தொகுப்புகள்

வியாழன், 31 மே, 2012

நீர்வீழ்ச்சியா – புகை மூட்டமா?


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 6]
பகுதி-5 பகுதி-4 பகுதி-3 பகுதி-2 பகுதி-1





நர்மதை நதி ஓடிக்கொண்டிருக்கும் ஜபல்பூரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு தான் நாங்கள் அடுத்து சென்றது. இதன் பெயர் “[D]துவாந்[Dh]தார் ஃபால்ஸ்”. ஹிந்தியில் ”[D]துவான்” என்றால் புகை. நர்மதா நதியிலிருந்து விழும் தண்ணீரின் நீர்த்திவலைகள் புகை போன்றதோர் தோற்றத்தினை ஏற்படுத்துவதால் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு “துவாந்தார்” எனக் காரணப் பெயர் வந்திருக்கிறது. 

ஜபல்பூரிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எங்களை இறக்கியதும் நீர்வீழ்ச்சி இருக்குமிடத்தை அடைய அனைவரும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்க ஆரம்பித்தோம். 

வழி நெடுகிலும் பாதையின் இரு மருங்கிலும் நிறைய கடைகள். மார்பிளால் செய்யப்பட்ட பொம்மைகள், விதவிதமான வண்ணமயமான தொப்பிகள் என திருவிழாக் கால கடைகளைப் போல இருந்தது. பக்கத்திலிருந்த கிராமங்களில் இருந்து வந்த மக்கள் நிறைய பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் விற்றுக் கொண்டிருந்தனர். 

ஒரு வயதான பாட்டி ஒரு சிறிய மூங்கில் தட்டில் அவர்களின் சுருங்கிய தோலைப் போன்ற தோற்றத்தையுடைய  பழத்தினை விற்றுக் கொண்டிருந்தார். “இது என்ன பழம் பாட்டி?” என்று நான் கேட்க, "बेटाएह उबला हुआ बेर हेஎனச் சொன்னார். ’என்னய்யா இது திடீர்னு ஹிந்திக்குத் தாவினா, மறத்தமிழர்களான எங்களுக்கு எப்படிப் புரியும்?’ என்று கேட்பவர்களுக்கு, “அவித்த இலந்தைப் பழம்!’.

பொடிநடையாக நடந்து சென்று கொண்டு இருக்கும்போதே தூரத்தில் நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.  அருகே நெருங்க நெருங்க, சில்லென்ற காற்று நம்மைத் தழுவ, ஆர்வத்தில் நடையை வேகமாக போட்டோம். நீர்வீழ்ச்சியே கண்டிராத தில்லி நண்பர்களின் அதிக ஆர்வத்தால் இருபதே நிமிடத்தில் நீர்வீழ்ச்சியை சென்றடைந்தோம். 



யார் மேல் உள்ள கோபமோ, பேரிரைச்சலோடு நர்மதா, நீர்வீழ்ச்சியாக மாறி கொட்டிக் கொண்டிருந்தாள். இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.

அமைதியாக இருக்கும் நதி ஆக்ரோஷமாக குதித்தோடியதை பார்த்து ரசித்துக் கொண்டும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தோம். நமது குற்றால நீர்வீழ்ச்சி போல இங்கே குளிக்க வசதி இல்லை. நின்று நீர்வீழ்ச்சியை ரசித்து வர வேண்டியது தான். எப்படி அது ஆக்ரோஷத்துடன் குதித்தோடியது என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா? அதனால் உங்களுக்காகவே அங்கே எடுத்த ஒரு காணொளி இங்கே!



நீர்வீழ்ச்சி விழும் உயரம் சுமார் முப்பது அடியாம். அரை மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்று இயற்கையின் அழகை ரசித்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மேலே போகும் போது நிறைய பேர் மூச்சு வாங்கியபடி போய்ச்  சேர்ந்தோம். ஆனால் கஷ்டமில்லாமல் சீக்கிரமே இறங்கிவிட்ட மாதிரி தோன்றியது. 

நீர்வீழ்ச்சியும் பார்த்தாயிற்று! அடுத்தது? பெரிய படகில் ஒரு உல்லாசப் பயணம் போக வேண்டியதுதான். லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராக இருங்க. சரியா?

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.

பின் குறிப்பு: 25.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.



வியாழன், 24 மே, 2012

சௌசட் யோகினி மந்திர்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 5]


பகுதி-4 பகுதி-3 பகுதி-2 பகுதி-1



“[B]பேடா [G]காட்” –லிருந்து நீர்விழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு குன்றின் மேலுள்ளது “சௌசட் யோகினி மந்திர்”.  பாறையில் அமைத்திருக்கும் படிகள் வழியே சென்றால் நமக்குக் காணக் கிடைப்பது பத்தாம் நூற்றாண்டில் துர்கா தேவிக்கென அமைக்கப்பட்ட ஒரு அழகிய கோவில். 

கோவிலின் மேலே செல்ல கல்லாலான படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையிலிருந்து கீழே நோக்கினால் பாறைகளுக்கு நடுவே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை ”என்னையும் கொஞ்சம் பாரேன்” என காதலோடு நம்மை அழைக்கிறாள். 

ஹிந்தியில் ”சௌசட்” என்றால் அறுபத்தி நான்கு. அறுபத்தி நான்கு யோகினிகள் பற்றி நிறைய கதைகள் சொல்கிறார்கள். அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு இன்று நமக்கு விடையில்லை. அங்கிருக்கும் பல சிலைகளின் கீழே பெயர்கள் இருந்தாலும் சிலவற்றில் இல்லை. நிறைய சிலைகள் ஏதாவது ஓரிடத்தில் சிதிலம் அடைந்திருக்கிறது. 

கல்சூரி ராஜாக்களால் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பல அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. பல சிதிலப்பட்டுப் போனாலும் இருக்கும் சில சிற்பங்களின் அழகைப் பார்க்கும்போது சிதிலப்பட்டவை எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என நம்மை கற்பனை செய்யத் தூண்டுகிறது. 



அறுபத்தி நான்கு யோகினிகள், துர்க்கா தேவியின் உடனிருப்பவர்கள் என சொல்லப்பட்டாலும், இந்த கோவில் அவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டாலும், இங்கே நடுநாயகமாக சிவனுக்கென தனி சன்னிதியும் இருக்கிறது. வட்ட வடிவமான வெளியிடத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இளைப்பாற மேடைகள் இருக்கின்றன.

கோவில் இருக்கும் சிறிய மலையிலிருந்து நாம் காணும் ஜபல்பூர் நகரக் காட்சி ஆஹா எத்தனை அழகு. பறவைகள் எல்லாம் உயரத்தில் பறக்கும்போது பூமியைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது…

ஒவ்வொரு யோகினியின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரீ நந்தினி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ மண்டோதரி, ஸ்ரீ கேமுகி, ஸ்ரீ ஜாம்பவி, ஸ்ரீ யமுனா, ஸ்ரீ ஷண்டினி, ஸ்ரீ பிங்களா, ஸ்ரீ ஐங்கிணி, ஸ்ரீ ப்ரம்ஹணி, ஸ்ரீ தபனி, ஸ்ரீ ஹன்சினி எனப் பல்வேறு யோஹினிகளின் பெயர்கள் கீழே எழுதப்பட்டு இருக்கிறது. 

ஒரு நாள் முழுதும் பயணத்தில் வீணாகிப் போனதால் இன்னும் அதிக நேரம் இருந்து குறிப்புகள் எடுக்க முடியவில்லை. முழுக் கோவிலையும் ஆற அமர இருந்து பார்க்கவேண்டுமெனில் நிறைய நேரம் தேவை. இல்லாததால் மனசில்லாமலே கீழே இறங்கி வந்தேன். தனியாக இன்னுமொரு முறை சென்று பார்க்க எப்பொழுது நேரம் வாய்க்குமோ? அந்த யோகினிகளுக்கே வெளிச்சம்…

அடுத்து நாங்கள் சென்ற இடம் எதுவாக இருக்கும்? யோசித்துக் கொண்டிருங்கள்... அதற்குள் நான் அங்கு சென்று விடுகிறேன். அப்போது தானே அதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல முடியும்?

என்ன கற்பனைக் குதிரையின் மேலே ஏறி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சீட்டிங்களா? நல்லது…  ரொம்ப தூரம் போயிடாதீங்க… சீக்கிரமே வந்துடறேன்…  சரியா?...

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பின்குறிப்பு: 18.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


வியாழன், 17 மே, 2012

நர்மதை நதிக்கரையில்…


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 4]


சென்ற பகுதியில் சொன்னது போல, ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை பார்த்த பிறகு நாங்கள் சென்றது “[B]பேடா [G]காட்” என்று அழைக்கப்படும் சலவைக்கல் பாறைகள் இருக்கும் இடத்திற்கு. தங்கியிருந்த ”கல்சூரி ரெசிடென்சி” –யிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது இந்த இடம். நர்மதை நதிக்கரையில் நிறைய படகுகள் இருக்கின்றன. அனைத்துமே துடுப்புப் படகுகள் தான். இருபது பேர் மற்றும் நான்கைந்து பேர் அமரும் படகுகளும் இருக்கின்றன. 



நாங்கள் மொத்தமாக 37 பேர் என்பதால் இரண்டு படகுகளை ஏற்பாடு செய்திருந்தார் ரோஹித். இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு படகுகளிலும் அமர, படகுகள் கிளம்பியது. ஒரு பக்கத்தில் ஒரு நபர் அமர்ந்து படகினை திருப்பும் வேலையினைப் பார்க்க மறுபக்கத்தில் இரண்டு நபர்கள் அமர்ந்து துடுப்பு போடுகிறார்கள். நர்மதை நதியின் அமைதியான நீரோட்டத்தினை எதிர்த்து படகு செல்கிறது. இரண்டு பக்கங்களிலும் சலவைக்கல் பாறைகள் அணையாக இருக்க, நர்மதை நதி குறுகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஓரிடத்தில் ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி". ”அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது. ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது. 





நதியின் நடுவே இருக்கும் இரு பாறைகளில் சுயம்பு லிங்கங்களைக் காண முடிந்தது [ஒன்று கருப்பு வண்ணத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும்]. சில இடங்களில் பாறைகள் தண்ணீரால் அரிக்கப்பட்டு இயற்கையாக முனிவர், நந்தி, போன்ற வடிவங்களில் உருவான சில சிற்பங்களையும் காண முடிந்தது. ஒரு பாறையில் அழகிய வட்ட வடிவம் இருந்ததை இயற்கை மோதிரம் என அழைக்கிறார்கள். 



நதி மட்டத்திலிருந்து ஐம்பது-அறுபது அடி இருக்கும் ஒரு பாறை மேல் இரு சிறுவர்கள். படகுகள் அந்தப் பாறைகளுக்கு சற்று அருகில் செல்லும் போது வரும் பயணிகளைப் பார்த்து “பத்து ரூபாய் தாங்க, இங்கே இருந்து நதியில் குதிக்கிறேன்” என்று உச்சஸ்தாயியில் கூற, அதற்கு படகிலிருக்கும் சிலர் சம்மதிக்க, உடனே அங்கிருந்து குதிக்கின்றனர் இருவரும். பின் நர்மதையில் நீந்தி, படகின் அருகே வந்து பணம் வாங்கிக் கொள்கின்றனர். 

அதற்குள் படகுக்காரர் 'படகைப் பிடிக்காதே' என்று அவர்களை மிரட்டுகிறார். பணம் முழுவதும் நனைந்து போனாலும், அதை வாயில் கவ்வியவாறே மீண்டும் நீச்சலடித்து பாறைகளுக்கு அருகில் சென்று மேலே ஏறுகிறார்கள். முழுதும் நனைந்த ரூபாய்த் தாள்களைப் போலவே எங்கள் மனமும் நனைந்தது. படிக்க வேண்டிய வயதில் இப்படி உயிரைப் பணயம் வைத்து ஒரு  ஆபத்தான வித்தையை செய்து காண்பித்து அவர்களை சம்பாதிக்க அனுப்பியது யார் குற்றம்? இந்தக் கேள்விக்குத் தான் இன்னும்விடை கிடைத்தபாடில்லை. 

ஆங்காங்கே பாறைகளில் சில பழைய துணிகள் மரங்களில் மாட்டிக்கொண்டு காற்றில் படபடக்கிறது. படகோட்டிகள் ஸ்வாரசியத்திற்காக, ஒரு சிவப்புத் துணியைக் காட்டி இது தான் கரிஷ்மா கபூரின் துப்பட்டா, இங்கே தான் ஹிந்திப் படமான ”அசோகா” எடுக்கப்பட்டது, இந்த இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது என ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே வருகிறார். 





பாறைகளுக்கு நடுவே இரண்டு வழிகள் தெரிகிறது. இடப்பக்கம் செல்வதா, வலப்பக்கம் செல்வதா என்ற குழப்பம் விளைவிக்கும் இடம். அதனால் இந்த இடத்தினை ‘[B]புல்[B]புலையா” பாறைகள் என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் சென்றால் திரும்பலாம்,  இன்னுமொரு பக்கம் சென்றால் “எள்ளும் தண்ணீரும் இறைக்கச் சொல்லி விடலாம்!”. நாங்கள் திரும்பினோம்.

45 நிமிடங்கள் போனதே தெரியாமல் இயற்கை அன்னையின் எழில் கோலத்தினைக் கண்டு ரசித்துவிட்டு படகுத் துறைக்குத் திரும்பினோம். எல்லாப் படகுகளையும் அந்த கிராமத்து நபர்களே இயக்குகிறார்கள். இருந்தாலும் லைஃப் ஜாக்கெட் போன்ற எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பதை மாற்றம் செய்யவேண்டிய ஒன்று எனத் தோன்றியது.

படகு துறையிலிருந்து வெளிவந்தால் வரும் வழி முழுதும் நிறைய கடைகள். மார்பிள் கற்களில் பெயர் எழுதித் தருபவர்கள், ஊதுவத்தி ஸ்டாண்ட், சப்பாத்திக் கல், மாலைகள், தலையில் அணியும் க்ளிப் என பலவும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் பார்த்து, சிலவற்றை வாங்கிக் கொண்டு எங்கள் அடுத்த இலக்கினை நோக்கி பயணித்தோம்.

அடுத்தது எங்கே என வினவும் நண்பர்களுக்கு... சற்றே காத்திருந்தால் உங்களை ஒரு பழமையான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


குறிப்பு: 11.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

வியாழன், 10 மே, 2012

ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 3]
சென்ற பகுதியில் சொன்னது போல, இப்போது உங்களை ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறேன். 



இத் தொழிற்சாலை 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நமது ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு படைகளுக்குத் தேவையான வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இங்கு நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது முதலில் தொழிற்சாலையின் பிரதிநிதி ஒருவர் தயாராகும் வாகனங்கள் மற்றும் இதர விவரங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார். 



பிறகு உள்ளே சென்று வாகனங்களின் பகுதிகள் தயாராகும் முறை, ஒவ்வொரு பகுதியும் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன, எப்படி உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு முழு வாகனமாக உருவாகிறது என்பதை எல்லாம் பார்த்தோம். 



இங்கே  5/7.5 டன் Stallion Mk-III BS-II, 2.5 டன் LPTA 713/32 TC BS-II, 2 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, 5 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, கண்ணி வெடிகளில் இருந்து பாதுகாக்கும் வண்டிகள், குண்டு துளைக்காத வண்டிகள் என்று பல ரகங்களில் வாகனங்கள் தயாராகிறது.

ராணுவத்திற்கு மிக முக்கியத் தேவை வாகனங்கள். நாட்டின் எல்லைகளில் ரோந்து சுற்றி வரவும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் செல்லும்படியான வாகனங்கள் இருந்தால் தானே அவர்களால் நமது நாட்டினை அன்னியர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்? 

தொழிற்சாலையை முழுவதுமாக சுற்றிப் பார்த்து விட்டு பின் அங்கு பணிபுரிபவர்களிடம் நன்றி கூறி திரும்பும் போது நேரம் மதியத்தை தொட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின் நாங்கள் சென்ற இடம் நர்மதை நதியில் இருக்கும் மார்பிள் ராக்ஸ். அதன் எழிலைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்
வெங்கட்.


பின்குறிப்பு: 04.05.2012 அன்று வல்லமையில் வெளியான பகிர்வு.

வியாழன், 3 மே, 2012

தொலைந்ததைத் தேடினேன்...


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 2]


சென்ற பகுதியில் தில்லி – ஜபல்பூர் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது என்றும் அது என்ன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன் எனவும் சொல்லி முடித்திருந்தேன். அது என்னவாக இருக்கும் என்று ஊகித்தீர்களா?  

ரயில் பயணங்களில் நிறைய பேர் அவர்களின் பெட்டி மற்றும் பொருட்களை தொலைப்பதை – தூங்கிக்கொண்டிருக்கும் போது வழியில் வரும் ரயில் நிலையங்களில் உடைமைகள் களவு போவதைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வரிசையில் நான் இரண்டாவது விஷயத்தில் அனுபவம் பெற்றேன்.


[பட உதவி: கூகிள்]

வண்டியில் ஏறியவுடனே ஷூவினை கழற்றிவிட்டு சாதாரண காலணிகளை அணிந்து கொண்டேன். பயண முடிவில் பார்த்தால் ஷூவினைக் காணவில்லை. தொலைந்ததைத் தேடினால் எங்கே கிடைக்கும்? 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ? சே! இதைக்கூடவா திருடுவார்கள் என்று நினைத்தேன். பெட்டிகளுக்கு சங்கிலி போட்டு பூட்டி விடுவதைப் போல இதற்கும் போட்டிருக்க வேண்டும் போல!

[தங்குமிடம் - வெளித் தோற்றம்]

இரவு ஏழு மணிக்குத்தான் ஜபல்பூர் போய் சேர்ந்தோம். நிலையத்திற்கு மிக அருகிலேயே மத்தியப் பிரதேச சுற்றுலாத்துறையின் ”கல்சூரி ரெசிடென்சி” என்ற இடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இங்கு மொத்தம் 30 அறைகள் இருக்கின்றன. AC Deluxe அறைக்கு ரூபாய் 2590/-, AC அறைக்கு ரூபாய் 2290/- என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வரிகள் தனி என்பதை நினைவில் கொள்க.

தங்கும் விடுதியில் உணவகம், அருந்தகம் [இது என்னன்னு கேட்பவர்களுக்கு ஒரு கோப்பை இலவசம்!], கூட்டம் நடத்த வசதி என எல்லாம் இருக்கிறது. இதன் தொலைபேசி எண்: (0761) 2678491 / 92, 3269000. மின்னஞ்சல் முகவரி : kalchuri@mptourism.com.  

மொத்த பயணத்தில் ஒரு நாள் வீணானதால் நாங்கள் ஜபல்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைந்து விட்டது.  இரவாகிவிட்டதால் உணவு உண்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்ப உத்தேசித்து ஓய்வெடுக்கச் சென்றோம். 

[உணவகம்]

[வரவேற்கும் ஓவியம்...]

காலையில் எழுந்து உணவு முடித்து கிளம்ப வேண்டும். காலை உணவாக பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா Corn Flakes], இட்லி-வடை, சட்னி-சாம்பார், பராட்டா-ஊறுகாய், பிரட்-ஆம்லெட், காபி/தேநீர் எல்லாம் வைத்திருந்தார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடலாம். தேவையான அளவு சாப்பிட்டுவிட்டு எட்டரை மணிக்கு தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் எது எனக் கேட்பவர்களுக்கு…  

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் இருபத்தி இரண்டு வருடங்கள் வரை ராணுவத்திற்குத் தேவையான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் வாகனத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்து 1969-ஆம் வருடம் தொடங்கப்பட்டது தான் ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை. 

[என்னைப் படம் பிடிங்களேன்!]

இந்த தொழிற்சாலை ஜபல்பூர் நகரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் வெளியே இருக்கிறது.  தொழிற்சாலை வாயிலிலேயே ஒரு வட்ட வடிவ மேடையில் ஒரு பழைய ஜீப் நின்று நம்மை வரவேற்கிறது. இந்த தொழிற்சாலைக்கு உள்ளே சென்று பார்ப்பது கடினம் – நிறைய வழிமுறைகள் – அதனால் பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை. இந்த தொழிற்சாலையில் தயாராகும் வாகனங்கள் என்னென்ன, என்பதைப் பார்த்து வந்த நான் பகிர்ந்து கொள்ள ரெடி. 

தெரிந்து கொள்ள நீங்க ரெடியா? அதுக்கு அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


பின் குறிப்பு: 27.04.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

புதன், 2 மே, 2012

தேனிலவை விட்டு ஓடிய தம்பதி...



ஃபிப்ரவரி மாதம் தில்லியில் நடந்த உலக புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கு சென்ற போது, “புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு இல்லை, பதிவு செய்து பணம் செலுத்தினால் உங்களுக்கு புத்தகங்களை தபாலில் அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். அப்போதே வாங்கி, வரும்போதே படித்துக் கொண்டே வருவது எனக்குப் பிடித்தது – அதுவும் வாத்தியார் சுஜாதா புத்தகம் என்றால் கையிலெடுத்ததிலிருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்காத வகை நான்! அதனால் பதிவு செய்யாமல் வேறு புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். 



[பட உதவி: கூகிள்]


இரண்டாம் முறையாக நான் போன போது, கொண்டு வந்ததை எல்லாம் திருப்பி எடுத்து போக வேண்டாம் என்று விற்கத் தொடங்கியிருந்தார்கள். வாத்தியார் எழுதிய புத்தகங்களில் “ஓடாதே” மட்டும் தான் கடையை விட்டு வாசகரோடு ஓடாமல் இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.  தலைப்பு மட்டும் தான் ”ஓடாதே” ஆனால் கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் – ஒரு தம்பதியர் தேனிலவைக் கூட விட்டு விட்டு…

இது ஒரு க்ரைம் நாவல். படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க மனம் வரவில்லை. அவ்வளவு சுவாரசியம். கதையின் நாயகன் – நாயகி, புதுமணத் தம்பதியினர். அவர்கள் தேனிலவு செல்ல, ஒரு கும்பல் துரத்துகிறது அவர்களை. எதற்கு? அது நாயகன் – நாயகி, மற்றும் படிக்கும் நமக்கும் புரியவில்லை. படிக்கப் படிக்கத் தான் தெரிகிறது. துரத்திக்கொண்டு இருக்கும் நபர்கள் திடீரென துரத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். 

ஓடிக் கொண்டே இருக்கும் இவர்களை ஒரு கட்டத்தில் கணேஷ் – வஸந்த் காப்பாற்றுகிறார்கள். அத்துடன் நில்லாது எதற்காக துரத்துகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்வது தான் இந்த விறுவிறுப்பான கதை. நடுநடுவே சுஜாதாவின் அடையாளச் சின்னங்கள் வரும்போது தன்னையறியாமல் சிரிக்க வைக்கிறது. பெண் பார்க்கச் சென்ற நாயகன், நாயகியைப் பார்த்து “ஒரு நிமிஷம் பேசலாமா?” எனப் பேசியது கீழே!

“மீராவை ‘தனியாக’ பால்கனிக்கு அழைத்துச் சென்றபோது, அவள் தம்பி தங்கைகள் அடைகாக்க, ஜன்னல் வழியாக மீராவின் பாட்டி பார்த்துக் கொண்டிருக்க, தமாஷாக நிகழ்ந்தது அந்த உரையாடல்.
  உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா… ரொம்ப… இந்த வருஷம் வெயிலா?.... இல்லை. நீங்க எந்த காலேஜ்? நான் லயோலா, அப்புறம் விவேகானந்தா….
  இவ்வாறு பற்பல கேள்விகளுக்குப் பின் மீரா இறுத்த ஒரே பதில் – ‘உங்க காலர்ல கட்டெறும்பு ஊர்றது.’”

முன்னுரையில் சுஜாதா அவர்கள் இந்த கதையை பற்றி சொல்லும்போது, ”நாம் எதற்காக ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். நின்று எதற்காக ஓடுகிறோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தியவரைக் கேட்டால், “எனக்குத் தெரியாது. நீ ஓடுகிறாய், நான் துரத்துகிறேன்” என்பார். இந்த வெட்டி ஓட்டத்தை த்ரில்லர் முறையில் சொல்ல முயன்றேன்” என்கிறார். மேலும் சினிமாவாக வராமல் தப்பித்த கதை என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.  

சினிமா டைரக்டர்கள் செண்டிமெண்ட்டுக்காக தலைப்பை மட்டும் மாற்றி விட்டால் இதை சினிமாவாக எடுக்கலாம் என்றார்களாம். 'ஓடாதே' என்ற தலைப்பில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்க மனம் வராததால் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

குங்குமம் இதழில் முன்பு தொடர்கதையாக வந்த இந்த கதையை கிழக்கு பதிப்பகத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள். புத்தகத்தின் விலை ரூபாய் 100/-. 

முகவரி:-

கிழக்கு பதிப்பகம்
எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு
ஆழ்வார்பேட்டை
சென்னை – 600018.
தொலைபேசி எண் – 044 42009601

எனக்குப் பிடித்தது. சுஜாதா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்,

வெங்கட்
புது தில்லி.