தொகுப்புகள்

புதன், 15 ஜூலை, 2026

*S.ஜானகி எனும் தேன் குரலாள்* - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******

விஜி வெங்கடேஷ் அவர்கள் ஜானகி அம்மாவின் மறைவு குறித்து எழுதிய ஒரு அஞ்சலி பதிவு - படித்துப் பாருங்களேன் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 

******



குழல் இனிது யாழ் இனிது என்பர் உன் குரல் கேளாதவர்;

குயிலும் கூவ கூச்சப்படும் அருகே நீ இருக்கையிலே; 

உச்சத்தில் அமர்ந்திருந்தாய் நீ அவ்விருக்கையிலே!

சிங்கார தேவனில் குரலை நாதஸ்வரமாய்க் குழைத்தாய்;

புத்தம் புது காலை யில் குரலா கருவியா எனத் திகைக்க வைத்தாய்;

தென்றல் வந்து எம்மைத் தொடும், உன் குரலின் வழி எம் இதயம் தீண்டும்; 

பன்னீரில் நனைந்த பூக்களாய் எமைச் சிலிர்க்க வைத்தாய்;

செவிவழி நுழைந்து மனதைச் சொக்க வைத்தாய்;

இலகுவாய் இசை சூக்ஷமங்களைத் தக்க வைத்தாய்; 

(B)பாவங்கள் (காதல், களிப்பு, சோகம், ஏக்கம், பிரிவு...)

 யாவும் உன்னிடம் மண்டியிட்டன;

எங்கள் உள்ளத்தை ஒரேயடியாய்க் கொள்ளை கொண்டன;

குழந்தை, குமரி, கிழவி, ஆண் என எல்லோர் குரலும் உன் (G)கண்டத்திலிருந்து புறப்பட்டது;

ஏழு கண்டத்திலும் நிகரில்லாத குரல் (குயில்) இது எனப் பெயர் பெற்றது;

அன்னக்கிளியில் இளையராஜா நம்பியது இந்த (g) கானக்குயிலை..

உன்னால் அவரா அவரால் நீயா எனச் சொல்ல முடியவில்லை;

இருவர் புகழ்க் கொடியும் உயர்ந்தது; விண்ணை முட்டியது;

மொத்தமாய் எமைச் சுருட்டி பையில் போட்டுக் கொண்டது;

உன்னிடமே (B)பாவத்தைக் கற்றதாய் கூறினார் பாடும் நிலா அன்று;

இதை விட வேண்டுமா உன் திறமைக்குச் சான்று?

48000+ பாடல்கள்,4 தேசிய விருதுகள்,29 மாநில விருதுகள்; 

இவையாவும் ஒரு மகா ஆலமரத்தின் சிற்சில விழுதுகள்;

எம் இதயவானில் மின்னிடும் நீ ஒரு பௌர்ணமி நிலா... 

எந்நாளும் வலம் வரும்

உன் புகழ் உலா...

அந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றோம்;

வெள்ளைப் புறா 

இன்று ஏன் பறந்தது, கையில் வராமலே?

செந்தூரப் பூவே, சில்லென்ற காற்றே தேன் குரல் எங்கே, குயில் குரல் எங்கே?

ஆயிரமாயிரம் வார்த்தைகள் எம் மனதைத் தேற்றாது; கண்ணில் நீரும் வற்றாது;😢


காற்றில் எங்கள் கண்கள், காணாத உன்னைத் தேடுதே.....😭

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

விஜி வெங்கடேஷ்.

*******

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15 ஜூலை 2026

1 கருத்து:

  1. காலை வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. வாசகமும் அருமை.

    ஜானகி அம்மாவின் மறைவு குறித்து சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய கவிதை மனதை கனக்கச் செய்தது. சகோதரி விஜி வெங்கடேஷ் கவிதையை நன்றாக எழுதியுள்ளார்.

    எத்தனை பாடல்கள். அத்தனையும் மறக்க முடியாத பாடல்கள். நாம் இந்த உலகில் உள்ளளவும் மறக்க முடியாத ஒரு சிறந்த பாடகியாக இருந்து அவர் மறைந்தது பெரும் சோகந்தான்.

    தேன் குரலுக்கு சொந்தமான எஸ். ஜானகி அவர்கள் மறைவுக்கு நானும் என் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....