தொகுப்புகள்

திங்கள், 29 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - ஷூட்டிங் ஸ்டோன்ஸ் - உழைப்பாளிகள் - மதிய உணவு - பகுதி பன்னிரெண்டு - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




எங்களது பயணத் திட்டம் - வரைபடமாக...

இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடரின் சென்ற பகுதியில் சராஹனிலிருந்து புறப்பட்டு பயணிக்கும்போது ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சியான தகவல் குறித்தும், பார்த்த இடங்கள் குறித்தும் எழுதி இருந்தேன். இந்தப் பகுதியில் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது அன்றைய தினத்தின் பயணம் குறித்தும், வழியில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் தான். பொதுவாகவே மலைப்பகுதிகளில் பயணிப்பது என்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம் தான். தெற்கே இருக்கும் சிறு மலைகளில் பயணிக்க சரியான சாலைகள் இருக்கும் - என்னதான் கொண்டையூசி வளைவுகள் கொண்ட பாதைகள் என்றாலும் பாதை நன்றாக இருப்பதோடு, பக்கவாட்டில் தடுப்புகளும் இருக்கும். நாமாக ஆபத்தைத் தேடிக்கொள்ளும் விதத்தில் பாதையில் வாகனங்களை இயக்குவதால் மட்டுமே பிரச்சனைகள் வரும்.  மழைக்காலங்களில் மலைச்சரிவுகள் ஏற்படுவதுண்டு என்றாலும் அதிக அளவில் பிரச்சனைகள் இருப்பதில்லை. ஆனால் வடக்கில் அப்படி அல்ல - குறிப்பாக உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மலையின் பாங்கு அப்படி. இங்கே இருப்பதைப் போல பெரிய பெரிய பாறைகள் கொண்ட மலை அல்ல! நிறைய இடங்களில் மண் மேடுகள் போலவே காட்சி அளிக்கும். ஆனால் உள்ளுக்குள் பாறைகளும் இருக்கும். 





எந்த நேரத்திலும் மேலிருந்து மண்ணும், கற்களும் கீழே விழத் தயாராக இருக்கிறேன் என்று சொல்வது போலவே இருக்கும்.  எப்போது மேலேயிருந்து கற்கள் விழும் என்று சொல்ல முடியாது. பல பயணங்களில் ஓட்டுநர்கள் மலையைப் பார்த்தபடியே வாகனத்தினைச் செலுத்துவதை நான் பார்த்ததுண்டு. அதற்குக் காரணம் சாலையைக் கவனிப்பதோடு, மலையையும் கவனித்துக் கொண்டிருந்தால் தான் மேலிருந்து கற்கள் உருண்டு வருகிறதா என்பதையும் பார்க்க வேண்டியிருப்பது தான்.  நண்பர் பிஷ்ட் ஒரு பயணத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது மேலியிருந்து விழுந்த சற்றே பெரிய கல் ஒன்று சரியாக வாகனத்தின் முன்புறம் விழ, முன்பக்கக் கண்ணாடி முழுவதும் சிறுசிறு துண்டுகளாக உடைந்தது - நல்ல வேளையாக அவை சிதறாமல் அப்படியே இருக்க, வாகனத்தினை ஒரு ஓரமாக நிறுத்தி அந்தக் கண்ணாடிப் பகுதியை உடைத்து ஓரமாகப் போட்டுவிட்டு, கண்ணாடி இல்லாமலேயே அடுத்த ஊர் வரை ஓட்டி வந்து அங்கே ஒரு நாள் தங்கி அதை மாற்றிக் கொண்டு வந்தார்.  எதற்காக இங்கே அதைச் சொல்கிறேன் என்றால் இப்படியான ஆபத்துகள் எப்போதும் இங்கே உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே. 






சாலைகளை என்னதான் தொடர்ந்து செப்பனிட்டு, பராமரித்துக் கொண்டே இருந்தாலும், மலைச்சரிவுகள் தினம் தினம் நடந்தால் என்ன செய்ய முடியும்? ஆனாலும் Border Roads Organisation எனும் அரசு அமைப்பும், GREF என்கிற அரசு அமைப்பும் தொடர்ந்து இந்த மலைப்பகுதிகளில் பணிபுரிந்த வண்ணமே இருக்கின்றன.  அவர்களது சிப்பாய்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்று மலைச்சரிவுகள், பாதைகளில் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  ஏதேனும் பெரிய நிகழ்வுகள் ஏற்பட்டால் அவர்களிடம் இருக்கும் Walkie Talkie வழியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதோடு, சாலையில் வரும் வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கிறார்கள்.  அந்த மலைப்பகுதியில் யாருமே இல்லாமல் ஓரமாக, உயரமான இடத்தில்  நின்று கற்கள் விழும்போது வாகனங்களை நிறுத்தி, எல்லாம் சரியாக இருக்கிறது, பயணிக்க ஆபத்தில்லை எனும்போது மீண்டும் வாகனங்களைச் செலுத்த அனுமதி அளிப்பது என பல வேலைகள் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  பகல் முழுக்க இப்படி கால் கடுக்க நின்று, உட்கார்ந்து கொண்டு அந்த வெட்ட வெளியில், மலைப்பகுதியில் தன்னந்தனியாக நின்று Shooting Stones எனப்படும் பறக்கும் கற்களைப் பார்க்கும் வேலை - நம்மால் ஒரு நாள் கூட செய்யமுடியாது! ஆனால் அவர்களுக்கு இது தான் வேலை - சுலபம் என்று நினைக்கக் கூடாது - ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தால் தான் அந்த வேலையின் கொடுமையான தன்மை நமக்கு விளங்கும்.



அவர்கள் மட்டுமல்லாது, இருக்கும் சாலைகளில் விழும் கற்கள், மண் போன்றவற்றை தொடர்ந்து அப்புறப்படுத்தும் உழைப்பாளிகள் என பலர் இருப்பதால் தான் இந்த மலைப்பகுதிகளில் பலராலும் பயணிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இந்தப் பகுதிகளில் மலைகளில் பயணிக்கும்போது சில சிக்கல்கள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் இந்தப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க முடியாதே. இத்தனை ஆபத்துகள் நிறைந்திருந்தாலும் அங்கேயும் மக்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. அங்கே இருப்பதோடு மட்டுமல்லாது எத்தனை ஆலயங்கள், புத்த மடாலயங்களைக் கட்டி அங்கேயே எத்தனை குளிர், பனிப்பொழிவு மற்றும் மழை இருந்தாலும் தங்களது வாழ்நாளை அங்கேயே கழித்து விடுகிறார்களே! எப்போதாவது பயணிக்கும் நமக்கு அந்தப் பகுதி ஆபத்து நிறைந்ததாகத் தெரிந்தாலும் அந்த ஆபத்துகளை அவர்கள் சமாளித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.  நாங்கள் பயணித்து முடிந்து வீடு திரும்பிய பிறகு, அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்துகள் - மலைச்சரிவு, பெரிய இரும்புப் பாலங்கள் வண்டியோடு கீழே ஆற்றில் விழுந்தது போன்றவற்றை குறித்த சில காணொளிகள் பார்க்க முடிந்தது. இல்லத்தரசியும் மகளும் கூட இப்படியான பாதைகளிலா பயணித்தீர்கள் என்று கொஞ்சம் கவலையையும் வெளிப்படுத்தினார்கள். 



நாங்கள் அன்றைய தினம் (14-05-2026) சராஹனிலிருந்து நாகோ அல்லது தபோ என்கிற இடம் வரைக்கும் பயணிக்கலாம் என்றிருந்தோம்.  சராஹனிலிருந்து நாகோ வரையான தூரம் சுமார் 180 கிலோ மீட்டர்.  அவ்வளவு தானே வண்டியை ஒரு அழுத்து அழுத்தினால் மூன்று, மூன்றரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.  அப்படி முடியாது. முற்றிலும் மலைப்பிரதேசம் என்பதால் பல இடங்களில் மணிக்கு இருபது இருப்பத்து ஐந்து கிலோ மீட்டர் வேகம் கூடத் தொட முடியாது. அதனால் நின்று நிதானித்து தான் பயணிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாது மேலே இருந்து கற்கள் வேறு பல இடங்களில் விழுந்து கொண்டிருக்க, வேகம் விவேகமல்ல என்ற கொள்கையுடனேயே எங்கள் வாகன ஓட்டி வாகனத்தினைச் செலுத்துக் கொண்டிருந்தார்.  எங்கே பார்த்தாலும் மலைகள், மலைகள், மலைகளைத் தவிர வேறொன்றுமில்லை.  இயற்கை இந்த மலைகளில் விளையாடி இருக்கும் விளையாட்டை, ஏற்படுத்திய உருமாற்றங்களை, பார்த்துக் கொண்டே, சில இடங்களில் படங்களும், சில இடங்களில் காணொளிகளும் எடுத்துக் கொண்டே தான் பயணித்துக் கொண்டிருந்தோம்.  



மலைகளில் ஏறுவதும், இறங்குவதும் என தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. மலைகளில் ஏறும்போது சிரமங்கள் இருந்தாலும், கீழே இறங்கும்போது சுலபமாகத் தெரிந்தாலும் எப்போது என்ன நடக்குமோ என்ற எண்ணம் அவ்வப்போது வந்த வண்ணமே இருந்தது.  பல இடங்களில் பாதையின் ஒரு பக்கம் மலைகள் என்றால் மறு பக்கம் அதல பாதாளம் - கீழே ஓடும் நதி என்று தான் இருக்கும்.  அதிலும் பள்ளமாக இருக்கும் பக்கம் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதால் அந்த ஓரத்தில் சென்றால் ஆபத்து - அதைப் போலவே மலையின் ஓரத்தில் சென்றாலும் எங்கே எந்த கூர்மையான முனை இடித்து விடுமோ என்று அதிலிருந்தும் சற்று விலகியே வாகனத்தினைச் செலுத்த வேண்டியிருக்கும். அதைத் தவிர எதிர்புறத்திலிருந்தோ, பின்னாலிருந்தோ வரும் வாகனத்திற்கு வழி விடுவதும் இந்தப் பகுதிகளில் மிகவும் கடினமான விஷயம்.  இடம் பார்த்து, எங்கே கொஞ்சம் அதிக இடம் இருக்கிறதோ, அடுத்த வண்டிக்கு Pass தரமுடியுமோ அங்கே தான் மற்ற வண்டியை நம்மைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியும்.  அதனால் பல இடங்களில் நின்று நின்றே செல்ல வேண்டியிருக்கும். 


இப்படியான பாதைகளில் தொடர்ந்து பயணித்து நாங்கள் எங்கள் வாகனத்தினை நிறுத்திய இடம் ஸ்பெல்லொ என்கிற இடம். தொடர்ந்து பயணித்ததில் பல இடங்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தன.  தராலி, சுறு, காஃபூர், சோரா, நிகுல் சாரி, தரண்டா டாங்க், சுங்கரா, அகடே, வாங்க்டூ, கா, கீ, பூ - இப்படி பல ஊர்கள்.  இவற்றை எல்லாம் பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் புன்சிரிப்பு வந்தாலும், இந்த இடங்களுக்கான பெயர்களுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கக்கூடும்.  உள்ளூர் மக்களிடம் கேட்டால் அந்தப் பெயருக்கான காரணங்களை நமக்குச் சொல்லக் கூடும்.  நாங்கள் சென்று சேர்ந்த அந்த சிற்றூரின் பெயர் கூட ஸ்பெல்லோ என்று சொல்லி இருக்கிறேனே…  அப்படியான சிற்றூரில் ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தி அங்கே உணவு வேண்டும் என்று சொல்ல, அவர்கள் தாலி சிஸ்டம் தான் என்று சொல்லி எங்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.  ஒரு தட்டில் இரண்டு மூன்று ஃபுல்கா ரொட்டி, கடி, ராஜ்மா, சாதம் மற்றும் ஊறுகாய்.  பார்க்க சிம்பிளாக இருந்தாலும் சுவை வீட்டு உணவு போலவே இருந்தது.  விலையும் அத்தனை அதிகம் இல்லை. ஃபுல்கா ரொட்டி, சாதம் போன்றவற்றிற்கு அளவில்லை. ஆனாலும் நம்மால் அதிகமாக சாப்பிடமுடியாது.  தேவையான அளவு மட்டும் தானே சாப்பிடமுடியும்.  அப்படி உணவருந்திய பிறகு அதற்கான கட்டணத்தையும் (500 ரூபாய்) கொடுத்து, அவர்களுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  அங்கேயிருந்து எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 ஜூன் 2026


33 கருத்துகள்:

  1. மூன்றாவது படம் பயமுறுத்துகிறது!  அது எப்படி கீழே வராமல் அப்படியே நிற்கிறது?!!  அதற்கு அடுத்த படத்தின் பாதை அதைவிட பயமுறுத்துகிறது.  இவ்வளவு சரிவாக ஒரு பாதையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிவான பாதைகள், தனியாக நிற்கும் பாறை என இப்படி நிறைய பயமுறுத்தும் விஷயங்கள் இந்தப் பகுதிகளில் உண்டு ஸ்ரீராம். ஆனாலும் தொடர்ந்து பயணம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது - சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களுக்கும்.

      நீக்கு
  2. மலைப்பாதையில் நின்று, உதிரும் மலையைப் பார்க்கும் வேலை நினைக்கவே சிரமமாக இருக்கிறது.  அதற்குரிய சம்பளம் கூட அவர்களுக்கு இருக்காது இல்லை?  மிகக்குறைந்த அளவே சம்பளம் கிடைக்கும்?  ஆசுவாசப்படுத்திக் கொள்ள அருகில் கடைகளும் இருக்காது, சமயங்களில் நிழலும் இருக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கான பணிகள் நிறையவே உண்டு. மாற்றி மாற்றி பணிகள் வந்த வண்ணமே இருக்கும். சுலபமான வேலை என்று இங்கே எதுவுமே இல்லை ஸ்ரீராம். கடினமான பணிகள் தான் பொதுவாகவே.

      நீக்கு
  3. அடுத்த படம்..  அவவ்ளவு பெரிய மலைத் தொடரில் கீழே செவ்வகமாக ஒரு துளை - வண்டிகள் கடந்து செல்ல...  அழகாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாதையை முதலில் அமைத்தபோது எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று தோன்றும் எனக்கு. அழகான பாதைகள் என்றாலும் ஆபத்தும் கூடவே உண்டு ஸ்ரீராம்.

      நீக்கு
  4. முதல் காணொளி பார்த்து ரசித்தேன்.  நானே பயணிப்பது போல ஒரு விர்ச்சுவல் எஃபெக்ட்..  பாறைகள் அழகாய் சாலைக்கு கூரை வேய்ந்திருக்கின்றன.  குறுகிய பாலத்தில் பயணம்..  அந்தப் பக்கம் அந்த டூ வீலர் வேகமாக வருவதைப் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரை காணொளிகளும், படங்களும் பயணத்தில் எடுத்தேன். உங்களுக்கும் காணொளி வழி பயணம் குறித்த ஒரு எண்ணம் வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அந்த மலைப் பாதையிலேயே ஊர்கள் இருஓப்பதும் வியப்பு.  ஒரு மீல்ஸ் 500 ரூபாயா என்று தோன்றினாலும் நியாயம்தான் என்று தோன்றியது,  அவ்வளவு உயரத்தில் சிரமங்களை சந்தித்து உணவுக்கு ஏற்பாடு செய்கிறார்களே..  அதைச் சொல்ல வேண்டுமல்லவா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றோ அல்லது நாலு பேர்கள் (டிரைவர் தனி என்றால்). 500 ரூ. ரொம்ப குறைவு. பொதுவா வடநாட்டுல உணவுல கொள்ளையடிப்பதில்லை. நம்ம ஊர்ல ஒரு சாதாதோசை 190 ரூ

      நீக்கு
    2. ஒரு மீல்ஸ் 500 ரூபாய் அல்ல! எங்கள் மூவருக்கு மட்டுமல்லாது ஓட்டுநருக்கும் சேர்த்து மொத்தமே 500 ரூபாய் தான். அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வளவு தான் கட்டணம். அதிக பட்சமாக நாங்கள் சாப்பிட்ட உணவுக்குக் கொடுத்த தொகை குறித்த தகவல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உண்மை தான். அது நாலு பேருக்கான தொகை. வட நாட்டில் பல இடங்களில் இப்படித்தான் - தாலி சிஸ்டம்! ஹை ஃபை உணவகங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்குமே தவிர பல இடங்களில் உணவுக்கான விலை குறைவு தான். நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. சாலையில் என ஆரம்பிக்கும் பத்திக்கு முன் உள்ள படம் பத்ரிநாத் யாத்திரையில் மினி பேருந்துக்கு மேலாக பாறை இருக்கும் பகுதிகளை நினைவுபடுத்தியது. மலைப் பாதை பயணம் சவால்கள் ஆபத்துகள் நிறைந்தது.

    பதிவைப் பிறகு முழுமையாகப் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பல இடங்களில் எங்கே பேருந்து மேலே இருக்கும் பாறைகளில் முட்டிவிடுமோ என்ற அளவுக்கு சில இடங்களில் பாறைகள்/பாதைகள் இருக்கும். இந்தப் பகுதியிலும் அப்படியே நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. 125 ரூபாய் (அல்லது 150) தாலி ரொம்பவே சாதாரண பணம். அந்த இடங்களில், அதுவும் அன்லிமிடெட் உணவு வழங்க இப்படியான ஆட்கள் இருக்கிறார்களே.. அதுவே பாராட்டத்தக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நெல்லைத் தமிழன். அதிகம் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தாலும் நமக்கு சாப்பிட முடியாது. சிலரால் மட்டுமே அப்படி சாப்பிட முடியும். நல்ல மனம் வாழ்க!

      நீக்கு
  8. இந்த மாதிரி மலைப் பாதை கண்காணிப்பாளர்கள், டிராபிக் போலீஸ் என பொதுச் சேவை செய்பவர்களை மதிப்பதில்லை. அவங்களும் சக மனிதர்கள் என எண்ணுவதில்லை. நாம் வைத்த வேலைக்கார்ர்கள் என நினைத்து அலட்சியமாக எண்ணுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது மக்களுக்கு இந்த மாதிரியான உழைப்பாளிகள் பார்த்து ஒரு வித கேவலமான நினைப்பு தான் நெல்லைத் தமிழன். அவர்களை அலட்சியப்படுத்துவது சரியல்லவே.

      நீக்கு
  9. நீங்க மலைப் பாதை கண்காணிப்பாளரைச் சொல்றீங்க. துணிக்கடையில் உணவகத்தில் பத்து பனிரண்டு மணி நேரம் நின்னுக்கிட்னு வேலை பார்ப்பது எவ்வளவு கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த வேலையுமே சுலபம் அல்ல! நீங்கள் சொல்வது போல துணிக்கடைகளில் உணவகத்தில் நின்று கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடினமான வேலை தான் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. வாசகம் அருமை.
    மலை பயணம் பயமுறுத்துவதாக இருக்கிறது. கயிலை, பத்திரி நாத், வைஷ்ணவி தேவி கோயில் போகும் பாதைகளில் இந்த இடங்களில் மண் சரிவு கற்கள் விழும் எச்சரிக்கையாக பாகவும் என்ற அறிவுப்பு பலகைகள் வைத்து இருப்பார்கள்.

    கயிலை போகும் போது மலையிலிருந்து கற்கள் மழையாக பொழிந்து. பாதையை அடைத்து கொண்டது, நாங்கள் அந்த பாதையை இறைவன் அருளால் கடந்து விட்டோம். எங்களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு வர முடியவில்லை, மீட்பு பணியினர் வந்து கற்களை அப்புறபடுத்தி அவர்கள் வர மறு நாள் ஆச்சு , அவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள். கயிலை பயணத்தை ரத்து செய்து விட்டு கிளம்பி விட்டார்கள் ஊருக்கு.

    உணவு வில்லை குறைவாக இருக்கிறது. சுவையாக இருந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      ஆமாம் நிறைய இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் உண்டு.

      நீக்கு
  11. காணொளிகள் அருமை, மலை பயணத்தை எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியதை சொன்னீர்கள். இறைவன் அருளால் நல்லபடியாக பயணம் அமைந்து விட்டது மகிழ்ச்சி.
    நீங்கள் வந்து சொன்னதை கேட்டு இருவரும் கலவரம் அடைந்து இருப்பார்கள்.
    சில இடங்களில் கற்கள் பாதையில் சரியாமல் இருக்க கம்பி வலை தடும்பு செய்து இருப்பார்கள்.
    மேலே இருந்து விழுவதை அவர்கள் என்ன செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. பயணங்களில் இப்படியான சில கஷ்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நேரத்தில் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லும்போது கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்யும்.

      மேலே இருந்து விழும் கற்களுக்கு சில இடங்களில் வலைகள் போட்டு இருப்பார்கள். ஆனாலும் உருண்டு விழும் கற்களை வலைகளால் தடுக்க முடிவதில்லை.

      நீக்கு
  12. படங்கள் பிரமாதமாக இருக்கின்றன ஜி.

    சாலைகள் நல்லா போட்டிருக்காங்க ஆனால் மலைச்சரிவுகள் எல்லாம் வந்தால் மீண்டும் சாலை போட வேண்டி வரும் சில சமயம் ...சாலை கூட பலத்த மழையில் அரித்துப் போக வாய்ப்புண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      சாலைகள் பல இடங்களில் நன்றாகவே இருந்தன. தொடர்ந்து பணி புரிந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என்றாலும் சரிவு ஏற்பட்டால் மீண்டும் சாலைகளைப் போடும் அளவிற்கு அடித்துக் கொண்டு போய்விடும்.

      நீக்கு
  13. ஆமாம் தெற்கே மலைப்பகுதியில் பயணிப்பதற்கும் வடக்கே பயணிப்பதற்கும் குறிப்பாக ஹிமாச்சலில் பயணிபப்து அனுபவங்கள் ரொம்ப வித்தியாசம் உண்டுதான். நீங்கள் சொல்வது போல் கற்கள் உருண்டு விழும் ஆபத்து...

    எனக்கென்னவோ, இயற்கையால் இவை நிகழ்ந்தாலும்......
    சில சமயம், தோன்றுவது, நாம் மலையைக் குடைந்துதானே சாலைகள் சுரங்கப்பாதைகள் அமைக்கிறோம். தினமும் ஓடும் பல வண்டிகளின் அதிர்வுகள் எல்லாமும் கூட மலைகளில்கல் விழக் காரணமாக இருக்கும் என்று தோன்றும்.

    சாரஹன் பகுதி தாண்டி லாஹுல் ஸ்பிட்டி போகும் வழி (அக்கிராமங்கள் பகுதி கூட rain shadow பகுதி...இப்படத்தில் கூட அந்த வறட்சி தெரிகிறது மலையில் இல்லையா? என்றாலும் பச்சையில்லாப் பகுதி கூட பார்ப்பதற்கு என்ன ஒரு அழகு ! மலைகளின் அழகே அழகுதான்,.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களால் உண்டாகும் சீரழிவும் இது போன்ற இடங்களில் மலைச்சரிவுக்கு காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை கீதா ஜி. ஆனாலும் அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சரியான சாலைகள் கொடுப்பதும் அரசின் கடமை ஆயிற்றே.

      நீக்கு
  14. இருந்து கற்கள் வேறு பல இடங்களில் விழுந்து கொண்டிருக்க, வேகம் விவேகமல்ல என்ற கொள்கையுடனேயே எங்கள் வாகன ஓட்டி வாகனத்தினைச் செலுத்துக் கொண்டிருந்தார்.//

    நல்ல விஷயம்தான் ஜி 20 கிமீ வேகப் பயணம் இப்பகுதிகளில் சரிதான்,...இன்னொன்று ப்ளஸ் படங்கள் காணொளிகள் நன்றாக எடுக்க முடியும் இல்லையா...

    மலைகள் தான் பகுதி முழுவதும் பார்க்க stunning!

    இப்பதான் புரிந்தது பல வருடங்களுக்கு முன் என்பதால் யோசித்தேன் ஏன் சாரஹன் நினைவில் இல்லைன்னு...நாகோவிலிருந்து சிம்லாக்கு சாரஹன் தொடாமல் சென்றது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி, மெதுவாகச் செல்லும்போது படங்களும் காணொளிகளும் எடுக்க முடியும் என்பது இன்னுமொரு ப்ளஸ்.

      நீக்கு
  15. முதல் காணொளி பிரமாதமாக இருக்கிறது.

    பாலம் - காணொளியும் சூப்பர் அந்த சத்தமும் கேட்கிறது.

    //பல இடங்களில் பாதையின் ஒரு பக்கம் மலைகள் என்றால் மறு பக்கம் அதல பாதாளம் - கீழே ஓடும் நதி என்று தான் இருக்கும். //

    அதேதான்...அது போல அடுத்தடுத்த வரிகளும் ஆமாம் குறுகிய காசலைகள்.. வேறு வண்டிகள் வரும் போது வழிவிடுதல் எல்லாம் என்னதான் சுற்றிலும் இயற்கை அழகு இருந்தாலும் இந்தச் சின்ன ஒரு பயம் கூடவே இருக்கும்.

    ஸ்பெல்லா புதிய ஒரு இடத்தின் பெயர் தெரிந்தது.

    என்னதான் பயம்னு சொன்னாலும்....பயணம் பயணம்தான்.

    இந்தப் பாதையில் எல்லாம் காரில் செல்வது ஒகே ஆனால் பேருந்து எப்படிச் செல்லும் என்று தோன்றியது. பேருந்துகள் போகின்றனவா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. சில பகுதிகளுக்கு இங்கே பேருந்துகள் உண்டு - இதே பாதைகளில் தான் பேருந்துகளும் - சிறிய பேருந்துகள் - பயணிக்கின்றன.

      நீக்கு
  16. விஜயலஷ்மி சென்னை30 ஜூன், 2026 அன்று 1:46 PM

    படங்களும் காணொளிகளும் அருமை அதிலும் பாலத்தை கடப்பது பயண காதலரே

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....