தொகுப்புகள்

செவ்வாய், 8 நவம்பர், 2022

பசுமை காப்போம்! - சிறுகதை - ஆதி வெங்கட்

 



அப்பாவும் மகனுமா எங்க தான் போனீங்க?


காய்கறி வாங்கிட்டு வரதுக்கு  இவ்வளவு நேரமா? என்றாள் கோதை.


அது ஒண்ணும் இல்லம்மா! இன்னிக்கு லீவு நாளாச்சே! வண்டிய எடுக்காம ஒரு வாக்கிங் மாதிரி போயிட்டு வரலாமேன்னு ஹரீஷையும் அழைச்சிட்டு பொறுமையா போயிட்டு வந்தேன். என்றார் கேசவன்!


அப்பாவும் நானும் அப்படியே பேசிட்டு வந்தோமா! அதான் நேரம் போனதே தெரியலம்மா! என்றான் ஹரீஷ்!


சரி! சரி! நேரமாயிட்டே இருக்கு! ரெண்டு பேரும் போய் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க! டிஃபன் எடுத்து வெக்கறேன் என்ன!


இருவரும் இதோ வந்துடறோம் என்று சொல்லிச் சென்றார்கள்!


குளித்து விட்டு வந்த இருவருக்கும் டைனிங் டேபிளில் டிஃபனை எடுத்து வைத்து பரிமாறத் துவங்கினாள் கோதை!


ஆமா..! அப்படி என்ன நேரம் போனதே தெரியாம ரெண்டு பேரும் பேசிட்டு வந்தீங்க? சொன்னா நானும் தெரிஞ்சிப்பேனே! 


இட்லியை பரிமாறிக் கொண்டே பேச்சைத் துவக்கினாள் கோதை!


பாருடா ஹரீஷ்! உங்கம்மாக்கு நாம என்ன பேசிட்டு வந்தோம்னு தெரிஞ்சுக்காம மண்ட வெடிச்சுப் போயிடும் போலிருக்கு…:)) என்று சொல்லி சிரித்தார் கேசவன்.


கணவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, "கலாட்டா செஞ்சது போதும்! முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க!" என்றாள்.


அது வேற ஒண்ணுமில்ல கோத! எதிர்காலத்துல இப்படியெல்லாம் கூட நடக்கலாம்னு சில விஷயங்கள இவன் கிட்ட சொல்லிட்டு வந்தேன்! என்றார்.


கொஞ்சம் புரியறா மாதிரி தான் சொல்லுங்களேன்! என்றாள் கோதை.


சரி! நீயும் எங்களோட உட்காந்து சாப்பிடு!! சாப்ட்டுட்டே கேளேன்! என்றார் கேசவன்.


கோதையும் இவர்களோடு அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்!


கேசவன் விஷயத்தை ஆரம்பித்தார்! "அதாவது எல்லாரும் இடம் வாங்கி வீடு கட்டியோ இல்லன்னா அபார்ட்மெண்ட் வீடாகவோ வாங்கிக் கொண்டே வராங்க இல்லையா!  ஏன்னா எல்லாருக்கும் தனக்குன்னு வசிக்க ஒரு வீடு வேணும்!


இப்படி வீடுகள் நிறைய வர ஆரம்பிக்கும் போது அதுக்கான இடத்துக்காக வயல்வெளிகளும் தோப்புகளும் அழிஞ்சிட்டே வருதா? என்று கேட்டார் கேசவன்!


ஆமாங்க! அது தான் தெரியுமே! இதில என்ன புதுசா சொல்லப் போறீங்க? என்று சொன்னாள் கோதை!


"கொஞ்சம் பொறுமையா கேளேன் மா"! என்று நிதானத்துடன் சொல்லத் துவங்கினார் கேசவன்!


அப்படி வயல்வெளிகளும், தோப்புகளும் அழிஞ்சுட்டு வரதால இன்னும் வரப்போகிற காலத்துல பயிரிட இடமும் கூட இருக்காது! இந்த விஷயம் மனுஷங்கள மட்டும் பாதிக்கப் போறது இல்ல! நம்மளோட சேர்ந்து ஆடு மாடு மாதிரி ஜீவராசிகளும் தான் கஷ்டப்படும்! 


என்று கேசவன் சொன்னதும்…


நம்ம சரிங்க! ஆடு மாடுங்களுக்கு என்ன பாதிப்பு வரும்னு சொல்றீங்க? என்று குழப்பத்துடன் வினா எழுப்பினாள் கோதை.


அப்பா! இதப்பத்தி நான் வேணா அம்மாட்ட சொல்றேன்ப்பா! என்று முன் வந்தான் ஹரீஷ்!


சரி! சொல்லுடா! உன்ன மாதிரி சின்ன பசங்களுக்கு தான் இந்த விஷயத்தோட தீவிரத்தை பத்தி முழுசாப் புரியணும்! என்றார் கேசவன்!


அது வந்தும்மா! பயிரிட இடம் கூட இல்லன்னா நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது? அதே மாதிரி ஆடு மாடுங்களெல்லாம் மேய்ச்சலுக்கு எங்க போகும்? இலை தழையெல்லாம் கூட கிடைக்காமயே போகலாம்! அப்புறம் அதுங்க சாப்பாட்டுக்கு என்ன வழி?? என்றான் ஹரீஷ்!


என்னங்க ரெண்டு பேரும் என்னென்னவோ சொல்றீங்க! பயமா இருக்கேங்க? என்று பரிதவித்தாள் கோதை!


ஆமாம்மா! இயற்கைய அழிச்சிட்டே வரதால ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருக்கிற நம்ம வாழ்க்கை முறையும் கூட இல்ல மாறிப் போயிடும்!


அப்புறம் சாப்பாட்டுக்கு பதில் மூணு வேளையும் டேப்லட் தான் சாப்பிட வேண்டியிருக்கும்! என்றார் கேசவன்!


இதுக்கு நாம என்ன தாங்க செய்ய முடியும்?? என்று கேட்டாள் கோதை!


இதை தனி மனுஷனால் ஒண்ணும் செய்ய முடியாதும்மா! ஒவ்வொருத்தரும் தன் வீட்டை சுத்தி கட்டாயமா தோட்டம் போடணும்! இல்லைன்னா மாடித் தோட்டம் கூட போடலாம்! வீட்டை சுத்தி மரங்களை நட்டு வெக்கலாம்! 


நம்ம இளைய தலைமுறைக்கு விவசாயம் கத்துக் குடுக்கணும்! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்! இப்படி ஒவ்வொருத்தரும் கொஞ்சம் பொதுநலத்த மனசுல வெச்சுப் பார்த்து தான் செயல்படணும்மா! அப்போ தான் வரும் தலைமுறைகளுக்கு நாம எதையாவது விட்டுட்டுப் போகலாம்! என்று சொல்லி முடித்தார் கேசவன்!


ஆமாங்க! நீங்க சொல்றது வாஸ்தவம் தான்! எல்லாரும் இப்படி நினைக்க ஆரம்பிக்கணும்! என்றாள் கோதை!


பசுமை காப்போம்! 

பயிரிட்டு வளர்ப்போம்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

திங்கள், 7 நவம்பர், 2022

யாரிவள் - 102 - அம்மாவாக…! - ஆதி வெங்கட்

 










உயரிய பதவியும், பொறுப்பும் கொண்டதால் எந்நேரமும் குடும்பத்தைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் மட்டுமே சிந்தனைகள் அவளுக்கு இருக்கும்! இந்தப் பதவி அவளுக்கு கிடைத்த பிறகு அந்தப் பதவியே அவளுக்கு உலகம் என்றாகி விடும்! அவளுக்கென்று தனிப்பட்ட நேரங்கள் என்பதே இல்லாமல் போய்விடும்! அவள் அதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை! அவளே நம் அம்மா!!!


வருடங்கள் கடந்து செல்ல இவளின் மகளும் வளர்ந்து இப்போது பதின்ம பருவத்துக்கு வந்திருந்தாள்! ஒவ்வொரு பருவத்திலும் அவளுக்குத் தேவையான சிந்தனைகளை சொல்லி வளர்ப்பதும், இந்த சமுதாயத்தில் அவள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் நல்லது கெட்டது என்று எல்லாவற்றையும் சொல்லித் தந்தாள்!


அம்மாவாக அவளை எப்போதும் பாதுகாக்கவே நினைத்தாள்! மகள் பள்ளியிலிருந்து வர சற்றே தாமதமானாலும் மனது படபடக்கத் துவங்கி விடும் இவளுக்கு! கடிகாரத்தைப் பார்ப்பதும், வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதும், பள்ளிக்கு அழைத்து விசாரிப்பதும், இல்லையென்றால் இவளே பள்ளிக்குச் சென்று பார்க்க இறங்குவதுமாக இருப்பாள்!


அப்போது இவளுக்கு வேறு எந்த வேலையிலுமே கவனம் செல்லாது! மனதில் குழப்பங்களும், கவலையும் சூழ்ந்து கொள்ள சொல்ல இயலாத வண்ணம் இருப்பாள்! அன்றாடம் ஏதேதோ செய்திகளை பார்க்கிறோமே! கேட்கிறோமே! கடவுளே இந்தக் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக்கூடாதே! என்று பரிதவிப்பாள்!


இவளின் சிறுபிராயத்தில் இவளது அம்மாவும் இப்படித்தானே பரிதவித்திருப்பாள்! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை! என்று சொல்வது போல் அம்மா எப்போதுமே தன் துயரங்களை தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் தான் முறையிடுவாள்! சண்டையிடுவாள்! புலம்புவாள்!


எல்லாவற்றுக்கும் காணிக்கை எடுத்து வைத்து பிரார்த்தித்துக் கொள்வாள்! இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவள், 'எதற்கெல்லாம் தான் பாவம் அந்தப் பிள்ளையார் ஹெல்ப் பண்ணுவார்' 'வடாம் போட்டிருக்கிறதால இன்னைக்கு மழை வேண்டாம்னு பிரார்த்தனை பண்ற! இது உனக்கே ஓவரா இல்லயாம்மா! என்பாள்!


அப்பா வர லேட்டானா கரண்டிய தண்ணில போடற! என்னம்மா இதெல்லாம்! நீ ரொம்ப பயப்படற! வெளில போனா வர வேண்டாமா! முன்ன பின்ன தான் ஆகும்னு தெரியாதா! என்றெல்லாம் அப்போது இவள் அம்மாவை கேலி செய்ததுண்டு! அப்போதெல்லாம் அம்மா சொல்வாள், 'என்ன மாதிரி நீயும் ஒருநாள் அம்மாவா ஆனா தான் தெரியும்டீ! என்று!


இதோ அம்மாவின் நிலை தான் இவளுக்கு இப்போது ஏற்படுகிறது! அம்மாவின் நிலையை, அவளின் பரிதவிப்பை இப்போது உணர முடிந்தது! ஆமாம்மா! இது ரொம்பவே கஷ்டமா இருக்கு! அப்போ நீ எப்படி ஃபீல் பண்ணிருப்பன்னு இப்போ நான் புரிஞ்சுண்டேன்! என்று அம்மாவிடம் மானசீகமாய் பேசிக் கொண்டாள்! ஆனால் இவளைப் போல் அம்மா கேலி செய்ய மாட்டாள்!


நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

யாரிவள் - 101 - திகிலும்! தெய்வீகமும்! - ஆதி வெங்கட்









புதிய சூழலில் புதிதான அறிமுகங்களுடன் நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது! மாலையில் மொட்டைமாடியில் எட்டு நடை போடத் துவங்கினாள்! இப்படியே இருந்தால் எப்படி!! ஆரோக்கியத்தின் மீதும் சற்று கவனமாக இருக்கணும் என்று நினைக்கத் துவங்கினாள்!
நடையை முடித்து விட்டு அங்கேயே இருக்கையில் அமர்ந்து தோழியுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பாள்!


அப்போதெல்லாம் இதமான காற்றில் நாசியை துளைத்த நாகலிங்கப் பூவின் மணமும், கண்ணுக்கு குளிர்ச்சியாக எதிரே உள்ள தென்னந்தோப்புகளும், ஆதவனின் அஸ்தமனக் காட்சியும் என ஒவ்வொரு நாளும் மனதிற்கு இதத்தை தந்தது! நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்தது! நடப்பதெல்லாம் நன்மைக்கே!


மாலை 6:30 மணி ஆகிவிட்டால் போதும் அன்றாடம் அருகில் உள்ள தோப்பிலிருந்து பெரும் படை ஒன்று பறக்கத் துவங்கி விடும்! என்ன அது! தினமும் இதே நேரத்தில் பறக்கின்றதே??? ஆமாம்! அன்றொரு நாள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்த போது இந்த இடத்திற்கான அடையாளமாக அந்த ஓட்டுனர் கூட இந்த இடத்தைப் பற்றி சொல்லியிருந்தது இவளுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது!


ஒருநாள் பகல் நேரத்தில் போய் பார்க்கச் சொன்னாரே!!! சக்தி வாய்ந்த இடம் என்றும் சொன்னார்! இதைப் பற்றி தோழியிடம் சொன்ன போது அவருக்கும் இதில் ஆர்வமிருக்கவே இருவரும் ஒருநாள் காலைநேரத்தில் கிளம்பி விட்டார்கள். அன்று தை வெள்ளிக்கிழமை! கையில் அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் செல்ல பாலும், பூஜைக்கான பொருட்களும் இருந்தது!


முதலில் இங்கே என்ன தான் இருக்கிறது! என்று பார்த்து விடுவோம் என்று அந்தத் தோப்பை நோக்கிச் சென்றார்கள்! புதிதாக குடியிருப்புகள் உருவாகத் தொடங்கியிருந்த இடம் என்பதால் ஜன சந்தடியும் இல்லை! காற்றும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது! கொஞ்சம் திக் திக் என்று தான் இருந்தது இவளுக்கு!!


அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த இந்த இடத்தின் காவல் தெய்வமான அம்பாளும், பெரும் மரம் ஒன்றின் ஒவ்வொரு இலையிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பழம் தின்னி வெளவால்களும், அருகிலேயே பாம்பு புற்று ஒன்றும் தான் அமைந்திருந்தது!


இவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே பூசாரியும், பகுதி மக்கள் சிலரும் கூட வந்து சேர்ந்து விட, மனதிற்கு சற்று தெம்பு கிடைத்த உணர்வு அவளுக்கு! பூஜைக்கான பொருட்களை பூசாரியிடம் கொடுக்க அவர் அம்பாளுக்கும் அருகில் இருந்த பப்பாளி மரத்திற்கும் தீபாராதனை காண்பித்தார்! கொண்டு வந்த பாலை பாம்பு புற்றுக்கு விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்!


இங்கு இந்த வெளவால்களை யாரும் துன்புறுத்துவதில்லை! தெய்வாம்சமாக நினைக்கிறார்கள். மாலைநேரத்தில் இரை தேடிச் செல்லும் வெளவால்கள் எப்போது திரும்புகிறது என்று தெரியவில்லை! இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு! மாலை நேரங்களில் பெரும் படை ஒன்று வானில் தெரிந்தால் மணி சரியாக 6:30 என்று சொல்லி விடலாம்!


இந்த மண்ணில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே இல்லை! அவற்றை போற்றி பாதுகாப்போம்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

சனி, 5 நவம்பர், 2022

யாரிவள் - 100


100 ரூபாய் குடித்தனம்!




மனதிற்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போனால் அது எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொண்டேயிருக்கும்! எத்தனை வேலைகளை நாம் செய்து கொண்டிருந்தாலும் மனம் ஒருபுறம் ஆழ்ந்த யோசனைக்கு சென்று அதன் பணியை செய்து கொண்டிருக்கும்! மனதை அடக்குவது என்பது தவயோகிகளுக்கே உரித்தானது! 


சிறுவயதிலிருந்தே அவளுக்கு ஒரு புதுவிதமான மனோபாவம் உண்டு! அந்த மாதிரி இருப்பது என்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்! அவ்வப்போது இந்த மாதிரி எண்ணங்கள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும்! யாராவது இப்படியிருக்க நினைப்பார்களா என்பதே சந்தேகம் தான்! என்ன அது???


அதாவது கையிருப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது! இதை வைத்து தான் மீதியுள்ள நாட்களை கடத்த வேண்டும்! இவ்வளவு மளிகைப் பொருட்கள் தான் உள்ளது! இதை வைத்து தான் சமைக்க வேண்டும்! இந்த பைசாவில் தான் சந்தையில் காய்கறிகள் வாங்கி வர வேண்டும்! என்பது போன்ற நியதிகள் இருக்குமானால் அப்போது எப்படி உணர்வீர்கள்???


பொதுவாகப் பார்த்தால் இவை எரிச்சலையும், சங்கடத்தையும் தான் தரும்! இல்லையா! ஆனால் அவளுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகள் ஒருவித ஆர்வத்தையும், உற்சாகத்தையும்  ஏற்படுத்தும் என்று சொன்னால் மிகுந்த ஆச்சரியமாகத் தான் இருக்கும்! ஆம்! அவள் அப்படித்தான்!!


சில நாட்களாக அவளின் மனதில் தோன்றிக் கொண்டிருந்த ஒரு எண்ணம் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது! அதாவது ஒருவருக்கு தினமும் 100ரூ தான் வருவாய் கிடைக்குமானால் அதை வைத்து குடித்தனம் செய்ய இயலுமா?? என்று சிந்திக்கத் துவங்கினாள்! ஏன் இந்த எண்ணம் அவளுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை!!! 


இன்றைய காலகட்டத்தில் 100 ரூபாய் என்பது சாதாரண விஷயம்! அப்படியிருக்க அன்றைய பொழுதில் கிடைக்கும் வருவாய்க்கு தகுந்தாற் போல் வேண்டியவற்றை வாங்கி உண்டு சுகமாக வாழ முடியுமா? வாழ்க்கைத் தரத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியுமா?? முடியும் என்று தான் அவளுக்குத் தோன்றியது! 


இதுபோன்ற சிந்தனைகள் அவளிடம் இருக்கும் தன்னம்பிக்கையால் ஏற்படுகிறதா? சிறுவயதிலிருந்து  வாழ்வில் அவள் கடந்து வந்த நிகழ்வுகளால் இப்படி தோன்றுகிறதா? என்பது தெரியவில்லை! வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது போல் மனதிற்கும் அடுத்த கட்டம் என்பது உண்டா??


வயது ஏறிக் கொண்டே வருவதில் அவளின் மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கு பஞ்சமே இல்லை! அவள் ஒன்றும் இப்போது குட்டிப்பெண் அல்லவே! குடும்பத் தலைவி! மனைவியாகவும், அம்மாவாகவும் அவளுக்கென்று செய்ய வேண்டிய கடமைகள் இருந்தாலும் பற்றுகள் அற்று இருக்கவே விரும்பினாள்! மனமும் அதை நோக்கித் தான் பயணிக்கிறது!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.


பின் குறிப்பு - யாரிவள் தொடரின் 100வது பகுதி இன்று! இதுவரை இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 


#யாரிவள்

வெள்ளி, 4 நவம்பர், 2022

யாரிவள் - 99



 

பண்டிகைகளும் பாரம்பரியமும்!





நம் மனதில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கும் பண்டிகை கொண்டாட்டங்களில் மெனக்கெடுதல் என்பது மிகவும் முக்கியமானது! உழைப்பும், நிதானமும், கவனமும் எனச் செய்யும் வேலையில் முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டால் தான் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்!

அவளும் திருமணமாகி தனக்கென்று ஒரு வாழ்வும், பிடிமானமும் உருவாகியது முதலாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், தனக்கு தெரிந்த விதத்திலும் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டும் பாரம்பரியம் குறையாத வண்ணம் செய்து கொண்டு வந்தாள்! பாரம்பரியமாக கடைபிடிக்கும் விஷயங்களை முழுவதுமாக செய்ய இயலாமல் போகும் போது கவலையும் கொள்வாள்!

அப்போதெல்லாம் அம்மா, அப்பாவோடு கொண்டாடிய பண்டிகைகளை நினைத்து பார்த்துக் கொள்வாள்! பணத் தட்டுப்பாடு இருந்தாலும் அம்மா பண்டிகைகளில் என்றுமே குறை வைத்ததே இல்லை! தீபாவளிக்கு குறைந்தபட்சம் மூன்று விதமான இனிப்புகளாவது செய்வாள். அதனுடன் தேன்குழல், மிக்சர் என்று வீடே அமர்களப்படும்! இதுபோக முதல் நாள் இரவு குலாப்ஜாமூன் வேறு செய்து ஜீராவில் மிதக்க விடுவாள்!

அம்மாவுக்கு எப்போதுமே சிறிதளவு செய்தெல்லாம் பழக்கமே இல்லை! பத்து பதினைந்து நாட்களாவது குழந்தைகள் சாப்பிடட்டுமே என்று நினைத்து நிறைய தான் செய்வாள்! அதோடு உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கொடுத்து விடுவாள்! அம்மாவின் கைப்பக்குவத்தில் அத்தனையும் ஜோராக இருக்கும்!

பள்ளியிலிருந்து வந்ததும் அம்மா இன்னிக்கு என்னென்ன சாப்பிடத் தருவாள்? என்ற ஆவலுடன் தான் காத்திருப்பாள் இவள்! ஏனென்றால் வீட்டில் தான் நிறைய பட்சணங்கள் இருக்கிறதே என்பதற்காக எல்லாவற்றையும் சாப்பிட முடியாது! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இனிப்புடன் கொஞ்சமாக காரமும் சேர்த்து அம்மா தருவது தான்! 'எனக்கு இன்னும் ஒண்ணு வேணும்' என்று கேட்டாலும் கிடைக்காது!



மலரும் நினைவுகளை அசை போட்ட படியே இப்போதுள்ள புதிய சூழலிலும் ஒவ்வொரு பண்டிகையிலும் அம்மா பின்பற்றிய வழக்கத்தை நினைத்துக் கொண்டு செய்வாள்! அம்மாவைப் போல் இல்லையென்றாலும் அவளது மகளாக நான் பாதியாவது செய்ய வேண்டாமா!! இதோ அடுத்து என் மகளும் இருக்கிறாளே! அவளுக்கு நம் பாரம்பரியம் புரிய வேண்டாமா!

அம்மா பண்ணும் போதெல்லாம் குட்டிப்பெண்ணாக கூட இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! அவளுக்கு சிறு சிறு உதவிகளும் செய்து தருவேன்! இப்படித் தான் எனக்கு ஆர்வம் உண்டானது! அப்படி மகளுக்கும் ஆர்வம் ஏற்படணும்! என்று பலவாறு சிந்திப்பாள்! மகளாக இருந்த காலங்கள் மறைந்து விட அம்மாவாக மகளை நல்லவிதமாக வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு இருந்தது!

வாழ்வின் ஓட்டத்தில் இவளுக்கு கிடைத்த பலவித அனுபவங்களால் பக்குவம் ஏற்பட்டதைப் போல் அவளுக்கும் பொறுப்பும், பக்குவமும் ஏற்படணும்! சமுதாயத்தில் நல்லதொரு பெண்மணியாக திகழணும்! இனி! இவளின் வாழ்க்கையில் மகளே பெரும்பங்கு வகிக்கப் போகிறாள்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

வியாழன், 3 நவம்பர், 2022

புன்னகை! (சிறுகதை)



குருவி சேக்கறாப்ல காசு சேத்து கொண்டாந்துருக்கோம் தாயி! எங்க பாப்பாவுக்கு ஒரு சோடி வாங்கலாம்னு! என்றார்கள் கிராமத்திலிருந்து வந்திருந்த அந்த தம்பதிகள்.

உட்காருங்கம்மா! உட்காருங்க சார்! என்றாள் சிந்து!

சிந்து பிரபல நகைக்கடை ஒன்றில் பணிபுரிகிறாள்! புன்னகை ததும்ப அன்றாடம் இப்படி பலதரப்பட்ட மனிதர்களிடம் பேச வேண்டிய வேலை அவளுக்கு!

வளையல் எத்தன பவுன்ல பார்க்கறீங்கம்மா! என்றாள்.

நீயே சொல்லும்மா? எத்தன பவுன்ல வாங்கினா நல்லாருக்கும்?

மூணு பவுன்ல பாக்கறீங்களாம்மா? பார்க்கவும் நல்லாருக்கும்! அவ்வளவு சீக்கிரமா நசுங்காது!

அப்படியா!! சரிம்மா அப்போ மூணு பவுன்லயே காட்டு!

இதோ பாருங்கம்மா! உங்க பாப்பாக்கு இந்த வளையல் நல்லாருக்கும்! என்று சிலவற்றை பரிந்துரை செய்தாள்!

இப்ப பாப்பா என்ன படிக்கிறாங்க? என்று கேட்டாள் சிந்து!

பத்தாம் கிளாஸ்ம்மா! அது கண்ணாலத்துக்கு தான் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி சேக்கறோம்! அப்போ தானே நம்மால பண்ண முடியும்!

அப்படியா! சரி! சரி! இந்த டிசைன்லாம் பாருங்க! இதுல சேதாரமும் கம்மியா தான் இருக்கும்! பாப்பா தினசரி கையோட போட்டுட்டும் இருக்கலாம்!

சரிம்மா!

இந்த ரெண்டு டிசைன்ல இது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு! இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு ஆகுதுன்னு பார்த்து சொல்லும்மா!

இதோ பார்க்கிறேன்! என்று சொல்லி கணக்கிட்டாள்! அதுவரைக்கும் நீங்க காஃபி குடிச்சிட்டு இருங்க!

அதே நேரத்தில் பார்க்க வசதியான குடும்பம் ஒன்றிலிருந்து அதே செக்‌ஷனில் வளையல் பார்க்க வந்திருந்தார்கள்! அவர்களும் அவர்கள் மகளுக்காக தான் வந்திருந்தார்கள்.

கணவன், மனைவி மற்றும் அவர்களுடன் பதினைந்து வயது மதிக்கத்தக்க மகளும் வந்திருந்தாள்.

எத்தன பவுன்ல பார்க்கறீங்க மேம்?

நல்ல கனமா 10 பவுன்ல காட்டும்மா!

எங்க பொண்ணு போட்டுட்டு இருக்கிறத பார்த்து அவ கல்யாணம் பண்ணிட்டு போற குடும்பத்துல எல்லாரும் அசந்து போகணும் என்றார் கணவர்.

அப்படிங்களா! கடா டைப் மாதிரி காட்டறேன் சார்! பாப்பா கைக்கு அது அழகா இருக்கும்!

சில மாடல்களை எடுத்துக் காண்பித்தாள்! கணவனும் மனைவியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க…

சார் நீங்க பார்த்துட்டு இருங்க! என்று சொல்லி விட்டு அருகில் அமர்ந்து மூணு பவுன் வளையலுக்கான தொகையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கிராமத்து தம்பதிகளிடம் பில்லைத் தயார் செய்து கொடுத்து பணத்தை கட்டி விடச் சொன்னாள்.

அடுத்து பத்து பவுனில் வளையல்களை காண்பித்துக் கொண்டிருந்த வசதியான குடும்பத்தவர்களிடம்….

பார்த்துட்டீங்களா சார்! செலக்ட் பண்ணதுக்கு பில் போட்டுடலாங்களா! ஜி.எஸ்.டியோட அமெளண்ட் இவ்வளவு வருது சார்! பே பண்ணிடுங்க! நான் பேக் பண்ணித் தரேன் என்றாள்.

அவர்கள் பணம் செலுத்தி விட்டு வந்ததும்…

இந்தாம்மா! ஆல் தி பெஸ்ட்! அப்பாக்கு எவ்வளவு சந்தோஷம் பாரு! நல்லாப் படி! என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள்!

அடுத்து கிராமத்து தம்பதிகளிடம்…

சார்! இந்தாங்க உங்க பாப்பாக்கு மேலும் மேலும் நிறைய வாங்குவீங்க! ரொம்ப நன்றி! என்றாள்.

அன்றாடம் இப்படி விதவிதமான மனிதர்களை பார்த்துப் பழகும் சிந்துவுக்கு 28 வயதாகிறது! அறிவும், அழகும் நிறைந்த பெண்ணாக வலம் வரும் இவளின் வாழ்வை சற்றே பார்வையிடுவோம்!

அதிகாலையில் எழுந்து அரக்கபரக்க வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு, வயதான பெற்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்து விட்டு பேருந்தைப் பிடித்து வேலைக்கு வந்துவிடுவாள்.

இவளின் வருமானத்தில் தான் அந்தக் குடும்பம் நடைபெறுகிறது! மிடுக்கான உடையிலும் புன்னகை ததும்பும் பேச்சாலும் இங்கு நகை வாங்க வரும் குடும்பங்களுக்கு ஏற்றாற் போல் பேசும் இவளின் வாழ்வில் புன்னகையைத் தவிர வேறு நகை இல்லை!

மகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் சிறுகச் சிறுக சேமித்து நகைகளை வாங்குவதைப் பார்க்கும் போது இவளின் மனதில் ஏக்கம் உண்டாகும்! இவளுக்கு இப்படியெல்லாம் வாங்கிக் கொடுக்கவோ எடுத்துச் செய்யவோ யாருமில்லை!

நம்பிக்கை என்னும் ஆபரணத்தை மட்டும் அணிந்து கொண்டு பம்பரமாக சுழன்று புன்னகையுடன் பணிபுரியும் அவளுக்கென்று அழகான ஒரு வாழ்க்கை விரைவில் அமையத் தான் போகிறது! நாமும் அவளுக்காக பிரார்த்தித்துக் கொள்வோம்!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.



பட உதவி - கூகுள்

புதன், 2 நவம்பர், 2022

யாரிவள் - 98 சுகந்தமான சூழல்!





 

மனதில் மகிழ்ச்சி கொள்ள பெரிதாக ஏதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சின்னச் சின்ன விஷயங்களும் கூட மனதில் மாற்றத்தை உருவாக்கும்! திடீரென ஒரு உற்சாகமும், சந்தோஷமும் ஏற்பட்டு விடும்! அது மற்றவர்களுக்கு மிகவும் சாதாரணமாகக் கூடத் தோன்றலாம்!

 

அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. புதிய ஒரு சூழலில் முன் அறிமுகமே இல்லாமல் புதிதாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களிடம் ஏற்படும் நட்பு, புத்தம் புதிதான வீட்டை அழுக்கு ஏற்படாமல் பராமரிக்கும் வேலை என்று தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டாள். அதனால் அவளின் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாயிற்று!

 

வீட்டை விட்டு இறங்கி கீழே வந்தால் அப்படியொரு சுகந்தமான மணம்! வீசும் காற்றில் அந்தச் சூழலையே சுகந்தமாக்கியது. காரணம் அருகில் பெரிய நாகலிங்க மரம் அமைந்திருந்தது! பல சிறப்புகள் பெற்றது இந்த மரம்! இதன் பூ லிங்கத்திற்கு நாகர் குடைபிடித்தது போன்ற அமைப்புக் கொண்டது! சிவ வழிபாட்டிற்கு உகந்தது!

 

சுற்றுப்புறத்தில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது இந்த மரம்! இந்த மரத்தின் இலை, பட்டை இவை கூட சித்த வைத்தியத்திற்கு பயன்படுகிறது! இந்த மரத்தில் உள்ள பூக்களும் எட்டிப் பறிக்கும் உயரத்திலேயே இருந்ததால் அவ்வப்போது தோழியுடன் சேர்ந்து சென்று பறித்து வந்து வீட்டு பூஜைக்கும், கோவிலுக்கும் எடுத்துச் சென்று தரும் வழக்கத்தை வைத்திருந்தாள்!

 

இந்தப் பூவை பார்க்கும் போது கோவையில் பள்ளிநாட்களில் பள்ளி விட்டு வீடு திரும்பும் வழியில் குறிப்பிட்ட சாலையில் விழுந்து கிடக்கும் பூக்களை அம்மாவிடம் கொண்டு கொடுத்த ஞாபகம் ஏற்பட்டது. வியாழனன்று பள்ளிக்கு கிளம்பும் போது ஒரு கவர் எடுத்துச் சென்று வீடு திரும்பும் போது அரளி மொட்டுகளும், செம்பருத்தி மொட்டுகளும் எடுத்து வந்து அம்மாவிடம் தருவாள்!

 

அம்மா அதைத் தண்ணீரில் போட்டு வைத்து மறுநாள் மலர்ந்த பிறகு பூஜைக்கு பயன்படுத்திக் கொள்வாள். இந்த சுகந்தமான மணமும், அழகிய பூவும் அம்மாவுடனான நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டது! அம்மா எனும் அருமையான மனுஷியால் எத்தனை விதமான அழகிய உணர்வுகளையும், அனுபவங்களையும் பெற்றோம் என்று நினைத்தாள்!!

 

அதிவேகமாக குடியிருப்புகள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் இந்த நாளில் இந்த மரம் இன்னும் எத்தனை நாட்கள் நம்மருகில் இருக்குமோ! சுகந்தத்தை பரப்புமோ! என் அம்மாவைப் போன்று நீயும் என்னை விட்டு சென்று விடுவாயா!! போன்ற எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தது அவளுக்கு!

 

இந்த உயர்ந்த மரமும் சிறிது காலத்துக்குப் பின் பட்டுப் போய் மீண்டும் ஒரு மழையில் துளிர்த்தது! அருகில் புதிதாக ஒரு மரமும் வந்தது! ஆனால் ஏனோ முன்பு போல் அந்த சுகந்தத்தை இப்போது உணர முடியவில்லை! காரணம் பெருகி விட்ட வீடுகளும், மனிதர்களும் என புரிந்து கொள்ள முடிந்தது!

 

இதுவும் கடந்து போகும்!

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

 

#யாரிவள்