இந்த வார செய்தி:
தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு
புதிதாக இரண்டடுக்கு ரயில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். சாதாரணமாக
ஷதாப்தி வண்டிகளில், ஒரு பெட்டியில் 78 இருக்கைகள் இருக்கும். இந்த புதிய
வண்டியில் 120 இருக்கைகள். 12 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ள இந்த இரண்டடுக்கு ரயில்
தில்லியிலிருந்து பிரதி தினமும் மாலை 05.35 மணிக்குக் கிளம்பி இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூர்
சென்றடையும். அதே போல தினமும் காலை 06.00 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து
கிளம்பி 10.30 மணிக்கு தில்லி வந்தடையும்.
[வெளிப்புறத் தோற்றம்]
[உட்புறத் தோற்றம்]
[படங்கள் உதவி: கூகிள் இருக்க பயமேன்!]
தில்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையே இருக்கும் 300 கிலோ
மீட்டர் தூரத்தினை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் இந்த வண்டியில் செல்ல நீங்கள் தரவேண்டியது
வெறும் 327/- மட்டுமே.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இவ்வண்டி தயாரிக்கப்பட்டது
பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபூர்தலாவில். இந்த வண்டியின் ஒரு பெட்டி தயாரிக்க ஆகும் செலவும் ரொம்பவே
கொஞ்சம் தானாம் – அதாவது மூன்று கோடி! சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டி தயாரிக்க
இதில் பாதி தான் ஆகுமாம்!
இன்னிக்கு தேதி 31 ஆகஸ்ட்… 1997-ஆம் வருடம் இதே நாளில்
தான் ஒரு சோகமான விஷயம் நடந்தது. டயானாவைத் தெரியாத ஆள் ஏது? அதாங்க நம்ம இங்கிலாந்து
இளவரசி டயானா. இந்நாளில் தான் அவரது துணைவர் டோடி ஃபாயேத்
என்பவருடன் காரில் பயணம் செய்யும்போது பாப்பராசி புகைப்படக்காரர்கள் துரத்தியதால் வேகமாகச்
சென்று விபத்துக்குள்ளாகி இறந்து போனார். அவரது மரணம் இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியும்
வேதனையும் தருகிறது.
நாக்கில் எலும்புகள் இல்லை. ஆனால் ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு
பலமானது நாக்கு. ஆகையால் கவனமாக பேசுங்கள்.
இறந்த பிறகு, எல்லோரையும் தத்தமது தவறுகளை ஒரு காகிதத்தில்
எழுதச் சொன்னார் கடவுள். சில நொடிகளுக்குப் பிறகு ஒருவர் சத்தமாகக் கேட்டது - “மச்சி, பேப்பரைத் தூக்கி காமி”. நண்பேண்டா!...
எக்மோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது பக்கத்தில் ஒரு
கணவன், மனைவி அவரது கைக்குழந்தை. கூடவே ஒரு பெரியவர்.
பெரியவர்: “குழந்தையும் இவளையும் எதுக்கு கூட்டிட்டு வந்தே….
சின்னப் புள்ளைய தூக்கிட்டு வராதேன்னு சொல்லி இருந்தேனே?”
அதுக்கு கணவன் சோகமா சொன்ன பதில் – “நான் வேண்டாம்னு தான்
சொன்னேன். இவ தான் நான் வரலைன்னா நல்லா இருக்காது, நானும் வரேன்”னு
வந்தா. உங்க ரெண்டு பேர் கிட்ட நான் மாட்டிட்டு உதை படறேன் - ஃபுட்பால்
மாதிரி!”
இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ‘காசளவு நேசம்’
என்ற தொடர் தொலைக்காட்சியில் வந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். அதில் ஒரு சிறிய பகுதி
– குழந்தைகளுக்கான ”ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” கர்நாட்டிக், கன்னடம்,
மலையாளம், பஞ்சாபி என்று விதவிதமாய் பாடி இருப்பார் ரேவதி சங்கரன். அதன் காணொளி உங்களுக்காக
– ரசிப்பீர்கள் என்ற நினைப்புடன்!
வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.