ஜபல்பூர்-பாந்தவ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜபல்பூர்-பாந்தவ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2012

பழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 12]



வனப் பயணத்தில் புலிகளைப் பார்க்க முடியாததில் வருத்தம் உண்டென்றாலும், மற்ற விலங்குகளையும் பறவைகளையும் கண்ணாரக் காண முடிந்ததில் மகிழ்ச்சி தான். கானகத்திற்குள் பார்த்த இன்னொரு விஷயத்தினைச் சொல்ல மறந்து விட்டேன். அங்கே ஒரு சிறிய குளம் இருந்தது. அதன் பெயர் “லால் தலாப்”!  ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்! புகைப்படத்தில் பாருங்களேன்.

லால் தலாப்

புலிகள் மனிதர்களுக்குச் சொன்ன செய்தியை பலகை மூலம் படித்து விட்டு தங்குமிடம் வந்தோம். முன்னொரு பகுதியில் சொன்னது போல நாங்கள் தங்கியிருந்தது மத்தியப் பிரதேசச் சுற்றுலாத் துறையின் ”White Tiger Forest Lodge” என்ற இடத்தில். அங்கே மதிய உணவு உண்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அதற்கு முன் தங்கும் விடுதியின் கட்டணங்கள் பற்றி சொல்லி விட்டால் அங்கு செல்லும் உங்களில் சிலருக்கு உதவும்.  

தங்கும் விடுதியின் வரவேற்பறை…

நான் தங்கிய அறை

இந்த தங்குமிடத்திற்கு இணையத்தின் மூலம் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 26 AC அறைகளும், 12 ஏர் கூலர் பொருத்திய அறைகளும் ஆக மொத்தம் 38 அறைகள் இருக்கின்றன.  கட்டணங்கள் சற்றே அதிகம் எனத் தோன்றினாலும் இயற்கையான சூழலில் அமைதியாக இருப்பதால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. விவரம் கீழே:-

Category
No. of Rooms
Tarrif [In Rs.]
Single
Double
Extra Bed
AC
26
4090
4690
1490
Air Cooled
12
3090
3690
1290


இந்த இடத்தினை தொடர்பு கொள்ள:Telfax : 07627-265366, 07627-265406 
E-mail : wtfl@mptourism.com.  சரி தகவல்கள் கொடுத்தாயிற்று.

[சாலை அமைக்கும் பணியில்]

அடுத்தது என்ன என்றால், பழங்குடி மக்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். அந்த கிராமத்தின் பெயர் “குருவாஹி”.  பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும், தீர்க்க வேண்டிய குறைகள் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

நிறைய குழந்தைகள் வீடுகளின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை புகைப்படம் எடுத்தபோது எவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்? மகிழ்ச்சி மட்டுமா – வெட்கமும் சேர்ந்து தானே இருந்தது! குழந்தைகள் அனைவருக்கும் எங்களிடம் இருந்த சில தின்பண்டங்களைக் கொடுத்து மேலும் மகிழ்வித்தோம்! சில புகைப்படங்கள் கீழே.

[பழங்குடியினர் வீடு….]

[வெக்கத்த பாரு!]

[நாங்களும் இந்நாட்டு மன்னர்கள்]
  
அவர்களுடைய வீடுகள் இருக்கும் பகுதியையும், பள்ளிக்கூடம், மருத்துவக் கூடம் முதலியவற்றையும் பார்த்து வந்தோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த சில உதவிகளை  செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

மீண்டும் தங்குமிடம் வந்து தில்லி திரும்ப தயாரானோம். பாந்தவ்கர் பகுதியினை விட்டு விலக மனதில்லை. இருந்தாலும் கடமை அழைக்கிறதே. தில்லி சென்று தானே ஆகவேண்டும்.  மீண்டும் 80 கிலோமீட்டர் பேருந்து பயணம் “கட்னி” என்ற இடம் நோக்கி. கட்னி இரயில் நிலையத்திலிருந்து தில்லிக்கு ரயில் பிடிக்க வேண்டும். வரும் போது மஹாகௌஷல் திரும்பியது சம்பர்க் கிராந்தி! 

ஜபல்பூரில் இருந்து தில்லி வரை செல்லும் எம்.பி. சம்பர்க் கிராந்தி, கட்னி ரயில் நிலையத்திற்கு இரவு எட்டு மணி இருபது நிமிடத்திற்கு வந்தடைந்தது. அடுத்த நாள் காலை 09.00 மணிக்கு தில்லி வந்தடைந்தோம். வீட்டிற்கு வந்து குளித்து கிளம்பியாச்சு – ”ஏன் ஓய்வெல்லாம் எடுக்கவில்லையா?” என்றால் இல்லை – வகுப்புகள் மீண்டும் துவங்கிவிட்டன. 

மூன்று நாட்களில் நாங்கள் சென்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மீண்டும் பயணம் சென்று வந்த பின் வேறொரு பயணத் தொடருடன் உங்களையெல்லாம்  சந்திக்கிறேன். 

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: 06.07.2012 அன்று வல்லமையில்வெளிவந்தது.


புதன், 4 ஜூலை, 2012

பயந்து ஒளிந்து கொண்ட புலிகள்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 11]


சென்ற பகுதியில் ஹரி-ஹரனை தரிசித்ததைப் பற்றி சொல்லி முடித்திருந்தேன். என்னையா இது ”புலிவேட்டை, புலி பார்க்க வனத்திற்குச் சென்றோம்” என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறாயே, புலியைப் பார்த்தது பற்றி இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே என்ற கேள்வியை கேட்க உங்களுக்கு இப்போது தோன்றியிருக்கலாம்! ‘நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்!’.  முதல் நாள் மூன்று மணி நேரம் காட்டுக்குள் சுற்றியும் ஒரு புலியைக் கூட காண முடியவில்லை. 

இரண்டாம் நாள் காலையில் சென்றது நான்கு மணி நேர வனப்பயணம். இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் சுற்றியும் எங்களுக்கு ஒரு புலிகூட கண்ணில் தென்படவில்லை. ஆங்காங்கே வாகனத்தினை நிறுத்தி புலியின் பாதச் சுவடுகளைக் காண்பித்து இப்போது தான் புலி இந்தப் பக்கமாக சென்றிருக்கிறது என்று சொல்லும்போது ”அட என்னடா இது, நாம் வரும்போது வராம, முன்னாடியே வந்து ’கண்ணாமூச்சி ரே ரே’ விளையாடுதே இந்தப் புலிகள்’” என்று எண்ணத் தோன்றியது.

[மான் கூட்டம்]

[லங்கூர்கள்]
இருந்தாலும் மனம் தளராது பயணம் தொடர்ந்தது. எத்தனை எத்தனை மான்கள் – கூட்டம் கூட்டமாக – மனிதர்களைப் பற்றிய கவலையே இல்லாது. ஆங்காங்கே லங்கூர் வகை குரங்குகளையும் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது எதிர் பக்கத்தில் வந்த இன்னொரு வாகனத்தில் எங்கள் குழுவினர் சிலர் வந்தனர். அவர்களுக்காவது  புலிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் இருந்ததா என வினவினால் – ஒரே ஒரு குட்டிப் புலியைப் பார்த்ததாகச் சொன்னார்கள். எங்கள் குழுவில் மொத்தம் 35 பேர் என்பதால் மொத்தம் 7 வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்தனர். ஒரே ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் மட்டுமே புலியைப் பார்த்திருக்கிறார்கள்.

காட்டில் 60 புலிகளுக்கு மேல் இருந்தாலும் எங்களால் பார்க்கமுடியாததன் காரணம் என்னவாக இருக்கும்? இத்தனை பெரிய பரப்பளவுள்ள காட்டில் புலிகள் ஒளிந்துகொள்ள இடமா இல்லை. ஒன்று புரிந்தது – உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரே பயணத்தில் கூட நீங்கள் புலிகளைப் பார்த்து விடலாம் – இல்லையெனில் ஒரு வாரம் முழுவதும் இருந்து தினமும் இரண்டு வனப்பயணங்கள் செய்தாலும் பார்க்க முடியாது என்பதே அது.  

வெளியே வரும்போது ஒரு பெரிய தகவல் பலகையில் வைத்திருந்த வாசகம் மேலே சொன்ன வாசகத்தினை உண்மையாக்கிற்று. என்ன வாசகம் எனக் கேட்கிறீர்களா? கீழே படியுங்க.

[நான் உங்களைப் பார்த்தேனே….  ]

என்ன சரிதானே, ”நீங்கள் பார்க்காவிட்டால் என்ன, கவலைப் படாதீர்கள், நான் உங்களைப் பார்த்து விட்டேன்” என ஒரு புலி சொல்வது போல வைத்திருந்தார்கள். இருந்தாலும், என்ன காரணமாக இருக்கும் என யோசித்து இந்தக் காட்டின் வரலாற்றினைப் படித்தேன். காரணம் புரிந்தது!

ரேவா நாட்டினை மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்கள் ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் ரேவா நகரத்தின் ஆட்சிப் பொறுப்பினை 1880 ஆம் ஆண்டு ஏற்றார். ஆட்சியைத் திறம்பட நடத்திய அவர், மிகச்சிறந்த கல்விமானும்  கூட. படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாட்டை மிகச் சிறப்பாய் ஆண்டு பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தொடர்ந்து 38 வருடங்கள் ரேவா நகரத்தில் நல்லாட்சி புரிந்து விட்டு 1918 ஆம் ஆண்டு காலமானார். 

அவர் நல்லாட்சி புரிந்து எவ்வளவு பிரபலமானாரோ அது போலவே வேட்டையாடுவதிலும் வல்லவராக இருந்து பிரபலம் ஆனவராம். மொத்தம் 111 புலிகளை இந்த பாந்தவ்கர் காடுகளில் வேட்டையாடியிருக்கிறார். 109 என்பது பாரம்பரியமாக இவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாம். அதை விட இரண்டு அதிகமாகவே வேட்டையாடிக் கொன்றிருக்கிறார். 

அது சரி, ”அவர் இத்தனை புலிகளை வேட்டையாடியதற்கும், உங்கள் பயணத்தின் போது புலிகள் ஓடி ஒளிந்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. இத்தனை நேரம் மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்களின் மகன் என்றுதானே சொன்னேன், அவரின் பெயரைச் சொல்லவில்லையே! அவரது பெயரில் தான் இருக்கிறது காரணம். – அவரது பெயர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் ஜி ஜு தியோ! என் பெயர் வெங்கட் ராமன். 

[மஹாராஜா வெங்கட் ராமன் சிங்]  
[பட உதவி: கூகிள்]

ஆஹா ’வந்துட்டாண்டா இன்னொரு வெங்கட் ராமன், வாங்க சீக்கிரம் ஒளிந்து கொள்ளலாம், இல்லைன்னா கொண்டே புடுவான்’ என்று ஒளிந்து கொண்டன போல அவ்வளவு புலிகளும்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: 29.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


புதன், 27 ஜூன், 2012

காட்டுக்குள் ஹரி-ஹரன்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 10]


இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!

அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்க்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று.  நேற்று சென்றதை விடஇன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும். 

[காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே….  :)]

வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான்.  இங்கே தான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.

நீங்கள் இந்த வனப்பயணம் செய்ய ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து வைத்துக்கொள்வது அவசியம். இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணையதளத்தின் மூலமோ அல்லது மற்ற தனியார் துறை தங்கும் விடுதிகள் மூலமோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு குழுவிற்கு எட்டு பேர்கள் வரை ஜீப்பில் பயணிக்கலாம். யார் பெயரில் முன்பதிவு செய்கிறீர்களோ அவரது அடையாள அட்டை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். முன்பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டை எண்ணை வனத்திற்குள் செல்லுமுன் சரி பார்ப்பார்கள். சரியாக இல்லையெனில், உள்ளே யாரையும் விடுவதில்லை.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடைகள் எடுத்துச்சென்றால் நல்லது. சூழலுக்குத் தகுந்த உடைகள் [சிவப்பு, ஆளை அடிக்கும் ராமராஜன் போட்டுக்கொ[ல்லும்]ள்ளும்] வண்ண உடைகளைத் தவிர்த்தல் நலம்!

பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

தகவல்கள் நீங்கள் செல்லும் நேரத்தில் நிச்சயம் பயன்படுமென நினைக்கிறேன். 

[படி குஃபா – உட்தோற்றம்]

[படி குஃபா…. வெளித் தோற்றம்]

சரி வனத்திற்குள் செல்லலாம் வாருங்கள். இரண்டாம் நாள் நாங்கள் சென்றது தாலா பகுதிக்கு. இங்கே கோட்டையும், 39 குகைகளும் இருக்கின்றன. இவைகள் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைகள் எனச் சொல்கிறார்கள். குகைகளில் பிராம்மி எழுத்துகள், புலி, பன்றி, யானை, குதிரை மேல் மனிதன் என்று நிறைய வரையப்பட்டிருக்கிறது. ”[B]படி [G]குஃபா” என்று இருப்பதிலேயே பெரிய வாசல் இருக்கும் குகையை மட்டும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதிக்கிறார்கள். இந்த குகைக்குள் 9 சிறிய அறைகள் இருக்கின்றன. குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை!  எப்போதும் ஒரு கதவு போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டும் திறந்து உள்ளே செல்ல முடியும்!

[காட்டுப் பன்றி…. எத்தனை ஃபோட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோ!]

[ஃபோட்டோ எடுக்கறாங்க டோய்….  பறந்துடுவோம்….]

இந்த [B]படி குஃபாவை பார்த்து விட்டு வனத்திற்குள் எங்கள் புலிவேட்டைத் தொடர்ந்தது. வனத்திற்குள் இருக்கும் குறுகிய பாதைக்குள் எங்கள் ஜீப் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நிறைய மான்கள், காட்டுப் பன்றி, சில பறவைகள் என கண்களுக்குத் தென்பட்டது. புலி மட்டும் கிடைக்கவில்லை. அதற்குள் நடுவே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் எங்களது வாகன ஓட்டுனரும், வன இலாகா ஊழியரும். அந்த இடம் சேஷ்நாக் மீது படுத்துக் கொண்டிருக்கும் சேஷையாவையும் சிவனையும் பார்க்கத்தான்.

[சேஷையா…..]

[ஷிவ்ஜி]

மலைகளுக்கு ஊடே சென்று ஒரு குறுகிய பாதையில் வண்டி நின்றது. சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ஐந்து தலை நாகத்தின் மீது சேஷையா எனும் விஷ்ணுபகவான் படுத்துக் கொண்டிருக்கிறார். பக்கத்திலேயே ஒரு பெரிய சிவலிங்கமும் இருக்கிறது. நமது கிராமங்களில் ஒன்று சொல்வார்கள் – “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று.  அதை நிரூபிக்கும் வண்ணம் இங்கே இருவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார்கள். அங்கே இருவரின் தரிசனமும் கண்டபின் எங்கள் புலி வேட்டைத் தொடர்ந்தது. 

அது பற்றி அடுத்த பகுதியில்..

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.



பின் குறிப்பு: 22.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


புதன், 20 ஜூன், 2012

மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்



[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 9]



காட்டுக்குள்ளே நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று போன பதிவில் சொன்னேன். இங்கே 2001 – ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறுபதிற்கும் மேலான புலிகள் இருக்கின்றன என்ற தகவலையும் சொன்னார் வன இலாகா அதிகாரி.

முதல் நாளில் மூன்று மணி நேர வனப் பயணம் சென்று காணக் கிடைக்காத புலியை அடுத்த நாள் காலையில் நான்கு மணி நேரம் செல்லப்போகும் பயணத்திலாவது பார்த்துவிட மாட்டோமா என்ற எண்ணத்தோடு காட்டிலிருந்து வெளியே வரும்போதே இருட்டி விட்டது. குளிர் காலம் என்பதால் ஆதவன் சீக்கிரமே மறைந்து விடுகிறான். வேறு எந்த வேலையுமில்லை என வந்ததால் எங்களுக்காக ஒரு ஆவணப் படம் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் விடுதி மேலாளர்.




[”இவ்வளவு கிட்டக்க எடுத்தீங்களா, தைரியம் தான்” என்று சொல்வோருக்கு, ஆவணப்படத்தில் வந்த புலியை எடுத்த புகைப்படம் இது என்று சொல்லி விடுவது நல்லது - இப்படிக்கு உண்மை விளம்பி!]


பாந்தவ்கர் காடுகளில் உள்ள விலங்குகள், அதிலும் குறிப்பாக, புலிகள் பற்றிய ஆவணப்படம் இது. ஒரு யானைப்பாகன் மற்றும் அவனது மகன் மூலம் கதை சொல்லிப் போகிறார்கள். ஒவ்வொரு புலியும் தனது அதிகாரப் பரப்பு என்று வைத்துக்கொள்ளுமாம்.  அதற்காக மரங்களில் தனது கூரிய நகம் கொண்டு அடையாளம் செய்து வைக்குமாம். அந்த அடையாளம் பார்த்து மற்ற புலிகள் பெரும்பாலும் வருவதில்லை. மீறி சில மூர்க்க புலிகள் வந்தாலும் அவற்றுக்குள் பயங்கர சண்டை வரும் என்றும் சொல்கிறார் யானைப் பாகன். 



[புலியைத் தேடும் பணியில் யானைப் பாகன்]


அவரது மகனையும் யானை மீது உட்கார வைத்து தனது தொழிலைப் பழக்குகிறார். யானையைக் குளிப்பாட்டுவது முதல் எல்லாவற்றிலும் மகன் கூடவே இருக்கிறார். புலிகளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிப்போனது ஆவணப் படம். படம் பார்த்த பிறகு, இரவு உணவு உண்டு அடுத்து என்ன என்று யோசனையுடன் அறைக்குச் செல்லும் போது பார்த்தால் விறகுகளை குமித்து வைத்து மகிழ்ச்சித் தீக்கான [அதாங்க! BONFIRE] ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.

அன்று லோடி [Lohri] எனும் பண்டிகை என்பதால் கூடுதல் சந்தோஷம். நமது ஊரில் போகி கொண்டாடுவது போலவே வட இந்தியாவில் லோடி கொண்டாடுவர். நிலவொளியில் இப்படி விறகுகளை குமித்து வைத்து, அதற்குத் தீமூட்டி, வேர்க்கடலை, ரேவ்டி [எள்ளும், வெல்லமும் கலந்த மிட்டாய்] போன்றவற்றை அக்னிதேவனுக்குப் படைத்து தீயைச் சுற்றி வலம் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களிப்படைவார்கள். அதனால், நிறைய ரேவ்டி, வேர்க்கடலை, எல்லாம் வாங்கி வைத்து தீ மூட்டி, தீயைச் சுற்றி வந்து ஆட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பித்தது.



[கடும் குளிருக்கு இதமாய்....]

எல்லோரும் ஏதாவது ஒரு பாடல் பாடியோ, நகைச்சுவை சொல்லியோ, மிமிக்ரி செய்தோ அந்த மாலைப் பொழுதை இனிமையாக்க வேண்டுமென முடிவு செய்தோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தினைச் செய்தார்கள். பல பழைய ஹிந்திப் பாடல்கள், ஒரு மலையாளப் பாடல், பஞ்சாபி பாங்க்ரா நடனம், பல நகைச்சுவை துணுக்குகள் பரிமாற்றம் என நேரம் போவது தெரியாமல் மகிழ்ச்சி பரவிக் கொண்டிருந்தது. 

அந்தத் தீயும் குளிருக்கு இதமாக இருந்ததால் அறைக்குள் செல்ல எவருக்கும் மனமில்லை. ஒரு வழியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். காலை 06.00 மணிக்கே காட்டுக்குள் மீண்டும் செல்ல வேண்டும் என்பதால் நான் சென்று சற்று நேரமாவது உறங்குகிறேன். நீங்களும் வருவதென்றால், குளிருக்குத் தகுந்த உடையோடு காத்திருங்கள் – காட்டிலே குளிர் நடுக்கி எடுத்துவிடுமாம்! :)

மீண்டும் காலையில் புலிவேட்டையில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.



பின் குறிப்பு: 15.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

புதன், 13 ஜூன், 2012

காடு வா.. வா… என்றது!


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 8]



என்ன நண்பர்களே பாந்தவ்கர் விலங்குகள் பூங்கா செல்ல தயாராயிட்டீங்களா? நாங்களும் காலையிலே எழுந்து குளித்து, காலை உணவு உண்டு எங்களுக்கான பேருந்தில் அமர்ந்து விட்டோம். ஜபல்பூரிலிருந்து பாந்தவ்கர் செல்லும் தூரம் சற்றே அதிகம் தான். அதாவது 190 கிலோ மீட்டர். தில்லியிலிருந்து நேராக இங்கே செல்வதென்றால் ”கட்னி” என்ற ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவு தான். 

வழி நெடுக ஊர்களே இல்லாத வெறும் பொட்டல் காடுகள். மொத்தப் பயணத்தில் வந்த கிராமங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து விதவிதமான மனிதர்களைப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் இருந்தால் அது நிறைவேறாது. பாதையும் அவ்வளவு நன்றாக இல்லை. காரணம், பல இடங்களில் பாதை வனங்களுக்கு நடுவே செல்வதால் அவைகளை நல்ல பாதையாக மாற்ற வன இலாகா அனுமதி தருவதில்லை.

வெளியே பார்க்க ஒன்றும் இல்லாத காரணத்தினால், பேருந்து உள்ளேயே ஒலிவாங்கி மூலம் நகைச்சுவை துணுக்குகள் சொல்லியும், பாடல்களை பாடியும் பொழுது போக்கிவிட்டு சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து மதியம் ஒரு மணிக்கு பாந்தவ்கர் சென்றடைந்தோம். நேராக நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”White Tiger Forest Lodge” சென்று அறைகளில் பொருட்களை வைத்து விட்டு மதிய உணவு உண்டோம்.

பாந்தவ்கர் விலங்குகள் பூங்கா 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாகப் பிரித்து திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச்செல்கிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு முறை பயணம் – காலை 06.30 – லிருந்து 10.30 வரை ஒரு முறையும், மதியம் 02.15 லிருந்து மாலை 05.15 வரை ஒரு முறையும் காட்டுக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள். 


நாங்கள் சென்ற அன்று, முதலில் மதிய நேர வனப் பயணம் சென்றோம். ஒரு வாகனத்திற்கு ஆறு சுற்றுலா பயணிகள், கூடவே ஒரு வன இலாகா அதிகாரி மற்றும் ஓட்டுனர் நம்முடன் வருகிறார்கள். நாங்கள் நிறைய பேர் இருந்ததால் ஆறு வாகனங்களில் பயணம் செய்தோம். மொத்தம் மூன்று மணி நேரம் வனப் பயணத்தில் சர்வ சாதாரணமாக பாதை ஓரத்தில் அமர்ந்திருந்த எண்ணிலடங்கா மான்களை கண்டு ரசிக்க முடிந்தது. நிறைய பறவைகளையும் அவைகள் எழுப்பிய ஓசைகளை கண்டும் கேட்டும் காடு முழுக்க நிரம்பியிருக்கும் பல வித மரங்களையும் ரசித்தபடியும் பயணித்தோம். 


வன அதிகாரி பயணிகள் அனைவரும் பேசாமல் இருந்தால் தான் விலங்குகளைப் பார்க்க முடியும் என்று அடிக்கடி பேசினார். ஆங்காங்கே நிறுத்தி மான் கூட்டங்களைக் காண்பித்தும் அவற்றின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். மான்களின் உயிர் நண்பன் யார் தெரியுமா? குரங்குகளாம்! மான்களின் எதிரிகளான புலிகள் வரும்போது உயரமான மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குகள் எழுப்பும் சத்தத்தில் மான்கள் தங்களுக்கு ஆபத்து நெருங்குவதைத் தெரிந்து கொண்டு ஓட ஆரம்பிக்கும் எனவும், காட்டிக்கொடுத்து விடுவதால் புலிகளுக்கு குரங்குகள் தான் எதிரி என்றார். 


பாதையை மிகவும் கவனமாகப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவர் ஒரிடத்தில் திடீரென வண்டியை நிறுத்தச் சொன்னார். மண் பாதை ஓரத்தில் நிறைய காலடித் தடங்கள்… யாருடைய தடங்கள் என கூர்ந்து கவனித்து, பிறகு சொன்னார், “இவை புலிகளுடைய காலடித் தடங்கள். இப்போதுதான் புலிகள் இவ்வழியாகச் சென்றிருக்க வேண்டும்”!  அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!

இந்த பாந்தவ்கர் காடுகள் உள்ளே ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. ரேவா நகரத்தின் மன்னர்கள் ஆண்ட கோட்டை இது. வ்யாக்ரா தேவ் என்ற வகேலா [குஜராத்] அரசனின் புதல்வன் ராஜா கரன் தேவ் அவர்களுக்கு கல்யாண சீதனமாக வந்த கோட்டை இது. ரத்தன்பூர் ராஜாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டபோது ராஜா கரன் தேவ் அவர்களுக்கு இந்தக் கோட்டையை சீதனமாகக் கொடுத்தார்களாம். பிறகு கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது. 

காட்டுக்குள்ளே இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே பதிவில் அவைகளை சொல்ல நினைத்தால் நன்றாக இருக்காது. அதனால் சில பகுதிகளாக பிரித்து படிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பின் குறிப்பு: 08.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.