அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
பத்துப் பொருத்தங்களைப்
பார்த்து
ஒன்பது கோள்நிலைகளை
அறிந்து
எட்டுத்
திசையிலிருந்தும் உறவை அழைத்து
ஏழு அடி எடுத்து வைத்து
அறுசுவை உணவு படைத்து
பஞ்சபூதங்களும் சாடசியாக
நான்கு வேதங்கள் முழங்க,
மூன்று முடிச்சுகளால்
இரு மனங்கள் ஒன்று
சேரும்
ஓர் அற்புத பந்தத்தின்
உறவு….
திருமணம்!
******
திருமண பந்தத்தால்
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்களும், தாக்கங்களும் உணர்ந்து புரிந்து
கொள்ளப்பட வேண்டியது. குடும்பம் என்னும் அமைப்பை விரிசலில்லாமல் பாதுகாக்க
இருவரின் பங்கும் இதில் முக்கியமானது.
பாசமும் நேசமும் மட்டுமல்ல சண்டை, சச்சரவு,
கேலி, கிண்டல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்தல், மன்னிப்பு, பொறுமை காத்தல், உதவி
செய்தல் என்று இவற்றையெல்லாம் கடந்து வந்தால் தான் திருமண உறவு மேம்படும்!
அப்படிப்பட்ட 20 வருடங்களைக் கடந்து விட்டது எங்கள் இல்லறம்!
திருமணத்தைப் பற்றிய
எந்த விதமான சிந்தனையோ, கனவுகளோ இல்லாமல் தான் திருமண வாழ்வில் இருவரும்
இணைந்தோம். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்வை நகர்த்துகின்றோம்.
முதல் பத்து வருடங்கள்
இருவரும் சேர்ந்தும், அடுத்த பத்து வருடங்கள் சந்தர்ப்ப சூழலால் ஆளுக்கொரு
புறமாகவும் புரியாத புதிரான இந்த வாழ்க்கை நகர்கின்றது. வரும் வருடங்கள் நம்பிக்கை
பாதையில்..!
காதலால் கசிந்துருகிய
நாட்கள் மறைந்து, தற்சமயம் கடமைகளும் பொறுப்புகளும் தான் எங்களை கொண்டு செல்கிறது! சராசரி மனைவியாக நான்
அவரிடம் எதிர்பார்ப்பது குறைகள் காணாத வாழ்க்கையும், சிறு பாராட்டும்,
ஊக்குவிப்பும் தான்!
வருடங்கள் கடந்த
பின்னும் கடமைகள் எல்லாம் முடிந்த பின்னும் இருவரின் தனிப்பட்ட நேரங்களும்
கிடைக்கும் நாட்களும் வரும் என நம்பிக்கையில் நாட்களை கடத்துகிறோம். வாழ்வின்
அடுத்த நிலைக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம்.
இருபத்தியோராம்
ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்களுக்கு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும்
கிடைத்தால் மகிழ்வோம்.
நல்லதே நடக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்