தொகுப்புகள்

புதன், 28 மார்ச், 2012

சாப்பிடலாம் வாங்க!


வாழைப்பழ ஐஸ்க்ரீம் - புதுசா இருக்கும் போல இருக்கே.....



யார் அங்கே!  இன்னும் கொஞ்சம் சாக்லேட் சிரப் மேல ஊத்துங்க....



ருசிச்சு சாப்பிடலாம்னா மீசையெல்லாம் சாக்லேட் ஒட்டிக்கும் போல இருக்கே.


”தேன் சிந்துதே வானம்” மாதிரி தேன் சிந்துதே இங்கே......


அடடா.... எத்தனை எத்தனை லேயர்.....  சாக்லேட்டுக்கு நடுவில் வெண்ணிலா..


அந்த ஸ்ட்ராபெர்ரி மட்டும் முழுசா சாப்பிடலாம்..... :)


சாக்லேட் சிரப்பில் தோய்த்த கருப்பு திராட்சை....  திருப்பதிக்கே லட்டு...


நான் அப்படியே சாப்பிடுவேன்.....  நீங்க......?

..

..

..

..

..

..

..


என்ன நண்பர்களே, பார்த்த உடனே சாப்பிடணும் போல தோணுது இல்ல!  ஆனால் நம்மால சாப்பிடத்தான் முடியாது.  இது எல்லாமே நிஜமான உணவு வகைகள் அல்ல.  என்ன அதிர்ச்சியா இருக்கா?  அவ்வளவு தத்ரூபமா இருக்கிறது இந்த ஓவியங்கள் [Oil Painting].   

இந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும் 44 வயது யுவதி.     பல ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.  

சாப்பிட்டா தானே கலோரி ஏறிடும். ஆனா இவற்றையெல்லாம் பார்த்தாலே கலோரிகள் ஜிவ்வுன்னு ஏறிடும் போல இருக்கு!  

என்ன சொல்றீங்க!  உங்களுக்கு எவ்வளவு கலோரி ஏறியதுன்னு பின்னூட்டத்திலே சொல்லுங்களேன்!  :)))))))


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன் 

வெங்கட்
புது தில்லி. 


திங்கள், 26 மார்ச், 2012

சம்பள நாள் சந்தை


[மனச்சுரங்கத்திலிருந்து…]


நெய்வேலியில் இருந்த/இருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த சம்பள நாள் சந்தை என்பது என்னவென்று தெரிந்திருக்கும்.   வட்டம் 18 - ல் மெயின் பஜார் என்று அழைக்கப்படும் இடத்தில் கடைகள் மாதம் முழுவதும் இருந்தாலும், பெரும்பாலான நடுத்தர மக்கள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது வாங்க வேண்டுமெனில் காத்திருப்பது மாதத்தின் ஐந்தாம் தேதிக்குத் தான். 

சுரங்கம், அனல்மின் நிலையம் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி தான் சம்பளம் கிடைக்கும் என்பதால் ஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை இந்த சம்பள நாள் சந்தை நடக்கும்.  முதலாம் அனல்மின் நிலையம் செல்லும் நகர பேருந்துகள் எதிலும் இந்த சம்பள நாள் சந்தைக்குச் செல்ல முடியும்.  எங்களுடைய சிறிய வயதில் அதற்கான கட்டணமும் இப்போது செல்லாத 20 – 25 பைசாக்களில் தான்.  தொலைதூரத்தில் இருந்து வந்தால் கூட ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம் தான்.

இந்த சம்பள நாள் சந்தையில் துணிவகைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும்.  எல்லா மாதமும் கடை போடுவார்கள் என்பதால் சில வியாபாரிகள் தவணை முறையில் கூட பொருட்களை நகர மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு. 

தீபாவளி வரும் மாதத்தில் இன்னும் நிறைய பொருட்கள் இங்கே கிடைக்கும்.  அந்த மாதத்தில் வழக்கத்தை விட இன்னும் சில நாட்கள் அதிகமாக கடைகள் திறந்திருக்கும்.  நெய்வேலி நிறுவனம் அப்போதெல்லாம் ஊக்கத்தொகையினை தீபாவளி சமயத்தில் கொடுப்பார்கள் என்பதால் இங்கு விற்பனையும் அமோகமாக இருக்கும். 

இந்த சம்பள நாள் சந்தைக்கு சில சமயங்களில் அம்மா எங்களையும் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.  அங்கு போய் பெரிதாக ஒன்றும் வாங்கிவிடவில்லை என்றாலும், அங்கு சென்று வருவதே பெரிய விஷயமாகத் தோன்றியது அப்போது.  என்னதான் இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை. 

சென்ற முறை அம்மா அங்கு சென்றபோது வழியில் பார்த்த சம்பள நாள் சந்தையில் கடை போடும் ஒரு கடைக்காரர், எங்கள் எல்லோரையும் விசாரித்ததாக நேற்று என் அம்மா போனில் சொல்லி என்னை ஆச்சரியப் பட வைத்தார்.  நாங்கள் நெய்வேலியை விட்டு வந்து இத்தனை வருடங்கள் ஆனாலும், வாடிக்கையாளர்களை இந்த சம்பள நாள் சந்தை கடைக்காரர்கள் மறப்பதில்லை என்பதற்கு இரு ஒரு சாட்சி.  

இப்போதெல்லாம் இந்த கடைகள் எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை.  சென்ற முறை நெய்வேலி சென்றிருந்த  போது கூட ஏனோ அங்கு செல்ல வேண்டும் எனத் தோன்றவில்லை – பழைய நினைவுகளை மறக்கக்கூடாது என்று மனதில் தோன்றிவிட்டது காரணமாக இருக்கலாம்….  மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா?

மனச்சுரங்கத்திலிருந்து என்ற தலைப்பில் அவ்வப்போது எனது நெய்வேலி நினைவுகளை எழுதி வருகிறேன்.  சில சமயங்களில் இந்த மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளில் நீண்ட இடைவெளி இருந்தால் அதற்கு நினைவுகள் மறந்து போனது என்று அர்த்தமில்லை – நேரம் இல்லாமையே காரணம்.  இருபது வருட நெய்வேலி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அவ்வப்போது தொடரும்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 22 மார்ச், 2012

உலக தண்ணீர் தினம் 2012


 
அகண்ட பாலைவனம்.  பல மணி நேரம் நடந்து வருகிறார் ஒருவர்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்…  மணல்…  வெறும் மணல்…..  அந்த மணல் தந்த அனல்…. வீசும் காற்றில் கூட ஈரப்பதமில்லை. தொண்டை வறண்டு, வாயில் உமிழ்நீர் வற்றி, நான்கு நாட்களாய் தண்ணீர் கிடைக்காது ஒரு சொட்டு நீருக்காய் தவிக்கிறார் அவர். 

அந்த நேரத்தில் ஒரு மூட்டை நிறைய தங்கம் கிடைத்தால் கூட அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார்.  மாறாக யாராவது அவருக்கு ஒரு சொட்டு நீர் கொடுத்தால் அதற்கு பதில் அந்தத் தங்க மூட்டையைக் கொடுக்கத் தயாராக இருப்பார். 



ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும்.  தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும்.  தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும். 

சில வருடங்கள் முன்பு தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டு கொலை கூட செய்தார் ஒருவர்.  தண்ணீரை இப்படித் தொடர்ந்து விரயம் செய்தால் பின்னர் தண்ணீர் கிடைக்காது பல கொலைகள்/போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

 
இப்படி ஒரு நிலமை வரும் வரையா காத்திருப்பது…  வரும் முன் காப்பதே அறிவுடைமை அல்லவா?  இப்போதே தண்ணீரை விரயம் செய்வதை தவிர்ப்போம். சேமிப்போம்.  நீரின் அருமை புரியாது அதை வீணடிப்பவர்களுக்கு எடுத்துரைப்போம். 

தண்ணீர் சேமிப்பிற்காய் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்திற்காய் எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும்.  சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தொடர்புடைய எனது இடுகைகள்…..





புதன், 21 மார்ச், 2012

காதிற்கு ஒரு பூட்டு...


ஒரு மாதம் தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பழைய வளாகத்தில் நடந்த பயிற்சியின் போது தினமும் காலையும் மாலையும் தில்லி நகரப் பேருந்தில் பயணம் செய்வது வாடிக்கையாகிப் போனது.  ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் செய்யும்போது நிறைய மனிதர்களைச் சந்திக்க நேர்வது நிச்சயம்.  இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல மனிதர்களில் இரண்டு மனிதர்கள் பற்றியே இப்பகிர்வில் சொல்லப் போகிறேன்.

முதலாம் நபர்:  ஒரு மாலை ராமகிருஷ்ணபுரம் செக்டர் -1-ல் இருந்து தடம் எண்-610 பிடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  வழியில் ஒரு மனிதர் பேருந்தில் ஏறினார்.  அரையில் ஒரு தடித்த தேங்காய் பூ துண்டு. மேலுக்கு ஒரு சட்டை, அதற்கு மேல் குளிர் காலமானதால் ஒரு பழைய கோட்.  கை, கழுத்து என எல்லா இடங்களிலும் வித வித அலங்காரமாய் செயற்கை நகைகள், மாலைகள், காலில் தண்டை, கையிலே ஒரு நீண்ட குச்சி, ஜடாமுடி, தாடி என்று இருந்தார்.  உற்று நோக்கியபோது கவனித்த ஒன்று - ஒரு பக்கக் காதில் தோடு போல ஒரு சிறிய பூட்டு!

அவர் மட்டும் தனியாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கூர்ந்து [எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ?]  கவனித்தபோது நடந்தது இது தான்.

தாடியை தடவியபடி அவர் பேசியது “ம்ம்…  சொல்லுங்க, நல்லா கேக்குது… ஓவர் [கையில் வாக்கி டாக்கி இல்லை].  பூமியில் ரொம்ப அநியாயம் தான் நடக்குது ஓவர்.  மழை, வெயில், குளிர் என மாறி மாறி ரொம்ப கஷ்டப்படறாங்க மக்கள்.  நீங்களும் கைலாசத்தில் இருந்து கொண்டு ஒன்றுமே கவனிக்க மாட்டேங்கறீங்க!  ஓவர்.  என்னது சீக்கிரம் வரீங்களா?  வாங்க – அது தான் நல்லது.  நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன் இங்கே…  ஓவர். [இடையில் பக்கத்தில் அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன? ஒண்ணும் கவலைப்படாதீங்க! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்! என்று வீர வசனம் வேறு!]  திரும்பவும் இல்லாத வாக்கி-டாக்கியில் “ம். என்ன சொல்றீங்க, ஒழுங்கா கேட்கல…  சிக்னல் சரியா இல்லை.  ம். இப்ப கேட்குது.  எப்ப வருவேன்னு சொல்லுங்க அடுத்த தடவை.  எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு, என் இருக்கை யாருக்கோ வேணுமாம். நான் இறங்கறேன்” என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மறைந்து போனார்.  ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்வு மட்டும் இன்னும் மறையாமல் என்னுள்.


இரண்டாம் மனிதரும் அவரது தன்னம்பிக்கையும்:  பேருந்தின் ஓட்டுனருக்கு பின்பக்க இருக்கையில் நான்.  தில்லிப் பேருந்துகளில் எப்போதும் நடத்துனர் பின் பக்கம் தான் இருப்பார். ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்பியபின் நடத்துனர் பயணச்சீட்டு தரும் இடத்திலிருந்து “திருவிதாங்கூர் மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க!” என்று தமிழில் ஒரு குரல் – அதுவும் தலைநகர் தில்லியில்.  தமிழ்க்  குரல் கேட்டவுடன் திரும்பினேன் – அங்கே, சபரிமலை செல்லும் ஒரு வயதானவர் [60 வயதுக்கு மேல் இருக்கலாம்], கழுத்தில் மாலைகள், மழிக்கப்படாத தாடி, தலையில் இருமுடி, பாதணிகள் இல்லாத கால்கள் என மலைக்குப் போகத் தயாராக இருப்பது போல இருந்தார். அவர் என்ன கேட்கிறார் எனப் புரியாத நடத்துனர் ‘க்யா, கஹா[ன்] ஜானா ஹே?” என்று வினவ, திரும்பவும் இவர் தமிழில் “திருவிதாங்கூர் மாளிகைக்குப் போகணும், கேரளா ஹவுஸ்-ல இடம் இல்லை, அதனால, திருவிதாங்கூர் மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க, எவ்வளவு?” என்று சொன்னார். 

சரி அவருக்கு உதவி செய்யலாம் என்று  இருப்பிடத்தினை விட்டு எழுந்தேன் – அதற்குள் பின்னால் இருந்து இன்னுமொரு தமிழ் குரல் – அதுவும் ஒரு வட இந்தியரிடமிருந்து.   அவரிடம் பேசி நடத்துனருக்கு விளக்கி, அந்தப் பெரியவருக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டார். 

அவரைப் பார்த்தால் இந்த ஊரிலேயே இருப்பவராகவும் தெரியவில்லை.  கேரளா செல்லும் முன் தில்லியில் வந்து என்ன செய்கிறார் என்பதும் புரியாத புதிர்தான்.  பயணம் முழுவதும் அந்தப் பெரியவரின் தன்னம்பிக்கை பற்றியே யோசித்து வந்தேன்.  சுத்தமாக ஹிந்தி மொழி தெரியாமல் எப்படி இவர் இந்த ஊரில் பேருந்துகளிலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார் என்று.  என்னே ஒரு தன்னம்பிக்கை இவரிடம் என்று யோசித்தபடியே வர, நான் இறங்க வேண்டிய நிறுத்தம் [அவரும் இறங்க வேண்டிய அதே நிறுத்தம்] வரவும் இறங்கிக்கொண்டு அந்த  இடத்திலிருந்து அவர் செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து செல்ல [பத்து நிமிடங்கள் நடைப்பயணம்] வழி சொல்லி விட்டு நான் என் இலக்கை நோக்கி நடந்தேன்.

ஒவ்வொரு பயணத்திலும் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம்.  எத்தனை எத்தனை அனுபவங்கள்.  ஒவ்வொன்றாய் ரசித்தால் நன்றாகத் தான் இருக்கிறது இல்லையா…  பயணங்கள் தொடரட்டும்…

மீண்டும் சந்திப்போம்….

வெங்கட்.
புது தில்லி.


செவ்வாய், 20 மார்ச், 2012

சாதனை மனிதர்கள்.....

இவர்கள் அனைவரும் சாதனை மனிதர்கள்.....  


அப்படி என்ன சாதனை படைத்தார்கள் இந்த மனிதர்கள்.... 


உலகிலேயே நீண்ட காதுகளை உடையவர் இவர்.....  

[இப்படி ஒவ்வொரு காதுலயும் கிலோ கணக்கில் வளையம் போட்டால், 
காது கால் வரை வந்தால் கூட ஆச்சரியம் இல்லை!]


உலகிலேயே நீண்ட காது முடிக்குச் சொந்தக்காரர் இவர்.....

[காதுக்குள்ள உரம் போட்டு முடி வளர்த்திருப்பாரோ!]

உலகிலேயே பெரிய மூக்கு இவருடையது தானாம்......

[”பத்தாவது தெருல இருக்கற பரந்தாமன் வீட்டுல சாம்பார் தீயுது.....  
அடுப்பை அணைக்கச் சொல்லு” எனச் சொல்லுவாரோ!] 

உலகிலேயே நீண்ட கூந்தலை உடையவர்......

[கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான்....  
இவர் கார்கூந்தலோடு பிறந்தாரோ!]

உலகத்திலேயே பெரிய தலை இவருடையது தான்.....

[நீர் தான் மண்டை பெருத்த மஹாதேவனோ............]

உலகத்திலேயே நீண்ட மீசை இவருடையது தான்..... 

[இந்த சிங்கம் எப்பவும் சிங்கிளா வராது....   
கூடவே இரண்டு பேரு வருவாங்க...  
மீசை தூக்க தான்!]

உலகத்திலேயே நீண்ட புருவ முடி இவருடையது தான்.....  

[எங்க ஆத்தா கோழி வளர்த்தா, மாடு வளர்த்தா.....
நான் கண் புருவ முடி வளர்க்கிறேன்!......]

உலகிலேயே நீண்ட தாடி இவருடையது தான்....

[இவர் போற வழியெல்லாம் சுத்தமா ஆயிடும்....  
தாடியே பெருக்கிடும்.....]


மீண்டும் சந்திப்போம்....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 16 மார்ச், 2012

பெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:


[பட உதவி: கூகிள்]

கதைவழி நடந்தேன் மற்றும் உடைந்த சாவி பகிர்வுகளில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தில்லி நிகழ்ச்சி பற்றி எழுதினேன்.  அந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரா. சொன்ன கதைகளில் ஒன்று தான் இந்தப் பகிர்வு..

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி கவாபாட்டா [1899] அவர்களின் ஒரு சிறுகதையை இந்த நிகழ்ச்சியில் சொன்னார்.  அது:

ஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம்.  சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு.  கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன.  எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”.  படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.  அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள்.  தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.
 
இன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம்.
  “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே?” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.
 
ஐந்தாறு நாட்கள் சென்றது.
  அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும். 
 
மூன்றாவது கடிதமும் வந்தது.
  “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ?  இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்?”  அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும்.  இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு. 

அடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம்.  ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே.  ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது.  நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு?” 
 
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.

என்ன ஒரு சோகம் கதையில்.  பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல. 

மேலும் கதைகள் தொடரும்...

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட் 
புது தில்லி. 

புதன், 14 மார்ச், 2012

அழகிகளின் அணிவகுப்பு...



சென்ற புதனன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அர்ஜூன் அரங்கில் ஒரு நிகழ்ச்சி – வரிசையாக அழகிகள் வந்து செல்லும் அணிவகுப்பு நடைபெற்றது.  மிகவும் விமரிசையாக நடந்த இந்த விழாவில், ஹரியானா மாநில முதல்வர் திரு பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர் திரு ஷரத் பவார் ஆகியோர் பங்கேற்று விழாவிற்கு தலைமை தாங்கினர்.

விழாவில் நடந்த ஒவ்வொரு அழகியும் கறுப்பாக இருந்தாலும், கண்ணைப் பறிக்கும் அழகு…  ”கறுப்பே அழகு காந்தலே ருசி” என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன? 

விழாவினைப் பற்றிப் பேசிய திரு ஹூடா,  அணிவகுப்பில் கலந்து கொண்ட அழகிகளை அவர்களின் மேனி அழகில் மயங்கி “கறுப்புத் தங்கம்” என வர்ணித்தார். 

ஒரு அழகி நடந்தாலே மனதைப் பறிகொடுக்கும் ஆண்கள், எழுபது அழகிகள் தொடர்ந்து நடை பழகினால் சும்மாவா இருப்பார்கள்…  ஒரே விசில் சத்தம் தான் போங்க.  அம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த  அழகிகள் கலந்து கொண்டனர்.  பரிசுத் தொகையாக மொத்தம் ரூபாய் எட்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.

என்ன ஒரே அழகி, அழகி எனச் சொல்லிட்டே இருக்கீங்க, ஆனா ஒரு புகைப்படம் கண்ல காட்டமாட்டேன்னு அடம் பிடிக்கிறேன்னு கேட்கும் நண்பர்களுக்காக  கீழே ஒரு புகைப்படம்…

..

..

..

..

..

.. 

..



என்ன அவசரம்…
..

..

..

..


..

...


[பட உதவி: கூகிள்]

என்ன பார்த்தீங்களா? எவ்வளவு அழகு இல்லையா?

அட அடிக்க வராதீங்க நண்பர்களே... ஹரியானாவில் முரா இன எருமைமாடுகளின் அணிவகுப்பு நடந்தது. அதில் தான் இத்தனை அமர்க்களமும்.  ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஏழு லிட்டர் வரை பால் கொடுக்கும் இந்த வகை எருமை மாடுகளை பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் இந்த அழகிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இப்பல்லாம் எல்லாத்துக்கும் இப்படி ஃபேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கத் தான் இந்தப் பதிவு.   

ஜே.கே குழுமமும், ஹரியானா மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையும் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததாம் ஜிண்ட் மாநகரத்தில். அணிவகுத்த மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனராம்…

இது எப்படி இருக்கு?

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 12 மார்ச், 2012

என்னைக் கண்டுபிடிங்களேன்….

Liu Bolin – சீனாவில் 1973 - ஆம் வருடம் பிறந்த இவர் The Invisible Man என்று அழைக்கப்படுகிறார்.  ஏன் எனக் கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்களேன்.  “Hiding in the City” என்று இவர் செய்த விஷயங்கள் மிக மிக அருமை.  நான் ரசித்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





[என்ன, அவரைக் கண்டு பிடிச்சீங்களா?]



[வாழ்க்கையில் படிக்கட்டு ரொம்ப முக்கியம்!]

[பார்த்துங்க.....  தண்ணி வந்துடப் போகுது....]

[காலு காட்டிக் கொடுத்துடுச்சோ....]

[இயற்கையோடு இயற்கையாக.....]

[பார்த்து, அவரைக் கண்டுபிடிக்கறேன்னு, தண்ணில விழுந்துடாதீங்க...]

[இது தான் சீனப் பெருஞ்சுவரா?]

[ஆஹா....  அருமை]

[பூவோடு பூவாய்...]

[இந்தப் படத்திலே எங்க இருக்காருன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....]


மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்
புது தில்லி.

வெள்ளி, 9 மார்ச், 2012

மனிதக் கடத்தல்…

[பட உதவி:  கூகிள்]

ஒரு மாதப் பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து ஏதோவொரு விஷயத்தில் ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் [இதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லுங்களேன்!]தயாரித்து பயிற்சியாளர்களுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தனர். 

நான்காவது வாரத்தில் முதல் நாள் தேர்வு. அதன் பிறகு பயிற்சியின் கடைசி நாள் காலை இந்த Presentation செய்ய வேண்டும்.  ஒவ்வொரு குழுவிலும் ஏழு நபர்கள்.  என் குழு தேர்ந்தெடுத்த விஷயம் Human Trafficking.  இந்த விஷயத்தில் கட்டுரை தயாரிப்பதற்காக கூகிளில் தேடும்போது பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் கிடைத்தன.  அதை வைத்து ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் தயாரித்து சமர்ப்பித்தோம். 

[பட உதவி:  கூகிள்]


அப்படி தேடும்போது ஒரு காணொளி கூகிளில் கிடைத்தது.  அதைப் பார்த்தால் Human Trafficking என்பதன் விளக்கமும் அதன் கொடுமையும் நமக்குப் புரியும்.

ராதா – 12 வயது – ஐந்தாவதாகப் பிறந்த மகள் – தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, ஊரில் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரின் சிபாரிசில் மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அப்படி கல்யாணம் செய்து வந்த ராதாவினை சில நாட்களிலேயே மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டான் அந்தக் கண()வன் .  இது போல், ஜோதி, டினா, ராகுல், ராஜீவ், அன்னமோள், பீனா என்று காணொளியில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.



தினம் தினம் எத்தனை எத்தனை ராதாக்களும், ஜோதிகளும், ராகுல்-ராஜீவ் போன்ற சிறுவர்களும் இப்படிக் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை நினைக்கும்போது மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு.   அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  இன்னும்  நிறையவே இருக்கின்றன   என்று தோன்றுகிறது. 

இந்த தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் இது போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  நிச்சயம் ஏதாவது செய்வோம் என்ற முடிவுடன்தான் பயிற்சியை முடித்தோம்.

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.