடவி விட்டார் போல, இரண்டு மூன்று நொடிகளுக்குள் குரங்கும் தன்னுடைய நீண்ட நகங்களுடன் கூடிய ஐந்து விரல்களால் பாட்டியின் காதிலிருந்து ஆரம்பித்து கன்னம் வரை பளீரெனத் தடவி விட்டது.
காதின் பின்புறத்திலிருந்து தாரை தாரையாக ரத்தம் கொட்டியபடி பாட்டி வலியின் மிகுதியால் அலறியபடி குரங்காட்டி மீது பாய, தன் எஜமானன் மீது பாய்கிறாரே என குரங்கு அந்த பாட்டி மீது பாய, மூன்று பேருமாய் கட்டிப் புரண்டு ஒரே ரகளைதான் போங்க. சிறுவர்களான நாங்கள் எல்லோருமே பாட்டி படும் அவஸ்தையையும் வலியும் புரியாமல் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தோம்.
ஒரு வழியாய் மூன்று குரங்குகளையும் (அட குரங்கினையும், குரங்காட்டி மற்றும் பாட்டியையும் தாங்க) பிரித்து ஆசுவாசப்படுத்தினர் மற்ற பெரியவர்கள். அப்புறம் பாட்டியை சைக்கிளில் உட்கார வைத்து நெய்வேலியின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு சிகிச்சை கொடுத்தது தனிக் கதை.
இன்று வரை கத்திரிக்காய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வராமல் போனதாக சரித்திரமில்லை.