செவ்வாய், 23 மே, 2023

கதம்பம் - வீடு திரும்பல் - ஓவியம் - பகோடா - PS 2 - கல்லூரி வாசல் - கனவை நோக்கி - பொது - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


STOP BEING AFRAID OF WHAT COULD GO WRONG AND START BEING EXCITED ABOUT WHAT COULD GO RIGHT. 


******


வீடு திரும்பல் - 3 May 2023: 



தலைநகர் தில்லி பயணம் முடித்து சென்னையில் இரண்டு தினங்கள் உறவினர்களுடன் செலவிட்டு, இரவு ஒன்பது மணியளவில் கூட்டை வந்தடைந்தோம்! குளித்து விட்டு படுத்தது தான் தெரியும். வீடு என்னும் சொர்க்கம் எங்களை ஆழ்ந்த நித்திரையில் அரவணைத்துக் கொண்டது..🙂


புத்துணர்வான காலையில் வழக்கமான வேலைகளை துவங்கியாச்சு! ஹலோ fm உடன் இணைத்துக் கொண்டேன். பெரிதாக டஸ்ட் இல்லை! அதற்கு ஏற்றாற் போல் ஊருக்கு கிளம்பும் போதே எல்லாவற்றையும் கவர் செய்து விட்டு தான் சென்றிருந்தேன்..🙂 பால், தண்ணீர், காய்கறி என்று அடுத்தடுத்த வேலைகளில் என்னை பிணைத்துக் கொண்டேன்..🙂


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 5 May 2023: 



மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு…


******


மழையும் பக்கோடாவும் - 6 May 2023: 



தினமும் மாலை 3:30 மணியானால் போதும் இருட்டத் துவங்கி சிறிது நேரமாவது மழை பெய்கிறது! இது கடும் கோடைக்காலம் தானா!!!


இன்றைய மழைப்பொழுதில் சுடச்சுட பிரெட் பக்கோடா ஏலக்காய் டீயுடன்!


******


PS -2 - 7 May 2023: 


நேற்று நாங்களும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டோம்! ஆட்டோவுக்கு காத்திருந்து நேரமாகிக் கொண்டே வந்ததால் சிறிது தூரம் நடந்து சென்று வழியில் கிடைத்த ஆட்டோவைப் பிடித்து படம் துவங்க ஒரு நிமிடம் இருக்கும் போது அங்கு சென்று விட்டோம்!


முதல் பாகத்தைப் போலவே இரண்டிலும் பிரம்மாண்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். படம் பார்த்த நம் நட்புகள் எழுதிய reviews என்னை ஓரளவு யூகிக்க வைத்திருந்தது தான்! ஆனால்!!!


ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு விதமாக கதை கொண்டு செல்லப்பட்டு முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு உள்ளது! மூலக்கதையை புத்தகத்தில் ரசித்து ஸ்வாசித்தவர்களால் நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ள இயலாது!


புத்தகத்தை இன்னும் வாசிக்காமல் கதையை மட்டும் கேட்டு அறிந்து கொண்டு படம் பார்த்த என்னாலே இதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை! குழப்பங்களும், கேள்விகளும் தான் உண்டானது! எதையும் நாம் நேரில் பார்க்கவில்லை! கல்வெட்டுகளும், சான்றுகளும், ஆய்வுகளும், செவிவழி செய்திகளும் தானே கதைகளை உருவாக்குகிறது! 


இன்னும் விடுவிக்க வேண்டிய கதைமுடிச்சுகளை அடுத்த பாகத்தில் சொல்வார்களோ??? பெரும் சரித்திரத்தை படமாக எடுத்து நம்மை அக்காலத்திற்கு அழைத்துச் சென்றதற்கு நாம் பாராட்டுகளைச் சொல்வோம்! 


******


கல்லூரி வாசல் - 8 May 2023 : 


ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களை சந்திக்க  வந்திருக்கிறேன்! ஆம்! மகளின் கனவு பலித்து விட்ட செய்தி தான் அது! அவள் விருப்பப்பட்ட துறை சார்ந்த கோர்ஸில் கல்லூரியில் அவளை சேர்த்து விட்ட மனநிறைவில்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


எப்படியாவது அவளின் நியாயமான கனவை நிறைவேற்றி வைத்து விட வேண்டும்!  இல்லையென்றால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவளுக்குள் ஏற்படுத்திட வேண்டும்! என்று பல குழப்பங்களும், கவலைகளும் என்னுள் இருந்தது! அவளையும் அதற்கு தகுந்தாற்போல் தயார் செய்து கொண்டு தான் வந்தேன்!


இன்று தேர்வு முடிவுகள் வரும் முன்பே நாங்கள் சேர்க்க விரும்பும் கல்லூரிக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் நான் நின்றிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  முடிவுகள் வெளிவந்தவுடன் அதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்து விடலாமே என்று..🙂 


ஒரு பெரும் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு இதோ அதை  நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் பதிவிடுகிறேன். 


******



கனவை நோக்கி....! - 9 May 2023 : 



மகள் ஏழாம் வகுப்பிலிருந்தே இந்தத் துறையில் தான் படிப்பேன் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தாள்! அப்போது அதை நாங்கள் பெரிதாக எண்ணவில்லை! குழந்தைகளின் கனவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று தான்  எண்ணியிருந்தோம்! நானும் என் சிறுவயதில் அப்படித்தானே இருந்தேன்...🙂 


அவள் தன் குறிக்கோளில் உறுதியாக  இருக்கிறாள் என்று பின்பு எங்களுக்கு தெரிய வந்தது முதலாக அவளிடம் இதுகுறித்து கேள்விகளைக் கேட்டும், இணையத்தில் தேடிப் பார்த்தும் விவரங்களை சேகரிக்கத் துவங்கினேன். இது பரந்து விரிந்த துறை என்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளில் தனித்தன்மை காண்பிக்கக்கூடிய துறை என்பதும் புரியத் துவங்கியது!


கற்பனையும் கலைத்திறமையும் உடையவர்களுக்கு ஏற்ற துறை என்று  புரிய வந்ததால் மகளின் கனவுக்கு தோள் கொடுத்தோம்! இது தான் படிக்கணும்! இவ்வளவு மார்க் தான் எடுக்கணும்! என்று என்றுமே நாங்கள் சொன்னதில்லை! எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உறுதியாக இருப்பதால் அவளின் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்க எண்ணியிருந்தோம்!


இனி! அவளின் வாழ்க்கை அவள் கையில்! பிடித்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டுடன் கற்று வாழ்வில் வெற்றி பெற எங்கள் பிரார்த்தனைகள் உடனிருக்கும்!


******

பொது - 16 May 2023 


ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வேலையுடன் என்னை பிணைத்துக் கொள்வதாகத் தான் செல்கிறது! மகளின் கல்லூரி அட்மிஷனை முடித்து விட்டதால் அந்த டென்ஷன் இல்லை! இதோ இன்று தான் பள்ளியிலிருந்து T.C வாங்கி வந்தோம்! 


வழியில் பார்த்த மாம்பழ அக்காவிடம் நலம் விசாரித்ததும், 'மல்கோவா வாங்கிட்டு போய்யா! நல்லதா பார்த்து போட்டுத் தரேன்!' என்றார்..🙂 ஒரு கிலோ வாங்கிக் கொண்டேன்.



மகள் தன் ஹேண்ட் பேகின் ஸ்ட்ராப் போய்விட்டதால் வீட்டிலிருந்த மணிகளைக் கொண்டு ஸ்ட்ராப் போல் பின்னி தயார் செய்தாள்.


மதியநேரத்தில் ப்ரைமில் சில படங்களைப் பார்ப்பதும் இடையில் சற்றே கண்ணயர்ந்து போவதுமாக நாட்கள் நகர்கிறது!


மனதில் அசைபோட வைத்த படமாக DaDaவைச் சொல்லலாம்! எதார்த்தமான கதை! ஹீரோ கவின் சிறப்பாக நடித்திருக்கிறார்!  


சமந்தாவுக்காக பார்த்த படமென்றால் அது Shakunthalam!  நமக்கு தெரிந்த கதை தான் என்றாலும் இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த எடுத்த நல்ல முயற்சி என்று சொல்லலாம்!நடிப்பில் கன்னங்கள் துடிக்க பார்த்த சரித்திர படங்களுடன் இதை ஒப்பிட முடியாது...🙂 நடிப்பில் ரொம்பவே சுமார் ரகம் தான்!


சென்னையில் தம்பி வீட்டில் பார்த்த இரண்டு படங்கள் என்னவென்றால் ஒன்று பத்து தல....! சிம்பு படம்! கடைசியில் ஸ்கீரினில் யாருமே இருக்கப் போவதில்லை என்று தான் நினைத்தேன்...🙂 எல்லோரையும் வீழ்த்துவதும் அதற்கு ஒரு நியாயம் சொல்வதும் தான் கதை! 


இன்னொன்று RRR.. பிரம்மாண்டமும், கதைக்களமும், காட்சியமைப்பும் வியக்க வைத்தது! 


படம் பார்க்கும் ஆர்வம் எனக்கு மிகக்குறைவு தான்..🙂 கடந்த ஒரு வருடமாக டிவியும் நாங்கள் பார்ப்பதில்லை..🙂



Snacksக்கு பதிலாக தினமும் ஏதோ ஒரு சுண்டலுடன் தேநீரும் எடையை குறைத்தே தீரணும் என்ற முடிவில் இருப்பதால் மாலைநேரங்களை நடைப்பயிற்சியுடன் கடந்து அன்றைய பொழுதை இனிமையாக்கி கொள்கிறேன்! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

14 கருத்துகள்:

  1. ரோஷ்ணி ஓவியம் நன்று.  நீண்ட நாட்களுக்குப்பின் மறுபடி அந்த கசப்பான அனுபவத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்...  பொன்னியின் செல்வனைத்தான் சொல்கிறேன்!!!!
    விரும்பிய இடத்தில் படிக்க இடம் கிடைப்பது வரம்.  சந்தோஷம்.  வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      பொன்னியின் செல்வன் சினிமா - கசப்பான அனுபவம் :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வழக்கத்துக்கு மாறான நீண்ட பதிவு... ரசித்தேன். மகளுக்கு வாழ்த்துகள். இந்தத் துறையில் பிரகாசிக்க இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. ரோஷ்ணி ஓவியம் அருமை. Fashion design துறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு
  4. மகளுக்கு பிடித்த துறை கிடைத்ததில் மகிழ்ச்சி மேடம்.
    அதில் அவர் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
    பிற அனைத்து அணுபவங்களும் வாசிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
    PS2 வை நூல் வாசித்த என் போன்றவர்களால் பார்க்க முடியாது. ஏர்க்கெனவே முயர்ச்சித்து தூங்கிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ரோஷ்ணிக்கு அவள் விரும்பிய துறை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஆதி.

    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். Fashion Designing ல் நல்ல எதிர்காலம் உண்டு. நிறைய வ்ளர்ந்து வருகிறது. அதுவும் கற்பனை வளம் இருந்தால் நிறைய செய்யலாம். ரோஷ்ணிக்கு அது மிக எளிது! ரோஷ்ணி செய்திருக்கும் கைப்பையின் நீளமான பிடி அதுவே சிறந்த உதாரணம்!

    ரோஷ்ணியின் ஓவியம் நன்று.

    பக்கோடா, சுண்டல்!! ஆஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் விரிவான கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை. முகநூலில் முன்பே படித்து விட்டேன்.ரோஷ்ணியின் ஓவியம், கைவேலை எல்லாம் அருமை. Fashion Designing தான் என் மகளும் படிக்க ஆசைபட்டாள்.

    ரோஷ்ணிக்கு பிடித்த கல்வி அதில் நிறைய தனித்திறமைகளை காட்ட நல்ல வாய்ப்புகள் இருக்கிறது, வெற்றிபெறுவார் ரோஷ்ணி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் மகள் வரைந்துள்ள ஓவியம் மிகவும் நன்றாக உள்ளது. அவரது கைவேலைகளும் அருமை. அதில் அவர் திறமைசாலி என்பதை அறிவேன். அவருக்கு என் வாழ்த்துக்களை கூறவும்.

    தங்கள் கைவண்ணத்தில் பிரெட் பக்கோடா, சுண்டல் என அனைத்தும் சுவையாக இருக்கிறது.

    கல்லூரியில் தங்கள் மகளுக்கு பிடித்த துறையில் அவர் சேர்ந்தது மகிழ்ச்சி. வாழ்த்துகள். அவர் வாழ்வில் நல்ல வெற்றிகள் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....