தொகுப்புகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இதுவல்லவோ விளக்கு:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 6]

சிந்தியா மஹாராஜாக்கள் அரசாங்கம் நடத்திய தர்பாரை இரண்டு பெரிய, பிரம்மாண்டமான அலங்கார விளக்குகள் [CHANDELIERS] அலங்கரிக்கின்றன

ஒவ்வொரு CHANDELIERS-ம் சுமார் 3.5 டன் எடையுள்ளதெனவும் அதில் 248 மெழுகுவர்த்திகளை  ஏற்றலாம் என எங்களுடன் வந்த கைடு சொல்லிக்கொண்டு வந்தார்.   ஒன்றே இவ்வளவு எடை என்றால், இரண்டையும் சேர்த்தால் அப்பா எவ்வளவு எடைஅதாவது 7 டன்கள்

இந்த தர்பார் நடக்கும் பெரிய அறையின் மேல்பாகம் முழுவதும் தங்கத்தினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இது தவிர CHANDELIERS – லும் மொத்தம் 56 கிலோ தங்கம் பயன்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடங்கள் முலாம் பூசப்பட்டு உள்ளன.  ”56 கிலோ தங்கமா!” என்று அங்கே பிளந்த வாய் பல நிமிடங்கள் வரை மூடவேயில்லை நிறைய பேருக்கு. இன்றைய  தேதிக்கு, இந்த தங்கத்திற்கு மட்டுமே 15 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பாகும்.

சரி 7 டன் எடையுள்ள இவற்றை உத்திரத்தில் மாட்டினால் அது தாங்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது.  இப்ப கட்டற கட்டிடமெல்லாம் சும்மா இரண்டு ஃபேன் மாட்டினாலே தாங்குமா என்று கேட்கணும். இதுல இவ்வளவு எடையிருந்தா என்ன ஆகிறது?

இவற்றை மாட்டுவதற்கு முன்னரே இந்த அரண்மணையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை சாய்வான ஒரு பாதை அமைத்து அதன் வழியே 10 யானைகளை அழைத்து வந்து அந்த அறை தாங்குகிறதா என்று பார்த்தார்களாம்.

இப்போது மாதிரி எந்த விதமான வசதிகளும் இல்லாமல் இப்படி ஒரு வழியை வைத்து அதன் தாங்கும் திறனைக் கண்டுபிடித்து இருக்கிறார்களே.  என்னே அவர்களின் திறமை!

இந்த தர்பார் அறையில் விரிக்கப்பட்டு இருக்கும் கம்பளம் [Carpet] ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய கம்பளம் ஆகும்.  இந்தக் கம்பளம் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களால் நெய்யப்பட்டதாம்


இந்த அறையின் வெளியே சிவப்பு வண்ணத்திலும் CHANDELIERS மாட்டி வைத்திருக்கிறார்கள்.  இந்த தர்பாரின் மேல்பக்கத்தில் நின்றபடி அந்த 7 டன் விளக்குத் தொகுப்புகளைப் பார்க்க மாடிப்படிகள் இருக்கின்றன.  இத்தனை பிரம்மாண்டத்தில் மாடிப்படிகள் மட்டும் சாதாரணமாக இருந்தால் நன்றாகவா இருக்கும். இந்த மாடிப்படிகள் முழுவதும் பளிங்கினால் செய்யப்பட்டு இருக்கிறது



வெளியே சிந்தியா பரம்பரை ராஜாக்கள் வேட்டையாடிய புலிகள் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  மேலே ஒரு காட்டு எருமையின் தலைப்பகுதி வேறு மாட்டி வைத்திருக்கிறார்கள்.  இப்ப புலிகளின் எண்ணிக்கைக் குறைந்து விட்டது என புலம்பி என்ன பயன்?  அந்த காலத்திலேயே இது போன்ற ராஜாக்களும், வெள்ளைக் காரர்களும் நமது நாட்டின் சொத்தை மட்டும் அடித்துக் கொள்ளவில்லை.  நமது வனங்களின் செல்வத்தினையும் அல்லவா அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.


இங்கிருந்து வெளியே வந்தால் ராஜாக்கள் பயன்படுத்திய அலங்கார வண்டிகள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.  ஒரு B.M.W. கூட இருந்ததுகண்ணாடியாலான ஒரு செயற்கை நீறுற்று கூட இருக்கிறது.  நட்ட நடுவே ஒரு பெரிய குப்பி இருக்கிறது.  எப்படி அது புவியீர்ப்பு சக்தியை மீறி சாய்ந்து நிற்கிறது என்பது ஆச்சரியம்.  அந்தக் குப்பியில் தான் உற்சாக பானங்கள் வைத்திருப்பார்களாம்.  ஒரு வேளை அதைக் குடிப்பவர்களுக்குத்தான் பிரச்சனை போல.  அது என்றுமே நிலையாகத்தான் இருக்கும்.



இன்னும் பல விஷயங்கள் இங்கே இருந்தது.  என் நினைவில் நின்றவரை எல்லா விஷயங்களையும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.  முழுவதும் நினைவில் வைத்து எழுத துளசி டீச்சரால் தான் முடியும்.  அந்தக் கலையை சீக்கிரமே கற்றுக் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறது

இந்தப் பகிர்வுகளில் ஆங்காங்கே இருக்கும் புகைப்படங்கள் நானும் நண்பர்களும் எடுத்தது.  மொத்தப் படங்கள் நிறைய இருக்கிறது.  அதிலிருந்து சில படங்களை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.  மற்றவை முடிந்தால் பிறகு பிகாசாவில் தரவேற்றம் செய்கிறேன்.

மீண்டும் சந்திக்கும் வரை இந்த பகுதிகளில் வந்த விஷயங்களை அசை போட்டுக் காத்திருங்கள்.  அடுத்ததாய் உங்களை குவாலியரின் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்.

நட்புடன்

வெங்கட்.