திங்கள், 30 ஜூலை, 2012

தலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்ட வரசித்தி விநாயகர்




ஜூலை முதல் ஞாயிறன்று தில்லி இர்வின் சாலையில் [தற்போதைய பாபா கடக் சிங் மார்க்] உள்ள அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நண்பர் ஞாயிறன்று நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தில்லியின் புகழ்பெற்ற சுப்பராம பாகவதர் குழுவிலிருக்கும் திரு ஜே. ராமகிருஷ்ணன் மற்றும் ஓ.வி. ரமணி குழுவினர் திவ்யமாய் நாம சங்கீர்த்தனம் செய்தனர். பக்கவாத்தியமாக மிருதங்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் திரு ரங்கராஜன் செவிக்கு உணவளித்தார்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் இக்கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் கோல் மார்க்கெட் விஷ்ணு சஹஸ்ரநாம சங்கத்தினர் இந்நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டனர். அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில் தில்லியிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இந்த ஊர்க்காரர்களால் “மலாய் மந்திர்” என அழைக்கப்படும் ராமகிருஷ்ண புரத்திலுள்ள மலை மந்திர் [உத்தர ஸ்வாமிமலை] புகழ்பெற்றதாக இருந்தாலும், அதை விட பழைய கோவில் அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில். 

ஜே.கே. பிர்லா அவர்கள் வழங்கிய இடத்தில் திரு சங்கர ஐயர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 31 அக்டோபர் 1952-ல் முதல் முறையாக நடத்தப்பட்டது. 47 வருடங்களுக்குப் பிறகு 22 ஏப்ரல் 1999-ல் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோவில் பிரதான தெய்வமான அபீஷ்ட வரசித்தி விநாயகர் உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், கீர்த்தியில் பெரியவர். விசேஷ நாட்களில் தங்கக் கவசமணிந்து ஜொலிக்கிறார். 

விநாயகர் தவிர நவக்கிரங்கள், துர்காதேவி, ஹரிஹரபுத்ரன், குருவாயூரப்பன், ஆஞ்சனேயர், சுப்ரமண்யர் ஆகியோருடைய சந்நிதிகளும் இங்கே உண்டு. பிரதோஷம், சனிக்கிழமைகளில் இங்கே நிறைய பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி இன்புறுகிறார்கள். பொதுவாகவே சனிபகவான் என்றாலே பலருக்கு பயம். அதுவும் வட இந்தியர்களுக்கு சனிஜி என்றாலே பயம்ஜி! சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வெளியே அமர்ந்திருக்கும் வறியவர்களுக்கு தானம் செய்துவிட்டுப் போவார்கள். 

மாதத்தின் முதல் ஞாயிறுகளில் இங்கே திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது.  வயதான பெண்கள் வந்து திருப்புகழ் பாடல் பாடுகின்றனர்.  



இங்கே இருக்கும் உற்சவ மூர்த்திகள் அழகு.  சாதாரணமாக பலர் மஹாபாரத கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் உலகத்தில் உள்ள அனைத்தும் தன்னுள் அடங்கியிருப்பதைக் காண்பித்த விராட ரூபத்தினை புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.  ஆனால் அந்த விராட ரூபத்தினை சிலையில் பார்த்திருப்பது கடினம்.  வேறெங்கும் பார்த்திராத விராட ரூபத்தில் ஒரு உற்சவ மூர்த்தி இக்கோவிலில் இருக்கிறது. 


[பட உதவி: கூகிள்]

இக் கோவிலுக்குப் பக்கத்தில் வட இந்திய கோவில் ஒன்றும், ப்ராச்சீன் [புராதனமான!] ஹனுமான் கோவிலும் உள்ளன.  செவ்வாய், வியாழன் கிழமைகளில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள்.  கோவில் பக்கத்திலே வளையல் கடைகளும், மெஹந்தி போடுபவர்களும், டாட்டூ போடுபவர்களும் நிறைய இருப்பார்கள்.  நம் ஊரில் பெண்கள் வளைகாப்பிற்கு வளையல்கள் அடுக்கிக் கொள்வார்கள் என்றால், இங்கே திருமணம் அன்று அடுக்கிக் கொண்ட வளையல்களை பல மாதங்களுக்குக் கழட்டுவதில்லை!  விதவிதமான, அழகான வளையல்கள் இங்கே கிடைக்கும். 


[பட உதவி: கூகிள்]


எங்கு சென்றாலும், சாப்பாட்டுக் கடைகளும் நமக்கு முக்கியமல்லவா.  இங்கேயும் வெளியே சமோசா, பகோடா, பானிபூரி, பேல் பூரி, ஆலு டிக்கா, என பலவித வாசனைகள் நாசியை அடைந்து நாவில் எச்சிலூற வைக்கும்.  பிறகென்ன, சப்புக் கொட்டி சாப்பிட்டு பர்ஸை கொஞ்சம் “லைட்” ஆக்கி, வயிற்றை “ஹெவி”யாக்கிவிட வேண்டியது தான்!



சரி கோவில் என ஆரம்பித்து சாப்பிடுவதில் முடித்து விட்டேனோ! ”நீ சரியான சாப்பாட்டு ராமன்”னு சொல்லிடப் போறாங்க!  ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் பாராவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்னு சொன்னேனே, அவருக்கு நண்பர் ஒருவர் அழகான விஷ்ணு படத்தை பரிசளித்தார். அதில் என்ன விசேஷம்னு கேட்கறீங்களா? படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது!  திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்…

மீண்டும் ”தலைநகரிலிருந்து…” தொடரின் வேறோர் பகுதியில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

ஞாயிறு, 29 ஜூலை, 2012

வெயிலுக்கு இதமாய்....

2010 -ஆம் ஆண்டு வெளியான தனது "The Sunset Club" என்ற புத்தகத்தில் ”நரகம் எப்படி இருக்குமெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா?  ஜூன் மாதத்தில் தில்லிக்கு வாருங்கள் - நரகத்தினை நேரில் காண முடியும்” என திரு குஷ்வந்த் சிங் எழுதியிருப்பார்.  அவர் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை.  அப்படி ஒரு வெயில் தில்லியில்.  ஜூன் மாதம் மட்டுமல்ல ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் வரை தில்லியும் நரகமும் ஒன்று தான்.  

சரி புகைப்படங்கள் என்று சொல்லி விட்டு படம் போடாததால் “படப் பொட்டி வந்துடுச்சா?ன்னு யாரும் கேட்டுடப் போறாங்க! 

அப்புத்தகம் வெளியான அதே 2010 - ல் அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன.  அவற்றை வெயிலுக்கு இதமாய் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  

உறைந்து போன பனி எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறது.... நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண் இங்கே உறைந்து கிடக்கிறாள் - என்ன கவலையோ! 







அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஒரு விண்ணப்பம்:  அடுத்த பயணம் சென்றிருப்பதால், நண்பர்கள் இப்பகிர்வினை தமிழ்மணம், மற்ற திரட்டிகளில் இணைத்து விடுங்களேன், ப்ளீஸ்...  :)  பயணம் எங்கே எனக் கேட்போருக்கு, நிச்சயம் பதிவுகள் உண்டு... அதுவரை சஸ்பென்ஸ்...  :))



வெள்ளி, 27 ஜூலை, 2012

ஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கே



இந்த வார செய்தி:  வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் எண்ணற்ற மக்களுக்காக அரசாங்கத்தினால் தீட்டப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் சரியானவர்களைச் சென்றடைவதில்லையாம். காசு படைத்தவர்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு நலத்திட்டங்களின் பலன்களை அடைந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதுமுண்டு. இதை எப்படி தடுப்பது என்று யோசித்த மத்தியப் பிரதேசத்திலுள்ள “கண்ட்வா” மாவட்டத்தின் டாபியா கிராம நிர்வாகிகள் இதற்கு ஒரு கேவலமான தீர்வினைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

[பட உதவி: கூகிள்]


அது என்ன கேவலமான தீர்வு என்று கேட்பவர்கள் மேலுள்ள படத்தினைப் பாருங்கள். “நான் ஒரு ஏழை” (ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்காக) என ஒவ்வொரு ‘வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் வீடுகளில் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வேலைக்காக வெளியே சென்றிருக்கும் நேரத்தில் எழுதி வைத்துவிடுவார்களாம். இதனால் என்ன பலன் என்று கேட்டால், வறுமைக்கோட்டிற்கு மேலிருந்தாலும், அரசின் சலுகைகளுக்காக, தங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே காட்டிக்கொள்ளும் நபர்கள் வெட்கப்பட்டு தனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்து விடுவார்களாம்! என்ன கொடுமை இது?

சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது ஆர்வக் கோளாறினால் பக்கத்துப் பையன் பென்சிலை எடுத்தால், சில ஆசிரியர்கள் எடுத்த பையனது ஸ்லேட்டில் ”நான் திருடன்” என்று எழுதி பள்ளியைச் சுற்றிவரச் செய்வார்கள். எத்தனை அவமானமாக இருக்கும் அச்சிறுவனுக்கு… அதைப் போலவே தான் இதுவும். ஏழையாக பிறந்தது அவன் தவறா? செய்யும் வேலைக்குச் சரியான கூலி கிடைக்காதது அவன் பிழையா? 

டாபியா கிராமத்தில் மொத்தம் 600 வீடுகள் அதில் 237 வீட்டில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள்.  அதாவது தோராயமாக ஒவ்வொரு இரண்டாவது வீட்டில் இருப்பவர் வீட்டிலும், “நான் ஒரு ஏழை” என்று எழுதப் பட்டிருக்கும்.  இது என்ன ஒரு சந்தோஷப்பட வேண்டிய அங்கீகாரமா?  ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் உலகின் பணக்காரர்கள் பட்டியல் போடும்.  அது போலவா இது?

மாவட்ட அதிகாரிகள் ‘நாங்கள் இதுபோன்ற எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. பஞ்சாயத்து தலைவர்களே இது போன்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்” எனச் சொல்கிறார்களாம்.

படித்தபோது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. கோடிக்கணக்கில் வெளிநாட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன செய்ய/சொல்லப் போகிறார்கள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


[பட உதவி: கூகிள்]

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது… ஏமாற மட்டுமே தெரியும்.

இந்த வாரக் காணொளி:

பரீட்சையில் பிட் அடிக்க நினைப்பது தப்பு கண்ணா!



இந்த வார குறுஞ்செய்தி: 

Problems are like trees.  Seen through a running train – As you approach them, they grow bigger.  Once you pass them, they grow smaller.  That is life!

படித்ததில் பிடித்தது:

”கீழ்வானம் சிவந்தது..
கூலி வேலை செய்யும்
என் தாயின் பாதங்கள்….”

[பட உதவி: கூகிள்]

”பூக்களுக்குச் சிறை…
தென்றலுக்கு தடை…
பொக்கே!”

அடுத்த ஃப்ரூட் சால்ட் - உடன் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 25 ஜூலை, 2012

[B]பான்கே [B]பீஹாரிஜி!




ஒரு ஞாயிறன்று தில்லியின் இர்வின் சாலை பிள்ளையார் கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் இனிய பாடல்களைக் கேட்டு, மதிய உணவை  உட்கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு அழைப்பு - அலுவலக நண்பரிடமிருந்து – “பீஹாரிஜி தர்ஷன் கே லியே சலேன்?” என்று.   பிருந்தாவன பீஹாரியே அழைத்தது போல் தோன்றவே உடனே சரியெனச் சொல்லி, வீட்டிற்கு வந்து தயாராகி தில்லி மெட்ரோவில் மால்வியா நகர் சென்று நண்பரின் வீட்டை அடைந்தேன். 

மாலை மூன்றரை மணிக்கு நண்பரின் டாடா இண்டிகா மான்சா வாகனத்தில் ஐந்து பேராகக் கிளம்பினோம்.  வழியில் தேவைக்கென தண்ணீர், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு பயணம் இனிதே துவங்கியது.  தில்லியிலிருந்து மதுரா – ஆக்ரா செல்லும் வழியில் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் விருந்தாவன்.  மிதமான வேகத்தில் சென்றால் இரண்டு-இரண்டரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். 

விருந்தாவன் கோவிலிலுள்ள பாங்கே பீஹாரியின் அழகிய கருப்பு வண்ணச் சிலை, க்ருஷ்ணர் – ராதாவாலேயே ஸ்வாமி குருதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  ஸ்வாமி ஹரிதாஸ் [அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன்-இன் குரு] உத்திர பிரதேசத்தின் அலிகார் நகரின் அருகிலுள்ள ஹரிதாஸ்பூர் கிராமத்தில் பிறந்தவர். 

இவரை  லலிதா சக்தியின் அவதாரம் எனவும் சொல்கின்றனர்.  பிறந்ததிலிருந்தே பகவானின் புகழ் பாடும் பாடல்களிலும் தியானத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  தகுந்த வயதில் ஹரிமாதி என்ற யுவதியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  ஆனாலும் ஹரிதாஸ் உலக நியதிகளில் ஈடுபாடில்லாமல், தியானத்திலும், ராதா-கிருஷ்ணனின் பக்தியிலும் திளைத்திருந்தார்.  கணவரின் உள்ளத்தினை புரிந்து கொண்ட ஹரிமாதியும் பக்தியுடன் பிரார்த்த்னை செய்து ஒரு சிறிய விளக்கில் உட்புகுந்து ஆன்மா – உடல் இரண்டோடு கண்ணன் திருவடி அடைந்தாள்.  இந்த நிகழ்விற்குப் பிறகு ஹரிதாஸ்-உம் விருந்தாவன் வந்து சேர்ந்தார்.

அடர்ந்த காடாயிருந்த விருந்தாவனத்தின் ஒரு பகுதியான நிதிவனத்தினுள் இருக்கும் ஒரு சோலையில் தங்கி இசைப் பயிற்சி செய்து கண்ணனின் புகழ் பாடும் பல பாடல்களை இயற்றிப் பாடியும், தியானம் செய்தும் கண்ணனின் நாமத்தினைச் சொல்வதிலேயே காலம் போக்கினார்.  நிதிவனத்தின் சோலையில் தங்கியிருந்தாலும் ராதா-கிருஷ்ணரின் அருகாமையிலே இருப்பதாகத் தான் உணர்ந்தார்.

விருந்தாவனத்தில் இருந்த அவரது சில சிஷ்யர்கள், இந்தச் சோலையில் அப்படி என்னதான் குருவிற்குத் தெரிகிறது என சோலைக்குள் வந்து பார்த்தபோது, கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளி சோலையெங்கும் பரவியிருப்பதைக் கண்டனர்.  அவர்களது நிலையறிந்த ஹரிதாஸ்-உம் இறைவனை வேண்ட, கண்ணனும் ராதாவும் அனைவருக்கும் அழகிய தோற்றத்தோடு காட்சி அளித்தனர்.  அனைவரும் கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தனராம். 

அத்தகைய அழகான ராதா-கிருஷ்ணரை இழக்க விரும்பாத சிஷ்யர்கள், ஹரிதாஸை வேண்ட ஹரிதாஸும் ராதா-கிருஷ்ணரை ஒரே உருவமாகக் காண்பிக்க வேண்டவே, இருண்ட மேகமும், கண்ணைப் பறிக்கும் மின்னலும் சேர்ந்தாற்போல ஒரு அழகிய சிலையாக வடிவம் கொண்டனர் ராதையும் கிருஷ்ணரும்.  அந்த சிலைதான் இன்றளவும் விருந்தாவனத்தில் உள்ள பாங்கே பீஹாரிஜி!

பாங்கே என்றால் ”மூன்று இடங்களில் வளைந்த” என்றும், “பீஹாரி” என்றால் ’”மிக உயர்ந்த களிகாரன்” என்றும் பொருள்.  இந்த பாங்கே பீஹாரியின் அழகினைக் காண கண்கோடி வேண்டும்.  அவரின் அழகை, நமது கண்களால் தொடர்ந்து பருகினால் நிச்சயம் தன்னிலை இழந்து விடுவோமென சில நிமிடங்களுக்கொருமுறை திரையிட்டு மறைத்து மீண்டும் திறப்பார்கள். 



நாங்கள் சென்ற அன்று பக்தர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது.  அடிக்கும் வெய்யிலுக்கு இதமாய் பூக்கள் – இலைகள் கொண்டு அலங்கரித்த மாலைகளுக்கு இடையேயிருந்து தண்ணீரை தூவாலைகளாக தெளித்துக் கொண்டிருந்தது ஒரு சிறிய குழாய்.  10 நிமிடத்திற்கு மேல் நிம்மதியாக தரிசனம் செய்து வெளியே வந்தோம்.  கோஸ்வாமி என்றழைக்கப்படும் பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்த போது பீஹாரிஜியின் புகழ் பாடினார்.  தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி.

இங்கே இன்னுமோர் விசேஷம். கோவிலில் ஆரத்தி இருந்தாலும் மணி அடிப்பதே கிடையாது.  இறைவனை அதிர்ச்சியூட்ட விரும்பாத ஹரிதாஸ் அவர்களின் ஏற்பாடு இது.  இன்றும் தொடர்கிறது.  இங்கே நடக்கும் ”சப்பன் போக்” வழிபாடு மிகவும் பிரபலம்.  பாங்கே பீஹாரிஜிக்கு 56 வகையான உணவு வகைகளைப் படைக்கும் பழக்கமிது.  பக்தர்களின் கூட்டத்தில் கூட்டமாக நானும் நண்பர்களும் பாங்கே பீஹாரிஜியை தரிசித்து மனதில் சொல்லொணா அமைதியுடன் வெளிவந்தோம். 

ஒரேயொரு குறை என்னவென்றால், உத்திரப் பிரதேசத்தின் எல்லா இடங்களைப் போலவே இந்த ஊரையும் அழுக்காகவே வைத்திருக்கிறார்கள். அழகிய சுத்தமான சாலைகள், தண்ணீர் வசதி, வரும் பக்தர்களுக்கான கழிவறை வசதி என எந்த முன்னேற்றமும் இல்லை. ஆங்காங்கே இருக்கும் தனியார் வாகன நிறுத்தங்களைத் தாண்டும்போது அப்படி ஒரு நாற்றம்!  அவற்றை எல்லாம் மாற்றத்தானோ என்னமோ தெரியவில்லை, ஊரில் நிறைய வாசனை திரவியங்கள் விற்கும் கடைகள்! மூத்திர நாற்றமும் அத்தரின் வாசனையும் ஒரு சேர கமழ்கிறது!

பாங்கே பீஹாரியின் திவ்யமான தரிசனம் கண்டு, விருந்தாவனத்தின் புகழ்பெற்ற ”பேடா” [PEDA] எனும் பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பினை “ப்ரிஜ்வாசி” எனும் பிரபல உணவகத்தில் வாங்கிக் கொண்டு ஒன்பது மணிக்கு விருந்தாவனத்திலிருந்து, பாங்கே பீஹாரிஜியின் இனிய நினைவுகளோடு கிளம்பினோம்.  வரும் வழியில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நண்பர் என்னை வீட்டின் அருகே விட்டபோது மணி 12.30.  இனிய நினைவுகளோடு கூட்டையடைந்து, அடுத்த நாள் காலை பறவைகளின் ஒலிகேட்டு எழத் தயாராக உறங்கிப்போனது இந்தக் கூண்டுப் பறவையும்!

”பாங்கே பீஹாரி லால் கி ஜெய்!”

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 23 ஜூலை, 2012

சுஜாதா கண்ட அன்றைய டில்லி!



[பட உதவி: கூகிள்]

     ”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல் இருக்கும் ஹோஸ்டஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கட் அள்ளிக் கொள்கிறார்கள், ‘லாக்-அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. பாலம் விமான நிலையம் காலியாக இருக்கிறது.  நிலையத்தை விட்டு வெளியே வரும்போது டில்லி போலீஸ் என் பெயர் கேட்கிறது. டாக்சிக்காரன் ’ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான் [பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்.]
 
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரூ. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள். செய்தித்தாளில் ஐந்து லட்சம் கொள்ளையடித்த இளைஞர்களைக் கைது செய்த போலீஸ்காரர்கள் மாலை அணிந்து
 சிரிக்கிறார்கள். ஒரு மனைவியைப் பதினைந்து தடவை கொன்ற டாக்டர் ஜெயின் புன்முறுவல் செய்கிறான்.
 
குளிர்
 
ஜன்பத்
 
தங்கப் பல் வெள்ளைக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை வாங்குகிறார்கள். ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக் கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள். ‘பாபி’ பார்த்துவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட பஞ்சாபி இளைஞர்கள் வாயில் விரல்விட்டு சப்பிக்கொண்டே நடக்கிறார்கள். நகரெங்கும் சிவப்பு அம்பர் பச்சை ஜன்சங்கத்தின் நீரூற்றுகள் சுவரொட்டிகளில் சென்ற மாத ஹீரோ காம்ரேட் ப்ரெஷ்னெவ் புன்னகைக்க முற்படுகிறார்.
 
அரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட ‘ஆப் கி மர்ஜி ஹை ஸாப்’ என்று லஞ்சம் கேட்கிறது. பைல்களைப் பிரித்துப் பார்த்தால் இளைஞர்கள் ஹௌஸ் ரெண்ட் அலவன்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காண்டீனில் சிவசுப்பிரமண்யமும் கன்னாவும் மசால் தோசையின் மகத்துவம் பற்றி அளவளாவுகிறார்கள். சோப்ராக்களும் ஆபீஸ் நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே கடலைக்கொட்டை உரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் அல்லது ”சாண்டே கா தேலின்” மகத்துவம் பற்றியோ கிருஷ்ண பகவானின் சீர்வரிசைகள் பற்றியோ வெளியே கூட்டங்களில் கேட்கிறார்கள்.
 
சிவப்பு விளக்குக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசையின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் “ஈவ்னிங் நியூஸ் வாங்குங்கள் வாங்குங்கள்…” என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி….
 
தில்லி மாறவில்லை…..”
 
சுஜாதா - “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” ஜூலை 1973.

இன்றைய தில்லி!


[பட உதவி: கூகிள்]

பாலம் விமான நிலையத்தில் இடம் போதாமல் இப்போது புதிதாக டெர்மினல்-3 வந்துவிட்டது.  நிறைய விமானங்களும், பயணிகளும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். வெளியே ப்ரீ-பெய்ட் டாக்சிகள் வந்துவிட்டன.  ”ஜனாப்..” என்ற மரியாதையெல்லாம் போய்விட்டது.  இருபது ரூபாய்க்கு பதில் நூறுகளில் கேட்கிறார்கள்!  போலீஸ்காரர்கள் யாரையும் எதுவும் கேட்பதில்லை :)

ரூ. 4.50 விற்ற இடியாப்பம் பத்து மடங்குக்கு மேலாகிவிட்டது.  ஃப்ளூட் எல்லாம் போய் “டண்டனக்கா, டணக்குனக்கா” வந்து விட்டது.  ட்ராயர்-தொப்பி போட்ட வெள்ளைக்காரர் ட்ராயர் போட்ட வெண் பெண்ணோடு அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை ஜன்பத்தில் இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறார்! தோலால் செய்யப்பட்ட பாம்பு பொம்மைகளையும், தில்லி பற்றிய படங்கள் அடங்கிய புத்தகங்களையும் விற்க நிறைய பேர் அவர்கள் பின்னால் தொடர்கிறார்கள்.


[பட உதவி: கூகிள்]

 அரசு அலுவகங்களில் லஞ்சம் சிறிய அளவில் இல்லை – பெரிய அளவில் (மந்திரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளே வாங்கிவிடுவதால்!) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே!  ”சாண்டே கா தேல்” விற்கும் ஆட்களை இன்னமும் பார்க்கமுடிகிறது – அவர்களிடம் வாங்கும் ஆட்கள் இன்னமும் இருப்பதால்….


[பட உதவி: கூகிள்]

மாலை நேரங்களில் வந்து கொண்டிருந்த பேப்பர் நின்றுவிட்டதால், பேனாக்களையும், விற்காத பழைய ஆங்கில இதழ்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் – துண்டில் குழந்தையை உடலோடு கட்டியபடி இருக்கும் பெண்கள் – தமிழ்ப்பெண்கள் மட்டுமல்ல. 

     மெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…

     இரண்டாயிரத்து பன்னிரண்டு – முப்பத்தி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டாலும் தில்லி இன்னமும் மாறவேயில்லை!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


ஞாயிறு, 22 ஜூலை, 2012

அரிய புகைப்படங்கள்


இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம் 
ஆகஸ்ட் 15, 1947


என்ன இடம் தெரிகிறதா?  

இந்திய பாராளுமன்றம், நார்த் ப்ளாக் மற்றும் சவுத் ப்ளாக்.


காந்தியுடன் சுபாஷ் சந்திர போஸ், 1932


சார்லி சாப்ளினுடன் காந்தி


ஹிட்லருக்குக் கை கொடுக்கும் சுபாஷ் சந்திர போஸ்






1839 - ல் அடிக்கப்பட்ட அரையணா காசு!


அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும்வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.