ரத்த பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரத்த பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஆகஸ்ட், 2013

ரத்த பூமி – பார்க்க வேண்டிய இடங்கள் [பகுதி 10]



தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....


தொடர் ஆரம்பிக்கும்போது இந்த பயணம் நான்கு பேருந்துகள் மூலம் பலருடன் சென்றதாக எழுதியிருந்தேன். இப்படி நிறைய பேருடன் பயணம் செய்வதில் சில நன்மைகளும் சில கஷ்டங்களும் உண்டு. நிறைய பேர் என்பதால் கூடவே அழைத்து வந்த சமையல் கலைஞர்கள் உணவு பற்றி நம்மை கவலை கொள்ள விட மாட்டார்கள்.  பயண ஏற்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைத்துச் செல்லும் இடத்திற்குச் சென்றுவிட்டு வரலாம். 

ஆனால் இதில் சில கஷ்டங்களும் உண்டு. மொத்தமாக எல்லோரையும் சேர்த்து ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும்போது பலர் தயாராவதற்கே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.  நீங்கள் தயாராக இருந்தாலும் மற்றவர்கள் வருவதற்கு நேரம் எடுக்கும்போது நீங்கள் வெட்டியாக இருக்க வேண்டும். இப்படி நேரம் வீணாவதால் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்க்க முடியாது போகும். அப்படி குருக்ஷேத்திர பயணத்தில் பார்க்காது விட்ட சில இடங்கள் இப்பகுதியில்......

சன்னிஹித் சரோவர்: சரஸ்வதி நதியின் சங்கமம் எனக் கருதப்படும் இடம். அமாவாசை நாட்களிலும், கிரகண நாட்களிலும் இங்கே ஸ்னானம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நம்புகிறார்கள்.  தனது காலத்திற்கு முன்னரே மரணமடைந்தவர்களின் ஆத்மாவுக்கு விடுதலை அளிக்க இங்கே பரிகாரங்கள் செய்கிறார்கள். விஷ்ணுவின் இருப்பிடமாகவும் கருதுகிறார்கள்.

சரஸ்வதி தீரத்: குருக்ஷேத்திரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் பெஹோவா கிராமத்தில் இருக்கிறது.  இந்த இடமும் சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. 

அருணை கோவில்: அம்பாலா சாலையில் இந்த கோவில் இருக்கும் இடம் சரஸ்வதி மற்றும் அருணா நதிகள் சங்கமிக்கும் இடம். மேலும் விஸ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோருக்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு உண்டு.

ஸ்ரீ கிருஷ்ணா அருங்காட்சியகம்: பிரம்ம சரோவர் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் கிருஷ்ண பகவான் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளனவாம்....

Light and Sound Show:  இந்த தொடரின் ஐந்தாம் பகுதியில் பார்த்த ஜ்யோதிசரில் மாலை வேளைகளில் Light and Sound Show நடத்துகிறார்கள். யுத்தபூமிக்கே உங்களை அழைத்துச் செல்வது போல இருக்கும் என பார்த்த நண்பர்கள் தெரிவித்தார்கள். முப்பது நிமிடங்கள் நடக்கும் இந்த காட்சியின் காணொளி இங்கே இருக்கிறது. ஹிந்தி தெரிந்தவர்கள் பார்த்து ரசிக்கலாம்.

[Dh]தரோஹர் ஹரியானா அருங்காட்சியகம்: ஹரியானா மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைகள், ஹரியானாவின் பழமையைப் பறைசாற்றும் பொருட்கள் இங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருக்கின்றன.

OP Jindal Musical Fountain: அரசியல்வாதியும், தொழிற்சாலைகள் பலவற்றின் உரிமையாளரான திரு OP Jindal அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா இது. இங்கே மாலை வேளைகளில் MUSICAL FOUNTAIN பார்க்க நன்றாக இருக்கும்.  அதன் ஒரு பகுதி இங்கே காணொளியாக!

இந்த இடங்களைத் தவிர, ஒரு முதலைப் பண்ணை, பிப்லி எனும் இடத்திலிருக்கும் ஒரு சிறிய விலங்குகள் சரணாலயம், பிர்லா மந்திர் என இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.  பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல, நிறைய பேராக பயணம் செல்லும் போது இருக்கும் சில அசௌகரியங்களினால் பல இடங்களை பார்க்க இயலவில்லை. அடுத்து அந்தப் பக்கமாக செல்லும்போது இந்த இடங்களையும் பார்க்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்..... 

என்ன நண்பர்களே ரத்த பூமி தொடரினை நீங்கள் அனைவரும் ரசித்தீர்களா?  முடிந்தால் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்களேன்.  இந்தப் பயணத்திற்கு பிறகும் சில இடங்களுக்குச் சென்று வந்தேன்.  அது பற்றிய பதிவுகள் வெளியிடுவது பற்றி இதுவரை ஒன்றும் யோசிக்கவில்லை......  பார்க்கலாம்...  நேரமும் விருப்பமும் இருக்கும்போது எழுதுகிறேன்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.

புதன், 31 ஜூலை, 2013

ஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....












ரத்த பூமி தொடரின் சென்ற பகுதியினை முடிக்கும் போது நான் பார்க்க நினைத்தும் மாலை ஆகிவிட்டபடியால் பார்க்க முடியாது போன இடம் எனச் சொல்லி இருந்தது [ராஜா] ஹர்ஷ் கா டிலா எனும் இடம் தான். அகழ்வாராய்ச்சி மூலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட ஆறு விதமான காலகட்டங்களில் இருந்தவற்றை கண்டுபிடித்து அதை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.




ஹர்ஷ் கா டிலா பற்றிய அறிவிப்பு பலகை
 
கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் நீளமும் 750 மீட்டர் அகலமும் உள்ள இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருட்கள் பற்றியும் கட்டிட அமைப்பு பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.  அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் இங்கே சென்றால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.



அங்கே இருந்த நண்பர்களிடம் கேட்டபோது பல பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்று சொன்னார்கள். ரத்த பூமி தொடரின் பகுதி 7 – ல் பார்த்த ஷேக் சஹேலியின் கல்லறையினை அடுத்த இடம் தான் இந்த ஹர்ஷ் கா டிலா.....



என்னால் இப்பயணத்தின் போது இங்கே செல்ல முடியவில்லை என்பதால் அடுத்த முறை அந்த வழியே செல்லும் போது, தேவையான முன் அனுமதி பெற்று இங்கே சென்று பார்க்க நினைத்திருக்கிறேன். இணையத்தில் தேடியபோது ஷேக் சஹேலியின் கல்லறை பற்றிய காணொளி ஒன்று கிடைத்தது. இந்த காணொளியில் ஹர்ஷ் கா டிலா பற்றிய ஒரு சில படங்களும், அங்கே அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த சில பொருட்களும் இருக்கின்றன.  அந்த காணொளி இங்கே உங்கள் பார்வைக்கு......





அடுத்ததாக நாம் காணப் போவது ஒரு கோவில். பத்ரகாளி மாதாவின் கோவில் இது. ஐம்பத்தியோரு ஷக்திபீடங்களில் ஒன்று எனக் கருதப்படும் இந்த கோவிலில் தான் சதி தேவியின் வலது கணுக்கால் விழுந்தது.  கோவிலின் வாயிலில் இப்போதும் சதி தேவியின் வலது கணுக்கால் இங்கே விழுந்ததை நினைவுபடுத்தும் விதமாக சலவைக்கல்லால் செய்யப்பட்ட சதி தேவியின் வலது கணுக்காலை இங்கே பதித்து வைத்திருக்கிறார்கள்.







பிரதான சாலையில் இருக்கும் வரவேற்பு வளைவு.....
 
நாங்கள் சென்ற அன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இரண்டொரு தினங்களில் நமது குடியரசுத் தலைவர் அங்கே செல்ல இருந்ததால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள்.  கோவிலின் வாசலிலேயே நிறைய கடைகள் – கோவிலுக்குச் செல்லும்போது பத்ரகாளிக்கு சமர்ப்பிக்க நினைக்கும் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.  தேவிக்கு படைக்க சர்க்கரை உருண்டைகள், பூ, பழம், தேங்காய், சரிகை போட்ட சிகப்பு துப்பட்டாக்கள் என அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.




கோவிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து தெரியும் ஒற்றை கோபுரம்


இங்கே இன்னுமொரு விசேஷ காணிக்கையும் தருகிறார்கள். டெரக்கோட்டாவில் செய்யப்பட்ட குதிரை பொம்மைகளை இந்த காளி கோவிலில் மக்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.  மேலே சொன்ன தேவியின் சலவைக்கல்லால் ஆன கணுக்கால் அருகிலும், கோவில் கர்ப்பக் கிரகத்தின் அருகிலும் நிறைய டெரக்கோட்டா குதிரைகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.



கோவில் பின்புறத்திலிருந்து எடுத்த மூன்று கோபுரங்கள் படம்.....
 
அதிக அளவில் மக்கள் கூட்டம் இல்லாத காரணத்தினால் விரைவில் தரிசனம் செய்து விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். கோவிலைச் சுற்றி வந்து சில புகைப்படங்கள் எடுத்து பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தேன். சுற்றிலும் மக்கள் தத்தமது நினைவுகளில் உழன்று கொண்டிருக்க, அவர்களை கவனித்தபடியே மற்ற பயணிகளுக்கான காத்திருப்பில் நானும்.......



ரத்த பூமி தொடரில் இது வரை என்னுடன் பயணித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  அடுத்த பகுதியில் இத் தொடர் நிறைவு பெறும் என்ற சந்தோஷமான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.....



மீண்டும் அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.