ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 98
இந்தப்
பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற
தலைப்பின் கீழே இருக்கிறது.
சற்றே இடைவெளிக்குப் பிறகு பயணத்தொடரின்
அடுத்த பகுதிக்கு வருகிறேன்…. அதனால் சென்ற பதிவின் கடைசி சில வரிகள் உங்கள் நினைவூட்டலுக்காக….
பெரும்பாலும் ஆடுகளை மட்டுமே இங்கே பலி கொடுக்கிறார்கள். ஆட்டின் பின்பக்கத்தில்
சிலர் ஆட்டைப் பிடித்துக் கொள்ள பெரிய கத்தியால் ஒரே வெட்டு… கழுத்தும் உடலும் தனியாகும்.
வெட்டிய பிறகு சில நிமிடங்கள் வரை துடிக்கும் உடலைப் பார்க்காமல் வெளியே வருவார்கள்
அனைவரும் – ஆடு இறந்தது உறுதியான பிறகு அந்த ஆட்டின் தலை மீது சூடம் வைத்து காளிக்கு
ஒரு ஆரத்தி…. அதன் பிறகு ஆட்டின் தலை பூஜாரிக்கு – உடல் பகுதி முழுவதும் பலி கொடுத்தவருக்கு…
அதை அவர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இப்படித்தான் மிருக
பலி நடக்கும் என்பதை விவரித்து நண்பர் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆடிப்போயிருந்தேன்
நான். கொடுமையான விஷயம்……
எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது இந்த காளி Gகாட் கோவில்.
காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி மணி முதல் இரவு பத்தரை
மணி வரையும் கோவில் திறந்திருக்கும். முடிந்த போது பார்த்து வரலாம்.
கோவில், கோவில் பகுதிகளில் இப்படி பல விதக் காட்சிகளைப் பார்த்து அங்கிருந்து
புறப்பட்டோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம்
என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..
இதோ அடுத்த பகுதிக்கு வந்துவிட்டோம்…..
விக்டோரியா மெமோரியல் ஹால்...
கொல்கத்தா நகர் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு
வருவது ராணி விக்டோரியாவின் நினைவிடம். நம்மை
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த ஒருவரின்
நினைவிடமாக இருந்தாலும், இந்த கட்டிடத்தினுள் பல அரிய பொருட்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள். கொல்கத்தா சென்றால் பார்க்க வேண்டிய இடங்களும் மிகவும்
முக்கியமான இடத்தில் இருப்பது இந்த விக்டோரியா மெமோரியல்.
கம்பீரமாக வீற்றிருக்கும் ராணி....
கட்டிடம் முழுவதுமே மார்பிள் கற்களால்
மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்த விக்டோரியா மேமோரியல் ஹால், 1901-ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் இறந்து போன ராணி விக்டோரியாவின் நினைவாக அமைக்க முடிவு செய்தவர் அப்போதைய
வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன். 6 ஃபிப்ரவரி 1901 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்த
முடிவு எடுக்கப்பட்டது. விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டுமல்லாது இந்தியாவின் பழம்பெருமையையும்
பறைசாற்றும் அருங்காட்சியகமாகவும் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம்….
இதில் ஒரு சூட்சுமமும், திட்டமும் உண்டு! அது….
விக்டோரியா மெமோரியல் ஹால் பகுதியில் அமைந்த பூங்காவும் நீர்நிலையும்...
இந்த நினைவிடத்தினைக் கட்ட தேவையான பணத்தினைத்
திரட்ட Indian Memorial Fund என்ற ஒன்றை ஏற்படுத்தி மக்களிடமிருந்தே வசூல் வேட்டை நடந்தது.
அப்படி வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய்! அதாவது 1901-ல் – இன்றைக்கு கிட்டத்தட்ட 116 வருடங்களுக்கு
முன்னர்! அதன் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்! இங்கிலாந்து ராணிக்கு நினைவிடம் அமைக்க இந்திய மக்களிடமிருந்தே
பண வசூல்! அப்போதைய வேல்ஸ் இளவரசரான ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் 4 ஜனவரி 1906 அன்று அடிக்கல்
நாட்ட, விக்டோரியா மெமோரியல் ஹால் கட்டி முடிக்க கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆனது! 1921-ஆம் ஆண்டில் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது….
விக்டோரியா மெமோரியல் ஹால்...
வெளிப்புற மார்பிள் சிற்பங்கள்....
அழகான கட்டிடக் கலை, உள்ளே இருக்கும்
பலவித சரித்திரப் புகழ் சொல்லும் பொருட்கள், வித்தியாசமான கலைப் பொருட்கள், பழங்கால
புத்தகங்கள் என பார்க்க வேண்டிய நிறைய விஷயங்கள் என கிட்டத்தட்ட 30000 பொருட்கள் இங்கே
இடத்தில் உண்டு. கிட்டத்தட்ட 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நினைவிடம்
திங்கள் கிழமைகள், அரசு விடுமுறை தினங்கள் தவிர வருடம் முழுவதும் திறந்திருக்கும் இந்த
இடத்தின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை. இங்கே 21 பூங்காக்களும் அமைந்திருக்கின்றன. நினைவிடம் அமைந்திருக்கும் முகவரி 1, Queen’s Way,
Kolkata. இங்கே உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணமும் உண்டு – இந்தியர்களுக்கு ரூபாய்
20, வெளிநாட்டவர்களுக்கு ஒரு பூஜ்ஜியம் சேர்த்து ரூபாய் 200/-. தவிர கேமராவிற்கும்
கட்டணம் உண்டு!
விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறு நுழைவாயில்!
விக்டோரியா மெமோரியல் ஹால் முன்னர் நண்பர்களுடன்...
விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறொரு கோணத்தில்....
விக்டோரியா மெமோரியல் ஹால்...
குறுக்கு வெட்டுப் பார்வையாக.....
விக்டோரியா மெமோரியல் ஹால்...
காத்திருக்கும் குதிரை வண்டிகள்....
விக்டோரியா மெமோரியல் ஹால்...
முன்புறத்தில் இருக்கும் இரட்டை சிங்கங்களில் ஒன்று!
விக்டோரியா மெமோரியல் ஹால்...
சுவர் சிற்பங்களில் ஒன்று....
விக்டோரியா மெமோரியல் ஹால்...
மார்பிள் சிற்பங்களில் ஒன்று.....
முழுவதும் பார்க்க நினைப்பவர்கள் அரை
நாளாவது இந்த இடத்திற்காக ஒதுக்குவது நல்லது. கொல்கத்தா சென்றால் நிச்சயம் சென்று பார்த்து
வரலாம்! விக்டோரியா மெமோரியல் ஹால் வாசலில் நிறைய குதிரை வண்டிகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்
– அதில் அமர்ந்து ராஜ பவனி வரலாம் – மனதுக்குள் உங்களை ராஜாவாகவோ, அல்லது ராணியாகவோ
நினைத்துக் கொண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்! நாங்கள் சென்றபோது நிறைய குதிரைக்காரர்கள்
எங்களை சூழ்ந்து கொண்டார்கள் – குதிரை ஒன்று எங்களைப் பார்த்து மிரள, எதற்கு அதைப்படுத்த
வேண்டும் என, நாங்கள் எங்கள் வாகனத்தில் பவனி வந்தோம்!
ராணி விக்டோரியா மெமொரியல் ஹால் பார்த்த பிறகு
நாங்கள் சென்ற இடம் எது, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்……
தொடர்ந்து பயணிப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.