தொகுப்புகள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சைக்கிள் அனுபவங்கள்


[மனச் சுரங்கத்திலிருந்து]


நெய்வேலியில் இப்போ  இருக்கிறவர்களில்  பெரும்பாலானவங்க  நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்காங்க.  நகரின் முக்கிய வியாபார ஸ்தலமான மெயின் பஜார் பகுதியில் வாகனங்களை நிறுத்தபார்க்கிங்ஏரியா கூட இப்போது  அமைத்திருக்கிறார்களாம்.  நெய்வேலி ரொம்பத் தான் முன்னேறி விட்டது போலும்

நான் நெய்வேலியில் படித்துக்கொண்டிருந்தபோது எல்லா வீடுகளிலும் சைக்கிள் தான் பிரதான வாகனம்.  ஒவ்வோர் வீட்டிலும் குறைந்தது இரண்டு சைக்கிளாவது இருக்கும். என் வீட்டில் கூட மூன்று சைக்கிள் இருந்தது.  வீட்டில் இருந்த அனைவரும் உயரம் என்பதால் சைக்கிளும் 24 – 26 இன்ச் தான் வாங்கினார் அப்பா.

நான்காவது படிக்கும்போதே சைக்கிள் ஓட்டத் துவங்கி விட்டேன்.  யாரும் கற்றுக் கொடுக்காமல் நானாகவே கற்றுக்கொண்டேன்.  குரங்குப் பெடலெல்லாம் இல்லாமல் நேராகவே சீட்டில் உட்கார்ந்து ஓட்டி விட்டேன்.

வகுப்பு ஆசிரியை எஸ்தர் வீட்டிலிருந்து ஏதோ எடுத்து வரச் சொல்லி என்னை ஏவ, பூட்டப்படாமல் இருந்த ராபர்ட் என்ற சகமாணவனின் சைக்கிளின் மேலே ஏறி உட்கார்ந்து உயரமான ரோட்டிலிருந்து  இறக்கத்திலிருந்த  மைதானத்திற்கு வந்து விட்டேன்.  சிறிது தூரத்தில் இருக்கும் எஸ்தர் டீச்சர் வீட்டுக்குச் செல்வதற்குள் நான்கு முறை கீழே விழுந்து எழுந்தேன் என்பதை இதுவரைக்கும் யாருக்கும் சொல்லவில்லை.

ஒரு வழியாக விழுந்து எழுந்து கற்றுக்கொண்டபின், அப்பாவை அரித்துப் பிடுங்க, அவர் ஒரு புது சைக்கிள் வாங்கினார்.  அதை அவர் வைத்துக்கொண்டு எனக்கு பழைய சைக்கிளை கொடுத்தார்.  அதன் பிறகு நெய்வேலியில் இருக்கும் ஒரு தெரு விடாமல் அத்தனை தெருக்களின் நீள அகலங்களை அளந்து சுற்றியது தனிக்கதை.

அதுவும் நான்கைந்து நண்பர்களோடு சைக்கிளில் மந்தாரக்குப்பம், வடலூர் என தொலை தூர  இடங்களுக்குச் சென்று திரும்பியது சுவாரசியமான அனுபவங்கள். அப்போது எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான். நடப்பது என்பதே இல்லை.  இப்போதோ தில்லியில் சைக்கிள் ஓட்டுவது கடினம்

என்னதான் மோட்டார் வாகனங்களில் வேகமாகச் செல்ல முடிகிறது என்றாலும் சைக்கிளில் வேகமாய்ச் சென்று, இரண்டு கைகளையும் விட்டுவிட்டு வித்தை காண்பித்தபடி செல்லும் ஆனந்தம் வர மறுக்கிறது

சைக்கிளை எடுத்துக்கொண்டு திருச்சியின்  காவேரிக் கரை ஓரமாய் வழியெங்கும் இருக்கும் வாழைத்தோப்புகளை பார்த்தபடி, காவேரியில் இருந்து வரும் காற்றினை ரசித்தபடி ஒரு நெடும் பயணம் போக வேண்டும்அந்த நாளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.


வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

வெங்கட்.