அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நவராத்திரி கொலு 2026 - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நவராத்திரி நிறைவும் விஜயதசமியும் - 20 அக்டோபர் 2026:
இம்முறை நவராத்திரி நல்லமுறையில் ஆரம்பித்து இன்றோடு நல்லமுறையில் நிறைவும் பெற்றது! விஜயதசமி ஸ்பெஷலாக இன்று பால்பாயசம் பண்ணி அம்பாளுக்கு நிவேதனம் செய்தேன்! பூஜையில் வைத்திருந்த என் ஸ்லோக புத்தகங்களையும் சமஸ்கிருத புத்தகத்தையும் எடுத்து வாசித்தேன்!
இந்த வருடத்தில் வாங்கிய புதிய பொம்மைகள்…
வருடாவருடம் கொலு வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இதோ இரவு ஆரத்தியெடுத்து கொலுவில் வைத்திருந்த மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைத்தாயிற்று!
இம்முறை நவராத்திரியில் எந்த திட்டமிடலும் இல்லாமல் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற் போல் எல்லா நாட்களுமே அன்றைய நிறத்துக்கு ஏற்ற புடவைகளை உடுத்தியிருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் டைரி எழுதுவது போல் அன்றைய தினத்துக்கான இற்றைகளையும் பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறேன்! அவையெல்லாம் உங்கள் எல்லோருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
எங்கள் வீட்டுக்கு இந்த நவராத்திரியில் வருகை தந்த நட்புகள் அனைவருமே தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு கொலுவை கண்டுகளித்து அதில் தாங்கள் ரசித்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொண்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தான் தாம்பூலத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு சென்றனர்!
இவ்வருடம் எங்களுக்கு கிடைத்த சில தாம்பூலப் பரிசுகள்!
பண்டிகைகள் என்றாலே வீட்டில் கூடுதலான வேலைகள் இருக்கும் என்றாலும் அதில் குடும்பத்தினரின் பங்களிப்பும், உதவிகளும் நம்மை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்! அப்படி இந்த நவராத்திரியில் என்னை உற்சாகத்துடன் வலம் வர உதவிய என்னவருக்கும் மகளுக்கும் இந்நேரத்தில் என் அன்பான நன்றியை சொல்லிக் கொள்கிறேன்!
நல்லதே நடக்கணும்! நலமே சூழ இருக்கணும்!
*******
இன்றைய பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
22 அக்டோபர் 2026







பள்ளிக்காலங்கள், கல்லூரிக்காலங்கள் முடிந்த பிறகு சரஸ்வதி பூஜையில் என்ன புத்தகங்கள் வைப்பது என்கிற சிறு குழப்பம் வரும்! நான் வரவு செலவு நோட்டையெல்லாம் கூட வைத்திருந்திருக்கிறேன்!
பதிலளிநீக்குஆமாம் சார். உண்மை தான்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
ஒருவருடன் ஒருவர் கூடி மகிழ்ந்து, உறவுகளையும் நட்புகளையும் பேணி, நல்லெண்ணங்களை வளர்த்து அவற்றை எங்கும் பரவ விடுவதற்கு இது மாதிரி நிகழ்வுகள் பெரிய உதவி செய்கின்றன. வாழ்க...
பதிலளிநீக்குஅவசர உலகில் எல்லோரும் சந்தித்துக் கொள்வதற்கு இதுபோன்ற பண்டிகைகள் தான் உதவுகின்றன.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குகலந்து பேசி மகிழ்வாய் நட்புகள் , சொந்தங்களுடன் இந்த பண்டிகையை நல்ல படியாக நவராத்திரி நாயகிகள் நடத்தி கொடுத்து விட்டார்கள்.
//பண்டிகைகள் என்றாலே வீட்டில் கூடுதலான வேலைகள் இருக்கும் என்றாலும் அதில் குடும்பத்தினரின் பங்களிப்பும், உதவிகளும் நம்மை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்//
உண்மை..
ஆமாம் அம்மா. அம்பாள் தான் தன்னுடைய விழாவை சிறப்பாக நடத்திக் கொள்வாள் என்பது தான் உண்மை. நாம் ஒரு கருவி மட்டுமே.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நவராத்திரி பதிவுகள் நன்றாக இருந்தன. மகளும் கலந்துகொண்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபரிசுப் பொருட்களை மதிக்கிறேன். இருந்தாலும் இவைகளுக்குப் பதிலாக, ஒரு கடலை மிட்டாய் அல்லது கர்சீப் கொடுத்தால்கூட போதும் என்றே நினைக்கிறேன். காரணம் இத்தகைய சிறிய சிறிய பரிசுகள் வீட்டில் சேர்ந்து என்ன பண்ணுவது என்றே தெரியாமல் சில வருடங்கள் கழித்து தூரப்போட வேண்டியிருக்கிறது.
தாங்கள் சொல்வது உண்மை தான்! சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்கு கொலு பார்க்கச் சென்ற போது ஊதுபத்தி பாக்கெட்டாக தாம்பூலத்தில் வைத்து தந்தார்க்ள்! உபயோகமான பொருள் தான்! ஆனாலும் நம் மக்களின் பார்வை இருக்கிறதே! எதையும் குறை கூறும் சமூகம் இல்லையா!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
இன்றுதான் இந்தப் பதிலைப் படித்தேன். ஊதுபத்தி, அழகு சாதனப் பொருட்கள், அதாவது கண்ணாடி, பவுடர் போன்றவை, தாம்பூலத்தில் வைத்துக்கொடுப்பது உயர்ந்தது என்று. ஆனால் பொதுவா பெரும்பாலானவரின் மனம், கொடுத்த பொருளின் விலையைத்தான் யோசித்து ஜட்ஜ் செய்யும், மனதை அல்ல. அதனால்தான் விலை கண்டுபிடிக்க கஷ்டமான சிறிய பொருட்களைத் தேடி வழங்குகிறார்கள் போலிருக்கிறது.
நீக்குசில வாரங்கள் முன்பு, திருநாங்கூர் திவ்யதேசங்களுக்குச் சென்றிருந்தபோது, ஒரு கோவில் சன்னிதியில் ரொம்ப வாசனையான ஊதுபத்தி புகைந்துகொண்டிருந்தது. அது எங்கு வாங்கியது, என்ன பிராண்ட் என்று நான் அர்ச்சகரிடம் கேட்டபோது, அவர், உங்களை மாதிரி பக்தர்கள்தாம் இங்கு வரும்போது இதனை வாங்கிக் கொடுத்திருக்கிறார், என்ன பிராண்ட் என்றெல்லாம் தெரியாது என்றார். (அட.. கோயிலுக்குத் தேவையான சின்னச் சின்ன பொருட்களை வாங்கிக் கொடுப்போம் என்று ஏன் தோணவில்லை என்று நினைத்துக்கொண்டேன்)
புதிய பொம்மைகள் இருப்பவைகளுக்குப் பதிலாகவா இல்லை புதிதாகவா? பொம்மைகள் அதிகம் சேர்ந்துவிடாது?
பதிலளிநீக்குவருடாவருடம் ஏதேனும் ஒரு பொம்மை வாங்க வேண்டும் என்ற நியதியை பின்பற்றி வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு அறையின் பரண் முழுவதுமே கொலு பொம்மைகள் தான்! கொலு வைத்துக் கொண்டிருக்கும் எல்லோர் வீட்டிலுமே இப்படித்தானே இருக்கும்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
பண்டிகைகள் வந்தாலே மகிழ்ச்சியும் கூடி வரும்.
பதிலளிநீக்குநவராத்திரி விழாவும் கொலுப் பொம்மைகளும் அழகாக உள்ளன.