வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கத்தரிக்காய் சாம்பார்“கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகணும்”னு ஒரு பழமொழி நாமெல்லோரும் கேள்விபட்டதுதான். பொதுவாகவே கத்திரிக்காய்னா நிறைய பேருக்குப் பிடிக்காது. சாம்பார்ல நறுக்கிப் போட்ட கத்திரிக்காயைப் பார்த்தா அட்டைப்பூச்சியை கவுத்து போட்ட மாதிரி இருக்குன்னு நானே சின்ன வயசுல சொல்லியிருக்கேன்.

எங்க அம்மா, கத்திரிக்காயை சின்னச் சின்ன துண்டா வெட்டி, கடலைப் பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை சேர்த்து கூட்டு செய்வாங்க பாருங்க, "ஆஹா பேஷ் பேஷ்!"--ன்னு சொல்றமாதிரி ரொம்ப நல்லா இருக்கும். நான் ருசிச்சு சாப்பிடற கத்திரிக்காய் சமையல் அது மட்டும் தான். இப்ப எங்க வீட்டு அம்மணி செய்யற வட இந்திய சப்ஜியான “பேங்கன் கா பர்த்தா”வும் அந்த வகையில சேர்ந்துடுச்சு.

அடடா நெய்வேலி நிகழ்வு பத்தி சொல்ல ஆரம்பிச்சு தில்லிக்கு வந்துட்டேனே!…

ஒரு நாள் நெய்வேலியில் எங்க வீட்டு வாசல் முன்பு குரங்காட்டி ஒருத்தர் ஒரு குரங்கை வைத்துக்கொண்டு “ஆடுறா ராமா, ஆடுறா ராமா”ன்னு வித்தை காட்டிக்கிட்டிருந்தார். குரங்கு அவரோட குச்சிக்கு ஆடிச்சோ இல்லையோ, நானும் சக வாண்டுகளும் ஆடியபடியே அதை பார்த்துக்கிட்டிருந்தோம்.

வித்தை காட்டி முடிந்ததும் குரங்கிடமே ஒரு தட்டைக் கொடுத்து எல்லோரிடமும் காசு வாங்க அதைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்தார் குரங்காட்டி. அம்மா கத்திரிக்காய் சாம்பார் போட்டு சாதம் பிசைந்து ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுக்க, அதை அவர் குரங்குக்கு சாப்பிடக் கொடுத்தார்.

குரங்கும் தன் கையால் சாதத்தினை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தது. நாங்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது சாதத்துடன் வந்த ஒரு கத்திரிக்காய் துண்டினை எடுத்து, அதன் தோலை அழகாய் உரித்து வீசி விட்டு வெறும் சதைப்பாங்கான பகுதியை மட்டும் உண்டது அது . எங்களுக்கெல்லாம் ஆச்சரியம், “பார்ரா இதை, எவ்வளவு விவரம் இதுக்கு!” என்று.

எங்களுடன் கீழே உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பாட்டி, சும்மா இல்லாம, “ஐ, என்ன அழகா சாப்பிடுது!” என்று சொன்னபடி, குரங்கின் கன்னத்தில் தடவிக்கொடுத்தார். கொஞ்சம் அழுத்தமாகவே தடவி விட்டார் போல, இரண்டு மூன்று நொடிகளுக்குள் குரங்கும் தன்னுடைய நீண்ட நகங்களுடன் கூடிய ஐந்து விரல்களால் பாட்டியின் காதிலிருந்து ஆரம்பித்து கன்னம் வரை பளீரெனத் தடவி விட்டது.

காதின் பின்புறத்திலிருந்து தாரை தாரையாக ரத்தம் கொட்டியபடி பாட்டி வலியின் மிகுதியால் அலறியபடி குரங்காட்டி மீது பாய, தன் எஜமானன் மீது பாய்கிறாரே என குரங்கு அந்த பாட்டி மீது பாய, மூன்று பேருமாய் கட்டிப் புரண்டு ஒரே ரகளைதான் போங்க. சிறுவர்களான நாங்கள் எல்லோருமே பாட்டி படும் அவஸ்தையையும் வலியும் புரியாமல் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாய் மூன்று குரங்குகளையும் (அட குரங்கினையும், குரங்காட்டி மற்றும் பாட்டியையும் தாங்க) பிரித்து ஆசுவாசப்படுத்தினர் மற்ற பெரியவர்கள். அப்புறம் பாட்டியை சைக்கிளில் உட்கார வைத்து நெய்வேலியின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு சிகிச்சை கொடுத்தது தனிக் கதை.

இன்று வரை கத்திரிக்காய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வராமல் போனதாக சரித்திரமில்லை.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

நானொரு மழை ரசிகன்!இப்போது என்னைத் தொடர்பவர்கள் நூறு பேர்கள் என்ற சந்தோஷத்தில் மழையில் நனையப் போகிறேன்!

சிறு சிறு துளிகளுடன் ஆரம்பித்து சாரலாய் பரிணாமம் கொண்டு ஆரவாரமாய் தாரை தாரையாய்ப் பெய்யும் மழையினை யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் மழை நம்மை முத்தமிடுவது போல வலிக்காமல் நம் மேல் விழும்போது போது அதில் நனைய எனக்குப் பிடிக்கும். இந்த மழையில் நனைய நாம் எல்லோருமே ஆசைப்பட்டிருப்போம்! அம்மா திட்டுவார்களே என்ற எண்ணம் கூட அப்போது நமக்கு வந்திருக்காது. திட்டு வாங்கினாலும் பரவாயில்லையென பலமுறை நனைந்து கொண்டே வீடு சென்றிருக்கிறேன், கையில் குடை இருந்தும்!

இப்போதும் அந்த பழக்கத்தினை விட்டுவிடவில்லை. பல சமயங்களில் மழையில் நனைந்து கொண்டே யானையைப் போல அசைந்தபடி வருகிறேன். தில்லிக் காரர்கள் மழை ரசிகர்கள்! ஏனெனில் எப்போதாவது தானே மழை பொழிகிறது இங்கே! அதனால் மழை பெய்யும்போது குடும்பத்துடன் மொட்டை மாடிக்கு வந்து மழையில் நனைந்து குதூகலிப்பார்கள்.

எனக்கும் மழைக்கும் அப்படி ஒரு ராசி! முதன் முதலில் மனைவியுடன் இந்தியா கேட் சென்ற போது அடித்துப் பெய்தது மழை! எங்கேயும் கூரை கூடக் கிடையாது மழையிலிருது தப்பிக்க! அதனால் மழையில் நன்றாக நனைந்தோம்! அதன் பிறகு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன் மனைவியுடன் – கூடவே சொல்லி வைத்த மாதிரி மழையும்!

இப்படிப்பட்ட மழையை ரசிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். “சனியன் பிடிச்ச மழை, எப்பப் பார்த்தாலும் நசநசன்னு பேஞ்சுகிட்டேஇருக்கு!” என்று எரிச்சல் அடைபவர்களை கண்டிருக்கிறேன்.

மழையை ரசிப்பவர்களுக்கும், ரசிக்காதவர்களுக்கும் இப்படி ஒரு மழையை ரசிக்க கீழே உள்ள காணொளியைப் பாருங்கள். முதல் காணொளியைப் பார்க்கும்போது “ப்ளே” வை அழுத்திய பிறகு கண்களை மூடிக்கொண்டு விடுங்கள்! கண்களை மூடிக் கொண்டு எப்படி காணொளி என்பவர்களுக்கு, அப்பொழுதுதான், சிறு துளியாய் ஆரம்பித்து சாரலாய் பரிணாமம் கொண்டு இடி, மின்னலோடு பெய்யும் மழையினை நீங்கள் பூரணமாக உணர்ந்து ரசிக்க முடியும். இந்த மழை ஒரு இசைக்குழு வெறும் கைகளைக் கொண்டே உருவாக்கியது!

வெறும் மழை மட்டும்


மழைக்குப் பின் பாடலும் இருக்கிறது. மேலே கொடுத்த காணொளியில் மழை மட்டுமே இருக்கிறது. முழு பாடல் பார்க்க இங்கே சொடுக்குக!

மழையை ரசித்தீர்களா மழை ரசிகரே!

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட் நாகராஜ்

வியாழன், 17 பிப்ரவரி, 2011

"ரிஜப்சன்"-ன்னா என்னாபா?


தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப்பூவில் ஆர்.வி.எஸ். ரிசப்ஷன் பற்றி எழுதிய சில நாட்களிலேயே பக்கத்து வீட்டிலிருக்கும் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது மகனின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று மாலை 07.30 மணியிலிருந்து 10.30 மணி வரை “ரிஜப்சன்” (தட்டச்சுப் பிழை அல்ல!) வைத்திருப்பதாகச் சொல்லி எங்கள் குடும்பத்தினரையும் அழைத்தார்.

அவர் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த கட்வாலி [Garhwali]. அவர்கள் பேசும் மொழியும் கட்வாலிதான். ஹிந்தி தெரிந்திருந்தாலும், வட இந்தியாவில் உள்ள மற்றவர்கள் அவர்களது மொழிகளான ஹர்யான்வி, பஞ்சாபி, கட்வாலி போன்றவற்றில் பேசும்போது நமக்குப் புரியாது. இந்த பிண்ணணியில் அவர்களது மகனின் திருமண ரிசப்ஷன் சென்றபோது அங்கு வந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கட்வாலி. மற்ற 10 சதவிகிதத்தினரில் மற்ற ஹிந்திக்காரர்கள், ஒரு ஒரியாக்காரர், ஒரு மலையாளி, ஒரு வங்காளி ஆகியோருடன் தமிழ்நாட்டுக்காரனான நானும்.

சாதாரணமாக அவர்கள் கட்வாலியில் பேசினாலே ஒரு விதமாக இருக்கும் நமக்கு அங்கே ஏற்பாடு செய்திருந்த டி.ஜே யில் போட்ட பாட்டுகள் கூட கட்வாலி பாடல்கள் தான்! ஒரு மாதிரி பாடல் கீழே.எங்கோ திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல உணர்ந்தேன். குண்டாக வேடம் போட்டுக் கொண்டு ஒரு ஜோடி முகமூடியுடன் தன்னுடைய பொய்யான தொப்பையை ஆட்டி ஆடியது. அதில் பெண் வேடம் போட்ட நபருடன் (அது நிஜத்தில் ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்) ஆட கட்வாலி ஆண்களுக்குள் போட்டி வேறு! அப்படி ஆடும் போது புகைப்பட செஷன்கள் தனி!


வட இந்தியாவில் இது போன்ற வேடமிட்ட நபர்களும், ”டோல்” என்ற மேளம் வாசிக்கும் நபர்களும், கல்யாணம், ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் நல்ல வசூல் வேட்டை நடத்துவார்கள். மேடையில் இருக்கும் மணமகள்-மகனிடம் நீங்கள் மொய் எழுதிவிட்டு, புகைப்படக்காரர் சொல்லும் வரை பெரிய புன்சிரிப்பு சிந்தி கீழே இறங்கினால் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். நாம் மேடையில் இருந்து இறங்கும்போதே, மணமகள்-மகனை ஏதாவதொரு ரூபாய் நோட்டினால் சுற்றி [திருஷ்டி கழிப்பது போல] அந்த ரூபாய் நோட்டினை டோல் வாசிப்பவருக்கோ, வேடமிட்ட நபருக்கோ கொடுக்க வேண்டும்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே சாப்பாட்டுக் கடையும் ஆரம்பித்துவிடும். ஒரு பக்கத்தில் பானிபூரி, ஆலு சாட், ஆலு டிக்கி, ஃப்ரூட் சாட் என்று சிற்றுண்டிகள் இருக்க அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டே எப்பொழுது உணவுக்கான பஃபே ஆரம்பிக்கும் என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சூப் வந்தவுடன் தெரிந்துவிடும் அடுத்தது உணவு என்று.

ஒரு மூலையில் அழகான தட்டுகள், ஸ்பூன்கள், ஃபோர்க், பேப்பர் நாப்கின் என அடுக்கி வைத்து பக்கத்திலேயே விதவிதமான டிசைன்களில் பச்சைக் காய்கறிகளையும் நறுக்கி வைத்திருப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு வரிசையாய் வைத்திருக்கும், பலவித உணவுகளில் எது வேண்டுமோ தட்டு முழுவதும் எடுத்துக்கொண்டு, அதை இடது கையில் பிடித்தபடி தள்ளாடியபடி வலது கையினால் சாப்பிடவேண்டியதுதான். ”கரணம் தப்பினால் மரணம்” என்பது இந்த இடத்தில் சாலப் பொருந்தும். கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் மேல் இடித்து விட்டு உங்கள் தட்டிலிருந்தோ அவர்கள் தட்டிலிருந்தோ உங்கள் மேல் கொட்டி அபிஷேகம் செய்து கொள்ளாமல் சாப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்.

இதைச் சாப்பிட்டு முடித்தபின் இனிப்பு வகைகளாய், சுடச்சுட குலாப் ஜாமூன், கேரட் ஹல்வா, பாசிப்பருப்பு ஹல்வா என்று விதவிதமாய் ஓரிடத்தில் வைத்திருப்பார்கள். அத்தனையிலும் ஒரு தொன்னையோ இல்லை உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஒரு தொன்னையில் போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அதன் மேல் ஒரு ஐஸ்கிரீமையும் உள்ளே தள்ளிவிட்டு கையை பேப்பர் நாப்கினில் துடைத்துப் போட்டு விட்டு வெளியே வந்தா முடிந்தது ரிஜப்சன்!

இந்த கட்வாலி ”ரிஜப்சன்” ஆவது பரவாயில்லை, தில்லியிலேயே தங்கி விட்ட தமிழர்கள் வீட்டு ரிசப்ஷன் எனில் அங்கே அட்டகாசங்களும், ஆடம்பரங்களும் இன்னும் அதிகம்! டிஜே-யில் ஹிந்தி, பஞ்சாபி மெட்டுகளுக்கு ஆடிக் கொண்டு இருப்பார்கள்!. தில்லியில் தமிழ்க்காரர்களின் கல்யாண ரிசப்ஷன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…

மீண்டும் சந்திப்போம்…


வெங்கட் நாகராஜ்


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

என்ன ஜோரா உத!
மொழி என்பது ஒரு முக்கியமான விஷயம்.  நாம் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் நல்லது தான்தமிழகத்தில் இருந்த வரை ஹிந்தியின் முக்கியத்துவம் புரியவில்லை.  பிறகு வேலை கிடைத்து முதல் பணியிடமே தில்லி என்று  ஆன பிறகு தான் அடடா நமக்கு  ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற அறிவு வந்தது.  அலுவலகத்தில்உஜாஹர் சிங் விர்மானிஎன்ற ஒரு சர்தார்ஜி இருந்தார்.  அவரிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவருக்கு ஆங்கிலம் தெரிந்தபோதிலும், ஹிந்தியில்தான் பதில் சொல்வார்.  நான்திருதிருவென முழிக்கும் போது அவர் பேசிய ஹிந்தி சொற்களுக்கான அர்த்தத்தை விளக்கி விட்டு, ”பேசப் பேச தான் உனக்கு ஹிந்தி வரும், ஆகையால் தப்பாக பேசிடுவோமோ என்று பயப்படாமல் பேசு, அவ்வப்போது நான் திருத்துகிறேன்என்று என்னை உற்சாகப்படுத்தி ஹிந்தி சொல்லிக் கொடுத்தார்.  ஆறு மாதத்தில் கஷ்டப்பட்டு ஒருவாறு ஹிந்தி கற்றுக் கொண்டேன்அதன் பிறகுதான் மொழியின் இன்றியமையாமை என்னவென்று  புரிந்தது.

ஒரு எழுத்து வித்தியாசம்….

என் நண்பர் ஒருவரின் அப்பா தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தில்லி வந்து நிரந்தரமாக தங்கினார். பக்கத்து இடங்களுக்கெல்லாம் தனியாகவே போய் வருவார். தனக்குத் தெரிந்த அரை குறை ஹிந்தியை வைத்துச் சமாளித்து சில சமயம் கடைகளுக்குச் சென்று காய்கறி கூட வாங்கி வருவார்.  ஒரு சமயம் அவர் வீட்டில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்ய, ஹோமத்திற்குத் தேவையான மரத் துண்டுகளை தானே வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு  மரக் கடைக்கு  சென்று, ”லடுக்கி தேதோஎன்று சொல்ல, கடைக்காரர் என்னடா இது, இந்த வயதான மனிதர் இப்படிக் கேட்கிறாரே என்று பார்க்க, திரும்பவும்ஜல்தி லடுக்கி தேதோ, கர் மே ஹவன் ஹேஎன்று சொல்லியிருக்கிறார்அப்போது தான் கடைக்காரருக்குப் புரிந்திருக்கிறது இந்த மனிதர் கேட்பது லடுக்கி அல்லலக்டிஎன்பது. ஹிந்தியில்லக்டிஎன்றால் மரத் துண்டு, ”லடுக்கிஎன்றால் பெண்.  ஒரு சிறிய வித்தியாசத்தினால் எப்படி அர்த்தமே மாறிவிட்டது பாருங்க!   நண்பரின் அப்பாவிற்கு கடைக்காரர் இதைப் புரிய வைத்து அனுப்பியதை வந்து வீட்டில் சிரித்தபடியே சொன்ன போது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.  இப்போதும் இவ்விஷயத்தை நினைத்தால் எங்களுக்கெல்லாம் "குபுக்" சிரிப்புதான்.

இதைப் போலவே நம் மக்கள் தில்லி வந்த உடனே செய்யும் ஒரு ரொம்ப நல்ல காரியம், நாம அவங்களிடமிருந்து  ஹிந்தி கத்துக்கறமோ இல்லையோ, ஹிந்திக்காரனுக்கு மறக்காம  தமிழ் சொல்லிக் கொடுக்கறது. இப்படித்தான் வேறொரு  நண்பர் ஒரு ஹிந்திக் காரருக்குவணக்கம், சௌக்கியமா, எப்படி இருக்கே, சாப்பாடு ஆச்சா-ன்னெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.   அதோட விட்டிருந்தால்தான் பரவாயில்லையே.  கடைசியா இன்னொன்னையும்   சொல்லிக் கொடுத்தார்.  அதுஎன்ன ஜோரா உதைஎன்பது.  இதைக் கத்துக்கிட்டதற்கப்புறம், பார்க்கற எல்லா தமிழர்களிடமும் வரிசையா சொல்ல ஆரம்பிச்சுடுவார்  – “வணக்கம், சௌக்கியமா, எப்படி இருக்கே, சாப்பாடு ஆச்சா, என்ன ஜோரா உத”.   இவ்வளவு நல்லா தமிழ் பேசறாரே ஆனா கடைசியில போய் இப்படி உதைக்க சொல்றாரே பாவம்னு எல்லாரும் குழம்பினாலும், ஒரு ஆள் நிஜமாவே ஜோரா உதைக்க ஆரம்பிக்க அப்பத்தான் அவருக்கு அந்த சொல்லின்  முழு அர்த்தமும் புரிஞ்சது!செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ராஜா ராணி ராஜா ராணி - மனச் சுரங்கத்திலிருந்துஎன் நெய்வேலி வாழ்க்கையின் போது சந்தித்த மனிதர்கள், நடந்த நிகழ்வுகளைப் பற்றி "மனச் சுரங்கத்திலிருந்து "  என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்.  இந்த பதிவில் அதை ஒட்டிய ஒரு சம்பவத்தை  பார்ப்போமா

நானும் சகோதரிகளும் சிறு வயதில் யாரைப் பார்த்தாலும் பயந்து விடுவோம்.  அதுவும் ஒரு நபரைப் பார்த்து மிகவும் பயப்படுவோம்.  அது எங்கள் அம்மாவுக்கு எங்களை மிரட்ட வசதியாகப் போய்விட்டது என்பதை இப்போது நினைத்தாலும் எங்களுக்கெல்லாம்  சிரிப்புதான்.

நாங்கள் குடியிருந்த தெருவில் அடிக்கடி ஒரு மனிதர் வருவார்.  அழுக்கடைந்த உடைகள், ஒன்றல்ல, இரண்டல்ல, அவரிடம் இருக்கும் எல்லா உடைகளையும் ஒன்றாய் போட்டுக்கொண்டு நீண்ட தாடியுடன் தலையில்  எண்ணை கண்டு பல திங்களான தலைமுடிக்கற்றை என்று பார்க்கவே  அருவருப்பான உருவத்துடன் இருப்பார்.  அவர் தெருமுனையில் வரும்போதே அவர் போடும் சத்தத்தைக்  கேட்டு நாங்கள் ஓடி ஒளிந்து கொள்வோம்.

அவர் பேசுவதே ஐந்து-ஆறு வார்த்தைகள் தான்.  அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்.  அதையும்   ஒருவித ரிதத்துடன் கோர்வையாகச் சொல்வார். அவர் சொல்லும் ஆறு வார்த்தைகள்தில்லி, இந்திரா, ராஜா, ராணி, நாலு, பொண்டாட்டி!  இந்த வார்த்தைகளை அவர் கோர்வையாக்கி, ”தில்லி இந்திரா, தில்லி இந்திரா, ராஜா ராணி, ராஜா ராணி, நாலு பொண்டாட்டி, நாலு பொண்டாட்டிஎன்று அவருடைய கரகர குரலில் உயர்த்திச் சொல்லும்போது எங்களுக்கெல்லாம் குலை நடுங்கும்.  அவர்தில்லி இந்திராஎன்று ஆரம்பிக்கும்போதே ஓடிவிடுவோம்.

கொஞ்சம் விவரம் தெரிந்து பின்னாளில் அவர் ஏன் இப்படி கத்துகிறார் என்று விசாரித்தபோதுதான்  எங்களுக்குத் தெரிய வந்தது அவரின் சோகக் கதை!

அவர் ஒரு  பெரிய பணக்காரர் என்றும் அவருக்கு நான்கு பெண்டாட்டிகள் இருந்தார்கள் என்றும்,  எல்லோருமாகச்  சேர்ந்து அவரின் பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு அவரை அடித்து, விரட்டி விட அந்த அதிர்ச்சியில் அவருக்கு சித்தம் பிசகி இப்படி கத்த ஆரம்பித்து விட்டாராம்!  ஒரு பெண்டாட்டி இருந்தால் பரவாயில்லை, நான்கு இருந்தால் தில்லியை ஆண்ட ராஜா, ராணி [இந்திரா]யே  ஆனாலும் இதுதான் கதி என்று அனைவருக்கும் சொன்னார் போல

அப்போது  அவரைப் பார்த்த அல்லது நினைத்த போதிலெல்லாம் பயந்து நடுங்கினாலும் அவரைப் பற்றி தற்போது நினைக்கும் போதெல்லாம் அவருக்காக  மனசு வருத்தப்படுகிறது. இன்னும் என் மனச் சுரங்கத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார் அவர்

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போமா? (இந்த பாரா மட்டும் சாலமன் பாப்பையா குரலில்).