புதன், 31 அக்டோபர், 2012

கார்கில் டு கன்யாகுமரி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடு கண்ணா ஓடு என்ற தலைப்பில் எனது நண்பர் திரு அருண் பரத்வாஜ் பற்றி நான் எழுதிய பகிர்வு உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம்.  இல்லையெனில் இங்கே கிளிக்கிடுங்கள்.  இப்போது மீண்டும் அவரைப் பற்றிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கார்கில் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கார்கில் போரும், அதில் உயிரிழந்த சக மனிதர்களும். கூடவே அங்குள்ள பனி படர்ந்த மலைகளும் தான்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2676 மீட்டர் உயரத்தில் இருக்கும் கார்கிலிலிருந்து இந்தியாவின்  தென்கோடியில் இருக்கும் கன்யாகுமரி வரையுள்ள தூரம் சற்றேறக்குறைய 4000 கிலோ மீட்டர். 

ஒரு வாகனம் மூலம் சாலை வழிப் பயணம் செய்தால் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்த்த் தொலைவினை நீங்கள் கடக்க முடியும்.  ரயில் மூலம் என்றால் ஜம்மு வரை சாலை வழி வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வழியாக கன்யாகுமரி வந்தடையலாம்.  அதுவே உங்களை மொத்த தூரத்தினையும் ஓடிக் கடக்கச் சொன்னால் உங்களது பதில் நிச்சயம் வேற வேலை இல்லை?’ என்பதாகவோ,என்னால முடியாதுப்பா’ என்றோ இருக்கலாம். கொல்கத்தாவினைச் சேர்ந்த திரு ஆதிராஜ் சிங், இதே கேள்வியை நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களிடம் கேட்டபோது, உடனே, சற்றேனும் யோசிக்காது, சரி என்று சொல்லி விட்டார். ஜம்மு காஷ்மீர் சாலை ஒன்றில் இருந்த ஒரு விளம்பரப் பலகையில்கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை ஒரே இந்தியா” என்று எழுதியதைப் பார்த்தவுடன் இந்த ஓட்ட்த்திற்கான வித்து தோன்றியது.  விளம்பரதாரர்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்து, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் கார்கிலிலிருந்து ஓட ஆரம்பித்து விட்டார் அருண். 

நடுங்க வைக்கும் குளிர் பிரதேசமான கார்கிலில் பிராண வாயு பற்றாக்குறை, நடுங்கும் குளிர் என்ற பிரச்சனைகள் இருந்தாலும், அக்டோபர் மாதம் முதல் தேதியில் தனது ஓட்டத்தினை ஆரம்பித்த அருண், லே-லடாக் போன்ற பகுதிகளைக் கடந்து, கடந்த திங்கள் கிழமை [22.10.2012] அன்று தில்லி வந்து சேர்ந்தார். 

திங்கள் அன்று மதியம் இந்தியா கேட் பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அறுபது நாட்களுக்குள் நிச்சயம் கன்யாகுமரியைச் சென்றடைந்து விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறினார்.  பயணத்தின் போது இவருக்குத் துணையாக வரும் வாகனங்களில் ஒன்று உறைந்து போன தண்ணீரால் பழுதாகிவிட, “எதுவும் அருணின் முயற்சியைத் தோற்கடிக்கக் கூடாது” என்று தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்.  நிறைய தண்ணீர் குடித்தபடியே பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அருண்.

உயரங்களில் தினம் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டரே ஓட முடிந்திருக்கிறது.  ஆனால் ஞாயிறு அன்று ஒரே நாளில் 83 கிலோ மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார்.  தினமும் வீட்டினருகே இருக்கும் பூங்காவில் மூன்று நான்கு சுற்று சுற்றுவதற்கே மூச்சிரைக்கும் என் போன்றவர்களுக்கு இடையில் இப்படியும் ஒரு சாதனை மனிதர்.

இவரைப் பார்த்து ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு, ‘என் குழந்தைகளுக்கு நல்லதொரு மாதிரியாக இருக்கிறேன்’ அது போதும் என்கிறார். இது வரை பல குழந்தைகளை ஓட்டப் பந்தயங்களில் ஓட பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகம் தந்திருக்கிறார்.  இந்தப் பயணத்தின் போது சந்தித்த பல குழந்தைகளுக்கு ஓட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி வந்ததாகச் சொல்லும் இவருக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது.  ஓடுவதையே ஒரு கேரியராகச் செய்ய இந்தியாவில் வழியில்லை போதிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பதில்லை என்றும், வாழ்க்கை ஓடுவதற்கு, ஓடுவதைத் தவிர பணி செய்வதும் அவசியம் என்று சொல்கிறார், இந்தியாவின் திட்டக் கமிஷனில் பணி புரியும் அருண் பரத்வாஜ்.

பாராட்டுக்குரிய இந்த நண்பர், தனது 43-வது வயதில் இன்னமும் இளமையாக இருப்பதற்குக் காரணமே தனது 31- வயதில் ஆரம்பித்த இந்த ஓட்டம் தான் எனச் சொல்கிறார்.  சிறு வயதில் புற்று நோய் வந்து பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைப் பெற்ற இவரை பாராட்டுவோம். 

நவம்பர் மாத இறுதியில் கன்யாகுமரி வந்தடையும் இவரை நமது தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


திங்கள், 29 அக்டோபர், 2012

நவராத்திரி – ஒரு சிறப்பான கொலுநவராத்திரி முடிந்து விஜயதசமியும் கொண்டாடி தீபாவளியும் வரப்போகுது, இப்ப நவராத்திரி கொலு பற்றிய  பதிவா?” என்று என்னை முறைத்துப் படிக்கும் நண்பர்களுக்கு, கொஞ்சம் பொறுமை காக்க விண்ணப்பம் செய்கிறேன்.

நவராத்திரி சமயத்தில், முதல் மூன்று நாட்கள், நம் மனதின் அழுக்கினைக் களைந்து நற்கதியைப் பெற துர்க்கை அம்மனை துதிக்கவும், அடுத்த மூன்று நாட்கள், நமக்குத் தேவையான அளவுக்குக் குறையில்லா செல்வம் பெறவும், அதற்கடுத்த மூன்று நாட்களில் கல்வியின் அதிபதியாம் கலைமகளைப் போற்றி நல் மதியைப் பெறவும் வழி செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.  ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை அன்றே நாம் ஆயுத பூஜையும் கொண்டாடுகிறோம். 

இந்த நவராத்திரி சமயத்தில் பொம்மைகளை அலங்காரமாய் படிகளில் வைத்து "கொலு" வைப்பது நமது தமிழகத்தின் பழக்கம்.  பரம்பரை பரம்பரையாக கொலு வைத்திருக்கும் சிலர் வீட்டில் நூறு ஆண்டுகள் ஆன பழமையான பொம்மைகளைப்  பார்க்கும்போது அப் பொம்மைகளின் கலையழகு நம்மை மயக்க வைக்கும்.   கொலு பொம்மைகளை அடுக்குவதற்குக் கூட வழிமுறைகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்  நம் முன்னோர்கள். சாதாரணமாக கொலு வைக்கும்போது ஒன்பது படிகளில் கொலு வைப்பார்கள்.  அப்படி வைக்க முடியாதவர்கள் ஒற்றைப் படையில், 3, 5 அல்லது 7 படிகளில் கொலு வைக்கலாம்.  ஒன்பது படிகள் வைப்பதற்குக் காரணம் துர்க்கா தேவியை வழிபட கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம் போன்ற ஒன்பது முறைகள் இருக்கின்றன.

எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் வைக்கவேண்டும் என்பதும் காலகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

·         கடைசி படியில் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் பொம்மைகள்.
·         அதற்கடுத்த மேல் படியில் சாதாரண மனிதர்களின் பொம்மைகள்.
·         அதற்கும் மேல் படியில் சாதுக்கள், மகான்கள் போன்றவர்களின் பொம்மைகள்.
·         அதற்கும் மேல் படியில் ஆண்டவனின் அவதாரங்கள் தசாவதாரம் பொம்மைகள்.
·         எல்லாவற்றிற்கும் மேலான படியில் அம்பாள், சிவன், விஷ்ணு, லக்ஷ்மி போன்றவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.இன்னொரு தத்துவமும் இந்த கொலு மூலம் விளக்கப்படுகிறது.  மனிதர்கள் நல்ல எண்ணங்களோடு அடுத்தவர்களுக்கு நல்லது செய்து வாழ்ந்தால், சாதுக்கள், மகான்கள் போன்றவர்களின் நிலைக்கு உயர்ந்து, படிப்படியாக மனிதப் பிறப்பின் முக்கிய நோக்கமான பகவானின் திருவடிகளை அடைய முடியும். அப்படி இல்லாது, கெட்ட எண்ணமும், தீய செயல்களும் செய்தால் தனது நிலையிலிருந்து தாழ்ந்து விலங்குகள் நிலைக்குச் சென்று விடுவார்கள் என்ற உயர்ந்த தத்துவமும் இக்கொலு மூலம் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக கொலு பொம்மைகள் மண்ணால் செய்யப்பட்டு வந்தது. சில காலமாக POP என்று அழைக்கப்படும் Plaster of Paris அல்லது காகிதக் கூழ் கொண்டு பொம்மைகள் தயாரிக்கிறார்கள். பல வித இராசயனப் பொருட்கள் மற்றும் வண்ணங்களை  இதற்கு  பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  நெய்வேலியை அடுத்த பன்ருட்டி இரண்டு விஷயங்களால் நிறைய பேருக்குத் தெரியும் ஒன்று பலாப் பழம் மற்றொன்று முந்திரிப் பருப்பு.  இதில்லாது மூன்றாவதாக கொலு பொம்மைகளும் இங்கே அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.  ஒரு தெரு முழுவதுமே  கொலுவிற்கான மண் பொம்மைகளை செய்து பிழைக்கிறார்கள். தில்லியில் உள்ள எனது நண்பர், ஒரு சிறப்பான கொலுவினைக் காண என்னை அழைத்தார்.  நவராத்திரி சமயமான முதல் ஒன்பது நாட்களிலும் செல்ல முடியவில்லை.  விஜயதசமி அன்று காலையில் புறப்பட்டு தில்லியை அடுத்த குர்காவ்ன் பகுதியில் இருக்கும் திரு ரமேஷ் சாரி என்பவரது இல்லத்திற்குச் சென்றோம்.  அங்கு அவரும் அவரது துணைவி சௌம்யா ரமேஷ் அவர்களும் அமைத்திருந்த கொலு அவ்வளவு அற்புதமாக இருந்தது.கொலுவில் வைத்திருந்த அத்தனை பொம்மைகளுமே பித்தளையால் செய்யப்பட்டவை. முதல் படியில் புன்னை மரத்தடியில் குழலூதும் கிருஷ்ணர், பக்கத்திலேயே ராதை பொம்மை. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை, மரத்திலுள்ள இலைகள் என அத்தனை அழகு. சாதாரணமாக ராமர்-சீதை அமர்ந்திருக்க, அருகில் இலக்குவன் நின்று கொண்டும், அனுமன் கீழே அமர்ந்திருக்கும் படத்தினை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இங்கே பார்த்தது ராமர்-சீதை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, ஒரு புறம் இலக்குவனும், மறுபுறம் சத்ருக்னனும் நின்றிருக்க, ராமர் பாதத்தின் அருகே ஒரு புறத்தில் அனுமனும், மற்றொரு புறத்தில் பரதனும் அமர்ந்திருக்கிறார்கள்.

இதற்கான விளக்கமும் திருமதி ரமேஷ் சொன்னார்கள் பதினான்கு வருட வனவாசம் முடிந்து ராமர் திரும்பி வர தாமதமானதால் பரதன் அக்னிக்குள் பிரவேசிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, அங்கே சீதையும் அக்னிக்குள் பிரவேசிக்க, பரதன் அக்னிக்குள் புகாமல் அனுமன் விரைந்து வந்து தடுத்து நிறுத்துகிறார்.  ராமனும் சீதையும் அயோத்தி திரும்ப, அவரது பாதுகைகளை ஒரு பக்கத்தில் அமர்ந்து பரதன் அணிவிக்கிறார். அந்தக் காட்சியைத் தான் இச்சிலை மூலம் வடித்திருக்கிறார்கள். தசாவதர சிலைகளும், லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், பாவை விளக்குகள், என ஒவ்வொன்றும் கலைநயத்தோடு கண்ணைப் பறித்தன.  மொத்தத்தில் ஒரு சிறப்பான கொலு பார்த்த உணர்வு கிட்டியது.  கொலுவில் வைத்திருந்த பொம்மைகளின் அழகை நீங்களும் ரசிக்க, நான் எடுத்த புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருக்கிறேன்.தமிழகத்திலிருந்து தொலைவில் இருந்தாலும், பாரம்பரியத்தினை விட்டுக் கொடுக்காது நவராத்திரி சமயத்தில் சிறப்பாக கொலு வைத்திருக்கும் திரு ரமேஷ் மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் அவர்களுக்கும் எல்லாம் வல்லவன் நல்லாசி வழங்கட்டும்.

நவராத்திரி முடிந்தாலும் பரவாயில்லையென இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  அனைவருக்கும் எல்லாம் வல்லவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். 

மீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

இலையில் அற்புதக் கலை
சிறுவயதில் மர இலைகளை புத்தகங்களில் வைத்து பதப்படுத்தி இருக்கிறீர்களா நீங்கள்! தானாக வீழ்ந்த இலையை எடுத்து புத்தகத்தின் தாள்களுக்கிடையில் வைத்து தினம் தினம் எடுத்துப் பார்த்து இருக்கிறேன் சிறு வயதில் – அது மென்மையாக ஆவதைப் பார்த்து, பொறுமையாய் அதனைத் தொட்டு அதை உணர்ந்திருக்கிறேன்.  

இன்னொன்றும் தெரியும் – வாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் நான் மட்டுமல்ல நம்மில் பலர் “ஒரு கட்டுகட்டுவோம்! ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது சாப்பாட்டு இலை அல்ல!

இன்று நாம் பார்க்கப் போகும் புகைப்படங்கள் இலைகளோடு சம்பந்தப் பட்டவை. 

சாதாரணமாகவே இலைகள் மென்மையானவை.  அந்த இலைகளில் சிலர் வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் வரைவார்கள்.  ஆனால் சைனாவின் Jiangsu மாநிலத்தில் 1950-ஆம் வருடம் பிறந்த Huang Taisheng என்பவர் இலைகளில் உருவங்களைச் செதுக்குகிறார்!  மாதிரிக்கு ஒன்றைப் பாருங்கள்.  பிறகு விவரங்களைச் சொல்கிறேன்.சிறு வயதில் புழு ஆங்காங்கே கடித்த ஒரு இலையைப் பார்த்த ஹுவாங் அவர்களுக்கு கடிபட்ட இலையில் சீனாவின் வரைபடம் போன்ற உருவம் தெரிந்தது. அங்கே ஆரம்பித்தது அவரின் இலையில் உருவம் செதுக்கும் கலை.  சாதாரணமாக கடினமான பொருட்களில் தான் உருவங்களைச் செதுக்குவார்கள் – மென்மையான இலையில் செதுக்கினால்? தோல்வியில் முடிந்த பல முயற்சிகளுக்குப் பிறகு அவருக்கு வெற்றி.  தாமஸ் ஆல்வா எடிசனின் புகழ் பெற்ற வாக்கியமான "If I find 10,000 ways something won't work, I haven't failed. I am not discouraged, because every wrong attempt discarded is another step forward" நினைவுக்கு வருகிறது.
உயிரியல் வல்லுனர்களின் உதவியோடு ஒரு திரவத்தினைக் கண்டுபிடித்து அதில் இலைகளை பல மணி நேரம் வைத்து, இலைகளைப் பதப்படுத்தி, அதன் பிறகு பல் வேறு செய்முறைகளைக் கடந்து இலைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்கள் கெடாமல் பாதுகாக்க முடியுமாம்.  1994-ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் இந்த சாதனை மனிதர்.  இவர் செதுக்கிய இலைச் சிற்பங்கள் சைனாவின் பல அருங்காட்சியகங்களில் இருக்கிறதாம்.


 
என்ன நண்பர்களே இவரது அற்புதமான இலையில் அற்புதக் கலை ஓவியங்களைக் கண்டு ரசித்தீர்களா? மின்னஞ்சலில் இந்த புகைப்படங்களை அனுப்பிய தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.


மீண்டும் வேறு சில புகைப்படங்களோடு உங்களை அடுத்த ஞாயிறு சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஃப்ரூட் சாலட் – 18: – 81 மாடி கட்டிடம் – பூக்களின் நடனம் – சினிமாவில் காப்பிஇந்த வார செய்தி:  தில்லியை அடுத்த NOIDA [New Okhla Industrial Development Authority]-வில் புதியதாக 81 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டப் போகிறார்கள் என இந்த வாரம் முழுவதும் விளம்பரங்கள் நாளிதழ்களில் வந்த வண்ணமிருக்கிறது. சுமார் 300 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 81 மாடிகளில் மூன்று, நான்கு, ஐந்து அல்லது ஆறு BHK கொண்ட வீடுகள் கட்டப் போகிறார்கள். விலை ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே – குறைந்த பட்சம் மூன்று கோடி – விளம்பரங்களிலேயே சொல்லி விட்டார்கள் – அழைப்பில்லாமல் வரவேண்டாமென! பலவித வசதிகள் கொண்ட வீடுகளைக் கட்டித் தரப்போவதாக இவர்கள் விளம்பரங்கள் செய்கின்றார்கள்.  மாடியில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கூட இருக்கப்போகிறது இந்த குடியிருப்பில்.  அதைத் தவிர பல வசதிகள் இருக்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வசதிகள் என்ன என்று காண விரும்புவர்கள், அவர்களின் இந்த தளத்தில் சென்று பார்க்கலாம். நானும் தளத்தில் சென்று பார்த்து விட்டு நம்ம தகுதிக்கு இது ரொம்ப சின்ன வீடா இருக்கறதால வேண்டாம்னு விட்டுட்டேன்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களிடம் எது கொடுக்கப்பட்டாலும், அதிலிருந்து அழகான ஒன்றை உருவாக்க முடிந்தால் அது தான் புத்திசாலித்தனம்.இந்த வார குறுஞ்செய்தி

LIFE IS NOT A REHEARSAL – EACH DAY IS A REAL SHOW; NO RETAKES, NO REWINDING – SO GIVE THE BEST PERFORMANCE IN ALL YOUR ROLES.

ரசித்த புகைப்படம்:  குழந்தையாக இருக்கும்போது எந்தக் கவலையுமில்லாது இருந்தோம்.  வளர வளரத்தானே பிரச்சனைகள்...  இந்தக் குட்டிக் குழந்தையின் படம் பார்த்து மகிழ்வோம்!இந்த வாரக் காணொளிஇந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்ததுஉங்கள் ரசனைக்காய் இங்கே. சென்ற வாரம் பறவைகளின் நடனம் – இந்த வாரம் பூக்களின் நடனம்.  பூக்களை இரண்டு நாட்கள் தொடர்ந்து படமெடுத்து அவற்றின் வளர்ச்சியை அழகிய நடனமாக்க் காணொளியில் காண்பித்திருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.


சினிமாவில் காப்பி

நேற்று ஒரு பழைய ஹிந்தி படம் பார்த்தேன்அமீர் கான், அஜய் தேவ்கன், காஜோல், ஜூஹி சாவ்லா ஆகியோர் நடிப்பில் 1997-ஆம் வருடம் வெளிவந்த படமானஇஷ்க் [ISHQ] என்ற படம்தான் அது.   படம் பார்த்துட்டு இருக்கும் போது சில காட்சிகள் அப்படியே எதோ தமிழ்படத்தில பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்தன்னோட காதலியை எதிர்த்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பார்த்த அஜய் தேவ்கன், இரண்டு குடியிருப்புகளையும் இணைத்திருக்கும் இரண்டு குழாய்களில் நடந்து போகும் போது தடுமாறி கீழே தொங்குகிறார்அவரைக் காப்பாற்ற வரும் நண்பர் அமீர்கானும் அவரை வழிமொழிகிறார்இதே காட்சி நம்ம தமிழ் படமான எம். குமரன் சன் ஆஃப் மஹாலெட்சுமி படத்துலயும் மிகச்சில மாற்றங்களோட வருதுஇஷ்க் படத்துலயும் சிலை உடைந்து போற காட்சி இருக்கு.  2004- வந்த எம். குமரன் படத்துலயும் இந்த காட்சி வருதுஅப்படி ஒரு அப்பட்டமான காப்பி….  இஷ்க் பட டைரக்டர் எந்தப் படத்தைப் பார்த்து காப்பி அடிச்சாரோ தெரியல….

படித்ததில் பிடித்தது:

டெலிஃபோன்

முடிந்தவரை அதிக தூரம் நடந்தேன்
இங்கிருந்து இன்று
எல்லாம் நிசப்தமாக இருந்த நேரம் அங்கே
ஒரு மலரின் இதழின் மேல் காதை வைத்து
அதில் நீ பேசுவதைக் கேட்டேன் –
இல்லை என்று சொல்லாதே – அதில் நான் உன்
குரலைக் கேட்டேன்
அதோ பார் அந்த ஜன்னலில் இருக்கிறதே
அந்த மலர் வழியாகத்தான் நீ பேசியிருக்க வேண்டும்
என்ன சொன்னாய் ஞாபகமிருக்கிறதா?

“நான் என்ன சொன்னதாக நீ நினைத்துக் கொண்டாய்?
அதைச் சொல் முதலில்

மலரைப் பார்த்தேனா?
அதிலிருந்து தேனீயை விரட்டி விட்டு
என் தலையைச் சாய்த்து
மலரின் காம்பைப் பிடித்துக் கொண்டு
கவனித்துக் கேட்டேன்
நிச்சயம் கேட்டேன்

“என்ன அது என் பெயரா?

“இல்லை ‘வாஎன்று நீயோ
வேறு யாரோ சொன்னமாதிரி இருந்தது

நான் அப்படி நினைத்திருக்கலாம் ஆனால்
இரைந்து சொல்லவில்லை

“எனவே நான் வந்துவிட்டேன்

-          ஆங்கிலத்தில் கவிதை எழுதியது Robert Frost.  கவிதையை தமிழில் மொழி பெயர்த்தது யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.