அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ஒவ்வொரு முறையும் பதிவு எழுதும் போது இது தான் கடைசி பதிவு என்ற நிலையிலேயே தற்போதெல்லாம் எழுதுகிறேன். சூழல் அப்படி அமைந்து விடுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில நாட்களாகத்தான் தினம் தினம் பதிவுகள் எழுதி/வெளியிட்டு வருகிறேன். ஆனால் சில நாட்களாக பதிவுகள் schedule செய்து வைக்க முடியாமல் தடை ஏற்பட்டு இருக்கிறது. அலுவலகச் சூழல்கள், வீட்டுச் சூழல்கள் என மாற்றி மாற்றி எனது அன்றாட நிகழ்வுகளை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பாதை எங்கே என்னை அழைத்துச் செல்லும் என்பதை புரிந்து கொள்ள முடியாத சூழலில் தான் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. சுழற்றிச் சுழற்றி அடித்தாலும் நானும் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் சில சமயங்களில் வெறுப்பு மட்டுமே மிச்சம் இருக்கிறது. “அட என்னடா வாழ்க்கை இது!” என்ற வெறுப்பு வந்து விடுகிறது. பொதுவாக எல்லா சிக்கலான சூழல்களையும் கடந்து வந்திருக்கிறேன் என்றாலும் சில சமயங்களில் “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்கிற கேள்வியும் சிந்தனைகளும் வராமல் இருப்பது இல்லை.
மேற்கூறிய காரணங்களால் மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் தொடரும் சில நாட்களாக வெளியிடமுடியவில்லை. முதல் இரண்டு பகுதிகள் மார்ச் மாதம் வெளியிட்டு அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து பகுதிகள் வெளியிட்டு இப்போது மீண்டும் இடைவெளி வந்துவிட்டது. வாசிக்கும் உங்களுக்கும் தோன்றிவிடலாம், “நீ எதுக்கு பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறாய்? தொடர்ந்து வெளியிட முடியவில்லை எனும்போது எழுதாமலேயே இருக்கலாமே!” ஆனாலும் விரைவில் எல்லாவித பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு விடுவேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு தான் எழுதுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கை மட்டுமே தான் வாழ்க்கை என்ற நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க வேண்டும். சில வருடங்களாகவே எதிர்மறை எண்ணங்கள் அதிக அளவில் தலை தூக்கி பேய் ஆட்டம் போடுகிறது. எத்தனை தான் கட்டுப்படுத்தினால் கூட அடங்காது ஆட்டம் போடுகிறது.
ஆட்டம் போடும் மனதை கட்டி இழுத்து நிலைநிறுத்துவது படாத பாடாக இருக்கிறது. ஆனாலும் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் - சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல! எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் தேவையில்லாத கோபம் தோன்றுகிறது. கோபத்தினை வெளிப்படுத்த, யார் மீதும் செலுத்தவும் முடிவதில்லை எனும்போது என்னை நானே நொந்து கொள்கிறேன். பல சமயங்களில் இந்த எதிர்மறை எண்ணங்கள் தூக்கம் வராமல் தவிக்க வைக்கிறது. பல நாட்கள் எனது மொத்த தூக்கமே நான்கு ஐந்து மணி நேரம் என்று ஆகிவிட்டது. தூங்காமல் விழித்து இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் சரியல்லவே. “என்ன செய்வது, என்ன செய்வது?” என்று யோசித்தே பல இரவுகள் கடந்து போகின்றன. கடந்த சில நாட்களாக தூங்காமல் கழித்த இரவுகள் தான் அதிகம். நேற்று இரவு கூட ஒன்பதரை மணிக்கு உறங்கி நள்ளிரவு 12 மணிக்கு விழித்துவிட்டேன். அதிகாலை நான்கு மணி வரை உறக்கமில்லை. நான்கு மணிக்கு உறங்கி மீண்டும் காலை 07 மணி வரை உறங்கியிருக்கிறேன் - அதுவும் தெரியாமலேயே. அதிக நேரம் விழித்து இருப்பதால் கண்களிலும் எரிச்சல்!
பொதுவாக எனது பிரச்சனைகளை கடந்து செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறேன் என்றாலும் சில வருடங்களாக பிரச்சனைகள் முடிவில்லாமல் தொடர்வதால் கடக்க முடியாமல் திண்டாடுகிறேன் என்று தோன்றுகிறது. விரைவில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாக வேண்டும். அது வரை முடிந்தபோது எனது பதிவுகள் வெளியிடுகிறேன். அவ்வப்போது எனது இல்லத்தரசியின் பதிவுகளும், சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களது பதிவுகளும் இங்கே தொடரும். பதிவுகளை எப்போதும் போல தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். விரைவில் மீண்டும் சிந்திப்போம்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
10 செப்டம்பர் 2025
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமாலை வணக்கம். இன்றைய வாசகமும் அருமை உங்கள் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் எழுத்து தடைகளையும், மன உளைச்சல்களையும் தெளிவாக கூறியுள்ளீர்கள். உண்மைதான் பிரச்சனைகள் என்று வரும் போது என்னதான் மனதை சிரமப்பட்டு சமாதானப்படுத்திக் கொண்டாலும், வேறு வேலைகளில் முழுமையாக ஒன்ற இயலவில்லை. எனக்கும் இப்போதைக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து மோதுகின்றன. அதனால் முறையாக வலைத்தளம் வரவே இயலவில்லை. எல்லாம் சரியாகிவிட வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம். வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது. இறைவன் துணையாக நம்முடன் எப்போதும் வரவேண்டும் முடிந்த வரை எழுதுங்கள். அதுவே ஒரு மன மாற்றமாக இருக்கும். உங்களின் அருமையான எழுத்துக்களை படிக்கவும் காத்திருக்கிறோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லோர் வாழ்விலும் ஏற்படும் நிலைகள். சிலருக்கு இடைவெளி கொடுத்து ஏற்படும். சிலருக்கு எழமுடியாதபடி அடி விழுந்து கொண்டிருக்கும். சீக்கிரம் இந்நிலை சரியாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் தளர வேண்டாம். சமயங்களில் திடீரென்று ஒரு நாள் காலை எல்லாம் துடைத்து விட்டாற்போல பளிச்சென்று ஆகி விடும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து இன்று கடந்தோம், நாளையும் கிடப்போம் என்று பயணிக்கலாம். பள்ளத்திலேயே இறங்கி கொண்டிருக்க முடியுமா என்ன.. பள்ளம் என்றிருந்தால் மேடும் இருக்கும். எப்போது முடியுமோ அப்போது பதிவிடுங்கள். வீட்டு நிலைமையும், மனநிம்மதியும் முக்கியம்.
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும்...தொடர்ந்து எழுதுபவர்களில மிக முக்கியமானவர் நீங்கள்.படங்களுடன் நீங்கள் விரிவாகப் பதிவிடுவதற்கு உண்மையில் அதிகச் சிரத்தையும் மனச் சமநிலையும் நேரமும் கொஞ்சம் கூடுதலாகவே உங்களுக்குத் தேவை..அது விரைவில் அமைய பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குஜி! உங்கள் நிலையை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது. இது பலருக்கும் இப்படியான காலம் வரத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குவரும் போது "என்னடா வாழ்க்கை, நமக்கு மட்டும் ஏன் இப்படி" என்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதும் இயல்புதான். வாழ்க்கை எங்கே போகிறது என்று ரொம்ப தூரம் பார்ப்பதை விட, இன்று ரைட்னா ...ஓகே போவோம், அடுத்து அது லெஃப்ட் ல திரும்புதா...ஓகே போவோம்...என்று அடுத்த நிலையைப் பற்றி யோசிக்காமல் இன்றைய பொழுதைக் கடந்துவிடுவது நல்லது என்றே படும்.
பதிவுகள் எழுத முடியலைனா, வருத்தமே வேண்டாம் ஜி. அதைவிட முக்கியம் உங்கள் மனம். அது நல்லா இருந்தாதான் சூழலைச் சமாளிக்க முடியும்.
எனவே பதிவுலகைப் பற்றிக் கவலை வேண்டாம். யாரும் நினைக்கப் போவதில்லை நீங்கள் சொல்லியிருபப்து போல். அந்தப் புரிதல் கூட இல்லைனா அப்புறம் என்ன நட்பு?
எப்ப முடியுதோ அப்ப பதிவிடுங்கள். Never ever pressurise yourself. Be calm and prioritise your work and issues.
கீதா
//அலுவலகச் சூழல்கள், வீட்டுச் சூழல்கள் என மாற்றி மாற்றி எனது அன்றாட நிகழ்வுகளை // இப்படியெல்லாம் வருவது இயற்கைதான் வெங்கட். அந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவது கடினமாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பகல் உதயமாகவேண்டும் இல்லையா? கடினமான தருணங்களைக் கடக்கும்போது, நல்ல தருணங்கள் வந்துகொண்டிருக்கிறது, சுரங்கத்தின் மறுமுனையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு ஒரு நாள் நினைவுக்குக் கொண்டுவரும்போது, பழைய கஷ்டங்கள் மனதில் தங்காததையும் நல்ல நினைவுகள் மாத்திரமே தேங்கியிருப்பதையும் கண்டுகொள்ள முடியும்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மனதை சங்கடபட வைக்கிறது. நீங்கள் மற்றவர்களுக்கு சொல்வதை சொல்கிறேன். இதுவும் கடந்து போகும்.
சில நேரங்களில் நம்மையும் மீறி சில செயல்கள் நடக்கும் போது மன சோர்வு ஏற்படும்.
அதிலிருந்து விடுபட்டு நேரம் கிடைக்கும் போது பதிவு போடலாம்.
விரைவில் நல்ல சூழல் ஏற்படும். பயணம் கட்டுரைகள் தொடரும்.
மனம் தளர வேண்டாம். விடுமுறை கிடைத்தால் ஊருக்கு வந்து குடும்பத்துடன் இருங்கள் ஆறுதல் கிடைக்கும். பணி சுமை, குடும்பத்தில் வயதானவர்கள் பொறுப்புகள் கொஞ்சம்
கலங்க வைக்கும் அதிலிருந்து மீண்டு விடுவீர்கள்.
//எனக்கு நானே சொல்லிக்கொண்டு தான் எழுதுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கை மட்டுமே தான் வாழ்க்கை என்ற நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க வேண்டும். சில வருடங்களாகவே எதிர்மறை எண்ணங்கள் அதிக அளவில் தலை தூக்கி பேய் ஆட்டம் போடுகிறது. எத்தனை தான் கட்டுப்படுத்தினால் கூட அடங்காது ஆட்டம் போடுகிறது. //
நேர் மறை எண்ணங்கள் தொடர வாழ்த்துகள்.
நல்லதே நடக்கட்டும்.
இது போன்ற மனச் சோர்வுகள் பலருக்கும் ஏற்படுகிறது. ஆனாலும் அதைக் கடந்து வந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. “நம்பிக்கை மட்டுமே தான் வாழ்க்கை என்ற நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க வேண்டும்.” நீங்கள் சொல்வதேதான்! எத்தனையோ முறை flickr, blog பதிவுகள் போதும் என நினைத்து பிறகு எதிலேனும் கவனம் செல்வது மனதுக்கு நல்லதென்று தொடர்ந்தேன், தொடருகிறேன். உங்கள் நிலைமை விரைவில் சீராக எங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் உடனிருக்கும்!
பதிலளிநீக்கு