புதன், 31 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Only mountains can feel the frozen warmth of the sun through snow’s gentle caress on their peaks. – Munia Khan


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


******


தொடரின் சென்ற பகுதியில் MG Market பகுதியில் உலா வந்த பிறகு,  அந்த இடத்திலிருந்து நடந்தே தங்குமிடம் திரும்பி இரவு உணவிற்குப் பிறகு ஆழ்ந்த உறக்கம் குறித்து எழுதி  இருந்தேன். அடுத்த நாள் விடியலில் தயாராகி ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை முன்னரே எங்கள் பயண ஏற்பாட்டாளர் செய்திருந்தார்.  நாங்கள் அன்று செல்ல வேண்டிய இடத்திற்கு நினைத்தபடி சென்று விட முடியாது.  அப்படி என்ன இடம் என்று கேட்கிறீர்களா? சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் சீன எல்லைப் பகுதியான NATHULA PASS என்ற இடம் தான் அந்த இடம்.  முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தினர் மட்டுமே இருக்கக் கூடிய இடம்.  வழியில் சில கிராமங்கள், கடைகள் என இருந்தாலும் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.  ஆகையால் அந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டுமெனில் முன்னரே அனுமதி பெற வேண்டும்.  அந்த அனுமதிக்கு Protected Area Permit (PAP) என்று பெயர்.  இந்த அனுமதியைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  அவை குறித்த தகவல்கள் கீழே உள்ள சுட்டியில் கிடைக்கும்.  ஒரு தனி நபருக்கு 200/- வரை கட்டணம் உண்டு.  நீங்கள் பயணிக்கும் வாகனத்திற்கும் சேர்த்து நீங்கள் அனுமதி கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.  இவை எல்லாவற்றையும் பயண ஏற்பாட்டாளர் மூலம் செய்து கொள்வது நல்லது. 


PAP - Sikkim Tourism


காலை நேரத்திலேயே நாங்கள் அனைவரும் குளிருக்குத் தகுந்த உடைகளை அணிந்து கொண்டு வாகனங்களில் புறப்பட்டோம்.  இந்த சிக்கிம் பயணத்தில் எங்களுக்கு அமைந்த வாகன ஓட்டி ஒரு ஷோக்குப் பேர்வழி.  நிறைய பேசுபவர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றாலும் அவரது பேச்சில் கொஞ்சம் ஆபாச நெடி வீசும்!  அவர் நல்ல திறமைசாலி என்றாலும் சிலருக்கு அவருடைய பேச்சு அருவெறுப்பு தரக்கூடும்.  அவர் ஒரு YOUTUBER/VLOGGER என்பது கூடுதல் தகவல்.  PM GURUNG என்பது அவரது பெயர்.  அவரது YOUTUBE தளத்தில் சிக்கிம் குறித்த நிறைய காணொளிகள் உண்டு.  உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் அவரது தளத்தில் உள்ள காணொளிகளை கண்டு ரசிக்கலாம்.  சமீபத்தில் அதாவது பதினைந்து நாட்களுக்கு  முன்னர் கூட NATHULA PASS குறித்த ஒரு காணொளி அவரது YOUTUBE தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  GANGTOK-லிருந்து NATHULA PASS வரையான பயணம் குறித்த அவரது சமீபத்திய காணொளியைப் பார்க்க விரும்பினால் சுட்டி கீழே. 


Gangtok to Nathula Pass | Now' update weather | day 16/May/2023 Sikkim tour /A2Z information - YouTube


PM Gurung அவரது வாகனத்தினைச் செலுத்த எங்கள் பயணம் சிக்கிம் மாநிலத் தலைநகர் Gangtok-லிருந்து அதிகாலை நேரத்தில் தொடங்கியது.  நீண்ட நெடிய மலைப்பாதையில் பயணிக்க இருக்கிறோம் என்பதால் சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம்.  எங்கள் குழுவில் இருந்த இரண்டு பேருக்கு மலைப்பகுதியில் பயணிப்பதில் இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்தன என்பதால் அவர்கள் முதல் நாள் வாங்கிய புளிப்பு மிட்டாய்களை நிறைய வைத்திருந்தார்கள்.  பொதுவாக நான் வாகன ஓட்டியின் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதே வழக்கம் - என் உயரத்திற்கு கொஞ்சம் காலை நீட்டி அமர அந்த இருக்கை தான் வசதி.  ஆனால் வேறு ஒரு நண்பர் பின்னால் அமர்ந்தால் எனக்கு அதிகம் தலைசுற்றி வாந்தி வருகிறது என்று சொல்லி முன்னால் அமர்ந்து பயணித்தார். அதனால் சில காட்சிகளை என்னால் படமோ அல்லது காணொளியோ எடுக்க முடியவில்லை.  வழி நெடுக மலை, மலை, மலையைத்தவிர வேறில்லை.  சில கிலோமீட்டர் பயணம் முடித்த பிறகு நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு VIEW POINT!  அங்கே இருந்து பார்க்க - ஆஹா கண்கொள்ளா காட்சி அது.  உங்கள் கண் முன்னே நாம் வரலாற்றுப் பாடத்தில் படித்த கஞ்சன்ஜங்கா மலைத்தொடர் அதுவும் பனிபடர்ந்த சிகரமாக காட்சி அளிக்கிறது. 









எங்கள் வாகன ஓட்டி...




சாலைகள்….




எங்கள் வாகனத்திலிருந்து இறங்கிய நாங்கள் சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று அந்த சூழலையும் இயற்கை அன்னை நம் கண்களுக்கு படைத்திருக்கும் விருதினையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.  அந்த இடங்களில் நிறைய கடைகள் - கடைகளில் ஜரூராக குளிருக்கு ஏற்ற தொப்பிகள், கையுறைகள், காலுறைகள், ஷால்கள் என பலவும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  இந்த இடங்களிலும் கடைகளை வைத்து, விற்பனையை கவனித்தது எல்லாமே பெண்கள் மட்டுமே.  பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை நிர்வாகம் செய்வதிலிருந்து பொருள் ஈட்டுவதையும் செய்கிறார்கள்.  ஆண்கள் அந்த அளவுக்கு குடும்ப விவகாரங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் குடிப்பதிலும் கும்மியடிப்பதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  பொருட்கள் விற்பனை மட்டுமல்லாது குடிநீர், தேநீர், மோமோஸ் என உணவு சம்பந்தமான கடைகளும் கிடைக்கிறது. எங்கள் குழுவினர் அனைவரும் இந்த இடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்து இயற்கை எழிலை ரசித்ததோடு, நிழற்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தோம்.  


இந்த மலைப்பிரதேசத்தில் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என நினைத்தால் அப்படி இல்லை என்று அங்கே இருப்பவர்கள் சொல்லக்கூடும். வருடத்தின் பல நாட்கள் அதிக குளிர், பனிப்பொழிவு என மிகவும் கடுமையான நாட்களாகவே அமைந்து விடுவதால் இங்கே வாழ்க்கை சுலபமானதாக இருப்பதில்லை. அதிக உழைப்பு தேவையாக இருக்கிறது.  இவர்களின் பொருளாதாரம் முழுக்க முழுக்க சுற்றுலா வருபவர்களை நம்பியே இருக்கிறது.  சுற்றுலா வாசிகள் வருகை குறைந்தால் இவர்கள் அனைவரும் அந்த இடங்களிலிருந்து புறப்பட வேண்டியிருக்கும்.  அனைவரும் சுற்றுலாவாசிகள் வரும் சமயத்தில் மட்டுமே சம்பாதிக்க முடியும்.  அதிலும் குளிர் அதிகமாக இருந்து, பனிப்பொழிவு அதிகமாகி விட்டால் இவர்கள் வருமானம் குறைந்து விடும் என்பதால் கிடைத்த காலத்தில், கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  நாங்கள் சென்ற போதும், நிறைய சுற்றுலா பயணிகள் வருகை இருந்ததால் அங்கே இருந்த மக்கள் அனைவருமே “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதை சரிவர பயன்படுத்திக் கொண்டார்கள்.  எங்கள் குழுவினர் சிலரும் அந்த ஊர் மக்களிடம் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். 


கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்ல வேண்டும்! அத்தனை அழகு. பனிமூடிய மலைச்சிகரங்கள், அதன் மேல் சூரியனின் கிரணங்கள் பட்டு பொன் போல ஜொலிக்கும் காட்சி, நவம்பர் மாதத்தின் குளிர்ந்த காற்று என அந்த இடம் மிகவும் ரம்மியமானதாக இருந்தது.  எங்களுக்கு அந்த இடத்தினை விட்டு அகலவே மனதில்லை. ஆனாலும் நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பது மட்டுமல்லாது, செல்ல வேண்டிய இடம் இன்னும் முக்கியமானதும், அவசியம் பார்க்க வேண்டியதும் ஆன NATHULA PASS என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.  வழியில் ஒரு சிறு கடை அருகே வாகனங்கள் நிற்க அங்கே தேநீர் அருந்தினோம் - எங்கள் ஓட்டுநருக்கும் சிரம பரிகாரம் தேவை அல்லவா?  அந்த இடத்தில் தேநீர் அருந்தியதோடு, எங்களுக்கான மத்திய உணவுக்கும் சொல்லி வைத்து விட்டார் எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட நபர்.  சிறிது ஓய்வுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சீன எல்லையை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.  சீன எல்லை அனுபவங்கள் எப்படி இருந்தன, அங்கே என்ன பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

செவ்வாய், 30 மே, 2023

கதம்பம் - திருவரங்கம் - மட்கா குல்ஃபி - Modern Love Chennai - சென்னை பயணம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கண்ணின் மணியே... பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

திங்கள், 29 மே, 2023

கண்ணின் மணியே…. - சிறுகதை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மாயங்கள் செய்திடும் மான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

ஞாயிறு, 28 மே, 2023

வாசிப்பனுபவம் - மாயங்கள் செய்திடும் மான் - மியாழ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 27 மே, 2023

காஃபி வித் கிட்டு - 171 - கௌன் திஷா மே - கப்பலில் பயணிக்கும் வாகனங்கள் - The Silent Shift - ஐஸ்க்ரீம் - கோடைத் தெருக்களில்… - அசட்டு தைரியம் - சந்திப்பு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட MG Marg Gangtok - மார்க்கெட் உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வெள்ளி, 26 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“I think they should list shopping as a cardiovascular activity. My heart never beats as fast as it does when I see a ‘reduced by 50 percent’ sign.” — Sophie Kinsella, Confessions Of A Shopaholic (2009 American Film). 


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


******



சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் Gகாங்டாக் நகரில் புத்தமத வழிபாட்டுத் தலம் ஒன்றையும், ஒரு சிறு அருவியையும் பார்த்த பிறகு எங்கள் வாகனங்கள் அனைத்தும் நகரின் பிரபலமான மார்க்கெட் ஆன MG Marg நோக்கி விரைந்தன.  மலைப்பகுதிகளில் உள்ள எல்லா நகரங்களிலும், குறிப்பாக ஷிம்லா, டார்ஜிலிங், நைனிதால் போன்ற மலைவாசஸ்தலங்களில் ஆங்கிலேயர்கள் Maal Road என்ற பெயரில் கடைகள் வரிசையாக அமைத்து இயற்கை எழிலை ரசித்தபடி அங்கே உலா வர ஏதுவாக அமைத்து இருந்தார்கள்.  அதே போல சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இலும் ஆங்கிலேயர்கள் ஒரு மால் ரோடு அமைக்கவில்லை என்றாலும் தற்போது அந்த நகரில் MG Marg என்ற பெயரில் ஒரு பிரபலமான ஷாப்பிங் பகுதி அமைந்திருக்கிறது.  விதம் விதமான கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் என மிகவும் அழகான இடமாக உருவாக்கி இருக்கிறார்கள்.  சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இன் இதயம் போன்றது இந்தப் பகுதி என்றும் சொல்லலாம். 



மொத்தமே ஒரு கிலோ மீட்டர் நீளம் தான் இருக்கும் இந்த MG Marg - MG என்ற பெயர் சுருக்கம் இவருடையது என்று நீங்கள் யூகித்து இருக்கலாம் - ஆம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பெயரில் தான் இந்த சாலை அமைத்து இருக்கிறார்கள்.  சாலையின் ஆரம்பத்தில் அவருடைய ஒரு பெரிய சிலையும் இருக்கிறது.  அந்த இடம் பலரும் நிழற்படம் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருக்கிறது. இந்த சாலையின் சிறப்பு என சில விஷயங்களைச் சொல்லலாம். இந்த ஒரு கிலோ மீட்டர் பாதையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை! எச்சில் துப்புவது, குப்பைகள் போடுவது, சிகரெட்-பீடி போன்றவை குடிப்பது என எதற்கும் அனுமதி இல்லை.  மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பதால் எப்போதும் அழகாகவே இருக்கிறது இந்த இடம்.  சுற்றுலாவாசிகள், உள்ளூர் மனிதர்கள் என அனைவரும் நாடும் இடமாக இந்த MG Marg அமைந்து இருக்கிறது.  செவ்வாய் கிழமைகளில் மட்டும் விடுமுறை விடப்படும் இந்த மார்க்கெட் தினமும் காலை 08.00 மணிக்கு திறந்தால் மாலை 07.00 (சில சமயங்களில் 09.00 மணி) வரை கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன.  



மாலை நேரங்களில் இந்த இடமே ஜகஜ்ஜோதியாக இருக்கிறது.  எங்கேயும் ஒளிரும் அழகிய விளக்குகள், தண்ணீர் திவலைகள் திளைக்கும் நீரூற்றுகள், அங்கே வருபவர்கள் அமர்ந்து சூழலை ரசிக்கும் விதமாக, சாலையின் நடுவே அமைக்கப்பட்ட பெஞ்சுகள், அங்கே அமர்ந்து கொண்டு சூழலை ரசிக்கும் பெரியவர்களும், யுவதிகளும் என மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்த இடம் முழுவதும்! எங்கள் குழுவினர் அனைவரும் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் படையெடுக்க, நான் மீண்டும் தனியாக உலா வந்தேன்.  நிறைய கடைகள் - உணவு வகைகள், துணி வகைகள், அலங்காரப் பொருட்கள், பெண்களுக்கான விஷயங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள், மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் என பல விஷயங்கள் அங்கே விற்பனை ஆகின்றன.  விதம் விதமான தேயிலை தூள் மட்டுமே விற்கும் கடைகளும் நிறையவே அங்கே பார்க்க முடிந்தது.  அந்தக் கடைகளுக்குள் நுழைந்தால் விதம் விதமான தேநீர் வாசம்! 



சில கடைகளில் தேநீர் வாசம் என்றால் பல கடைகளில் அங்கே விற்கப்படும் விதம் விதமான உணவுப் பொருட்களின் வாசம் அங்கே உலா வரும் சுற்றுலாவாசிகள்/உள்ளூர்வாசிகளின் மூக்கில் நுழைந்து தங்களுக்கான வாடிக்கையாளர்களை வலைவீசிப் பிடிக்கின்றது. நாள் முழுவதும் பல இடங்களை பார்த்து விட்டு வந்த பின்னர், இந்த அழகான சூழலில் நடந்தபடியே பாரம்பரிய உணவு வகைகளை சுவைப்பதோடு, அந்த இடத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து சூழலை ரசிக்கலாம் என்பதும் நல்லதொரு வசதி.  பல சுற்றுலாவாசிகள் இங்கே வந்தாலும், உள்ளூர்வாசிகளும் இந்த இடத்தில் நிறைந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாலைப் பொழுதும் இங்கே வந்து பொழுதைப் போக்குவது அவர்களது வாடிக்கையாக இருக்கிறது.  பெரும்பாலான கடைகள் பச்சை வண்ணத்தில் மிளிர்கின்றன.  சாலையின் ஒரு ஓரத்தில் சுற்றுலா பயணிகள் தகவல் மையம் இருக்கிறது. அதன் அருகே ஒரு தற்காலிக மேடையும் அமைத்து இருக்கிறார்கள்.  அந்த மேடையில் அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.  நாங்கள் சென்ற நேரம் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்து, தங்களது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.  



நீண்ட நேரம் இந்த சாலையில் நான் உலாவிக் கொண்டிருந்தாலும், எதுவும் வாங்கவில்லை.  என்னுடன் வந்திருந்த மற்ற அலுவலர்கள் அனைவரும் எதை எதையோ வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.  திரும்பவும் விமானத்தில் பயணிக்கும் போது பொருட்களின் எடை அனுமதிக்கப்பட்ட 15 கிலோவை தாண்டிவிடும் என்று எனக்குத் தோன்றியது.  ஆனால், குழுவாக இருப்பதால் என்போன்றவர்கள் பொருட்கள் குறைவாக வைத்திருந்தால் பிரச்னை இருக்காது என்பதும் மனதில் ஓடியது.  நான் பல கடைகளில் மகளுக்கு ஏதேனும் வித்தியாசமான பொருட்கள் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒன்றிரண்டு கைப்பைகள் பிடித்திருக்க, அவற்றை படம் எடுத்து அனுப்பி வைத்தேன்.  ஆனால் மகளுக்கு  அது அவ்வளவாக பிடித்திருக்கவில்லை என்பதால் வாங்கவில்லை.  அதுவும் நல்லதற்கே! மகளுக்கும் மனைவிக்கும் எது பிடிக்குமோ அவர்களே வாங்கிக் கொள்வது நல்லது தானே.  சிறிது நேரம் அந்த சாலையின் ஓரத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடியே ஒரு தேநீர் அருந்தினேன்.  ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனபிறகும் என்னுடன் வந்தவர்கள் அவர்களது ஷாப்பிங் முடித்திருக்கவில்லை.  



நான்கு ஐந்து பேர் என்றால் வாகனத்தில் சேர்ந்து பயணித்து இருக்கலாம்.  தனியாக வாகனம் அமர்த்திக் கொள்ள எனக்கு மனதில்லை.  ஒரு கிலோ மீட்டர் தொலைவு தானே, மலைப்பாதையில், மேலும் கீழும் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டேன் - இருக்கவே இருக்கிறது Google Maps. பொதுவாக சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது மட்டுமல்ல, நடந்து செல்லும் போதும் Google Maps பயன்படுத்தினால் சில சமயங்களில் நன்றாக சுற்றவைத்துவிடும்! ஆனால் இந்த முறை பிரச்னை ஏதும் இல்லாமல் நேரடியாக எனது தங்குமிடத்திற்கு என்னால் Google Maps உதவியோடு சென்று சேர முடிந்தது.  ஆனால் அந்தப் பாதைகளில் பெரும்பாலும் தெரு விளக்குகள் இல்லை - இருந்தாலும் மிகவும் மங்கலாக இருந்தது.  தனியாக நடக்கும்போது, எதிரே பார்க்கும் உள்ளூர் வாசிகள் ஏனோ ஒரு வித விரோதத்துடன் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.  எனக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்றாலும், வட கிழக்கு மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு அவர் நடந்து வந்த போது சில தொல்லைகள் இருந்ததாம்.  அவர் பாதி வழி நடந்து வந்தபின்னர் தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஒரு டாக்ஸி பிடித்து வந்ததைச் சொன்னபோது, நல்லவேளை எனக்கு பிரச்னை ஏதும் இல்லாமல் போனதே என்று நினைத்துக் கொண்டேன்.  



தங்குமிடத்திற்கு வந்து சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொண்ட பிறகு இரவு உணவுக்காக தங்குமிடத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று சேர்ந்தேன்.  நல்ல வேளையாக மதியம் இருந்தது போல அதிக கூட்டம் இல்லாமல் நாங்கள் மட்டுமே இருந்ததால் நின்று நிதானித்து, Buffet முறையில் வைக்கப்பட்டு இருந்த உணவை கவனித்து, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு சில நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவியபடி உண்ண முடிந்தது.  அடுத்த நாள் காலையில் விரைவாக தங்குமிடத்திலிருந்து புறப்பட வேண்டும் - நீண்டதொரு பயணம் காத்திருந்தது - என்பதால் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று கதவை தாளிடாமல் தூங்க ஆரம்பித்தேன் - எனது ரூம் பார்ட்னர் எப்போது வந்தார் என்று கூட தெரியாமல் நல்ல உறக்கம்! இப்படியாக சிக்கிம் தலைநகர் Gகாங்டாக் நகரில் எனது ஒரு நாள் கழிந்தது.  அடுத்த நாள் எங்களுக்கு என்ன அனுபவங்களைத் தந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…