"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”. இது நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்ட ஒரு வாக்கு. திருவெண்காடர் என்ற இயற்பெயர் கொண்ட பட்டினத்தாரின் மகன் “மருதப்பிரான்” தனது தந்தைக்கு விட்டுச் சென்ற ஒரு பெட்டியில் ஒரு காதற்ற ஊசியும், ஒரு ஓலை நறுக்கும் இருந்ததாம். ஓலையில் எழுதி இருந்த வாசகமே மேலே சொல்லி இருப்பது. அது கண்ட பிறகே திருவெண்காடர் துறவறம் பூண்டு பட்டினத்தார் என்ற பெயரில் நிறைய பாடல்களை நமக்காக விட்டுச் சென்றார் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்.
தன்னுடைய தாயாருக்குத் தகனக் கிரியை செய்கையில் பாடிய பத்து பாடல்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை யாரால் மறுக்க இயலும்.
முதல் பாடல்:
”ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி.”
பொருள்: பத்து மாதங்கள் ஐயோ என்னுமாறு சுமந்து கால் முதல் தலையளவுள்ள உறுப்புகள் அனைத்தும் வருத்தமடைந்து பிரசிவித்து, ஆண் குழந்தையென அருகிலுள்ளோர் கூறக் கேட்டவுடனே விரும்பிக் கையில் எடுத்துச் செவ்விய இரண்டு கையிடத்தில் தாங்கி பொன்னணி பூண்ட மார்பகங்களிலுள்ள பாலை உண்ணுமாறு அளித்த அன்னையை இனி எந்தப் பிறப்பிற் காணப் போகின்றேன்?
பள்ளிப் பருவத்தில் இது போன்ற பாடல்களைப் படித்திருந்தாலும் நம்மில் எத்தனை பேர் இதனை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். “காதறுந்த ஊசி…” படித்தும் மாய்ந்து மாய்ந்து தேவைக்கு அதிகமாகவே பொருள் தேடுகிறோம். தேடிய பொருளைக் காக்கவும் பலவித செயல்களைச் செய்கிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்றிருந்தேன். பிரவாகமாக தங்குதடையின்றி அங்கே ஓடிக்கொண்டு இருந்த கங்கையில் நாங்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே ஒரு பெரியவரும் கையிலிருந்த லோட்டாவில் தண்ணீர் எடுத்து நீராடிக் கொண்டிருந்தார். கங்கையின் பிரவாகத்தில் கையிலிருந்த லோட்டா அடித்துக் கொண்டுச் செல்ல, பெரியவர் செய்வதறியாது திகைத்தார்.
பக்கத்திலேயே நீராடிக்கொண்டு இருந்த அவரது மகன் இதனைப் பார்த்தவுடன், “இவ்வளவு வயசாச்சு, ஒரு லோட்டாவைக் கூட பத்திரமா வச்சுக்க முடியாதா?” என்பது போன்ற சொற்களால் சுட, அந்தப் பெரியவர் வாயடைத்து நின்று கொண்டிருந்தார். அவர் இப்படித் திட்டத்திட்ட நாங்கள் கூட ஏதோ நவரத்தினங்கள் பதித்த தங்க லோட்டாவைத்தான் விட்டுவிட்டாரோ என நினைத்து, அந்த பெரியவரின் மகனிடம் கேட்டே விட்டோம்…
”தங்கமோ வெள்ளியோ அல்ல, சாதாரண எவர்சில்வர் லோட்டா” என்று கூறிய அந்த மகன், “எதுவா இருந்தா என்ன?” என்று எங்களையும் சுட்டெரித்து, ”ஒரு பொறுப்பு வேண்டாம்…” என்று திட்டுவதைத் தொடர்ந்தார்.
மெத்தப் படித்து, பெரிய பொறுப்பில் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். எத்தனை படித்து, எவ்வளவு பணம் சம்பாதித்து என்ன, “எதைக் கொண்டு வந்தோம்… கொண்டு செல்ல…..” என்பது புரியவில்லையே அவருக்கு.
மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்…
வெங்கட்.