தொகுப்புகள்

திங்கள், 13 ஜூலை, 2026

Lahaul Spiti Circuit Trip - பகுதி பதினான்கு - நாகோ - புத்த மடாலயம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தவிர்க்க முடியாத காரணங்களில் இந்தத் தொடரில் சிறு இடைவெளி வந்துவிட்டது.  சென்ற பகுதி வரை எனது பயணத்தில் கிடைத்த அனுபவங்கள், உண்ட உணவு, தங்கிய இடம் என சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவில் பயணத்தில் கிடைத்த மேலும் சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  கடைசியாக மலைச்சரிவு ஏற்பட்ட பாதையைக் கடந்து நாங்கள் சென்றடைந்த இடம் குறித்து எழுதுவதாக முடித்திருந்தேன்.  Border Roads Organisation உழைப்பாளிகள் வருடம் முழுவதும் இது போன்ற பகுதிகளில் கடினமான பணிகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரிய ஒன்று. அவர்கள் இல்லாவிடில் இந்தப் பகுதிகளில் பயணம் செய்வது கடினம். மலைச்சரிவு ஏற்பட்டால் சில மணி நேரங்களில் அந்தப் பகுதியை சீர் செய்து மீண்டும் போக்குவரத்துக்கான பாதையை செப்பனிட்டுத் தருவதோடு அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நல்ல பாதையாகவும் மாற்றி விடும் அவர்களின் கடமை உணர்வுக்கு ஒரு சல்யூட். 




Guppy Aunty இன் கடையிலிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் நாகோ (Nako) எனும் சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3663 மீட்டர் உயரத்தில் (12018 அடி) இருக்கும் ஊர்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில், ஸ்பித்தி ஆற்றின் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் உயரமான ஊர் இது.  மிக அழகான சிற்றூர் என்பதோடு இங்கே மிகவும் பழமையான - 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்த மடாலயம் இருக்கிறது.  அதைத் தவிர பனி உருகி உருவான ஒரு சிறு ஏரியும் உள்ளது. இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பாறைப் பகுதியில் புத்த மத குருவான பத்மசம்பவா அவர்களின் பாதங்கள் பட்ட முத்திரைகள் இருப்பதாகவும் நம்பிக்கை.  மாடு, யாக், குதிரை, கழுதை போன்ற விலங்குகளை இங்கே உள்ள மக்கள் பராமரிக்கிறார்கள்.  விவசாயம் என்றால் உருளை, பட்டாணி, ஆப்பிள் போன்றவை தான் பிரதானம்.  சுற்றிலும் இமயமலைச் சிகரங்கள் - இங்கே இருக்கும் உயரமான மலைச்சிகரம் Pargial என்று அழைக்கப்படுகிறது. அந்த மலைச் சிகரத்திற்கு ட்ரெக்கிங்க் செய்து போக வேண்டும் என்றால் இந்த ஊர் தான் Base Camp செய்ய ஏற்ற இடம். 




Guppy Aunty இன் கடையிலிருந்து புறப்பட்டு நாகோ எனும் இந்த இடத்தை அடைந்ததும் ஊரின் குறுகிய சாலையின் ஓரத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு நாங்கள் புத்த மடாலத்தையும், ஏரியையும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டோம்.  வாகன ஓட்டுனர் ஷிம்பு நான் வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டார். இங்கே என்ன இருக்கிறது என்று வந்தோம் என்று அவர் நினைத்ததாக பின்னர் எங்களிடம் சிரித்தபடியே சொன்னார்.  அவருக்கு என்ன புரியப் போகிறது? பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் குறித்த எண்ணமே அவருக்கு இல்லை! ஏதோ பணம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இப்படியான வேலையில் இருக்கிறார் என்று தோன்றியது எனக்கு. அவரைப் பொறுத்தவரையில் இப்படி பயணம் செய்யும் நாங்கள் எல்லாம் கிறுக்குகள் என்று நினைத்தார் போலும்! எது எப்படியோ அவர் சிந்தனை அவரோடு. பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் பல விதங்களில் நமக்கு இறைவன் தரும் பாடங்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.  நமக்குத் தானே பயணத்தின் அருமை புரியும். அதனால் கவலை இல்லாமல் மேலும் மேலும் பயணம் செய்வோம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.  




ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள நாகோ கிராமத்தில், பிரமிக்க வைக்கும் மலைச்சிகரங்களுக்கும் அமைதியான ஏரிக்கும் இடையே நாகோ புத்த மடாலயம் அமைந்துள்ளது. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பௌத்த வழிபாட்டுத் தலம், ஒரு புனித யாத்திரைத் தலமாக மட்டுமல்லாமல், பண்டைய கலை மற்றும் அமைதிக்கு வழி வகுக்கும் பொக்கிஷமாகவும் திகழ்கிறது.  Lotsava Jhakang என்றும் அழைக்கப்படும் நாகோவின் புத்த மடாலயம், 11-ஆம் நூற்றாண்டில் லோச்சென் ரின்சென் ஜங்போ (Lochen Rinchen Zangpo) என்பவரால் நிறுவப்பட்டது. இவர் சமஸ்கிருதத்திலிருந்த பௌத்த நூல்களைத் திபெத்திய மொழிக்கு மொழிபெயர்த்த ஒரு புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர். இந்த வரலாற்றுச் சிறப்பு, இம்மடாலயத்தின் பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு சுவாரஸ்யமான பரிமாணத்தை அளிக்கிறது. தூய வெண்ணிறச் சுவர்களுடன் கூடிய இம் மடாலயத்தின் வெளிப்புறம் எளிமையை வெளிப்படுத்துகிறது. ஆனால், உள்ளே நுழைந்ததும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் விதமான நேர்த்தியான சுவரோவியங்கள் மற்றும் களிமண் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட உட்புறம் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. இத்தொகுப்பின் மிகப் பழமையான கட்டுமானங்களான முதன்மை மற்றும் மேல் தளக் கோயில்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு, பௌத்த போதனைகள் மற்றும் உள்ளூர் வரலாற்றை விவரிக்கும் நுணுக்கமான கலைப்படைப்புகள் உள்ளன.




காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்த புத்த மடாலயம் திறந்திருக்கிறது. அமைதியே உருவான இந்த இடத்தில் சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம்.  நாங்கள் சென்ற நேரம் மடாலயம் மூடுவதற்கு முன்னர் என்றால் கூட நின்று நிதானித்து மடாலயச் சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. அங்கே இருந்த துறவிகள் தங்கள் வேலைகளில் மூழ்கியிருக்க நாங்கள் எங்கள் தியானத்தினையும் ரசனையையும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டோம்.  நாகோ மடாலயத்தின் சிறப்பு என்றால் அது அதன் பழமையான கலைப்படைப்புகள் தான் என்று நம்மால் சொல்ல முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திபெத்திய பௌத்தக் கலைஞர்கள் பௌத்த நூல்களில் உள்ள காட்சிகள், வானுலக உயிரினங்கள் மற்றும் நுணுக்கமான மண்டலங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் சுவரோவியங்களையும் சிற்பங்களையும் மிக நேர்த்தியாக உருவாக்கினர். விலைமதிப்பற்ற இக்கலைப்படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்வது மட்டுமின்றி, இப்பகுதியின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் நமக்குத் தருகிறது.  மடாலயத்தின் உள்ளே படம் எடுக்க எங்களுக்கு வாய்ப்பு அமையவில்லை.




மடாலய வளாகத்தின் அருகிலேயே சில நிமிடங்கள் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டோம். புத்த மடாலயம் என்றாலே வழிபாட்டு உருளைகள் இல்லாமல் இருக்காது - எனது முந்தைய பயணத் தொடர்களிலும் இந்த வழிபாட்டு உருளைகள் குறித்த தகவல்களையும் படங்களையும் வெளியிட்டு இருப்பது உங்களில் சிலருக்கேனும் நினைவில் இருக்கலாம். “ஓம் மணி பத்மே ஹம்” என்பது தான் அந்த உருளைகளில் எழுதி இருக்கும் மூல மந்திரம். புத்த மடாலயங்கள் அனைத்திலும் மட்டுமல்லாது ஊரில் பிரதான இடங்களிலும் கூட இது போன்ற உருளைகள் இருக்கும் - அந்த வழியில் செல்வோர் அனைவருமே உருளைகளை மந்திரம் சொன்னபடியே சுற்றி விடுவார்கள்.  கைகளிலும் இது போன்ற உருளைகள் கொண்ட குச்சி வைத்து அதனையும் சுற்றிக் கொண்டே இருப்பது கூட பிரார்த்தனை தான். தவிர இந்தப் பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களில் கூட இந்த மூல மந்திரம் பொறிக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள் கட்டி இருப்பதைப் பார்க்க முடியும்.  பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் (ராயல் என்ஃபீல்ட் போன்ற புல்லட்களில்) இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே கட்டி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்.  இது வரை இந்த மந்திரத்தின் அர்த்தம், புனிதம் உங்களுக்குத் தெரியாது எனில், இந்த மூல மந்திரத்திற்கான அர்த்தத்தினை தலாய் லாமா அவர்கள் சொன்ன விளக்கம் இங்கே படிக்கலாம்! படித்துப் பாருங்களேன். 


மடாலயம் குறித்த தகவல்களையும், படங்களையும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  மடாலயத்திலிருந்து நாங்கள் எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன, அன்றைய நாள் நாங்கள் எங்கே தங்கினோம், இரவு உணவு அனுபவங்கள் என அனைத்தையும் வருகின்ற பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு அழகான சூழல் எங்களுக்காக அந்த ஊரில் காத்திருந்தது. அந்த இடம் என்ன இடம், என்பதையும் உங்களுக்கு அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  காத்திருங்கள்! தொடர்ந்து பயணிப்போம். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

13 ஜூலை 2026


5 கருத்துகள்:

  1. guppy aunty என்று பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது.

    கழுதைக்கு தெரியுமா போல ஷின்புளவுக்கு தெரியுமா பயணத்தின் அருமை.  ஆனால் அவர் ஒரே மாதிரி வண்டி ஓட்டி அலுத்துப் போயிருப்பார் போல..

    மடாலயம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. மடாலயம் குறித்த தகவல்கள் நன்று.

    அனைத்துப் படங்களும் அருமை.

    மடாலயத்தின் உள்ளே படங்கள் எடுப்பதைத் தடுக்க மாட்டார்களே

    பதிலளிநீக்கு
  3. பயணத்தில், நாம் செல்லும் கோயில்களில் ஆர்வம் இருப்பவர்கள்தாம் நம்முடன் கலந்துகொள்வார்கள்.

    பத்து பயணத்தில் ஓரிரு ஓட்டுநர்கள் நாங்கள் செல்லும் கோயிலுக்கு உள்ளே வந்து தரிசனம் செய்தால் அதிகம்.

    பதிலளிநீக்கு
  4. நாகோ மடாலயத்தின் சிறப்பு பற்றி தெரிந்து கொண்டேன். நாங்கள் கயிலையில் தங்கிய இடங்கள் இப்படித்தான் சில இருக்கும் மண் வீடுகள் உள்ளே சுவரோவியங்கள் அருமையாக இருக்கும்.

    மலைத்தொடரை பார்த்து கொண்டு இருப்பதே மகிழ்ச்சி. மலை காட்சிகள் மாறி கொண்டே இருக்கும். காலை, மதியம், மாலை , இரவு என்று இயற்கை ஜாலம் செய்யும்.

    “ஓம் மணி பத்மே ஹம்" இப்படி சொல்லி அந்த உருளைகளை சுற்றி விட்டால் அவர்கள் புனித நூலை முழுவதும் படித்தமைக்கு சமம் என்றார்கள்.
    உங்கள்பயண அனுபவங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....