தொகுப்புகள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

ஐயப்பனும் பின்னே தில்லி ரஸோயும் - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நேற்றைய பதிவின் தொடர்ச்சி.....


ஐயப்பனும் பின்னே தில்லி ரஸோயும்!



ஞாயிறு மாலை கிளம்பிய நாங்கள் முதலில் சென்ற கோவில் உக்கிர மாகாளியம்மன் என்றால் அடுத்து நாங்கள் சென்ற இடம் அங்கிருந்து சிறிது தொலைவில் ‘மேஜர் சரவணன்' சாலையில் உள்ள திருச்சியின் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு தான்! திருச்சியில் இத்தனை வருடங்களாக இருக்கிறேன் என்றாலும் இந்தக் கோவிலுக்கு இப்போது தான் செல்ல வாய்ப்பு கிட்டியது!



அழகான அமைப்பு மற்றும் தூய்மையாக பராமரிக்கப்படும் ஒரு கோவில்! நட்சத்திரங்களுக்கான மரங்களும், மூலிகை செடிகளும் சூழ்ந்த அழகான வளாகத்தில் ‘ஐயன்’ நமக்கு அழகுற காட்சித் தருகிறார்! ஐயனோடு, பகவதியும், கன்னிமூல கணபதியும், நாகராஜாவும் தனித்தனி சன்னிதிகளில் காட்சித் தருகின்றனர்!  


அதோடு கோவில் வளாகம் முழுக்க ஆங்காங்கே சிறப்பான வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது! உதாரணமாக என் மனதில் பதிந்த வாசகம் என்றால் ‘மீண்டும் ஏறி அமர முடியாத சிம்மாசனம் - தாயின் மடி!’ இங்கு அமைதி காக்கப்படுகிறது! மெளனம் போற்றப்படுகிறது! செடி கொடிகளிடம் கூட அன்போடு உரையாற்ற சொல்லப்படுகிறது! இங்கு வந்தால் மனதில் அமைதி கிடைக்கும் என்பது உறுதி! 


பாரத பூமியில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட 108 கற்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! இங்கே பெரிய பெரிய செப்பு பானைகளில் வைக்கப்பட்டுள்ள சீரக வெள்ளமும், துளசி வெள்ளமும், வெட்டிவேர் வெள்ளமும் உட்கொண்டால் நம் மனதை மட்டுமல்ல வயிற்றையும் சாந்தப்படுத்தும்! 


இது தனியார் வசம் உள்ள கோவில் என்பதால் மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது! கேரளக் கோவில்களைப் போலவே இங்கும் ‘டிரஸ் கோட்' உண்டு! பெண்கள் சுடிதாரும், ஆண்கள் பேண்ட் ஷர்ட்டிலும் வர அனுமதி உண்டு! ஆனால் பெண்கள் லெகின்ஸும், பேண்ட்டும் போட்டுக் கொண்டு வர அனுமதியில்லை! 


மொத்தத்தில் மனதிற்கான அமைதியும் , இறையுணர்வையும் ஒருசேர பெற்றுக் கொள்ளும் இடமாக திருச்சியின் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் உள்ளது! சென்ற மாதம் நாங்கள் இரவு நேரத்தில் வந்ததாலும் எதேச்சையாக மகள் அன்று டி சர்ட்டும் கார்கோ பேண்ட்டுமாக வந்ததால் அவளை வெளியே நிறுத்தி விட்டு தான் சென்றிருந்தோம் என்பதால் சீக்கிரமே நாங்கள் இருவரும் திரும்பி விட்டோம்! இம்முறை நிதானமாக பார்க்க முடிந்தது!


தில்லி ரஸோய்!




சட்டென்று ஒருநாள் ‘நான் ஆஃபீஸ்ல இருந்து அப்படியே வந்துடறேன்! நீங்க ரெண்டு பேரும் ஆட்டோ பிடிச்சு வந்துடுங்க! நாம வெளில சாப்பிடலாம்! என்றார் என்னவர்! அப்படி நாங்கள் சென்றது தான் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தில்லி ரசோய்! அங்கே சென்ற பின் தான் எங்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது! அருகில் தான் இந்த ஐயப்பன் கோவிலும் இருக்கிறது என்று! அப்படி தான் நாங்களும் முதல்முறையாக சென்றிருந்தோம்! 


தில்லி ரசோயியில் நாங்கள் வட இந்திய உணவுகளை ஆர்டர் செய்து சுவைத்தோம்! ஃபுல்கா ரொட்டி, நான், சப்ஜீஸ் என்று எல்லாமே நன்றாக இருந்தது! இங்கேயே தென்னிந்திய ரெஸ்டாரண்ட்டான அசோக் பவனும் செயல்படுவதால் அங்கே வந்திருந்தவர்கள் தென்னிந்திய உணவுகளை வரவழைத்து உண்டார்கள்!


இப்படியாக அன்றைய நாள் இனிமையாகச் சென்றது! வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த அழகான கோவிலைக் காணத் தவறாதீர்கள்!


**********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

01/09/2026


பட உதவி: Google இருக்க பயமேன்...

7 கருத்துகள்:

  1. பானுமதி வெங்கடேஸ்வரன்1 செப்டம்பர், 2026 அன்று 6:06 AM

    டில்லியில் இருக்கும் ஐயப்பன் கோவில் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன். திருச்சியிலா? அடுத்த முறை வரும்பொழுது முயற்ச்சிக்கிறேன்.
    திருச்சி கண்டோன்மெண்டில் இருக்கும் ஐயப்பன் கோவில் மிகவும் அழகான, சுத்த்மான கோவில்.

    பதிலளிநீக்கு
  2. பானுமதி வெங்கடேஸ்வரன்1 செப்டம்பர், 2026 அன்று 6:07 AM

    வழக்கத்தை விட எழுத்துகள் சிறியதாக இருக்கின்றதே?

    பதிலளிநீக்கு
  3. ஐயப்பன் கோவிலைப் பார்க்கும்போதே அமைதி தெரிகிறது.  அழகான சூழலும் புலப்படுகிறது.  கேரளா பாணியும் தெரிகிறது.  உள்ளே சும்மா குடிப்பதற்கே சீராக, வெட்டிவேர் வெள்ளங்கள்தானா?

    பதிலளிநீக்கு
  4. தனியார் கோவிலா?  நன்றாக பராமரிப்பார்கள்.  நம்ம அறநிலையத்துறை மூக்கை நுழைக்க முயற்சிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  5. வடஇந்திய  உணவு என நான் சாப்பிட்டிருப்பது நான், குல்சா தவிர தாலி வகை உணவுகள்தான்.  சப்ஜி பெயர் கவர்ச்சியாக இருக்கிறதே தவிர, ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தபோது கவரவில்லை! 

    பதிலளிநீக்கு
  6. அழகான அமைதியான கோயில். கேரள பாணியில் நடத்தப்பெறும் கோயிலில் உடை விஷயத்தில் ஸ்ட்ரிக்ட்.

    தில்லி ரசோய்... விலை ரொம்ப அதிகமில்லை... ரோட்டி, நான்.. இப்போதெல்லாம் 40, 60ரூ சாதாரண விலையாக ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. நான் 19 வயது முதல் 22 வயது வரை திருச்சி வாசி..இப்போதைய திருச்சியின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.. வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் குறிப்பிடும் இடங்களையெல்லாம் பார்க்கும் உத்தேசம் இருக்கிறது..படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை..தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....