மத்தியப்பிரதேசம் அழைக்கிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்தியப்பிரதேசம் அழைக்கிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜனவரி, 2012

ஜான்சியில் ரயில் இஞ்சின்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-27]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26) 

பத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம்.  எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று.  முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன். 

இப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு.  இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள். 



இஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.

இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள்.  இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.  ஒவ்வொரு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது. 

அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு.  1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம். 



ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.  நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.  அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம். 



என் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர்.  ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார்.  இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு. 

தன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம்.  கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.  ஒன்றுமே புரியவில்லை.  சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்….  இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை….  J

இரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம்.  எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம்.  அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.

இப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். 

நான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன்.  பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன். 

என்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் செய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். 



மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

டிஸ்கி:  இந்த பயணத் தொடர் முடிந்துவிட்டதே என்பதில் எனக்கும் வருத்தம் தான்…  இப்போது தான் மீண்டும் ஒரு பயணம் தொடங்கி இருக்கிறதுஇதுவும் மத்தியப் பிரதேசம் தான்…  ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர்[ட்].  இது பற்றிய குறிப்புகள் இன்னும் சில நாட்கள் கழித்து எழுதுவேன்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

எங்கோ மணம் வீசுதே…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-26]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25) 



காலையிலேயே எழுந்து விட்டதால் எங்கள் தங்குமிடத்தின் மிக அருகிலேயே பேத்வா நதிக்கரையில் அமைந்திருக்கும் புந்தேலா ராஜ குடும்பத்தினருக்கான சத்ரிகளைப் பார்க்க நானும், இன்னும் மூன்று நண்பர்களும் சேர்ந்து கிளம்பினோம். 

வெளியே வந்தால் யார் மேல் என்ன கோபமோ தெரியவில்லை பேத்வா நேற்றை விட இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறாள்.   அன்றைய தினம் ராம்ராஜா மந்திரில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் இருக்கிறதாம். அதனால் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தெல்லாம் நிறைய மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் வந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள். 

சரி நதிக்கரைக்குச் செல்லலாம் என மக்கள் கூட்டத்தில் நாங்களும் முட்டி மோதிச் சென்றால், செல்லும் போதே ஒரு வித நாற்றம் நாசியை எட்டியது.  முந்தைய நாள் இரவில் நடனம் பார்த்தபோது தூரத்தே வீசிய நாற்றம் இப்போது அருகினில். பூச்சி தான் நாற்றம் பரப்பும் எனச் சொன்ன தங்குமிட நிர்வாகி சொன்னது பொய் என சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம்.

பேத்வா நதிக்கரை ஓரம் முழுவதும் மனித எச்சங்கள்…. பூச்சித் தொல்லைக்கு எதுவுமே செய்யாத நிர்வாகம் இந்த மனிதர்களுக்கும் எந்தவித ஏற்பாடுகளும் செய்யவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாயிற்று.  நதிவரை சென்று கை-கால்களையாவது நனைக்க வேண்டும் என்ற எண்ணமே அகன்றது.  எனவே அங்கிருந்து விரைந்து வெளியே வந்து விட்டோம்.

வெளியே வரவும் கூட மக்கள் வெள்ள அலையைக் கடந்துதான் வர வேண்டியிருந்தது.  தெருவெங்கும் ஆங்காங்கே மக்கள் கிடைத்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.  காலைக் கடன்கள் முடித்து பேத்வா நதியில் குளித்து, உடை மாற்றி, அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தனர். 



நாங்கள் நால்வரும் ஒரு வழியாக சத்ரிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன இந்த சத்ரிகள்.  மொத்தம் 14 கட்டிடங்கள் இருக்கின்றன இங்கே.  அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நிலையில் சேதங்களுடன் கண்டது மனதிற்கு வருத்தமாய் இருந்தது.  ஷிவ்புரியில் நாங்கள் கண்ட ராஜா-ராணி குடைகள் பகுதியில் சொல்லி இருந்த சத்ரிகள் போலில்லாது இங்கே சுத்தமாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. 

இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாய் மத்தியப்பிரதேசத்திற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகள் ஏராளம். காரணம் அங்கிருக்கும் கஜுராஹோ. இந்த கஜுராஹோ செல்லும் வழியில் ஓர்ச்சா இருப்பதால் அந்த வெளிநாட்டு பிரயாணிகளில் பெரும்பாலானவர்களும் இந்திய பிரயாணிகளில் சிலரும் அங்கு வரும்போது அவற்றால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ இந்த கட்டிடங்களை பராமரித்தால் இன்னமும் நிறைய பிரயாணிகளை ஈர்க்க முடியும்.



அதுவும் வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் இருந்து இவர்கள் டாலர்களில் வசூலிக்கும் தொகைக்கு நிச்சயமாய் ஏதாவது நல்லது செய்ய முடியும்.  சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள்  வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன்.  நீங்க என்ன நினைக்கறீங்க!

இந்த நினைவுகளோடு தங்குமிடம் திரும்பினோம்.  மற்றவர்களும் எழுந்து தயாராகி வரவே காலை உணவு முடித்து ஓர்ச்சாவிலிருந்து எங்களின் கடைசி இலக்கான ஜான்சி நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தோம்.  ஜான்சி நகரத்தில் நாங்கள் பார்த்த இடம் பற்றிய பகிர்வு அடுத்த பகுதியில்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்
வெங்கட்.

டிஸ்கி:  அடுத்த பகுதியில் இத்தொடர் முடியும்….  :) அடுத்த பகுதியில் வேறு ஒரு அறிவிப்பு காத்திருக்கிறது…. :)  காத்திருங்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

எங்கெங்கு காணினும் பூச்சியடா!


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-25]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24) 


ஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம்.  ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது. 

உத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம்.  கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல்.  அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன.  அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான்.  தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.



ஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு.  நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது.  ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள்.  இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.

அதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள்.  அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல.  நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது.  அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். 

அப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார்.  இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார்.  நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.  நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார்.  அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம். 

நிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள்.  அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை.  மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.



ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார்.  நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம்.  நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது.  அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம். 

மறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள்.  அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்... தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா!  இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள்.  மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம். 

வெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள்.  மேலும்  பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…

நாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம்.  அவை பற்றி அடுத்த பகிர்வில்…..

மீண்டும் சந்திப்போம்….

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி-1: பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை :)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.