திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 1

உறைந்து கிடக்கும் நீர்நிலை 
இடம்: தவாங் அருகே...

பஞ்ச் த்வாரகா பயணத் தொடர் முடித்து சில வாரங்கள் கடந்து விட்டன. அடுத்த பயணத் தொடர் ஏதும் இல்லையா என்று யாரும் கேட்பதற்கு முன்னர் ஆரம்பித்துவிட எண்ணம் இருந்தது. அதற்குள் நண்பர் முந்திக் கொண்டார் – ”பதினைந்து நாட்கள் ஏழு சகோதரி மாநிலங்களுக்குப் பயணம் சென்று வந்ததைப் பற்றி இன்னும் ஒன்றும் எழுதவில்லையே?  எப்போது அந்தப் பயணம் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறாய்?”  கேள்வி வந்தபிறகும் சும்மா இருந்தால் எப்படி! இதோ ஆரம்பித்து விட்டேன். முதலில் ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் மாநிலங்கள் எவை என்று பார்க்கலாம்…..

ஏழு சகோதரிகள்.....
படம்: இணையத்திலிருந்து.....

ஏழு சகோதரிகள்:  இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் 7 மாநிலங்களை ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள்.  அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிப்புரா ஆகியவை. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவதில்லை. ஏதோ இந்த மாநிலங்கள் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம்.  அப்படி பயம் இல்லாதவர்களும், சரியான போக்குவரத்வது வசதிகள் இல்லாத காரணத்தினாலும் இங்கே பயணிக்க யோசனை செய்கிறார்கள்.   சமீப வருடங்களில் தான் இங்கே இருக்கும் பல சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வந்திருக்கிறது. அரசாங்கமும் இங்கே சுற்றுலாவை அதிகரிக்க பல வசதிகளைத் தந்து வருகிறது.

மீன் பிடிக்கலாம் வாங்க!
இடம்: லோக்டாட் ஏரி, மோய்ராங், மணிப்பூர்....

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து நிறைய பேர் தில்லியில் வசிக்கிறார்கள். தவிர அலுவலகத்திலும் சில வடகிழக்கு மாநில நண்பர்கள் உண்டு. அலுவலகப் பயிற்சி ஒன்றின் போதும் மிசோரம் மாநிலத்திலிருந்து மொத்தமாக ஐந்து பேர் வந்து அவர்கள் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பற்றிப் பெருமையாய்ச் சொல்ல, எனக்கும் என்னுடன் பயிற்சியில் பங்கெடுத்த கேரள நண்பருக்கும் மிசோரம் மட்டுமல்லாது ஏழு சகோதரிகள் மாநிலங்கள் அனைத்திற்கும் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.


பாரம்பரிய உடையில் சிறுமிகள்
இடம்: இம்ஃபால் அருகே..

பயிற்சி முடிந்து சில் வருடங்கள் ஆன பிறகே இப்பயணம் எங்களுக்கு வாய்த்தது. சென்ற வருடத்தில் இந்த மாநிலங்களுக்குச் செல்ல ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இம்மாநிலங்களுக்குச் செல்ல சில முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்தது – குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்ய வேண்டுமெனில் அந்த மாநிலத்தினுள் நுழைய ILP என அழைக்கப்படும் Inner Line Permit வாங்க வேண்டும். இதற்கு தலைநகர் தில்லியில் உள்ள அந்த மாநிலங்களின் அலுவலகங்களுக்கோ அல்லது  அம்மாநில எல்லையில் இருக்கும் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும்.மீன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண்...  
நடுவே முதுகில் தூங்கும் குழந்தையைப் பார்த்த போது எடுத்த படம்
இடம்: கொஹிமா, நாகலாந்து


தலைநகரில் நான் இருப்பதால் எனக்கும் கேரள நண்பர்கள் ஐந்து பேருக்கும் சேர்த்து தலைநகரிலேயே அனுமதிச் சீட்டுகளை வாங்கச் சென்றேன். அனைவருமே அரசுத் துறையில் இருப்பதால், நாகலாந்து செல்ல அனுமதி வாங்கத் தேவையில்லை என்று தெரிந்தது.  அருணாச்சலப் பிரதேசம் செல்ல அனுமதி வாங்கினேன் – அதற்கு ஒரு படிவம் நிரப்பி, அனைவருடைய அடையாள அட்டையின் நகல் கொடுப்பதோடு, புகைப்படமும் கொடுக்க வேண்டும். கூடவே ஒருவருக்கு நூறு ரூபாய் கட்டணமும் உண்டு! நமது நாட்டிற்குள்ளே இருக்கும் ஒரு மாநிலத்திற்குச் செல்ல இத்தனை கெடுபிடிகள்! காரணம் சீன எல்லையில் இருக்கும் மாநிலம்!

பிள்ளையும் சுமந்து கொண்டு 
பள்ளிப் புத்தகத்தினையும் சுமக்கும் தாய்....
இடம்: கொஹிமா....

இந்தியத் தலைநகரிலிருந்து நான் மட்டும் புறப்பட, மற்ற நான்கு நண்பர்களும் கேரளத் தலைநகரிலிருந்து புறப்பட வேண்டும்.  நண்பர்கள் பெங்களூரு வழியாக மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்ஃபால் வந்து சேர, எனக்கு நேரடியாக இம்ஃபாலுக்கு விமானம்.  தில்லியிலிருந்து இம்ஃபால் செல்லவும், பயணத்தின் முடிவில் கொல்கத்தாவிலிருந்து தில்லி திரும்பவும் மட்டும் நான் விமானச் சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தேன். மற்ற இடங்களுக்கு எங்கள் ஐவருக்குமாகச் சேர்த்து பயண ஏற்பாடுகளை நண்பரே கவனித்துக் கொண்டதால் எனக்கு அதிகம் வேலை இருக்கவில்லை!

தண்ணீர் சுமக்கும் நேபாளி முதியவர்....
இடம்: கொஹிமா...

என்னதான் ஏழு மாநிலங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், அனைவருக்கும் ஒரு சேர பதினைந்து நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது கடினமான விஷயம்.  அலுவலகத்தில் விடுமுறை கிடைத்தாலும், வீட்டிலும் அனுமதி கிடைக்க வேண்டுமே!  கேரள நண்பருடன் வந்த ஒருவர் அவருக்கு அலுவலகத்திலிருந்து பயிற்சிக்கு அனுப்புகிறார்கள் என்று பொய் சொல்லிவிட்டு வர அவரை பயணம் முழுவதும் ஓட்டிக் கொண்டிருந்தோம் – “வீட்டுக்குப் போனதும் இருக்கு உனக்கு!, இதோ போட்டுக் கொடுக்கிறோம்” என பயமுறுத்தியபடியே இருந்தோம்.

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளிகள்...
இடம்: அருணாச்சலப் பிரதேசம்

எனக்கும் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன . கடைசி நாள் வரை ஏதேதோ வேலைகள் – அனைத்தையும் முடித்துவிட்டு தான் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற நிலை.  அனைத்து வேலைகளையும் விடுமுறை நாட்களில் கூட அலுலவலகம் சென்று முடித்துக் கொடுத்த பிறகு தான் அனுமதி கிடைத்தது.  ஒரு வழியாக நான் தில்லியிலிருந்து புறப்பட்டேன். 

கரும்புச் சாறு குடிக்கலாம் வாங்க....
இடம்: இம்ஃபால் பேருந்து நிலையம்....
உழைப்பாளி இருப்பது இம்ஃபால் ஆக இருந்தாலும் பீஹார் மாநிலத்திலிருந்து வந்தவர்.

இதுவரை சென்றிராத இடங்கள்…  வித்தியாசமான உணவுப் பழக்கம் கொண்டவர்கள் இருக்குமிடம் – அவற்றுக்குச் செல்லப் போகும் எங்களுக்கு “அங்கே என்ன வரவேற்பு கிடைக்கும், என்னைத் தவிர மற்ற அனைவரும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பதால் அவர்களுக்குப் பிரச்சனையில்லை – நான் மட்டுமே சைவம் சாப்பிடுபவன் – வடகிழக்கு மாநிலங்களில் சைவ உணவு கிடைப்பது அரிது என்பதால் எப்படிச் சமாளிக்கப் போகிறாய் என அலுவலக நண்பர்கள் மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.  பதினைந்து நாள் தானே – சமாளித்து விடுவேன் என்று தைரியமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். 


எதையும் தாங்கும் முதுகு....  பைக்கு பதில் இக்கூடையில் போட்டு தான் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்
இடம்: கொஹிமா, நாகலாந்து


அப்போது நண்பர் ஒருவர் வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று,  உணவு கிடைக்காமல் அவர் பட்ட அவஸ்தையைச் சொன்னது நினைவுக்கு வந்தது - அச் சம்பவம்……

உணவகத்திற்கு அவரும் அசைவம் சாப்பிடும் நண்பர்களும் சென்று அமர, அவர் ரொம்பவும் முன் ஜாக்கிரதையோடு ”வெஜ்” என்று சொல்ல, உணவகச் சிப்பந்தி, “பேஜ்” எனச் சொல்ல, பெங்காலிகள் போலவே இங்கேயும் “வ” எனும் எழுத்தை “ப” என உச்சரிப்பார்கள் போல என, மீண்டும் “வெஜ்” என்று அழுத்திச் சொல்ல, சிப்பந்தி மீண்டும் “பேஜ்” எனச் சொல்லி உள்ளே சென்றார்.  மற்றவர்கள் அனைவருக்கும் உணவு வர இவருக்கும் ஒரு தட்டில் வைத்து வந்தது உணவு – அதன் மேலே ஒரு ஃபோர்க் மற்றும் கத்தி – இது எதற்கு எனக் கலக்கமாக பார்த்தால் – சிப்பந்தி கொண்டு வந்து வைத்தது ஏதோ ஒரு மிருகத்தின் மூளை! மூளைக்கு ஹிந்தியில் ”பேஜ்” எனப் பெயர்! பிறகு எங்கே சாப்பிடுவது!  பழங்கள், பால் என சாப்பிட்டு வந்த அனுபவத்தினை சொல்லி இருக்கிறார்!


இலந்தைப் பழம் விற்றுக் கொண்டிருந்த பாட்டி..
இடம்: ஷஹீத் மினார், இம்ஃபால்


இப்படி பல அனுபவங்கள் கேட்டிருந்தாலும், நிறைய ஊர்களுக்குப் பயணப்பட்டு கிடைக்கும் சைவ உணவுகளையும், கிடைக்காத பட்சத்தில் பழங்கள், பால், ப்ரெட் என சாப்பிட்டு ஓட்டிய எனக்கு பிரச்சனை இருக்காது என தைரியமாக புறப்பட்டேன்.

இந்த ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களுக்குப் பயணம் செய்து வந்த அனுபவங்களை இன்றிலிருந்து எழுதப் போகிறேன்.  வாரத்திற்கு இரண்டு கட்டுரைகளாக எழுத என்ணம் – நேரமும் இணையமும் ஒத்துழைக்க வேண்டும்.

உங்கள் அனைவருடன் இந்த அனுபவங்களைப் பகிரும் நோக்கத்தில் மட்டுமே எழுதுகிறேன் – உங்கள் ஆதரவு உண்டா?

அடுத்த பதிவில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கடைவீதிப் பிள்ளையார்……பிள்ளையார்…..  நம் ஊரில் அரச மரத்திற்கு அரச மரம், பிள்ளையார் இருக்கிறார். மண்ணில் பிடித்து வைத்தாலும் சரி, கல்லில் செய்தாலும் சரி, மரத்தில் செய்தாலும் சரி, மஞ்சள் தூளில் பிடித்து வைத்தாலும் சரி அவருக்கு எந்த கவலையும் இல்லை! எந்தப் பொருளிலும் பிள்ளையாரைச் செய்து விடுகிறார்கள். 

எந்த ஊருக்குப் போனாலும், எந்த மேளாவிற்குப் போனாலும், அங்கே பிள்ளையார் சிலைகளையும், விற்கப்படும் பிள்ளையார் பொம்மைகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது எனது ஒரு வழக்கம். பெங்காலி நண்பர் ஒருவர் இப்படி பிள்ளையார் பொம்மைகளையும் சிலைகளையும் சேர்த்து வைப்பது பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில் சூரஜ்குண்ட் மேளாவிற்கு நண்பர்களோடு சென்ற போது அங்கேயும் பல பிள்ளையார் பொம்மைகள் – சில தரையில் வைத்திருக்க, பல பிள்ளையார்களை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தார்கள்!  அனைத்தையும் புகைப்படமாக என் காமிராவிற்குள் பிடித்துக் கொண்டேன்.  நான் பிடித்தவை இதோ உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!என்ன நண்பர்களே எத்தனை விதமான பிள்ளையார்கள் பார்த்தீர்களா? கலைநயத்துடன் செய்யப்பட்ட இவற்றை ரசித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை!

அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்களுடன் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஃப்ரூட் சாலட் – 159 – தானம் – வீட்டு வேலை – வாழ்க்கை வாழ்வதற்கே!

நல்ல மனம் வாழ்க…படத்தில் இருக்கும் சர்தார் குமீத் சிங், கடந்த பதினைந்து வருடங்களாக பட்னா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்க வரும் ஏழை நோயாளிகளுக்கு, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இலவசமாக உணவு வழங்கி வருகிறாராம்….   நல்ல மனம் கொண்ட இம்மனிதருக்கு இந்த வாரப் பூங்கொத்து!


வாழ்க்கை வாழ்வதற்கே!:

ஒரு நாவிதரின் கடை. அங்கே வந்திருந்த பெரியவரின் தலையில் எண்ணி எட்டே எட்டு முடி.  அவர் இருக்கையில் அமரவும், கடைக்காரர் கோபத்துடன், முடியை எண்ணனுமா, இல்லை வெட்டி விடணுமா என்று கேட்க, அந்த பெரியவர் சொன்ன பதில்……

கலர் பூசுப்பா! 

நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்போம்!

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!ஒரு குழந்தையைப் போல காரணம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருப்போம்…  காரணம் இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால் பிரச்சனை தான்! மகிழ்ச்சிக்கான அந்தக் காரணம் எந்த நேரமும் உங்களை விட்டு விலகக் கூடும்!

தானம்: காணொளி

உடலுறுப்பு தானம் என்பது நம் நாட்டில் இன்னும் அதிகமாய் பரவாத ஒரு விஷயம். தானம் செய்வதற்கும் பல சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் உங்கள் உடலுறுப்புகளை தானம் செய்து விடமுடியாது. சமீபத்தில் பெங்களூர் சாலை விபத்தில் மரணித்த ஒரு இளைஞர் உடலுறுப்பு தானத்திற்காக இறக்கும் போதும் முயற்சிக்க, அவர் தவிப்பதை காணொளிகளும், புகைப்படங்களுமாக எடுப்பதில் தானே மும்மரமாக இருந்திருக்கிறார்கள் பலரும்….. உடலுறுப்பு தானம் பற்றிச் சொல்லும் நல்லதோர் காணொளி இது…. பாருங்களேன்!


விளம்பரம்: Share the Load…

வீட்டு வேலைகள் அனைத்தையும் வீட்டிலுள்ள பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பது என்ன எழுதாத சட்டமா? வீட்டிலுள்ள அனைவருக்கும் அந்த வேலைகளில் பங்குண்டு என்று அழகாய்ச் சொல்லும் விளம்பரம்! பாருங்களேன்!


Posted by Sheryl Sandberg on Wednesday, February 24, 2016

மும்மூர்த்திகள்!சென்ற சனி-ஞாயிறன்று எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி. அங்கே சென்றிருந்தபோது வாகனங்கள் வைக்குமிடத்தில் குடியிருந்த காவலாளியின் குழந்தைகள் மூன்று பேரும் புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல – அவர்களை புகைப்படம் எடுத்தேன்.  காண்பிக்க அவர்களுக்கு அத்தனை குஷி….  குறிப்பாக இடப்பக்கச் சிறுமிக்கு! பாருங்களேன்!

ஏம்மா!வேலைக்குச் சென்று வீடு திரும்பிய அம்மாவிடம் ஐந்து வயது சிறுமி கேட்டாள்….

“ஏம்மா நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட கொடுத்துட்டு போகல?”

அம்மா சொன்னாள்: “அதைப் போய் யாராவது ஆயாகிட்ட கொடுப்பாங்களா?”

”ஏம்மா, நம்ம வீட்டு பீரோல இருக்கற நகை, பணத்தை எல்லாம் ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?”

”ஷ்ஷூ…. அதை எல்லாம் ஆயாகிட்ட கொடுக்கக் கூடாது!”

”ஏம்மா உங்க ATM கார்ட ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?”

”என்ன கேள்வி இது. நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதை ஆயாகிட்ட எல்லாம் கொடுக்கக் கூடாது!”

”அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற? உனக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியம் இல்லையா?”

இம்முறை அம்மாவிடம் பதில் இல்லை. கண்களில் நீர் மட்டுமே இருந்தது!

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி

புதன், 24 பிப்ரவரி, 2016

முற்றுப் பெறாத ஓவியம் – ரிஷபன்

 படம்: இணையத்திலிருந்து....  

சமீபத்தில் திருவரங்கத்தில் நடந்த பதிவர் சந்திப்பு பற்றி எனது பக்கத்தில் எழுதி இருந்தேன். சந்திப்பின் போது நண்பர் ரிஷபன் அவர்கள் அனைவருக்கும் அவரது சிறுகதைத் தொகுப்பாகிய “முற்றுப் பெறாத ஓவியம்” புத்தகத்தினை அளித்தார்.  ஊரிலிருந்து வந்து சில நாட்கள் புத்தகங்கள் படிக்க முடியவில்லை. நேற்று இப்புத்தகத்தினை வாசித்து முடித்தேன் – இதோ உங்களிடம் வாசிப்பனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள வந்துவிட்டேன்.

ஆசிரியர் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன்.  வலையுலகில் அவ்வப்போது பதிவுகள் எழுதி வரும் இவர் இப்போதெல்லாம் முகப்புத்தகத்தில் மூழ்கிவிட்டவர். இவரது சிறுகதைகள் பல வார, மாத இதழ்களில் வெளியானவை.  சில குறுநாவல்களும் உண்டு.  மனதைத் தொடும் கதைகளை எழுதுபவர். பிரசுரமான பல கதைகள் பரிசு பெற்றவை. “இலக்கியச் சிந்தனை” பரிசு பெற்ற “என்” சிறுகதை ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பும் உண்டு.

தொகுப்பு பற்றி அவரது வார்த்தையிலேயே சொல்கிறேன் – “ நல்ல வாசகனுக்குப் பிடித்தது….. அருமையான படைப்புகள். அந்த வகையில் எழுத்தின் மூலம் இதயங்களைத் தொடும் முயற்சியில் இதோ….  இன்னொரு சிறுகதைத் தொகுப்பு…. உங்கள் வாசிப்பிற்கு.”

“முற்றுப் பெறாத ஓவியம்” – தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் – ஒவ்வொன்றும் சிறப்பான கதைகள். முதல் கதையே நட்பு பற்றியது – எட்டு வருட நட்பு – சில வார்த்தைகளில் நண்பர்களுக்குள் நட்பில் விரிசல் வர அதை எப்படிக் கடந்து மீண்டும் நட்புடன் இருப்பது பற்றியது.

அம்மாவுக்குச் சுடிதார்” – தனது பெண் அம்மாவும் சுடிதார் போட்டுக்கணும்னு ஆசைப்பட்டாலும் பிடிக்காது என்று சொன்ன தாரிணி, சுடிதார் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் பிரச்சினைளை – “ஒரு பெண்ணால முடியாதுன்னு சில பேர் நினைக்கிறாங்க…  முடியும்னு காட்டணும் நான் நினைக்கிறேன்!” என சமாளிக்கும் வித்தையைச் சொல்லும் கதை.

”நிறைவு” எனும் கதை – தேரோட்டம் பற்றியது.  தேரோட்டம் பற்றி அவர் சொல்லி இருப்பதைப் பாருங்களேன் – “தேர் ஓடி வரும்போது இனம் புரியாத கவர்ச்சி இருக்கிறது. யாரோ நம்மைத் தேடி வருகிற மாதிரி…. எத்தனை பெருசாய் அணைத்துக் கொள்ள வருகிற மாதிரி…. மனச்சுமை களைந்து…..  மயிலிறகாய் மாற்றி…..  ஆலிங்கனத்தில் சுகம் தரப்போவது போல!”  தேரோட்டத்தின் போது வெக்கையின் கொடுமையைக் குறைக்க அடர்த்தியாய் மயிற்தோகைகளால் ஆன விசிறி கொண்டு மேலே உயர்த்தி வீசிக் கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர் . பத்து வினாடியாவது  அவர் வீசும் காற்று பட்டுத்தான் ஜனக்கூட்டம் அந்த இடத்தைக் கடக்க முடியும். என்னவொரு உயர்ந்த மனது.  அவருக்கு பணம் தர ஆசைப்பட்டுக் கொடுக்க அதை வாங்கிக் கொள்ளாத பெரியவர். எதுவும் எதிர்பார்க்காத மனிதர் – அப்பா, அம்மாவைப் போல!  மனதைத் தொட்ட கதைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை.

”முற்றுப் பெறாத ஓவியம்”  சாலையில் இறை ஓவியம் வரைந்து, அதன் மேல் பார்வையாளர்கள் அதன் மேல் போடும் சில்லறைக் காசுகளை எடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு மனிதன், அவன் பிரியம் வைத்திருக்கும் ஒரு நாய்க் குட்டி, அவர்களின் பசி, அந்த ஏழைக்கும் வந்த காதல், அந்த காதலி வேறொருவரை மணந்து கொள்வது என நமக்குப் பல விஷயங்களைச் சொல்லும் கதை.

“இதயத்தை எடுத்துக்கொள்” சிறுகதை – தன் வாழ்நாளில் மனம் வந்து ஒரு பொருளையும் யாருக்கும், தனது மகன்களுக்குக் கூட கொடுக்க நினைக்காத மனிதர் – கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்க “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என அப்பாவைக் காப்பாற்ற, அம்மாவுக்காக அதைச் செய்ய நினைக்கும் மகன்கள் – மருத்துவர்கள் கடைசியில் கைவிரிக்க, அவரது உறுப்புகளைத் தானம் செய்ய ஒத்துக் கொள்ளும் அம்மா….

”பெயர் தெரியாத தேவதை” – உடுத்திய துணியோடு, மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பு ஜோல்னாவில் போட்டுக் கொண்டு இலக்கில்லாத பயணமாய், மனைவியிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவரின் கதை.  அப்பயணத்தில் அவர் சந்தித்த பெயர் தெரியாத தேவதை, அவருக்குக் கிடைத்த அனுபவம் அவரை வீடு நோக்கித் திரும்ப அனுப்பியதா இல்லையா என்பதை நீங்கள் தொகுப்பினைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்!

தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளும் எனக்குப் பிடித்தன என்றாலும், அனைத்தையும் இங்கே சொல்லப் போவதில்லை.  நீங்களே படித்துப் பாருங்களேன். புத்தகம் கிடைக்குமிடம்:  பிரபாத் புக் ஹவுஸ், 3/20, அலங்கார்நகர், 2வது தெரு, ஷேக்மானியம், போரூர், சென்னை-600116. அலைபேசி: 9841170750.  விலை: ரூபாய் 55.

மற்றுமொரு வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

டிஸ்கி:  புத்தகத்திற்கும் மேலே பகிர்ந்திருக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை! இந்த ஓவியம் வரைந்தது “இளையராஜா” என்று இணையத்தில் போட்டிருக்கிறார்கள். மிக அழகிய ஓவியம் என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!

திங்கள், 22 பிப்ரவரி, 2016

மம்பட்டியான்…
நாங்கள் தங்கி இருக்கும் அரசுக் குடியிருப்பில் தொடர்ந்து ஏதோவொரு பராமரிப்பு வேலை நடந்து கொண்டேதான் இருக்கும். அந்தப் பெயரில் நிறைய பேர் சொத்து சேர்த்து விட்டார்கள் என்றாலும் – வேலை நடந்து கொண்டே இருப்பதில் இன்னுமொரு லாபமும் உண்டு. கூலி வேலை செய்யும் பலருக்கு தொடர்ந்து ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. தலைநகரில் கூலி வேலைகள் செய்பவர்கள் பெரும்பாலானோர் பீஹார் மாநிலத்திலிருந்தோ அல்லது மேற்கு உத்திரப் பிரதேசப் பகுதியிலிருந்தோ தான் வருகிறார்கள். 

எந்த பகுதியில் வேலை செய்கிறார்களோ அங்கேயே ஒரு சின்ன குடிசை – தற்காலிகமாய் அமைக்கப்பட்ட குடிசை – இதை ஹிந்தியில் ஜுக்கி ஜோம்ப்ரி என அழைப்பார்கள் – அமைத்துக் கொண்டு வசிப்பார்கள்.  சில வருடங்கள் தொடர்ந்து இருக்கும் ஜுக்கி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி சிமெண்ட் கட்டிடங்களாகவும் மாறி விடுவதுண்டு!  தங்குவது வீட்டிலென்றாலும், கழிப்பறை வசதிகள் ஏதும் இருக்காது – காலையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு வெளியே கிளம்பி விடுவார்கள்!  இன்னமும் தலைநகரில் இப்படி நிலை இருப்பது வருத்தம் தரும் விஷயம்….

அவர்கள் இருக்கும் பகுதியிலே தான் பெரும்பாலானோர் வேலை செய்கிறார்கள் என்றாலும் சில குடும்பங்கள் விதிவிலக்காக தங்குமிடத்திலிருந்து பேருந்தில் பயணித்து மற்ற குடியிருப்புகள் இருக்கும் இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறார்கள். ஒருவர் வேலைக்குச் சென்று வர முப்பது ரூபாய் வரை பேருந்து கட்டணம் தர வேண்டியிருக்கும். நான் வழக்கமாக வேலைக்குச் செல்லும் தில்லி நகரப் பேருந்து ஒன்றில் ஒரு கணவன் – மனைவி இருவருமே வேலைக்கு செல்வார்கள் . இருவருமே வேலைக்குச் செல்வதால் அவர்களுடன் ஒரு கைக்குழந்தையும் கூடவே வருகிறது.  பேருந்தில் இருக்கும் ஒருவர் விடாது அனைவரையும் நோக்கிப் புன்னகைத்து மகிழ்ச்சி அடையச் செய்யும் அக்குழந்தை.  நாள் ஒன்றுக்கு அறுபது ரூபாய் பேருந்து செலவு – அதன் பிறகு உணவுச் செலவு – சம்பாதிப்பதில் பெரும்பகுதி பயணத்திற்கும் உணவுக்கும் சென்றுவிட, சேமிப்போ, அல்லது குழந்தைகளின் படிப்போ சாத்தியமில்லை….

படிப்பு என்றதும் இன்னும் ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அது தான் தலைப்புக்குச் சம்பந்தமானதும் கூட!

நண்பரின் வீட்டுக்கு முன்னர் பராமரிப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. அங்கேயும் இப்படி ஒரு குடும்பம் வேலை செய்து கொண்டிருக்கிறது.  கணவன் – மனைவி இருவருமே கூலி வேலை செய்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு மகன் – இரண்டு வயதுக்கு மேல் மூன்று வயதுக்குள் இருக்கலாம்.  தினமும் காலையில் அம்மா-அப்பாவுடன் அவனும் வேலைக்கு வந்து விடுகிறான்.  பெரியவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்து கொண்டிருக்க, சிறுவனும், சின்னச் சின்ன வேலைகளை கூடவே செய்து கொண்டிருக்கிறான். ஒருவொரு கல்லாய் எடுத்துக் கொண்டு சேர்ப்பது, மணலை கைப் பிடிகளாக கொண்டு கொட்டுவது என ஏதோ வேலை – அதுவே அவனுக்கு விளையாட்டும் கூட….. சின்னக் கைகள் கொண்டு இப்படி வேலை செய்வது அவனது பெற்றோர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான விஷயம். பெற்றோர்களின் முகத்தில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. நண்பரின் வீட்டில் பூத்திருக்கும் பூவொன்றை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பார்த்த காட்சி எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இரண்டு அடி உயரம் உள்ள குழந்தையின் கையில் பெரிய மண்வெட்டி ஒன்று – அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் சிறுவன்.  அம்மாவும் அப்பாவும் பதறாது சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்……. அவர்களது தொழிலை தொடர்வதற்கு இப்போதிலிருந்தே குழந்தை தயாராகிவிட்டது என்ற மகிழ்ச்சியோ…..

குழந்தைகளை படிக்க வைப்பது பற்றியெல்லாம் அவர்கள் யோசிப்பதே இல்லை. அவன் வயது குழந்தைகள் Play School-ல் செயற்கை களிமண்ணையும், நெகிழியால் செய்யப்பட்ட கற்களையும் வைத்து விளையாடிக்கொண்டிருக்க இவனோ உண்மையான மண்ணுடனும், கல்லுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறான். இப்போதிலிருந்தே மண்வெட்டியும் பிடிக்கத் துவங்கியாயிற்று – வெகு விரைவில் இவனும் ஏதோவொரு கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுவான்  - அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைவான ஊதியத்தினை இன்னும் கொஞ்சம் உயர்த்த நிறைய கரங்கள் வேலை செய்ய வேண்டும் – அவை பிஞ்சுக் கரங்களாக இருந்தாலும்…..…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

நீங்கள் இறங்கி வந்த ஏணி - தங்கமா, வெள்ளியா அல்லது மூங்கிலா?


வடகிழக்கு மாநிலங்களில் பல பழங்குடி மக்கள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சென்ற வருடத்தின் மார்ச் மாதம் அந்த மாநிலங்களுக்குப் பயணித்த போது இப்படி நிறைய பழங்குடி மக்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.  சென்ற வாரம் மீண்டும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு.  ஓட வைத்த ஆட்டக்காரி பதிவில் சொன்னது போல Destination North East நிகழ்ச்சிக்குச் சென்றபோது சில விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலுமே மூங்கிலுக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. பல இடங்களில் மூங்கில் மரங்களைப் பார்க்க முடியும்.  மூங்கில் அவர்களது அன்றாட வாழ்வில் முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கிறது. மூங்கில் அரிசி, மூங்கில் அரும்புகள், என பலவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  மூங்கிலைப் பயன்படுத்தி அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள் என பலவும் செய்கிறார்கள்.  நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களில் மூங்கிலால் செய்யப்பட்ட காதணிகளையும் பார்த்த போது அவற்றில் எத்தனை வேலைப்பாடுகள் என்று பிரமிக்க வைத்தது.மூங்கிலுக்கு இத்தனை முக்கியத்துவம் எதற்கு? அதற்கும் ஒரு கதை இருக்கிறது!  எல்லாவற்றிலும் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கத்தானே செய்கிறது.  திரிப்புரா மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியினரின் நம்பிக்கை தான் இன்றைய பதிவின் தலைப்பில் சொன்ன விஷயம்.பூமியின் முதல் இரண்டு மனிதர்கள் ஆதாம் – ஏவாள் என்ற கதையைப் போலவே இதற்கும் ஒரு கதை.  உலகத்தில் மனிதர்கள் தோன்றுவது எப்படி என்பது பற்றிய கதை.
திரிப்புராவின் பழங்குடி மக்கள் மனிதர்கள் சொர்க்கத்திலிருந்து படிகள் வழியே இறங்கி வந்ததாய் நம்புகிறார்கள் – சிலர் தங்கத்தில் செய்யப்பட்ட படிகள் வழியே வந்ததாகவும், சிலர் வெள்ளியில் செய்யப்பட்ட படிகள் வழியே வந்ததாகவும் நம்பும் அவர்கள் வந்தது மட்டும் பாவம் மூங்கிலால் ஆன படிகள் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் மூங்கில் என்பது அவர்களது வாழ்க்கையில் நீக்க முடியாத இடம் வகிக்கிறதாம்.மூங்கில் கொண்டு இவர்கள் செய்யாத பொருட்களே இல்லை எனவும் சொல்ல முடியும். பாத்திரங்கள், வீட்டின் கூரை, வீடு கட்ட மரங்கள், பாய், படுக்கை, அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள், பெரிய பெரிய கலன்கள், என அனைத்தும் செய்கிறார்கள். மூங்கில் மட்டுமல்ல, அவற்றின் வேர்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை! அதனையும் பயன்படுத்திவிடுகிறார்கள்.

மூங்கில் வேர்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பதப்படுத்தி, மிக அழகான சிற்பங்கள் செய்கிறார்கள்.  பெரும்பாலும் இச்சிற்பங்களில் முகம் மட்டும் செய்வது வழக்கம் என்றாலும், பெரிய வேர்களில் முழு உருவச் சிற்பங்களும் செய்து விடுகிறார்கள். புத்தர், சிவன், கிருஷ்ணன் என பல சிற்பங்களை அங்கே விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  விலை மூங்கிலுக்கு மட்டுமல்ல, அவர்கள் கலைத் திறமைக்கும் தான்!  சிற்பங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள்.நிகழ்ச்சிக்குப் போனபோது எடுத்த சில மூங்கில் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இந்தப் பதிவில் உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன்.  காதணிகள் பார்க்கவே அழகாய் இருக்கின்றன அல்லவா?  காதணிகள் 100 ரூபாயிலிருந்து கிடைத்தன. 

நாம் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தது தங்கம்/வெள்ளி அல்லது மூங்கில் ஏணியோ எதுவாக இருந்தாலும், போகப் போவது மூங்கில் படுக்கையில் என்பது மட்டும் நிச்சயம்!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

வியாழன், 18 பிப்ரவரி, 2016

ப்ரெட் ஆம்லேட் – சமோசா


முகப்புத்தகத்தில் நான் – 2

16 February 2016 - என் உணவு என் உரிமை.....சமீபத்தில் சென்னையிலிருந்து INDIGO விமானத்தில் பயணித்து தில்லி திரும்பினேன். சென்னையிலிருந்து புறப்பட்டு மேகக்கூட்டங்களில் புகுந்து உயரே உயரே சென்று கொண்டிருந்தது விமானம். பாதுகாப்பு அறிவிப்புகள் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளும் தங்களது வேலைகளைத் துவங்கினார்கள்.

விமானப் பணிப்பெண் சற்று நேரத்தில் உணவு வழங்கப் போகிறோம், இணையம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு முதலில் உணவு தந்துவிட்டு, அதன் பிறகு மற்றவர்கள் விரும்பினால் உணவு தரப்படும் என்று சொல்லி முடித்தாரோ இல்லையோ, எனக்கு முன் வரிசையில் இருந்த ஒரு பெண்மணி, கையைத் தூக்கி அந்த பணிப்பெண்ணை அழைக்க ஆரம்பித்தார் - அவர் கையில் Boarding Pass-ல் இருந்து கிழித்த சாப்பாடு Coupon.

வரிசையாகக் கொடுத்துக் கொண்டு வருவோம் என அப்பணிப்பெண் சொன்னாலும், முன் இருக்கை பெண்மணி உயர்த்திய கையை இறக்கவே இல்லை. இதற்கு நடுவில், வெளியே அதிவேகமான காற்று அடிக்கத் துவங்கியிருக்க, விமானி எல்லோரையும் சீட் பெல்ட் அணிந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து கொள்ளச் சொல்ல, பணிப்பெண்கள் உட்பட அனைவரும் இருக்கையில்... அப்போதும் உயர்த்திய கை கீழே இறங்கவே இல்லை......

விமானம் காற்றில் மாட்டிக்கொள்ள, பின் பக்கத்தில் இருந்த [28வது வரிசை] என் போன்றவர்களை பலமாக உலுக்கிக் கொண்டிருந்தது. ஏதோ மேடு பள்ளங்கள் நிறைந்த தார்சாலையில் ஓடும் பேருந்து போல விமானம் பறந்து கொண்டிருந்தது. பம்பர் குலுக்கல் என்பதன் அர்த்தம் என்ன என்பதை எங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தது காற்று.

சற்றே நிலை சீராக, மீண்டும் பணிப்பெண்கள் உணவு ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தார்கள். கைகளை இறக்காமல் இருந்த பெண்மணி இப்போது இன்னும் அதிகமாக கைகளை ஆட்டி தனக்கு உணவு தரும்படிச் சொல்லிக் கொண்டிருந்தாட். அவர் வரிசைக்கு இரண்டு வரிசை முன்னாடி வரை வந்து விட்டபோது மீண்டும் பம்பர் குலுக்கல்..... மீண்டும் சீட் பெல்ட் - உணவு தர முடியாத சூழல்.....

ஒரு வழியாக முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு நிலை சீரடைந்து கை உயர்த்திய பெண்மணிக்கு உணவு கிடைத்தது - இரண்டு சமோசாவும், தேநீர் என்ற பெயரில் தரப்படும் வென்னீர்! இது மட்டும் தான் அவர் முன்பதிவு செய்திருந்தார் போலும். பாவம் இதற்கு எவ்வளவு நேரம் கைகளைத் தூக்கியபடியே இருக்க வேண்டியிருந்தது....

என் உணவு என் உரிமை..... போராடி பெற்ற உணவு அவ்வளவு சுவைக்கவில்லை போலும் - பாதிக்கு மேல் அப்படியே வைத்துவிட்டார்.......

10 February 2016 - ப்ரெட் ஆம்லேட்...

முன்பெல்லாம் தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Pantry Car-ல் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருந்தார்கள். பிறகு IRCTC Canteen வந்த பிறகு பெரும்பாலும் வட இந்தியர்கள், குறிப்பாக பீஹார் மாநிலத்தவர்கள் தான் அதில் பணி புரிகிறார்கள். அவர்கள் வந்த பிறகு கிடைக்கும் உணவு வகைகளும் மாறி விட்டன. ஜுரம் வந்தால் மட்டுமே சாப்பிடும் ப்ரெட் உடன் ஆம்லேட் கிடைக்க ஆரம்பித்தது! ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நம் ஊரில் பலரும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை!

திங்களன்று திருச்சியிலிருந்து சென்னை வரும் போது [பல்லவன்] அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ப்ரெட்-ஆம்லேட் வாங்கினார். வடக்கில் இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு இடையே ஆம்லேட் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கெட்ச்-அப் அல்லது சாஸ் தொட்டு, கைகளில் எண்ணை படாது சாப்பிடுவார்கள்! அது இன்னும் நம்மவர்களுக்கு தெரியவில்லை போலும்!

அந்த இளைஞர் இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு மேல் ஆம்லேட் வைத்து கைகளில் எண்ணை ஒட்டிக்கொள்ள, ஆம்லேட் துண்டுகள் வாயில் கொஞ்சமும் கீழே கொஞ்சமும் விழ சாப்பிட்டார். அதனுடன் கொடுத்த கெட்ச் அப் பாக்கெட் இன்னுமொரு கையில் பிரிக்கப்படாமல் இருந்தது! சரி பிடிக்காது போலும் என நினைத்தேன். என் நினைப்பு தவறு என சற்று நேரத்தில் புரிந்தது!

ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டு கை கழுவிக்கொண்டு வந்தவர், அந்த கெட்ச் அப் பாக்கெட்டை வாயில் வைத்து ஓரத்தில் கிழித்து கொஞ்சம் கொஞ்சமாக சப்பிச் சப்பி, ரசித்து ருசித்துசப்புக் கொட்டியபடியேசாப்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர் புற இருக்கையில் இருந்த சிறு குழந்தை, தன் வாயில் போட்டுக்கொண்டிருந்த விரல்களை வெளியே எடுத்துதா தாஎன்று கைகளால் கேட்டது!

எடுத்த காரியம் முடிப்பேன் என இளைஞரும் மொத்த கெட்ச் அப்-ஐயும் வெறுமனே சாப்பிட்டு முடித்தார்!


ரயில் பயணத்தில் இப்படி எத்தனை விஷயங்கள் பார்க்க முடிகிறது! இன்னும் நிறைய விஷயங்கள் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.