தொகுப்புகள்

▼

வியாழன், 29 அக்டோபர், 2026

நடை நல்லது - மீண்டும் தொடர்ந்த நடை - மனிதர்கள் பலவிதம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பை நேசிப்போம் - 100 புத்தகங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காலை நேர நடையில் தடை! இரவு நீண்ட நேரம் விழித்து இருப்பதால் காலை நேரங்களில் எழுந்திருக்க ஒரு சோம்பல்! அதனால் நடைக்குத் தடை. கொஞ்சம் பழக்கம் விட்டுவிட்டால் கூட ஒரு வித சோம்பல் வந்துவிடுகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் போனால், மீண்டும் மனதை ஒரு நிலைப்படுத்தி காலை நேரம் சீக்கிரம் எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தோம்.  நடுவே இல்லத்தரசி எத்தனையோ முறை சொன்னாலும் ஏனோ விரைவில் எழுந்து நடக்கத் தோன்றவே இல்லை.  சில நாட்களாக மீண்டும் நடை தொடங்கிவிட்டோம் - ஒரு வழியாக! ஒவ்வொரு நாளும் காலை நேரம் எழுந்து வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பி, வரும் வழியில், தோப்பு ஒன்றினை அழித்து புதியதாக வீட்டு மனைகளாகப் பிரித்து நடுவே சாலைகள் அமைத்து இருக்கும் இடத்தில் இரண்டு சுற்று! அதன் பிறகு வீடு வந்து சேர்கிறோம். கிட்டத்தட்ட 45 நிமிட நடை. 





நடையை விட்டதில் இழந்தது எது என்று யோசிக்கும்போது காலை நேரத்தின் அமைதி, அந்த அமைதியில் காதில் கேட்கக் கிடைக்கும் பல பறவைகளின் குரல்கள், மயில்களின் அகவல், மேய்ச்சலுக்குப் புறப்பட்ட ஆநிரைகள், வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் அந்த நேரத்திலேயே புறப்பட்டு, நடந்து போகும் பெண்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் ஆண்கள், காலை நேரத்தில் வழியில் இருக்கும் Turf - இல் விளையாடச் செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் என எல்லாவற்றையும் பார்க்கும்போது மனதில் ஒரு வித புத்துணர்வு நமக்குள்ளும் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறது.  அந்தப் புத்துணர்வு நாள் முழுவதும் இருப்பது கண்கூடு! வீட்டு மனைகள் போட்டிருக்கும் இடத்தில் ஒரு அப்பா தன் இரு மகள்களுடன் வந்து Jogging செய்வது, Exercise செய்வது என்று அந்த காலை நேரத்திலேயே பரபரப்பாக இருக்கிறார்.  சின்ன மகள் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாக இருக்க, அவ்வப்போது அவரை கண்டித்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட வைக்கும்போது கொஞ்சம் புன்னகை எங்கள் முகத்தில்!





பேசிக்கொண்டே நடக்கும் எங்களைப் போலவே இன்னும் ஒரு தம்பதியினர் - ஒரு பக்கம் அலைபேசியில் ஏதோ ஒரு ஸ்லோகம் ஓடிக்கொண்டிருக்கிறது. சில ஆண்கள் - மூன்று நான்கு பேராக நடக்கும்போது தான் உலக அரசியல், வியாபாரம், விளையாட்டு என பலவற்றையும் அலசியபடி செல்கிறார்கள்.  எல்லாம் கோடிகளில் தான் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடிந்தது - லட்சங்கள் எல்லாம் இப்போது பேசுவதில்லை - ஏதோ ஒரு Flat குறித்து பேசும்போது ஒரு வீடு மூன்றரை கோடி என்றார்.  எனக்கு சினிமாவில் வரும் “ஒரு கோடிப்பே!” நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.  மக்களுக்கு வீட்டு மனைகள்/வீடுகள் வாங்குவதில் இருக்கும் மோகம் குறைவதே இல்லை.  அதனால் தான் பல இடங்களில் Whether it is worthy or not, வீட்டு மனைகளின்/வீடுகளின் விலை வானளாவி நிற்கிறது.  பலராலும் எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தினைத் தொட்டு நிற்கிறது! வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுப்பதால் மக்களின் Buying Power அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. 





காலை நேர நடையின் போது பார்த்த ஒரு முதியவரும் மூதாட்டியும் பேசிக்கொண்டே நடந்தது மனதைத் தொட்டது.  இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வயதிலும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? வீட்டில் யார் அவர்களுடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் என் யோசனையாக இருக்க, அவர்கள் எந்தவித கவலைகளும் இல்லாதது போல பேசிக்கொண்டே நடந்தார்கள். எதிரே வரும் மனிதர்களை நோக்கி புன்னகை புரியவும் தவறவில்லை.  இன்னும் ஒரு நபர் ஏதோ செடியைத் தேடி அதிலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டிருக்க அந்த முதியவரும் மூதாட்டியும் நடப்பதை நிறுத்தி, “என்ன பறிக்கிற?” என்று கேட்க, அந்த நபர் “இது துத்தி இலை, Piles க்கு நல்லது, அதான் பறிக்கிறேன்!” என்றார்.  யோசனையுடன் அவர்கள் மேலும் நடக்க, அவர்கள் பேசிய சில விஷயங்கள் காதில் கேட்டது.  அது பிறகு சொல்கிறேன். மேலே உள்ள படம் தான் அந்த முதியவர்களுடைய படம்! இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்னென்ன எண்ணங்கள் தோன்றியது! அது கவிதையாகவும் இருக்கலாம், கதையாகவும் இருக்கலாம்! எழுதி அனுப்புங்களேன் - எனது மின்னஞ்சல் முகவரிக்கு! (venkatnagaraj@gmail.com).  இங்கே பிரசுரிக்கிறேன். 


மேலும் நடை தொடர்ந்து கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளும் - கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே!  முடிந்த போதெல்லாம் நடை நல்லது பதிவு வழி உங்களைச் சந்திக்கிறேன் நண்பர்களே! 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 அக்டோபர் 2026


12 கருத்துகள்:

  1. மீண்டும் நடை ஆரம்பித்து விட்டது நல்ல விஷயம்.  நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை!  காலை நேரத்தில் நீங்கள் இழக்கும் ,மயிலின் அகவல் எல்லாம் இங்கே கேட்காது!  ஆனால் காலை நேரத்தின் சுகம் எங்கேயும் எப்போதும் வராது.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை.  அந்த வயதான ஜோடி நடந்து செல்லும் பாதை கவர்கிறது.  உங்களுக்கு முன்னால் நடந்த ஜோடியைதான் நீங்கள் படம் பிடித்திருக்கிறீர்கள் என்றால் அந்தப் பாதையில் நடப்பதற்கே நீங்கள் கொடுத்து வைத்தவர்!

    பதிலளிநீக்கு
  3. அந்தப படத்துக்கு ஒரு கவிதை மாதிரி எழுதி பார்க்கிறேன்.

    வாழ்க்கைப்பாதை 

    கடந்து வந்த 
    தூரத்தைவிட 
    குறைவாகத்தான் இருக்கும் 
    எதிரே உள்ள தூரம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த 
      தூரத்தைவிட 
      குறைவாகத்தான் இருக்கும் 
      கடக்க உள்ள தூரம் 

      நீக்கு
  4. இணைந்து செல்லும்போது 
    வளைந்து செல்லும் 
    பாதைகளின் தூரம் 
    பாதிப்பதில்லை 
    மனதை எப்போதும்!

    பதிலளிநீக்கு
  5. அந்தப் படத்துக்கான சின்னஞ்சிறு கதை :

    "நம்மோடு வந்த புள்ளைங்களை காணோமேங்க..  எங்கே முன்னாடி போயிட்டாங்களோ.."

    மௌனமாக நடந்தார் அவர்.  அவர் மனம் சிந்தனையில் இருந்தது.

    "எங்கே போறோம்னு சொல்லவும் இல்லை...  நாம எங்கே போயி அவங்களை பிடிக்க..?"

    அவர் மௌனம் கண்டு மேலும் சொன்னாள் : "திக்கு திசை தெரியல..  நாம எங்க இருக்கோம்?"

    திரும்பி மனைவியைப் பார்த்தவர் இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போல பேச ஆரம்பித்தார்.

    "இவங்கள்லாம் பொறக்கறதுக்கு முன்னாடி நாம எங்கே இருந்தோம், என்ன பண்ணினோம்னு ஞாபகம் இருக்கா செவந்தி?"

    செவந்தியின் முகம் சட்டென கனிந்தது.

    "இல்லாம என்ன..   கொஞ்சமாவா பாடு பட்டோம்..?"

    "மூணு புள்ளைகளையும் சேர்த்து ஐந்து வயித்தைக் கழுவ நாம அப்போ பாடுபட்டு ஜெயிச்சோம்.  இப்போ, இந்த வயசுல நாம ரெண்டு பேர் பாட்டை பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கறியா செவந்தி?"

    ஏதோ புரிந்தது போல இருந்தது செவந்திக்கு.  மௌனமாக, ஆனால் உறுதியுடன் அவருடன் நடந்தாள்.

    பதிலளிநீக்கு
  6. நடை நல்லது. தொடருங்கள்.

    நான் மிக வேகமாக நடப்பவன். சாதாரண சமயத்திலும் வேகம் அதிகம். அதனால் மனைவியுடன் சேர்ந்து நடப்பது மிக ஆபூர்வம்.

    பதிலளிநீக்கு
  7. வயதானவர்கள் அன்றைய வேலையில் ஈடுபடுவதை, ஏன் கைவிடப்பட்டவர்கள்னு நினைக்கணும்?

    முடிந்தவரை உழைப்போம் என்ற எண்ணமாக ஏன் இருக்கக்கூடாது?

    ஆனால் மிகுந்த வயதானவர்கள் காய்கறி பழம் போன்றவைகளை மார்க்கெட்டில் விற்கும்போது ஒரு பாவ உணர்ச்சி என்னுள் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  8. கோவிலுக்காகத்தான் ஶ்ரீரங்கத்தில் போட்டி போட்டுக்கொண்டு வீடு வாங்கி, பிறகு ஓரிரு தடவைகள் கோயிலுக்குச் சென்று பிறகு கோயிலையே மறந்துவிடுகிறார்கள்னு சொன்னா பலர் கோபிக்கக்கூடும். வெளியாட்கள் பண பலத்தால் இடம் வாங்கிப் போடுவதால் வீட்டு விலை மிகவும் அதிகரித்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  9. அச்சச்சோ...  மெயிலுக்கு அனுப்பப் சொல்லி இருந்தீர்களோ...  இங்கேயே கொடுத்து என் சான்சை கெடுத்துக் கொண்டு விட்டேனே...  இங்கு வேண்டுமானால் அழித்து விட்டு பின்னர் பிரசுரம் செய்யலாமே..  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  10. வாசகம் அருமை.
    நடைபயிற்சியில் பார்த்த காட்சிகளை , கேட்டவைகளை பகிர்ந்து கொண்டது அருமை.
    ஊமத்தம் பூ வெண்மை கண்ணை கவர்கிறது.
    வயதான இருவர் வேலைக்கு செல்கிறார்கள் இருவரும் பேசி கொண்டே நடப்பது மகிழ்ச்சி.

    அவர்களை பற்றி ஸ்ரீராம், எழுதி அனுப்பிய குட்டிக் கதை, மற்றும் கவிதைகள் நன்றாக இருக்கிறது.
    குழந்தைகள், பேரன்கள் அருகில் இருந்தாலும் உழைத்து கொண்டே இருப்பார்கள் சிலர்.
    அதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் இருக்கும். வழியில் பார்த்தவர்களிடம் பேசி சிரித்து போகும் போது அவர்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....