தொகுப்புகள்

திங்கள், 23 நவம்பர், 2009

மூலி [முள்ளங்கி] பராட்டா




ஒரு பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பராட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்து இருந்தேன். அது இங்கே.

இப்போ மூலி [முள்ளங்கி] பராட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
முள்ளங்கி - தோல் சீவி துருவியது: ஒரு கப்.
இஞ்சி - தோல் சீவி துருவியது - இரண்டு ஸ்பூன்.
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு.
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய முள்ளங்கியை நன்றாக பிழியவும். பிழிந்த சாற்றினை கொட்டி விடவும். முள்ளங்கியில் தண்ணீர் அதிகம் இருந்தால் பராட்டா நன்றாக இட வராது. சில பேருக்கு நெஞ்சு கரிக்கலாம். பிழிந்த முள்ளங்கி துருவலில், இஞ்சி துருவல், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு முள்ளங்கி உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராத படி மெதுவாக இடவும்.

இப்படி செய்த பராட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும்.

இந்த முள்ளங்கி பராட்டாவிற்கு - காய்கறி ஊறுகாய் மற்றும் தயிர் நல்ல சைடு டிஷ்.

செஞ்சு பார்த்து அசத்துங்க.

என்ன இந்த வாரம் உங்கள் மெனு லிஸ்டில் மூலி [முள்ளங்கி] பராட்டாவும் உண்டு தானே?

5 கருத்துகள்:

  1. ///பிழிந்த சாற்றினை கொட்டி விடவும். ///

    சாற்றைக் கொட்டாமல் கோதுமை மாவு பிசையும் போது பயன் படுத்தலாம். சாற்றில்தான் சத்து இருக்கும். கொட்டிவிட்டால் வெறும் முள்ளங்கி சக்கையால் பயனேதும் இல்லை. :)

    பதிலளிநீக்கு
  2. ///சில பேருக்கு நெஞ்சு கரிக்கலாம். //

    மாவு பிசையும் போது இரண்டு டேபிள் ஸ்பூன் ஓமத் தண்ணீர் அல்லது ஓமம் சேர்த்தால் இந்த பிரச்சினை இருக்காது.

    பதிலளிநீக்கு
  3. //உள்ளே உள்ள Stuffing வெளியே வராத படி மெதுவாக இடவும்.//

    இவ்வளோ சிரமப்படுவானேன்? ஒரு சப்பாத்திக்கான மாவு உருண்டையை இரண்டாக பிரித்து சின்ன சின்னதாய் இரண்டு சப்பாத்தி இட்டுக் கொண்டு, நடுவில் முள்ளங்கி உருண்டையை வைத்து மேலே லேசா குழவியை ஓட்டினால் முடிந்தது கதை.

    பதிலளிநீக்கு
  4. //மாவு பிசையும் போது இரண்டு டேபிள் ஸ்பூன் ஓமத் தண்ணீர் அல்லது ஓமம் சேர்த்தால் இந்த பிரச்சினை இருக்காது. //

    தகவலுக்கு நன்றி. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    பதிலளிநீக்கு
  5. சாப்பிட நல்லா இருக்கும்னு தெரியுது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....