[பட உதவி: கூகிள்]
இந்த வார செய்தி: சில மாதங்களுக்கு
முன்பு நடந்த தேர்தலுக்குப் பின் உத்திரப்
பிரதேச மாநில ஆட்சி மாயாவதியிடமிருந்து
சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் வசம் வந்தது. முன்பு முலாயம் சிங் யாதவ்
ஆட்சியிலேயே அவர் கட்சி உறுப்பினர்களின் அடாவடித் தனங்கள் மிக மிக அதிகம். தேர்தலில்
அப்போது தோற்றதற்கு அது காரணமாக அமைந்தது. இப்போது இரண்டு தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு
வந்தும் அப்படியே தான் இருக்கிறார்கள்.
பதிவியேற்ற பிறகு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்
செய்த அடாவடிகள் தாங்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு Height என்று உண்டல்லவா? லக்னோவிலிருந்து
தியோரியாவிற்கு ட்ரயின் மூலம் வந்து சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை வரவேற்க நானூறுக்கும்
மேற்பட்ட அடிப்பொடிகள் வந்து காத்திருந்தனர். கூடவே ஒரு குதிரையும் நடைமேடையில் காத்திருந்தது.
சட்டமன்ற உறுப்பினர் வந்து சேர்ந்ததும், பேண்ட்
வாத்தியங்கள் முழங்க, அவர் குதிரையில் அமர்ந்து, நடைமேடையிலேயே குதிரை சவாரி செய்திருக்கிறார்.
ஸ்டேஷனில் இருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளைப் பற்றி அவருக்கோ, அவரது அடிப்பொடிகளுக்கோ
என்ன கவலை? தட்டிக்கேட்ட ஒரு இளைஞரை அவரது அடிப்பொடிகள் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.
அடித்தது மட்டுமல்லாது அவருக்கு ’பிக்பாக்கெட்’ பட்டமும் கட்டி விட்டார்கள்.
இவர்களது தொல்லை தாங்கவில்லை! அரசியலில் இருப்பதால்
என்ன செய்தாலும் தாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் திருவாளர் பொதுஜனம்!
சில நாட்களாகவே இதைப் பற்றி எழுத நினைத்தாலும், தள்ளிப் போட்டு வந்தேன். கொஞ்சமாக எழுத
நினைத்ததால் இந்தப் பகுதியிலே எழுதினேன். எப்போதுதான் இவர்கள் மாறுவார்களோ! அவர்களுக்கும்
ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
முகப்புத்தகத்தில் ஒரு தோழி இருக்கிறார். தினம்
ஒன்றிற்கு குறைந்தது ஏழெட்டு முறையாவது “Status Message” மாற்றிவிடுகிறார். சில நாட்களில்
போடும் இற்றைகள் பற்றி நாம் சொன்னால் அடி விழும். அந்த தோழியின் ஒரு இற்றையினை இந்த
பகிர்வில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கணவர்: என் மனைவி செய்த பர்ஃபி சாப்பிட்டதால்!
மருத்துவர்: பர்ஃபி வேண்டாமென மறுத்திருக்கலாமே?
கணவர்: மறுத்திருந்தால் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்
:(
இந்த வாரக் காணொளி:
சில சமயங்களில் மருந்து மாத்திரைகள் அவசியமல்ல
என்பதை அழுத்திச் சொல்லும் விளம்பரம்….
இந்த வார குறுஞ்செய்தி:
மனைவி: என்னங்க சொர்க்கத்திலே கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே?
கணவன்: அதனால தான் அதை சொர்க்கம்-னு சொல்றாங்க!
மனைவி: ??????
இந்த வாரக் குட்டிக்கதை:
ஒரு முனிவர் தனது சிஷ்யனைப் பார்த்துக் கேட்டாராம்
“கோபத்திலிருக்கும் இரு நபர்கள், தங்களுக்குள் மிக சத்தமாகக் கத்திப் பேசுவது ஏன்?”
சில நிமிடங்கள் யோசித்தபிறகு அவருடைய ஒரு சிஷ்யர் சொன்னாராம், கோபத்தில் இருக்கும்போது
நிதானத்தினை இழந்துவிடுகிறோம். அதனால் தான் இப்படி சத்தமாகப் பேசுகிறோம். அதற்கு முனிவர்
”சரிதான். ஆனால் அந்த நபர் பக்கத்திலேயே இருக்கும்போது இத்தனை சத்தமாக ஏன் பேசவேண்டும்.
மெதுவாகப் பேசினாலே அவருக்குக் கேட்குமே?” என்று கேட்டாராம். ஒவ்வொரு சிஷ்யரும் ஒரு
பதில் சொல்ல, அதையெல்லாம் கேட்ட முனிவர் இதெல்லாம் இல்லை. இதைவிட ஒரு முக்கியமான விஷயம்
இருக்கிறது என்று சொன்னாராம்.
அந்த விஷயம் என்னவென்றால், ”அந்த இரு நபர்களும் கோபத்தில் இருக்கும் போது, அவர்களது
இதயம் வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறது. அதனால் தான் அவர்கள் இத்தனைச் சத்தமாகப்
பேசுகிறார்கள். எத்தனை கோபமாக இருக்கிறார்களோ அத்தனை தொலைவு அவர்களது இதயம் சென்றுவிட,
இன்னும் அதிகமாகக் கத்துகிறார்கள். அதுவே இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால்
அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும்
நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை, பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”
எவ்வளவு உண்மையான விஷயம்!
மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.