நண்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம்
சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…
வெளிநாடுகளிடமிருந்து
நம் நாட்டைக் காப்பது போலவே, நம் நாட்டின் இயற்கை வளங்களையும் காக்க வேண்டும்.
இயற்கையை விடவும் பாதுகாக்க, நம்மிடம் வேறு என்ன இருக்கிறது? – ராபர்ட் ரெட்ஃபோர்ட்
பொன்முடி! கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து
1100 மீட்டர் உயரம் கொண்ட மலைவாசஸ்தலம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ள
இந்த ஸ்தலம் வருடம் முழுவதுமே இதமான வெப்ப நிலையை கொண்டுள்ளது. அதனால் எப்போதுமே சுற்றுலா
பயணிகளின் வரவு இருக்குமாம். மலையின் அடிவாரத்தில் ”பெப்பரா வனவிலங்கு சரணாலயம்” அமைந்துள்ளது.
இருட்டுவதற்குள் மேலே சென்று வர வேண்டும் என்பதால், இந்த சரணாலயத்திற்கு செல்ல முடியவில்லை.
மலையின்
பாதி வழியில் GOLDEN VALLEY என்ற இடம் உண்டு. ஒருபுறம் மலைத் தொடர் மறுபுறம் பள்ளத்தாக்கு.
முதலிலேயே தகவல் பலகை நம்மை வரவேற்று எச்சரிக்கிறது. பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக
செல்ல வேண்டும் என்று… படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாசி படர்ந்து இருந்தது.
குட்டீஸ்களை ஆளுக்கொருபுறம் பிடித்துக் கொண்டு, வழியில் தென்பட்ட மரங்களையும், கொடிகளையும்
பார்த்துக் கொண்டு அமைதியான சூழலில் நடக்க ஆரம்பித்தோம். நிச்சயம் ரசிக்க வேண்டிய சூழல்….
பாறைகளின்
ஊடே சலசலத்து ஓடி வரும் ஓடையைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. காலணிகளை ஒருபுறத்தில்
விட்டு விட்டு ஆற்றில் இறங்கினோம். பாறைகள் வழுக்குகின்றது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து
விளையாடினோம். சின்ன பசங்க தான் விளையாடுவாங்களா என்ன! நானும் இவர்களோடு சேர்ந்து கொண்டேன்.
என்னவரும் பிரமோத்தும் எங்களையும் தாண்டி ஆளுக்கொரு புறம் உயரமான பாறைகளை தேர்ந்தெடுத்து
அங்கு நின்று கொண்டு எங்களையும் இயற்கையின் அழகையும் புகைப்படமெடுத்து தள்ளினார்கள்.
தண்ணீரில்
விளையாடிக் கொண்டிருந்தாலும் இவர்களின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தோம்…:) மனமின்றி
அங்கிருந்து கிளம்பி மேலே ஏறுவதற்கு முன் ஊஞ்சல் போலிருந்த மரத்தின் மீது அமர்ந்து
கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அடுத்து நாம் செல்லப் போவது 21 கொண்டை
வளைவுகளை கொண்ட பொன்முடியின் உச்சிக்கு….
பொன்முடியைச்
சுற்றி தேயிலைத் தோட்டங்களும், மரங்களும், செடி கொடிகளும் என என்னே இயற்கையின் பேரழகு!!!
பசுமையின் வனப்பு எங்கும் தென்பட்டது. வரிசையாக கொண்டை ஊசி வளைவுகளையும், வழியில் தென்பட்ட
குரங்குகள், பறவைகள் என ரசித்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய உச்சிக்கு சென்றடையும்
நேரத்தில் வழக்கம் போல் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது :) மழை நின்றதும், ஒருபுறம் சூரியன்
எட்டிப் பார்க்க மறுபுறம் வானவில் தோன்றியது. நல்ல சிலுசிலுவென காற்று வேறு…. கேட்கவா
வேண்டும். புகைப்பட கலைஞருக்கு :)
இங்கு
சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இயற்கையை ரசிக்க காட்டேஜ்கள் உள்ளன. சென்ற முறை பிரமோத்தின்
குடும்பத்தினர் முதல் நாள் பொன்முடியின் உச்சிக்கு வந்து காட்டேஜ் எடுத்து தங்கி சுற்றி
விட்டு மறுநாள் இறங்கும் போது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று விட்டு வந்தார்களாம்.
நமக்கு இந்த முறை நேரம் இல்லை. அடுத்த முறை அது போல் செய்ய வேண்டும்.
உச்சிக்கு
சென்று விட்டோம். காவல் துறையின் வயர்லெஸ் அலுவலகம் இங்கு உள்ளது. மீண்டும் தூறல்.
இங்கு ஒரு இடத்தில் கட்டையால் தடுத்துள்ளனர். வண்டிகள் இந்த தடுப்பைத் தாண்டி செல்ல
அனுமதியில்லை. தடுப்புக்கு அடுத்துள்ள 200 மீட்டர் இடம் தமிழகத்தினுடையதாம். சிறிது
நேரம் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு ரசித்தோம். பின்பு நானும் என்னவரும் மட்டும் ஆளுக்கொரு
குடை சகிதமாக இறங்கி தடுப்புக்கு அப்பால் உள்ள தமிழகத்தின் எல்லை வரை சென்று வந்தோம்.
அதற்கப்பால் வழி இல்லை. பள்ளத்தாக்கு தான். அமைதியான இயற்கை சூழ்நிலையில், சில்லென்ற
காற்று உடனிருக்க, மழைத் தூறல் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் மறக்க முடியாத
அருமையான அனுபவம் :)
இருட்டத்
துவங்கி விட்டதால் அடுத்த முறையும் இங்கு வந்து இரண்டு நாட்களாவது தங்கி இயற்கையின்
அழகை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மனமின்றிக் கிளம்பினோம்.
பொன்முடியில் என்னவரும் நண்பர் ப்ரமோத்-உம் எடுத்த படங்கள் சில இங்கே ஒரு நிழற்பட
உலாவாக…
நண்பர்களே,
இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
பின்குறிப்பு: கோவை2தில்லி தளத்தில் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து
தகவல்கள் – படங்கள் மட்டும் புதிதாக!