வெள்ளி, 31 ஜூலை, 2015

ஃப்ரூட் சாலட் – 140 – இடிக்கப்படும் தாஜ்மஹால் – [BH]புட்டா - கலாம்


இந்த வார செய்தி:

இன்று PIXELS எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்தியாவில் வெளியிடப் படுகிறது. Science Fiction திரைப்படமான இதில் Adam Sandler நடித்திருக்கிறார். அன்னிய கிரக வாசிகள் சிலர் பூமி மீது போர் தொடுத்து பல சேதங்களை ஏற்படுத்துவதாக இதில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.  அதில் ஒரு காட்சியின் Teaser நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குனர் Chris Columbus மற்றும் Adam Sandler.  இதில் வரும் ஒரு காட்சி தான் இன்று நாம் பார்க்கப் போகும் முதல் செய்தி.

காதல் சின்னம் தாஜ்மஹால் – அதன் முன்னர் ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்லி அவளுக்கு ஒரு பரிசு தருகிறான். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியுடன் அதை வாங்க நெருங்கும்போது அவள் காணும் காட்சி அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. என்ன காட்சி? வானத்தில் இருந்து வந்த சில விண்கலங்களிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகள் மூலம் காதல் சின்னமான தாஜ்மஹால் இடிக்கப்படுகிறது!

அந்த Teaser நீங்களும் பாருங்களேன்!
எப்படியாவது இந்தியாவின் காதல் சின்னத்தை அழித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏன்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

மூழ்கினால் தண்ணீரை குற்றம் சொல்கிறான்..... தடுக்கி விழுந்தால் கீழே கிடந்த கல்லைக் குற்றம் சொல்கிறான்..... மனிதன் எத்தனை விசித்திரமானவன்.....  தன்னால் எதையாவது செய்ய முடியாவிட்டால் விதியைக் காரணமாகச் சொல்கிறான்!
இந்த வார புகைப்படம்:[bh]புட்டா....  தற்போது தில்லியில் பல இடங்களில் இப்படி மக்காச்சோளம் சுட்டு விற்பது பார்க்க முடியும். சீசன் வந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் இப்படி திடீர் வியாபாரிகளை பார்க்க முடியும்! ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு மக்காச்சோளம் சுட்டு, அதன் மேல் மசாலா தடவி தருவார்கள் – எலுமிச்சை பாதியாக நறுக்கி அதனால் மசாலாவை தொட்டு சோளம் முழுவதும் தடவித் தருவார்கள்..... கேட்கும்போதே சாப்பிடணும்னு தோணுது இல்ல! படம் எடுத்தது தில்லியில் அல்ல! மேகாலயா மாநிலத்தில்!

தலைநகரிலிருந்து:சென்ற வாரத்தின் ஓர் நாள்...  கீழ்வீட்டிலே யாருக்கோ திருமணம். அன்று முகப்புத்தகத்தில் எழுதியது கீழே...  ரொம்ப கஷ்டம் சாமி!

கீழ் வீட்டில் கல்யாணம்.... இரவு 09.30க்கு மேல் தான் மாப்பிள்ளை ஊர்வலம் [bharaat] புறப்பாடு..... வாத்யக் கோஷ்டி நான்கரை மணிக்கே வந்து சேர்ந்தாயிற்று.... ஒரே மெட்டில் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்....... காது எப்படியாவது இந்த சத்தத்திலிருந்து எனக்கு விடுதலை கொடேன்என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது.... இந்த மாதிரி நேரங்களில் மட்டுமாவது காது கேட்காமல் இருந்தால் பரவாயில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக தலைக்கு மேல் உட்கார்ந்து வேகவேகமாய் கொட்டுவது போல உணர்வு எனக்கு..... ஏதோ படத்தில் வடிவேலுவை நிற்க வைத்து வரிசையாக பலர் வந்து கொட்டுவார்களே அப்படி இருக்கிறது எனக்கு! ம்ம்ம்..... என்ன செய்யலாம்!

அடாது மழை பெய்தாலும் விடாது மேள தாளம், நடனம் என தொடர்ந்து கொண்டே இருந்தது!


இந்த வார காணொளி:

ஆசிரியர்கள்....  ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின்னாலும் இவர்களின் பங்கு மகத்தானது. அப்படி ஒரு ஆசிரியர் பற்றி சொல்லும் காணொளி. பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது:இராமேஸ்வரத்தின் கரையில்
எல்லோரும் மீன் பிடிக்க
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்

நெருப்பாற்றில் நீந்தியதால்
உன் முதுகில் முளைத்தன
அக்னிச் சிறகுகள்.....

உறக்கங்களைத் துறந்துவிட்டு
கனவுகளின் இமைத் திறக்க
ஒவ்வொரு நொடியிலும் கரைந்தாய் இன்று
ஒவ்வொரு இந்தியனின்
கலையாத கனவாகி மறைந்தாய்

கலாம் என்பதை
காலம் என்றும் உச்சரிக்கலாம்
எல்லா காலத்துக்குமான
இணையற்ற ஆளுமை என்பதால்...

இனி-
பகுத்தறிவாளனும் சொல்லக் கூடும்
இராமேஸ்வரம் புனிதத் தலமென்று.....


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்


வியாழன், 30 ஜூலை, 2015

சாப்பிட வாங்க: [GH]கேவர் – 900 கிராம்

படம்: இணையத்திலிருந்து....

சாப்பிட வாங்க பகுதியில் இன்று ஒரு ராஜஸ்தானிய இனிப்பு பற்றி பார்க்கப் போகிறோம். ராஜஸ்தானிய உணவு என்று சொன்னாலும், உத்திரப் பிரதேசம், ஹரியானா பகுதிகளிலும் இந்த இனிப்பு செய்கிறார்கள்.  பெரிய தட்டு  போன்று இருக்கும் ஆனால் நடுவில் ஓட்டையாக இருக்கும் இந்த இனிப்பை அடுக்கி வைத்திருப்பது பார்க்கும்போதே என்ன இது புதுசா இருக்கே என்று தில்லி வந்த புதிதில் அதிசயமாய் பார்த்ததுண்டு - பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தது போல! ஒரு மெல்லிய துணியால் மூடி வைத்திருப்பார்கள்...  ஆனாலும் ஈக்கள் மேலே பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து, [gh]கேவர் வாங்கி சாப்பிடாமல் நகர்ந்து விடுவேன்.


தில்லி நகரில் “பழைய தில்லிஎன அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் சாந்த்னி சௌக் - இங்கே பல விதமான பாரம்பரிய உணவுக் கடைகள் உண்டு.  பரான்டே வாலி கலி என அழைக்கப்படும் மிகவும் புகழ் பெற்ற தெருவிற்கு அருகே இருக்கும் ஒரு இனிப்பு கடை – கன்வர்ஜி! 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இங்கே கோலோச்சுகிறது. ஒரு முறை சாந்த்னி சௌக் பக்கம் செல்லும் போது இந்த கடை வழியே செல்ல நேர்ந்தது. உள்ளே பார்த்தால் [gh]கேவர்....  கண் சிமிட்டி என்னை வா வா என்றது. ஆனது ஆகட்டும் என நானும் அதில் மயங்கி உள்ளே சென்று விட்டேன். பரவாயில்லை – மற்ற இடங்களைப் போல இங்கே ஈக்கள் மொய்க்கவில்லை. சுத்தமாக இருந்தது.

[gh]கேவர்.... இங்கே மூன்று நான்கு வகை [gh]கேவர் பார்வைக்கு வைத்திருந்தார்கள் – சாதா, மாவா, மலாய் [gh]கேவர்.  முதலில் சாதா [gh]கேவர் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். பிடித்திருந்தது. அதன் பிறகு மற்ற வகைகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி சாப்பிட அனைத்துமே பேரானந்தம் தந்தன.  அந்த முதல் முறைக்குப் பிறகு ஒவ்வொரு சீசனிலும் [gh]கேவர் சுவைப்பது வழக்கமாக இருந்தது. சீசனில் மட்டும் தான் கிடைக்கும் எனில் எப்போது?

பொதுவாகவே [gh]கேவர் தீஜ் திருவிழாவின் போது தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தீஜ் திருவிழா ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளிலும் கொண்டாடப்படும் இத் திருவிழா பற்றி பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம். இத் திருவிழா சமயத்தில் செய்யப்படும் முக்கியமான இனிப்பு [gh]கேவர் தான்.  ரக்‌ஷா பந்தன் சமயத்திலும் செய்வார்கள்.

தேவையான பொருட்கள்:

[gh]கேவர் செய்ய தேவையானது மைதா, மக்காச்சோள மாவு, நெய், சீனி, கொஞ்சம் பால், சோடா உப்பு. வட இந்திய இனிப்பு செய்யும்போது கேவ்ரா எசன்ஸ் என்று ஒன்றை இரண்டு மூன்று சொட்டுகள் சேர்ப்பார்கள்.  அது வேறொன்றுமில்லை – தாழம்பூ எசன்ஸ்! அலங்கரிக்க, பாதாம் துண்டுகள். 

எப்படிச் செய்யணும் மாமு?

[gh]கேவர் செய்ய கொஞ்சம் பொறுமை வேணும்! மைதா/சோள மாவு நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு வைக்க வேண்டும்.  நெய் சூடு செய்து அதிலே மாவு கொஞ்சம் கொஞ்சமா விட்டுக் கொண்டே இருக்க, [gh]கேவர் தயாராகும். சொல்லிப் புரிய வைக்கிறதை விட காணொளியா இருந்தா உங்களுக்கும் சுலபம் எனக்கும் சுலபம்! கொஞ்சம் நீண்ட காணொளி [18.14 நிமிடங்கள்] – வேலை அதிகம் என்பது அதிலிருந்தே தெரியும் உங்களுக்கு!  அந்த அம்மணி ஹிந்தியில் Blah Blah என்று சொல்லிக் கொண்டே போனாலும், கீழே ஆங்கிலத்தில் Sub Title வரும்! அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும்!


  
படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை. சென்னையிலும் சில வட இந்திய இனிப்பு கடைகளில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் [gh]கேவர் கிடைக்கிறது. கிடைக்காதவங்க என்ன பண்றது என்று அங்கலாய்க்க வேண்டாம் – இங்கே பார்த்து மானசீகமா சாப்பிடுங்க!டிஸ்கி: அது என்னப்பா தலைப்புல 900-கிராம்!  அதுல என்ன ஒரு கஞ்சத்தனம்! இன்னும் 100 கிராம் போட்டு ஒரு கிலோவா தரக் கூடாதா? அது வேறொண்ணும் இல்லை! இது கொஞ்சம் ஸ்பெஷல் பதிவு! அதான் Symbolic-ஆ தலைப்பில் 900! புரிஞ்சிருக்குமே!  ஆமாங்க இது என்னோட 900-வது பதிவு! இது வரை என் பதிவுகளை படித்து கருத்துரைத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி!


செவ்வாய், 28 ஜூலை, 2015

சலாம்..... திரு கலாம்.....இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகள் தன்னலமற்ற தொண்டு புரிந்த பாரத ரத்னா திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி......

இன்றைக்கு இணையம் முழுவதும் அவரது ஈடு இணையற்ற புகழை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று ஷில்லாங் நகரில் உள்ள IIM செல்லும் வழியில் முன்னால் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த வண்டியில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு இளைஞர் நின்றபடியே பயணிக்க, பின்னால் இருந்த வண்டியிலிருந்து கலாம் அவர்கள் அந்த இளைஞரை உட்கார்ந்து வரச் சொல்லும்படி தகவல் அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

அவரது வேலை நின்றபடியே ஆயுதம் ஏந்திக்கொண்டு, செல்லும் வழியில் பிரச்சனை ஏதும் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது என்று இருந்தாலும், தன்னால் ஒருவருக்கும் கஷ்டம் வரக்கூடாது என நினைத்த நல்ல உள்ளம். சேரும் இடம் வந்தபிறகு அந்த இளைஞரை தன்னிடம் அழைத்து வரச் சொல்லி, அந்த இளைஞரது கைகளை குலுக்கி, “என்னால் நீங்கள் நின்றபடியே வர வேண்டியதாகிவிட்டது.  உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும்... உணவு உண்டீர்களா? என்றெல்லாம் கேட்டு அவருக்கு நன்றியும் சொல்லி இருக்கிறார். இது நடந்தது அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்.....

இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். 2002-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவி ஏற்கப் போகிறார். அந்த நிகழ்ச்சிக்கு தனது பிறந்த ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருக்க, அவர் நினைத்திருந்தால், அரசு செலவிலேயே அவர்கள் அனைவரையும் தங்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்தது என்ன தெரியுமா?  தில்லியின் கரோல் பாக் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் உறவினர்களை தங்க வைத்தார். அந்த விடுதிக்கான தங்கும் வாடகையையும் அவரே தான் தந்தார்.

பதவிக்கு வருவதற்கு முன்னரே, அரசாங்க வசதிகளை பயன்படுத்த நினைக்கும், பயன்படுத்தும் பல அரசியல்வாதிகளையே பார்த்து இருந்த இந்திய மக்களுக்கு இவர் ஒரு புதிய பாதை காண்பித்தவர்.  அவரது இழப்பு நம் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

இன்று அதிகாலையிலேயே எனக்கு அலைபேசியில் அழைப்புகள் வரத் துவங்கின...... ஒன்றும் பெரிய விஷயமில்லை. அழைத்தவர்கள் தெரிந்து கொள்ள விரும்பியது இது ஒன்று தான் – “இன்றைக்கு அலுவலகம் உண்டா இல்லையா?  விடுமுறை என்று அறிவிப்பு வருமா?”   

கடுமையான உழைப்பாளியான திரு கலாம் அவர்களிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பார்.....  “நான் இறந்து போனால், துக்கம் அனுஷ்டிக்க, நீங்கள் விடுமுறை அறிவிக்க வேண்டாம். இன்றைய தினம் இன்னும் கடுமையாகவும், நாட்டுக்கு உண்மையாகவும் உழையுங்கள்.  எப்போதும் வேலை செய்யும் நேரத்தினை விட இன்னும் இரண்டு மணி நேரங்கள் அதிகமாக வேலை செய்யுங்கள்!”    அதையே தான் நானும் சொல்ல விரும்பினேன்.....

அக்னிச் சிறகுகள் தந்த திரு APJ அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா மறைந்தாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு மறையாது. 

தோல்வி மற்றும் முடிவு பற்றி அவர் சொன்ன ஒரு கருத்தினை இங்கே கடைசியாகச் சொல்ல நினைக்கிறேன்.....

நீங்கள் தேர்வில் FAIL ஆகிவிட்டால் அதற்காக நிராசை கொள்ள வேண்டாம். Fail என்பதற்கு அர்த்தம் தோல்வி மட்டுமல்ல...  First Attempt in Learning.  அது போலவே END என்பதற்கு முடிவு என்பது மட்டும் அர்த்தமல்ல.....  Efforts Never Dies என்பதும் ஒரு அர்த்தம்!

வாழ்க நீ எம்மான்.....


நான் கர்ப்பமாயிருக்கேன்......படம்: இணையத்திலிருந்து.....

அவ்வப்போது குறும்படங்கள் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் பதிவுலக நண்பர்களின் நடிப்பில்/பங்களிப்பில் உருவான குறும்படமான Poet the Great படம் பார்த்து ரசித்தேன்.  நான் பார்த்தது குறும்படம் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான். அதற்குள் படம் பற்றி பலரும் எழுதி விட்டதால் எனது பக்கத்தில் அது பற்றி எழுதவில்லை.  நல்லதோர் குறும்படம் எடுத்திருந்த நண்பர் துளசிதரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இன்றைக்கு நாம் இங்கே பார்க்கப்போவது நேற்று நான் பார்த்த வேறு குறும்படம் பற்றி தான்.  குறும்படங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது தலைப்பே வித்தியாசமாக இருக்க, அந்தப் படத்தினைப் பார்க்க முடிவு செய்தேன்.  மொத்தம் 12 நிமிடம் 18 விநாடிகள் தான் இக்குறும்படம் பார்க்க உங்களுக்குத் தேவையான நேரம். 

படத்தின் நாயகன் கனவு காண்கிறார். எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷமாச்சு, அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை இல்லையே எனக்கு என தான் வணங்கும் பரவச முனிகளிடம் புலம்புகிறார். அதற்கு அவர் “குடிச்சு குடிச்சு உன் உடம்பிலுள்ள முக்கிய நரம்பு கெட்டுப்போச்சு.  உனக்கு குழந்தை பிறப்பது கடினம். ஆனால் நான் உனக்கு ஒரு வரம் தரேன். உன்னையே கர்ப்பமாக்கி விடுகிறேன்!” 

கனவில் கலவரமாகி எழுந்தால், அவரது மருத்துவ நண்பர் அலைபேசியில் அழைத்துச் சொல்கிறார் – “குடிச்சு குடிச்சே உன் உடம்பை கெடுத்துக்கிட்டேயே.....  இனிமேலாவது குடிக்காதே....  நான் வெளிநாட்டுக்கு ஆராய்ச்சி விஷயமா போறேன். அது வரைக்கும் குடிக்காம இருந்தா, நீ பிழைக்க வழி இருக்கு....  என்று சொல்கிறார். 

அதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் அனைத்து கஷ்டங்களும் இவருக்கு வருகிறது – குமட்டல், வாந்தி என அனைத்தும்..... கடைசியில் என்ன நடந்தது..... அவருக்கு குழந்தை பிறந்ததா? வேறு எதுவும் ட்விஸ்ட் உண்டா?  கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் என்றாலும்......  முடிவில் சொல்லும் விஷயம் .....  ?

என்னதான் ஆகுது?  பாருங்களேன்!
என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? குறும்படத்தினை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

நட்புடன்திங்கள், 27 ஜூலை, 2015

சப்பாத்தி – வட இந்திய கதை

வட இந்தியாவில் உள்ள சிறு கிராமம். கிராமத்திலிருக்கும் வீட்டில் உள்ள பெண் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் சப்பாத்தி செய்த வண்ணமே இருப்பார். எப்போது சப்பாத்தி செய்தாலும், குடும்பத்தினர் அனைவருக்கும் செய்வது மட்டுமல்லாது ஒரு சப்பாத்தியை அதிகமாகவே செய்து, அவற்றை தனது வீட்டு ஜன்னலின் திட்டுகளில் வைத்து விடுவாள். அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்கள் யாருக்காவது தேவையெனில் எடுத்துக் கொள்ளட்டும்  என அப்படி வைப்பது வழக்கம்.

அந்த கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் – அவருக்கென யாரும் கிடையாது. தள்ளாடும் வயது. கூடவே கூன் முதுகு வேறு.  கையில் குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஊன்றியபடியே கூன் முதுகோடு, தலையை மட்டும் தூக்கியபடியே நடந்து செல்வார்.  ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்மணி வைத்திருக்கும் சப்பாத்தியை எடுத்துக் கொண்டு தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்

ஒவ்வொரு நாளும் இப்படி பெண்மணி சப்பாத்தி வைப்பதும் அந்த முதியவர் அதை எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்தது.  அது போலவே அந்த முதியவர் சப்பாத்தியை எடுத்துக் கொண்ட பின் தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்வதும் தொடர்ந்தது.  இப்படிச் சொல்வது தவிர வேறு ஒரு வார்த்தை பேச மாட்டார் அந்த முதியவர்.

பல நாட்கள் இப்படி தொடர்ந்து நடக்க, சப்பாத்தி வைக்கும் பெண்மணிக்கு மனதில் கோபம் உண்டாயிற்று. “நானும் தினம் தினம் இப்படி சப்பாத்தி செய்து வைக்கிறேன். இந்த முதியவரும் அதை எடுத்துக் கொள்கிறார். ஆனாலும், அவருக்கு கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி இருக்கிறதா? வாயைத் திறந்து நன்றி என ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஏதோ தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்லிப் போகிறாரே?என்று யோசிக்கத் துவங்கினாள்.

அந்த யோசனை அவளுக்கு இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது. அதிக கோபம் ஆபத்தான விளைவினை உண்டாக்குமே! அப்பெண்ணுக்கு அப்படி கொடுமையான யோசனை உண்டாயிற்று.

நன்றியில்லாத இந்த முதியவருக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நினைதாள். அடுத்த நாள் சப்பாத்தி செய்யும் போது அந்த முதியவருக்காக தயாரித்த சப்பாத்தியில் விஷத்தினைக் கலந்து தயாரித்தாள். ஜன்னல் திட்டில் வைக்கப் போகும்போது அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. மனதின் ஓரத்தில் ஒரு சிந்தனை. என்ன காரியம் செய்கிறோம். இதை வைத்தால் அந்த முதியவர் இறந்து விடுவாரே?என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு சப்பாத்தியை நெருப்பில் போட்டுவிட்டு, வேறொரு சப்பாத்தியை ஜன்னல் திட்டில் வைத்தாள்.

அன்றைக்கும் அந்த முதியவர், சப்பாத்தியை எடுத்துக் கொண்டு தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்லியபடி சென்றார். பெண்மணியின் மனதில் நடந்த மாற்றங்களோ, தடுமாற்றமோ அப்பெரியவருக்கு தெரியாது. பெரியவர் ஏன் இப்படிச் சொல்லி விட்டுப் போகிறார் என்பதும் புரியாமலே இருந்தது.

அன்று மாலை அவளது வீட்டின் வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. வாயிலில் அவளது மகன் நின்று கொண்டிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி வெளியூர் சென்ற மகன் – திரும்ப வந்திருக்கிறான். கிழிந்து போன உடை, மெலிந்த தேகம், என பஞ்சத்தில் அடிபட்டவன் போல காட்சி தருகிறான். உள்ளே வந்ததும் அன்னையிடம் சொல்கிறான் “இன்னிக்கு நான் இங்கே உயிரோட வந்ததே பெரிய விஷயம். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் முன் நான் பசியில் துவண்டு விழ இருந்தேன். அங்கே ஒரு கூன் முதுகு பெரியவர் இருந்தார். அவரிடம் ஏதாவது உணவு தரச் சொல்லிக் கேட்டேன். அவர் நான் தினமும் சாப்பிடுவது ஒரு சப்பாத்தி மட்டும் தான். இன்றைக்கு என்னை விட அதிகமாய் உனக்குத் தான் தேவை. நீ சாப்பிடுஎனக் கொடுத்தார். அவர் கொடுக்காவிடில் அங்கேயே எனது உயிர் பிரிந்திருக்கும் என்று சொல்ல, பெண்மணிக்கு பயங்கர அதிர்ச்சி.

தான் மட்டும் அந்த பெரியவருக்கு விஷம் வைத்த சப்பாத்தியைக் கொடுத்திருந்தால், நம் மகன் அல்லவா இன்று அதை சாப்பிட்டு இருப்பான். என்ன காரியம் செய்ய இருந்தேன்  என்று தன்னையே திட்டிக் கொண்டார்.  அப்போது தான் அந்தப் பெரியவர் தினமும் சொல்லும் வாசகத்திற்கான அர்த்தமும் புரிந்தது!

நாம் செய்யும் நல்ல விஷயத்திற்கான பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து நல்லதே செய்வோம். நமக்கும் நல்லதே நடக்கும்!டிஸ்கி:  ஹிந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.....

வெள்ளி, 24 ஜூலை, 2015

ஃப்ரூட் சாலட் – 139 – கடவுள் இருக்கிறாரா? – பல்பு - படிப்பு


இந்த வார செய்தி:முப்பது வருடங்களுக்கு முன் மும்பையின் பிரசித்த பெற்ற டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு எதிரே ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். மருத்துவமனையின் படிக்கட்டுகளில் மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் பல புற்றுநோயாளிகளும் அவர்களுக்கு துணையாக வந்திருக்கும் உறவினர்களையும் பார்க்கும் போதே அந்த இளைஞருக்கு மனதில் பயங்கர வலி. என்ன வாழ்க்கையடா இது...., இங்கிருக்கும் பல நோயாளிகள் கிராமத்து மக்கள், நோய்க்கு தீர்வு கிடைக்குமா? எந்த மருத்துவரைப் பார்ப்பது, மருந்து என்ன என்ற ஒரு விவரமும் தெரியாதவர்கள். சாப்பிடவோ, மருந்துக்கோ, செலவு செய்ய முடியாதவர்கள்.

பார்த்துக் கொண்டிருந்த இளைஞர், “இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்குத் திரும்பினார். என்ன செய்யலாம் என்ற யோசனை அவரை தூங்கவிடவில்லை. கடைசியில் ஒரு நல்ல முடிவுக்கு வந்தார். தனக்கு இருந்த உணவகத்தினை வாடகைக்கு விட்டு அதில் கிடைத்த பணத்தினைக் கொண்டு டாடா மருத்துவமனைக்கு எதிரே இருந்த ஒரு இடத்தில் தர்மஸ்தாபனம் ஒன்றை துவக்கினார்.  

அந்த ஸ்தாபனம் மூலம் இன்றளவும் டாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா வரும் ஏழை புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஜீவன் ஜோத்எனும் அந்த ஸ்தாபனம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.  அந்த இளைஞருக்கு தற்போது 60 வயது! இன்றைக்கும் அதே புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் தனது சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இலவச உணவு மட்டுமல்லாது, ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள், நோயாளிகளின் குழந்தைகளுக்கு உதவி என பலவிதமான திட்டங்களை இந்த நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. அவர் ஆரம்பித்து வைத்த இத் தொண்டில் பலரும் சேர்ந்து கொள்ள, தொடர்ந்து சேவை நடக்கிறது.  இந்த நல்ல மனம் கொண்டவருக்கு இந்த வாரப் பூங்கொத்து!

-         ஹிந்தியில் எனக்கு வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு ஊருக்கு அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார். கடவுளைப் பற்றி நிரம்ப அறிந்திருந்தவராக அறிமுகப்படுத்தப்பட்டார்.  அப்போது நாத்திகவாதி ஒருவர் அவரிடம், “நீங்கள் என் மூன்று கேள்விகளுக்கும் மட்டும் சரியான விடையளித்துவிட்டால், நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன்என்று சொல்லி கேள்விகளைக் கேட்டார்.
1)      கடவுள் இருக்கிறாரா? இருந்தால் காட்டுங்கள்.
2)      சாத்தானை நெருப்பில் இருந்து படைத்ததாக கூறுகிறீர்கள், ஆனால் நெருப்பிலேயே எரிக்கப்படுவான் என்கிறீர்கள். இது எப்படி சாத்தியம்?
3)      விதி என்று ஒன்று உண்டா?
இதைக் கேட்ட அறிஞர் அந்த நாத்திகவாதியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். உடனே அவர், உங்களிடம் எனது கேள்விகளுக்கு பதிலில்லை. அதனால் கோபத்தில் என்னை அடித்து விட்டீர்கள் என்று சொல்ல, அந்த அறிஞரோ, உங்கள் மூன்று கேள்விகளுக்கும் என் பதிலைத் தான் கூறினேன் என்றார்.
எப்படி?
கன்னத்தில் அடித்தது வலித்ததா?  ஆம் என்றால் அந்த வலியைக் காண்பியுங்கள். வலியை உணரத்தான் முடியும். காண்பிக்க முடியாது. கடவுளும் அப்படித்தான். சதையால் ஆன கையால், சதையாலான கன்னத்தில் அடித்தாலும் வலிக்கிறது அல்லவா? சாத்தானின் முடிவும் அப்படித்தான்.
இன்று உங்களை நான் அடிப்பேன் என்று முன்னமே தெரியுமா? இல்லை...  அது தான் விதி என்று முடித்தார் அறிஞர்.

இந்த வார புகைப்படம்:

டாக்டர் உள்ளங்கால் புல்தரையில் பட நடக்கணும்னு சொன்னாராம்! அதனால இப்படி ஒரு ஏற்பாடு!படம் – இணையத்திலிருந்து!

இந்த வார காணொளி:

செம பல்பு....  இப்படியா பல்பு வாங்குவாங்க!


بتطلع معك...بتطلع معك
Posted by ‎Shasha.ps | شاشة نيوز‎ on Tuesday, January 28, 2014


 
மெட்ரொ மேனியா:

தில்லி மெட்ரோவில் பயணிக்கும் வேளைகளில் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் பல விதமான விஷயங்கள் பார்க்க/கேட்க முடியும்! சென்ற ஞாயிறன்று மெட்ரோவில் பயணிக்கும் போது பார்த்த/கேட்ட ஒரு விஷயம்....

இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் – இந்த வருடம் தான் கல்லூரியில் அடி எடுத்து வைக்கிறார்கள்.  மாணவிகளும் மாணவர்களும் பேசிய பேச்சு – நிச்சயம் அவர்களது பெற்றோர்களால் கேட்க முடியாத அளவிற்கு இருந்தது! நடை, உடை, பாவனை என அனைத்துமே பயங்கரம்! அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையின் ஒரு சாம்பிள்:

மாணவன்:நாளைக்கு என்ன ட்ரெஸ் போட்டுட்டு வருவே?
மாணவி:  கீழே ஷார்ட்ஸ் மேலுக்கு பனியன்.
மாணவன்:  “அய்யகோ... அந்த ட்ரெஸ்ல மகா கேவலமா இருப்ப!
மாணவி:  இப்ப இப்படித் தான் சொல்லுவே... நாளைக்கு ஜொள்ளு விட்டபடி பார்க்கும்போது உன் மூஞ்சில ஒரு குத்து விடறேன் இரு!

இது மட்டும் தான் கொஞ்சமாவது பகிரும் அளவு இருந்தது. மற்றவை இன்னும் மோசம். பெட்டியில் இருந்த மற்ற பெண்களே முகத்தினைச் சுளிக்கும்படி தான் இருந்தது அவர்கள் பேச்சு. 

இதில் பெரிய வருத்தமே, என்னையும் சேர்த்து யாராலும் அவர்களிடம் ஒன்றும் கேட்க முடியாதது தான்.  பேச்சு சுதந்திரம்! கேட்டால் அங்கே சண்டை தான். கேட்டவர்களை குறை சொல்ல நிறைய பேர் உண்டு!  

படித்ததில் பிடித்தது:

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் தனது பெற்றோர்களுடன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.  வாகனத்தினை ஓட்டியது அவனது தந்தை. தனது வாகனத்தை மிகவும் நேசிப்பதால், மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் செலுதினார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களது வாகனத்தினை ஒரு புத்தம் புதிய வாகனம் முந்திச் சென்றது.

“அப்பா, நம் வாகனத்தினை அந்த வாகனம் முந்திச் செல்கிறது. நீங்களும் வேகமாக ஓட்டி, அந்த வாகனத்தை முந்திச் செல்லுங்கள்என்று சொல்ல, தந்தை சொன்னார், மகனே “நம் வாகனம் அந்த வாகனத்தினை முந்திச் செல்வது கடினம்.

மகனும் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். மீண்டும் வேறொரு வாகனம் இவர்களை முந்திச்செல்ல, மகன் பொறுமை இழந்து அப்பா வேகமா ஓட்டுங்கப்பா....  ஒவ்வொருத்தரா நம்மை விட வேகமா போறாங்க!என்று சொல்ல, தந்தை கோபத்துடன் சொன்னார் – “நமக்கு முன்னால் வேகமாக போகும் வாகனங்களை மட்டும் பார்க்கறியே, நமக்கு பின்னாடி கூட தான் நிறைய வண்டி வருது! இன்னும் வேகமா ஓட்டினா, நம்ம வண்டி கெட்டுப் போயிடும்”.

இது கேட்டவுடன் மகன் சொன்னான், “அப்பா, நீங்க கூட தான் என் வகுப்பில் என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களைப் போலவே என்னையும் மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தறீங்க, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுப்பவர்களோட என்னை ஒப்பீடு செய்யலையே...  என்னை விட புத்திசாலிகளுடன் ஒப்பீடு செய்து அவங்களைப் போல நானும் மதிப்பெண் எடுக்கணும் சொல்றீங்களே!அது மட்டும் சரியா?

அப்பா....  : :(

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.