தொகுப்புகள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சாப்பிட வாங்க: பாட்டிசாப்டா - பெங்காலி இனிப்பு….


பெங்காலிகளுக்கு இனிப்பு ரொம்பவே பிடித்தமானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே…. நேற்றைய ஏழு சகோதரிகள் பதிவில் கூட வெல்ல ரஸ்குல்லா பற்றி எழுதி இருந்தேன். அந்தப் பதிவில் சொன்ன பெங்காலி நண்பர் வீட்டிற்கு நேற்று செல்ல வேண்டியிருந்தது.  மாலை அலுவலகத்திலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கே தேநீர் அருந்தியபோது கூடவே ஒரு இனிப்பும் சாப்பிடக் கொடுத்தார்கள்.  அந்த இனிப்பு இதுவரை நான் சாப்பிட்டது இல்லை!  வித்தியாசமாக இருக்கவே அதன் பெயரைக் கேட்டேன்! அதன் பெயர் பாட்டிசாப்டா! என்னது பாட்டி சாப்டாளா? இதற்கு தமிழில் அர்த்தம் தெரியுமா எனக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொன்னேன்!

பாட்டிசாப்டா

இரண்டு பாட்டிசாப்டா-வை இந்த பேரனும் சாப்பிட்டேன்!  அது என்ன பாட்டிசாப்டா? நண்பரின் மனைவி இந்த பாட்டிசாப்டாவைப் பற்றி சொன்னாலும், வீட்டிற்கு வந்த பிறகு முதல் வேலை இணையத்தில் இதற்கான குறிப்பினை தேடியது தான்! விடுமுறை நாளில் செய்து பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  இப்போதைக்கு இணையத்தில் பார்த்த குறிப்புகள் உங்களுக்காக இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்….

தேவையான பொருட்கள்:

ரவை – 250 கிராம், மைதா – 400 கிராம், சர்க்கரை – 200 கிராம், கோவா – 300 கிராம், பால் – 1 லிட்டர், எண்ணெய் – தேவைக்கேற்ப…..

எப்படிச் செய்யணும் மாமு?

பாலை நன்கு சுண்டக் காய்ச்சி, அதில் கோவா, மற்றும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பால்கோவா மாதிரி ரொம்பவும் கெட்டியான பதத்தில் தேவையில்லை, கொஞ்சம் Liquid State-ல் இருந்தாலும் பரவாயில்லை!

ரவை மற்றும் மைதாவினைக் கலந்து, சர்க்கரையையும் சேர்த்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும் [நம்ம கரைச்ச மாவு தோசை பதத்திற்கு….]




தோசைக்கல் சுட வைத்து கரைத்து வைத்த மாவினை தோசை வடிவத்தில் ஊற்றவும்.  கொஞ்சம் வெந்த பிறகு பால்-கோவா கலவையை ஒரு ஸ்பூன் வைத்து, தோசையை சுருட்டி, நன்கு வேக வைக்கவும்.  பொன்னிறமாக வெந்த பிறகு தட்டில் எடுத்து வைத்து சுடச் சுட சாப்பிடலாம் பாட்டிசாப்டா! 

இது ரொம்பவும் பிடித்தமான இனிப்பு வகையாம்!  உங்களுக்குப் பிடிக்குமா எனத் தெரியவில்லை இருந்தாலும், கொஞ்சமாக செய்து பார்க்கலாம்!

படங்கள் மற்றும் குறிப்புகள் பாங்காங் எனும் தளத்திலிருந்து…. 

என்ன நண்பர்களே, நீங்களும் இந்த ”பாட்டிசாப்டா”வை செய்து பார்ப்பது மட்டுமல்லாது சாப்பிடவும் செய்வீர்கள் தானே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

திங்கள், 30 ஜனவரி, 2017

பாக் பசார் - கொல்கத்தா – இரவு உணவு – வெல்ல ரஸ்குல்லா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 95

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

குமோர்துலி பகுதியில் துர்கா பூஜைக்குத் தயாராகும் பிரதிமா[பொம்மை]களைப் பார்த்து அப்பகுதியில் லிக்கர் சாய் அருந்திய பிறகு நாங்கள் சென்ற இடம் பாக் பசார் – பாகிஸ்தான் பொருட்கள் விற்கும் இடம் என நினைத்து விடாதீர்கள் – இந்த பாக் பாகிஸ்தான் அல்ல! Bபாக்gh Bபசார்….. கொல்கத்தாவின் வடபகுதியில் இருக்கும் இந்த அங்காடி மிகவும் பிரபலமான ஒன்று.  சாலை முழுவதுமே நிறைய கடைகள் – பெரிய கடைகள் தவிர, ஒவ்வொரு சந்திலும் சின்னச் சின்னதாய் கடைகள் உண்டு. பலவிதமான அலங்காரப் பொருட்கள், அனைவருக்கும் தேவையான பொருட்கள் என இல்லாததே கிடையாது.

ஹூக்ளி நதிக்கரை அருகிலேயே இருக்கிறது இந்த பாக் பசார் பகுதி. கொல்கத்தா நகரில் ஓடும் சர்க்குலர் ட்ரையின் நிற்பதற்காக இங்கே ஒரு ஸ்டேஷன் கூட உண்டு! பாக் பசார் பாட்டா க்ராஸிங் எனும் இடம் மிகவும் பிரபலமான ஒரு இடம். இங்கே இன்னமும் மனிதர்களை மனிதர்களே இழுக்கும் கைவண்டிகளுக்கான ஸ்டாண்ட் உண்டு! எத்தனை முன்னேற்றம் வந்தாலும், இந்த கைவண்டி இழுப்பவர்களுக்கு ஒரு விடிவுகாலம் வரவில்லை.  பெரும்பாலானவர்கள் முதியவர்களாக இருக்கிறார்கள். வண்டியில் உட்கார்ந்திருக்கும் “கன”வான்களைப் பார்த்தால், பார்க்கும்போதே கோபம் வருகிறது – நடந்து போனால் உடம்பாவது குறையும்!

ட்ராம்கள் போவதைப் பார்க்கவே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன்.  ரொம்பவே பொறுமையாகச் செல்கிறது.  நடந்து சென்று கூட அவற்றுக்கு முன்னே சென்றுவிடலாம் போல… ட்ராம் ஓட்டுனர் ஒலிப்பான் மூலம் எழுப்பும் சப்தங்களை பாதசாரிகளும் சரி, சக வாகன ஓட்டுனர்களும் சரி கண்டுகொள்வதே இல்லை! தில்லி எருமைகள் நினைவுக்கு வந்தன.  ட்ராம் சென்று கொண்டிருக்கும்போதே நிறைய பேர் இறங்குகிறார்கள். சிலர் ஏறிக்கொள்ளவும் செய்கிறார்கள்! அதான் அத்தனை மெதுவாகச் செல்கிறதே….

சாலையின் ஓரங்களில் கடைகள் இருக்க, சாலையில் பேருந்துகள், ட்ராம், கை ரிக்‌ஷாக்கள், வாகனங்கள் என்று சென்றபடியே இருக்கின்றன.  நாங்களும் அந்தப் பகுதிக்குச் சென்று கடைகளை பார்த்தபடியே நடந்தோம். சில கடைகளில் புகுந்து சில பல பொருட்களை வாங்கிக் கொண்டோம். நடைபாதைக் கடைகளிலும் நிறைய மக்கள் கூட்டம். இந்தக் கடை வீதியில் இருக்கும் வியாபாரிகள், எல்லா ஊர்களில் இருக்கும் வியாபாரிகள் போல நிறைய மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களுடன் பெங்காலி நண்பர் இருந்ததால் எங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இப்படியே நடந்து சென்றபடியே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நடந்து நடந்து களைப்பான பிறகு எங்கள் வாகனத்திற்கு திரும்ப வந்து நண்பரை அவர் வீட்டருகே விட்ட பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.  கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு உண்பதற்காகக் கீழே இறங்கினோம்.  மதியம் சென்ற அதே உணவகம், அதே இருக்கைகள், அதே பணியாள்! எங்களைப் பார்த்தவுடன் ஒரு புன்னகை! மதியம் சாப்பிட்ட வகைகள் வேண்டாம், வேறு என்ன இருக்கிறது என்று அவராகவே மெனு சொன்னார்!  சரி என எனக்கு சைவ உணவும், நண்பர்களுக்கு அசைவ உணவும் கொண்டு வரச் சொன்னோம்!
  
பெங்காலிகளுக்கு மீன் எப்படி பிடித்தமானதோ, அதே போல இனிப்புகளும்! அப்பாடி மலைக்க வைக்கும் இனிப்பு வகைகள் அங்கே கிடைக்கின்றன. எத்தனை எத்தனை வகை இனிப்புகள். பெங்காலி நண்பர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் ஏதாவது இனிப்பு இருக்கும்! அவருக்குப் பிடிக்கிறது என்பதற்காக நமக்கும் இனிப்பு! அதுவும் ஒன்றிரண்டு சாப்பிட்டால் பரவாயில்லை. ஒரு தட்டு நிறைய இனிப்பு தந்து சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொல்லுவார் அவரும் அவரது துணைவியும்.  கொல்கத்தாவில் இரவு உணவு சாப்பிடச் சென்ற உணவகத்திலும், அந்தச் சிப்பந்தி சாப்பிட்டு முடிக்கக் காத்திருந்தவர் போல என்ன இனிப்பு கொண்டு வரட்டும் எனக் கேட்க, ஏற்கனவே சாப்பிட்ட உணவிற்கு மேல் இனிப்பா என நினைத்து, வேண்டாம் என்று சொன்னோம்.



எங்களை ஒரு மாதிரி பார்த்த பின்னர், கொல்கத்தா வந்த பிறகு இனிப்பு வேண்டாம் என்று சொன்னால் எப்படி? நிச்சயம் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் எனச் சொன்னதோடு, தானாகவே ஒரு இனிப்பு – கொல்கத்தா ஸ்பெஷல் கொண்டு வருகிறேன் என உள்ளே சென்றார்.  அந்த இனிப்பு ரஸ்குல்லா! ஆனால் நமக்குத் தெரிந்த வெள்ளை ரஸ்குல்லா இல்லை – சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்து செய்யப்பட ரஸ்குல்லா, அதுவும் மண் பாண்டத்தில்!  பெங்காலி நண்பர் சில சமயங்களில் கொல்கத்தாவிலிருந்து வரும்போது இப்படி மட்கா ரஸ்குல்லா வாங்கி வந்ததுண்டு – ஆனால் அவை வெள்ளை ரஸ்குல்லா, இந்த வெல்ல ரஸ்குல்லா அல்ல!

வெல்லம் சேர்த்து செய்த ரஸ்குல்லாவினை உள்ளே தள்ளி, அதிக உணவு உண்ட மயக்கத்தில் சிறிது நடந்து தங்குமிடம் திரும்பினோம்.  உறக்கம் எங்களைத் தழுவ ஆழ்ந்து உறங்கினோம். அடுத்த நாள் கொல்கத்தாவின் சிறப்பிடங்கள் சிலவற்றிற்குப் பயணிக்க வேண்டும்.  தயாராகக் காத்திருங்கள். உங்களையும் அழைத்துச் செல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - பொக்கிஷ ஓவியங்கள் – வரையப்பட்ட வருடம் 1943

 

எனது பதிவுகளில் அவ்வப்போது பழைய தீபாவளி மலர் புத்தகங்களிலிருந்து ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை ”பொக்கிஷம்” என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.  சில மாதங்களாக இந்தப் பொக்கிஷ பகிர்வுகள் வரவில்லை. இன்றைக்கு மீண்டும் ஒரு பொக்கிஷப் பகிர்வாக சில ஓவியங்கள்.  வண்ண ஓவியங்கள் தவிர சில கருப்பு-வெள்ளை ஓவியங்களும் உண்டு…. இதோ ஓவியங்கள்…..

 

ஜல்லிக்கட்டு – 1943-ஆம் வருடத்தின் தீபாவளி மலரின் அட்டைப்படமே ஜல்லிக்கட்டு பற்றிய அட்டைப்படம்! ஒரு காளையை அடக்கும் இளைஞர் அருகே மாலையுடன் காத்திருக்கும் ஒரு யுவதி…..  அந்த அட்டைப்படத்திற்கு விளக்கமும் உண்டு! அது இங்கே……

 படம்-1: ஏறு தழுவுதல்


தூநிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இப்

பூவைப் புது மலராள் – (சிலப்பதிகாரம்)

 

இந்த முரட்டுக் காளையை இப்படி அடக்கித் தழுவிப் பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞனைப் பாருங்கள். இவனுக்குச் சூட்ட வேண்டுமென்று மணமாலையும் கையுமாய் நிற்கும் அந்த அழகியையும் பாருங்கள். இவர்கள் தமிழர்கள் தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆம்; வீரத்திற்கே அழகை உரிமையாக்கிய அந்தப் பழங்காலத்தை நினைப்பூட்டும் ஒரு கல்யாணக் காட்சி இது.

 

வீரப் பரீட்சை செய்து மணமகனைத் தேர்ந்தெடுக்கும் இவ்வழக்கம் அந்தக் காலத்தில் ஆயர் குல மக்களிடையே வேரூன்றி இருந்தது.  மாடுகளே அவர்களுக்குச் செல்வம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஒரு கன்றுக்குட்டியைச் செல்வமாக வளர்ப்பாள். செல்வப் பெயரிடுவாள். தினம் தன் கையால் புல்லூட்டுவாள். விதம் விதமாக சலங்கைகளும் பாசிகளும் சங்கும் கம்பளிக்கயிறும் கட்டி அலங்கரித்து அழகு பார்ப்பாள். அவளுக்கு விவாஹப் பருவம் வரும்போது கன்றுக்குட்டியும் கூடவே வளர்ந்து காளையாகும். ஒருவராலும் அடக்கமுடியாத வீரத்துடன் விளங்கும் அந்தக் காளையை எவன் அடக்குகிறானோ அவனுக்குத் தான் மணமாலை சூட்டுவாள்.

 

ஆயர்குல திலகமாகிய கண்ணனும் இந்த ஆயர்குல வழக்கத்தை அனுசரித்தானாம். நப்பின்னை என்ற கோபிகையின் அழகிலே ஈடுபட்டு, ஏழு காளைகளைத் தழுவி அடக்கி, அதற்குப் பரிசாக அந்த அழகியை மணந்து கொண்டான் என்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

 

இப்பொழுதும் நம் நாட்டில் இந்த வழக்கத்தின் சின்னமாக மாட்டுப் பொங்கலன்றும் அதை அடுத்த சில நாள்களிலும் மாடுகளுக்குக் கரும்பு, துணி முதலியவற்றைக் கட்டி மஞ்ச விரட்டு விடுகிறார்கள். ஆனால் விவாஹம் இதிலிருந்து பிரிந்து போய் விளையாட்டு மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது.

 

இந்நிலையில், ஏறு தழுவுதல் என்ற அந்த பழைய காட்சியையும் கல்யாணத்தையும் சிந்தித்துப் பார்ப்பதே ஊக்கமும் உத்ஸாகமும் தருகிறதல்லவா?

 

அட்டைப் படம் தவிர வேறு ஓவியங்கள் ஜல்லிக்கட்டு பற்றியவை அல்ல! என்றாலும் அழகிய ஓவியங்கள்.  அவையும் இதோ உங்கள் பார்வைக்கு!



படம்-2: இப்படம் ஒரு காவியக் காட்சி.... 


படம்-3: எப்ப வருவாரோ? எந்தன் கலி தீர்க்க.... 


படம்-4: ஒரு இயற்கைக் காட்சி....  


படம்-5: என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? 


படம்-6: ஓய்வெடுக்கும் யாத்ரீகர்கள்.....


படம்-7: வட இந்திய நாட்டியம்.... 


படம்-8: என்ன யோசனை?


படம்-9: எல்லா ரூபாய் நோட்டும் செல்லுமா?.... 


 படம்-10: கண்ணுக்குள் காதல்.... 

என்ன நண்பர்களே, ஓவியங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தனவா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 


நட்புடன்

 

வெங்கட்

புது தில்லி. 

சனி, 28 ஜனவரி, 2017

குமோர்துலி - ஒன்பது நாள் நவராத்ரிக்கு வருடம் முழுக்க உழைப்பு


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 94

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தயாராகும் குமோர்துலி துர்கா பொம்மை....

சங்கு வளையல்கள் செய்யும் இடத்திலிருந்து நாங்கள் வேறொரு இடத்திற்குச் சென்றோம் என்று சென்ற பகுதியில் சொன்னது நினைவிலிருக்கலாம்.  எனது பெங்காலி நண்பர் எங்களை அழைத்துச் சென்ற இடம் வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உறைவிடம். அங்கே நவராத்ரி சமயங்களில் கால் வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம் இருக்கும்.  நாங்கள் சென்ற சமயம் நவராத்ரி சமயம் இல்லை என்றாலும், அப்போதும் அந்த உழைப்பாளிகள் உழைத்துக் கொண்டிருந்தார்கள்.....  அந்த இடம் குமோர்துலி எனும் இடம்...


குமோர்துலி  தெரு ஒன்றில் நடந்தபோது....

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட பொழுது கொல்கத்தா நகரம் தான் அவர்களது தலைநகரம் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். அப்படி அவர்கள் நம்மை ஆண்டுவந்தபோது கொல்கத்தாவின் மக்களின் இருப்பிடங்களை அவர்கள் செய்யும் தொழில் பொறுத்து பெயரிட்டார்களாம். சரக்கு விற்பவர்கள் இருந்த இடம் சூரிபாரா, கோலாதோலா – எண்ணை வியாபாரிகள் இருந்த இடம், சூத்தர்பாரா – மர வேலை செய்யும் தச்சர்கள் இருந்த இடம், அஹீரீதோலா – மாடு மேய்ப்பவர்கள் இருந்த இடம் என ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பெயர்.  அப்படி ஒரு இடம் குமோர்துலி – இந்த இடத்தில் பெரும்பாலும் மண் பாண்டங்கள் செய்பவர்களும், களிமண் கொண்டு பொம்மை செய்பவர்களும் தான் இருந்தார்கள்.


தயாராகும் குமோர்துலி துர்கா பொம்மை....

இப்போதும் இந்த குமோர்துலி பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பொம்மைகள் செய்பவர்கள் தான். மண்பாண்டங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லாத இந்தக் காலத்தில் இவர்களது முக்கிய தொழிலே நவராத்ரி சமயம் கொண்டாடப்படும் துர்கா பூஜாவிற்கான பிரதிமா/பொம்மைகள் தயாரிப்பது தான்.  உலகெங்கிலும் பரவி இருக்கும் பெங்காலிகள் நவராத்ரி சமயத்தில் வெகு விமரிசையாக துர்கா பூஜா கொண்டாடுவது நீங்கள் அறிந்த விஷயம்.  கொல்கத்தாவிலிருந்து இந்த பொம்மைகளை தயாரித்து அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள் இந்த குமோர்துலி கலைஞர்கள். சில கலைஞர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று பொம்மைகள் செய்து தருகிறார்கள்.


வைக்கோலில் தயாராகும் உருவங்கள்....

நாங்கள் சென்றபோதும் இப்படி பொம்மை செய்பவர்களையும், பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்பவர்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாடி… மலைக்க வைக்கும் அவர்களது உழைப்பு, பிரமிக்க வைக்கும் அவர்களது கலைவண்ணம் என ஒவ்வொரு பகுதியிலும் உழைப்பு மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும். பொம்மைகள் செய்வது தவிர, பொம்மைகளுக்கான அலங்காரப் பொருட்கள் செய்பவர்கள், சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் என அப்பகுதி முழுவதும், வருடம் முழுவதும் வேலைகள் நடந்த வண்ணமே இருக்கிறது. 


பொம்மைகள் தயாராகும் இடத்தில்....


பிள்ளையார் பொம்மை....

வருடம் முழுவதும் உழைத்தாலும், நவராத்ரி சமயம் தான் அவர்களது உழைப்பின் பலனை முழுவதுமாக அனுபவிக்க வேண்டிய நேரம்.  மற்ற நேரங்களில் சின்னச் சின்ன பொம்மைகள் போன்றவை விற்று கொஞ்சம் காசு கிடைத்தாலும், நவராத்ரி சமயங்களில் தான் நல்ல பிசினஸ் இங்கே. அப்போது தான் முழுவருடத்திற்கான உழைப்பின் ஊதியத்தினை மொத்தமாகப் பெற முடியும். நாங்கள் சென்றபோது அங்கிருந்து சில பிள்ளையார் பொம்மைகளை வாங்கிக் கொண்டார்கள் கேரள நண்பர்கள். பிள்ளையாரில் தான் எத்தனை வகை பொம்மைகள்!


ஒரு உழைப்பாளி.......


பொம்மைகளின் அலங்காரத்திற்கு.... 

எங்கெங்கு பார்த்தாலும் பொம்மைகள், பொம்மைகள், பொம்மைகள்! ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து பொம்மைகள் தயார் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வைக்கோல் கொண்டு ஒரு பெரிய உருவம் தயாரித்து, ஆங்காங்கே பொம்மைக்கான வடிவங்களைக் கொண்டு வந்து, கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் களிமண் கொண்டு, அந்த வைக்கோல் வடிவங்களில் பூசி, பொம்மைகளை உருவாக்கி, அதைக் காயவைத்து, அதன் பிறகு வண்ணங்கள் பூசுவது, அலங்காரங்கள் செய்வது, ஜிகினாக்கள் கொண்டு அழகு செய்வது, நகைகள் செய்து அணிவிப்பது என ரொம்பவும் நுணுக்கமான வேலைப்பாடு. 


கார்த்திக் எனும் முருகனுக்கு வண்ணப் பூச்சு....

சில உழைப்பாளிகளுடன் ஹிந்தியில் பேசி அவர்களைப் பாராட்ட, வேலை செய்த வண்ணமே நன்றி கூறினார்கள். வாய் மட்டும் எங்களுடன் உரையாடிக்கொண்டிருக்க, வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அக்டோபர் நவம்பரில் வரும் நவராத்ரி தவிர, மார்ச்-ஏப்ரல் மாதம் வரும் வசந்த நவராத்ரி சமயத்திலும் சில பூஜைகள் செய்வதுண்டு. தவிர பெங்காலிகள் மார்ச்-ஏப்ரல் சமயத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அந்த சமயத்திலும், சரஸ்வதி பிரதிமாக்களை வைத்து பூஜிக்கிறார்கள். அதற்கான பிரதிமாவினையும் இந்த குமோர்துலி கலைஞர்கள் தயாரித்துத் தருகிறார்கள். 


லிக்கர் சாய் குடிக்கக் காத்திருந்தபோது....

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் இந்த உழைப்பாளிகளுக்கு வணக்கம் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ஒரு தேநீர் கடையில் மீண்டுமொரு முறை தேநீர் அருந்தினோம். அங்கே இருந்த பெண்மணியிடம் தேநீர் கேட்க, அவர் “லிக்கர் சாய்?” எனக் கேள்வி கேட்க அதிர்ந்து போனோம். அது பற்றி முன்னரே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.  கட்டஞ்சாயைத் தான் பெங்காலிகள் லிக்கர் சாய் என்று சொல்கிறார்கள்!  நானும் கொஞ்சம் லிக்கர் சாய் குடித்து, லிக்கர் அல்ல லிக்கர் சாய் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லி இந்தப் பகுதியை முடிக்கிறேன்! அடுத்த பகுதியில் நாங்கள் சென்ற இடம் எந்த இடம் என்பதைச் சொல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஃப்ரூட் சாலட் 192 – அப்பா – கேட்டாரே ஒரு கேள்வி! – மௌனம் நல்லது!


இந்த வார செய்தி:



வலையுலக நண்பர் ஸ்ரீராம் – “எங்கள் பிளாக்”-இல் எழுதுபவர்களில் ஒருவர் – வலையுலகம் அறிந்த ஒருவரை நான் அறிமுகம் செய்து வைப்பது எனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியுது…. அவர் புத்தாண்டு சமயத்தில் வரும் வருடம் எப்படி இருக்கும், என்ன ஆசைகள் என்று பதிவர்களிடம் கேட்டு பதிவர்களின் எண்ணங்களை அவரது பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.  அப்படி அவர் கேட்ட பதிவர்களில் அடியேனும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி. வலையுலக நண்பர் திரு பரிவை சே. குமார் மற்றும் ரஞ்சனிம்மா ஆகிய இருவரின் சிறந்த கருத்துகளோடு எனது எண்ணங்களும் நேற்று வெளியாகி இருக்கிறது – எங்கள் பிளாக் தளத்தில்…. 


எனது எண்ணங்களையும் அவர்களது தளத்தில் வெளியிட்ட “எங்கள் பிளாக்” நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  படிக்காதவர்கள் படிக்கலாமே…..

இந்த வார குறும்படம்:

சமீபத்தில் பார்த்து வியந்த ஒரு குறும்படம் இது.  பின்னணி இசை மட்டுமே ஒலிக்க, மனிதர்களே இல்லாமல் மிகச் சிறப்பாக அப்பாக்கள் வகிக்கும் முக்கியமான குடும்பப் பொறுப்பைச் சொல்லும் ஒரு குறும்படம் இது.  இந்த குறும்படத்தினை இயக்கியவருக்கு வயது 20 மட்டுமே! அவர் Sara Rozit, எகிப்து நாட்டினைச் சேர்ந்தவர். Luxor Film Festival-இல் இந்தக்குறும்படம் விருது பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.  சிறந்ததோர் குறும்படத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!



இந்த வார முகப்புத்தக இற்றை:

அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்…. - காரணங்கள் இன்றி!




இந்த வார விளம்பரம்:

நம் மக்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம் இலவசம் – யாராவது இலவசமாக எதாவது கொடுக்க மாட்டார்களா என ஏங்குவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது.  ஐந்து ரூபாய்க்கு காய்கறி வாங்கிக் கொண்டு, ”கொஞ்சம் கொத்தமல்லி குடும்மா” என்று கேட்காமல் இருப்பதில்லை.  இப்படி இருப்பவர்களுக்கு “The Free Store” என்று பதாகை வைத்து, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால்…..  பாருங்களேன் என்ன நடக்கிறது என! ஒரு சிலர் இந்தக் காணொளியைப் பார்த்திருக்கலாம் – கொஞ்சம் பழைய காணொளி என்றாலும் பார்க்காதவர்கள் வசதிக்காக இங்கே….



இந்த வார WhatsApp:

கேட்டாரே ஒரு கேள்வி...  



ராஜா காது கழுதைக் காது:

பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தினத்தின் முன் தினம் எங்கள் அலுவலகத்திற்கு மதியம் விடுமுறை! வீட்டுக்குப் போய் தூங்கி இருக்கலாம். அதை விடுத்து நண்பர் பத்மநாபனுடன் தலைநகரின் Central Park – Connaught Place சென்று அங்கே பட்டொளி வீசிப் பிறக்கும் தேசியக் கொடியை படம் எடுத்து கொஞ்சம் “வெய்யில் வாங்கலாம்” என பூங்காவில் அமர்ந்தோம். நிறைய காட்சிகள் பார்க்கக் கிடைத்தன…..  அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். 16 வயது யுவதியும் 17 வயது யுவனும் [அது எப்படி அவங்க Birth Certificate நீ தான் Sign பண்ணியான்னு கேட்கக் கூடாது……] கைகளைக் கோர்த்து நடந்த போது யுவதி பேசியது – ”நான் என்னோட இன்னுமொரு Boy Friend கூட பேசினா உனக்கு ஏன் கோபம் வருது……” 

நல்லா வருவீங்கடே!

இந்த வார புகைப்படம்:

பதஞ்சலி – சொல்லும்போதே இது என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இப்போது அனைத்தும் “பதஞ்சலி” பெயரில் கிடைக்கிறது.  ராம் தேவ் பாபா, பதஞ்சலி நிறுவனத்தின் மூலமாக பள்ளி திறந்தால் குழந்தைகளின் சீறுடை இப்படித்தான் இருக்கும் என்று ஒரு புகைப்படம் பார்க்க நேர்ந்தது....  அந்தப் புகைப்படம்....



Jokes apart…  பதஞ்சலி நிறுவனத்தின் சில பொருட்கள் நன்றாகவே இருக்கிறது….

படித்ததில் பிடித்தது:



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 26 ஜனவரி, 2017

பொங்கும் தேசிய உணர்வு


அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம். 

 தலைநகர் தில்லியின் Central Park-ல்
பட்டொளி வீசிப் பறக்கும் நமது மூவர்ணக் கொடி….

இன்று 26 ஜனவரி – இந்திய குடியரசு தினம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். 

”அது என்னமோ தெரியல, உன்னை நினைச்சு பார்க்கும் போது கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது, ஆனா எழுதணும் நினைச்சா….” குணா கமல் மாதிரி சுதந்திர தினம், குடியரசு தினம் வந்துட்டா போதும் நம் மக்கள் அனைவருக்கும் தேசிய உணர்வு அப்படியே அருவி மாதிரி கொட்டும்…..  அடுத்த நாளே, “Bloody India, என்ன நாடுடா இது…. எங்கப் பார்த்தாலும் குப்பை, ஊழல், எல்லாமே திருட்டுப் பசங்க, யாருமே வேலை செய்யறதில்லை… என்னைத் தவிர மத்தவங்க எல்லாருமே கெட்டவங்க!” என்றும் ”இந்த தேசத்தில் சுதந்திரமே இல்லை” என்றும் பேசுவது வழக்கமாகிவிட்டது – இப்படிப் பேச சுதந்திரம் கொடுத்ததே இந்த இந்திய தேசம் என்பதை மறந்துவிட்டு பேசுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது! 


மகள் வரைந்த பகத் சிங் ஓவியம்…..

எங்கு பார்த்தாலும் தேசிய உணர்வை காட்டிக் கொள்ள நினைக்கும் செய்திகள், எங்கெங்கும் காணொளிகள், முகப்புத்தக இற்றைகள், கட்செவி தகவல்கள் என தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்! அதைப் பார்க்கவே நிறைய நேரம் வேண்டும்! எத்தனை எத்தனை காணொளிகள்! அனைத்தையும் பார்க்க வேண்டுமென்றால் இந்த ஒரு நாள் போதாது!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய இரண்டு தினங்களில் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும், இது நம் தேசம், நம் நாடு, இந்த நாட்டின் முன்னேற்றம் நம் எல்லோருடைய கையிலும் இருக்கிறது, இந்த தேசத்தின் மக்கள் அனைவருமே, இனம், மதம், மொழி கடந்து, அனைவருமே நம் உடைய சொந்தங்கள், “இந்தியன்” என்ற ஒரே ஒரு அடையாளம் மட்டுமே என்ற உணர்வுடன் இருப்போம்….. நமக்குள் எதற்கு வேறுபாடு, சண்டை, சச்சரவு…. அனைவரும் ஒற்றுமையாக இருப்போமே.

எனக்கு வந்ததில் நான் பார்த்ததில் பிடித்த இரண்டு காணொளிகள் இங்கே இணைத்திருக்கிறேன். 







”ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்பதை இப்போதாவது புரிந்து கொள்வோம்…….

ஜெய் ஹிந்த்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.