திரட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 டிசம்பர், 2016

WhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு




தமிழ் மொழியில் வலைப்பதிவுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் தங்களது எழுத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு. அதற்காகவே திரட்டிகளில் தங்களது பதிவுகளை இணைப்பது வழக்கம்.   இண்ட்லி, தமிழ் 10, தேன்கூடு, தமிழ்மணம் என பல திரட்டிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆரம்பித்த சில மாதங்களிலே காணாமல் போய்விட்டன.  சற்றே அதிக காலம் தாக்குப்பிடித்த தமிழ்மணம் திரட்டியும் சமீப காலமாக சிறப்பாகச் செயல்படுவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் தாக்கத்தினால் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுபவர்களும் குறைந்து வருகின்றனர். 

வலையுலகில் சற்றே சுணக்க நிலை தான். அந்த நிலையைப் போக்க அவ்வப்போது நல்ல முயற்சிகளை புதுகை வலையுலக நண்பர்கள் எடுத்து வருகிறார்கள்.  சென்ற வருடம் பதிவர் சந்திப்பு, அதற்கு முன்னர் நடந்த பயிற்சிப் பட்டறை, தொடர்ந்து சென்ற மாதமும் சுமார் 100 பேருக்கு இலவசமாக வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது பற்றியும் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றியும் ஒரு நாள் முழுவதும் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு பாராட்டத் தக்க முயற்சி.  இதே வழியில் புதுகை நண்பர்கள் முத்து நிலவன் ஐயா அவர்களும் செல்வகுமார் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் சேர்ந்து மற்றுமொரு நல்ல விஷயத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நல்ல விஷயம்….

வலைப்பதிவர்களுக்கான ஒரு WhatsApp திரட்டி. ”தமிழ் வலைப்பதிவகம்” என்ற ஒரு திரட்டியை ஆரம்பித்து தமிழில் வலைப்பதிவுகள் எழுதி வரும் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவகம் குழுவிற்கென்று சில கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்….

காலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்.

முதல் கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. பல குழுக்களில் வணக்கம் சொல்லி வரும் படங்கள் தான் அதிகம்! நான் WhatsApp குழுக்களில் அதிகம் இல்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் என்னைச் சேர்த்துவிட, இப்போது தினமும் காலை அலைபேசியினைத் திறந்தால் ஒவ்வொரு முறையும், வணக்கங்கள், காணொளி/லிகள், படங்கள் என நூறுக்கும் குறையாமல் இருக்கின்றன. குழு தமிழர்களுக்கான குழு என்றாலும், இக்குழுவில் வரும் பல செய்திகள், பஞ்சாபி, ஹிந்தி, ஹர்யான்வி என எல்லா மொழியிலும் வருகிறது! பெரும்பாலான நாட்களில் மொத்தமாய் Clear Chat! செய்ய வேண்டியிருக்கிறது! அத்தனையும் பார்க்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் பதிவின் இணைப்பினை கொடுப்பதோடு, தங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களை கொடுத்தால் அவரவர் அலைபேசியில் விவரங்களைச் சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

புதியவர்களின் தளத்திற்குச் சென்று Followers-ஆக இணைந்து அவர்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கவும் இந்த திரட்டி பயன்படும்.

வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள்/பிரச்சனைகள் ஆகியவற்றை இங்கே தெரிவித்தால் தீர்வு தர நண்பர் தனபாலன் காத்திருக்கிறார். பிரச்சனைக்கான தீர்வு தெரிந்த மற்றவர்களும் உதவிட வசதியாக இருக்கும்.  

இது போன்ற சில கட்டுப்பாடுகள் தவிர வேறு சில விஷயங்களும் நண்பர் தனபாலன் தனது பதிவில் சொல்லி இருக்கிறார். அதற்கான இணைப்பு இதோ!


இது ஒரு நல்ல விஷயம். இந்த திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவது பதிவர்களின் கையில் தான் இருக்கிறது. இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதால் சிலர் கட்டுப்பாடுகளை படிக்காமல் வணக்கங்கள், காணொளி/லி என இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று காலை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் எல்லா இற்றைகளையும் பார்த்துவிட்டுச் சென்றேன். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பிக்க, தமிழ் வலைப்பதிவகம் குழுவிலிருந்து மட்டும் 77 இற்றைகள்! – அதில பல தவிர்க்க வேண்டிய செய்திகள்! மற்ற குழுவிலிருந்து 50 இற்றைகள்! இதைத் தவிர குடும்ப குழுமத்திலிருந்தும் சில இற்றைகள். அத்தனையும் படிக்க முடியுமா?

இந்த நல்லதோர் வசதியை சிறப்பாகப் பயன்படுத்துவது, பதிவர்களான நம் கையில் தான் இருக்கிறது. குழுவில் இணைபவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.  புதிது புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கி, சீரிய பல செயல்களைச் செய்து வரும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…..

இக்குழுவில் எனது முதல் இணைப்பும் இந்தப் பதிவாகத்தான் இருக்கப் போகிறது! நல்லதோர் திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவோம். நமது ஆக்கங்கள் பலரையும் சென்றடைய இந்த திரட்டியைப் பயன்படுத்துவோம்!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.