ஜூலை முதல் ஞாயிறன்று தில்லி இர்வின் சாலையில் [தற்போதைய பாபா கடக் சிங்
மார்க்] உள்ள அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். ஜூன் மாதம்
பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நண்பர் ஞாயிறன்று நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்திருந்தார். தில்லியின் புகழ்பெற்ற சுப்பராம பாகவதர் குழுவிலிருக்கும்
திரு ஜே. ராமகிருஷ்ணன் மற்றும் ஓ.வி. ரமணி குழுவினர் திவ்யமாய் நாம சங்கீர்த்தனம்
செய்தனர். பக்கவாத்தியமாக மிருதங்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும்
திரு ரங்கராஜன் செவிக்கு உணவளித்தார்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் இக்கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் கோல்
மார்க்கெட் விஷ்ணு சஹஸ்ரநாம சங்கத்தினர் இந்நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டனர்.
அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில் தில்லியிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இந்த
ஊர்க்காரர்களால் “மலாய் மந்திர்” என அழைக்கப்படும் ராமகிருஷ்ண புரத்திலுள்ள மலை
மந்திர் [உத்தர ஸ்வாமிமலை] புகழ்பெற்றதாக இருந்தாலும், அதை விட பழைய கோவில் அபீஷ்ட
வரசித்தி விநாயகர் கோவில்.
ஜே.கே. பிர்லா அவர்கள் வழங்கிய இடத்தில் திரு சங்கர ஐயர் அவர்களால்
நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 31 அக்டோபர் 1952-ல் முதல் முறையாக
நடத்தப்பட்டது. 47 வருடங்களுக்குப் பிறகு 22 ஏப்ரல் 1999-ல் புனருத்தாரணம்
செய்யப்பட்டது. இக்கோவில் பிரதான தெய்வமான அபீஷ்ட வரசித்தி விநாயகர் உருவத்தில்
மிகச் சிறியதாக இருந்தாலும், கீர்த்தியில் பெரியவர். விசேஷ நாட்களில் தங்கக் கவசமணிந்து
ஜொலிக்கிறார்.
விநாயகர் தவிர நவக்கிரங்கள், துர்காதேவி, ஹரிஹரபுத்ரன், குருவாயூரப்பன்,
ஆஞ்சனேயர், சுப்ரமண்யர் ஆகியோருடைய சந்நிதிகளும் இங்கே உண்டு. பிரதோஷம்,
சனிக்கிழமைகளில் இங்கே நிறைய பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி இன்புறுகிறார்கள்.
பொதுவாகவே சனிபகவான் என்றாலே பலருக்கு பயம். அதுவும் வட இந்தியர்களுக்கு சனிஜி
என்றாலே பயம்ஜி! சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து சனிபகவானுக்கு அர்ச்சனை
செய்து வெளியே அமர்ந்திருக்கும் வறியவர்களுக்கு தானம் செய்துவிட்டுப் போவார்கள்.
மாதத்தின் முதல் ஞாயிறுகளில் இங்கே திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. வயதான பெண்கள் வந்து திருப்புகழ் பாடல்
பாடுகின்றனர்.
இங்கே இருக்கும் உற்சவ மூர்த்திகள் அழகு. சாதாரணமாக பலர் மஹாபாரத கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும்,
பீஷ்மருக்கும் உலகத்தில் உள்ள அனைத்தும் தன்னுள் அடங்கியிருப்பதைக் காண்பித்த
விராட ரூபத்தினை புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அந்த விராட ரூபத்தினை சிலையில்
பார்த்திருப்பது கடினம். வேறெங்கும் பார்த்திராத விராட ரூபத்தில் ஒரு உற்சவ மூர்த்தி இக்கோவிலில்
இருக்கிறது.
[பட உதவி: கூகிள்]
இக் கோவிலுக்குப் பக்கத்தில் வட இந்திய கோவில் ஒன்றும், ப்ராச்சீன் [புராதனமான!]
ஹனுமான் கோவிலும் உள்ளன. செவ்வாய், வியாழன் கிழமைகளில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள். கோவில் பக்கத்திலே வளையல் கடைகளும், மெஹந்தி
போடுபவர்களும், டாட்டூ போடுபவர்களும் நிறைய இருப்பார்கள். நம் ஊரில் பெண்கள் வளைகாப்பிற்கு வளையல்கள்
அடுக்கிக் கொள்வார்கள் என்றால், இங்கே திருமணம் அன்று அடுக்கிக் கொண்ட வளையல்களை
பல மாதங்களுக்குக் கழட்டுவதில்லை! விதவிதமான, அழகான வளையல்கள் இங்கே கிடைக்கும்.
[பட உதவி: கூகிள்]
எங்கு சென்றாலும், சாப்பாட்டுக் கடைகளும் நமக்கு முக்கியமல்லவா. இங்கேயும் வெளியே சமோசா, பகோடா, பானிபூரி, பேல் பூரி,
ஆலு டிக்கா, என பலவித வாசனைகள் நாசியை அடைந்து நாவில் எச்சிலூற வைக்கும். பிறகென்ன, சப்புக் கொட்டி சாப்பிட்டு பர்ஸை கொஞ்சம்
“லைட்” ஆக்கி, வயிற்றை “ஹெவி”யாக்கிவிட வேண்டியது தான்!
சரி கோவில் என ஆரம்பித்து சாப்பிடுவதில் முடித்து விட்டேனோ! ”நீ சரியான சாப்பாட்டு
ராமன்”னு சொல்லிடப் போறாங்க! ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் பாராவில் பணியிலிருந்து ஓய்வு
பெற்றார்னு சொன்னேனே, அவருக்கு நண்பர் ஒருவர் அழகான விஷ்ணு படத்தை பரிசளித்தார். அதில் என்ன விசேஷம்னு கேட்கறீங்களா?
படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே
அந்த படம் வரையப் பட்டிருந்தது! திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்…
மீண்டும் ”தலைநகரிலிருந்து…” தொடரின் வேறோர் பகுதியில் சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.