புதன், 3 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - பகுதி இரண்டு - திருச்சியிலிருந்து சென்னை வரை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கடலோரக் குருவிகள் - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



படம்: இணையத்திலிருந்து...


இந்தப் பயணத் தொடரின் முதல் பகுதிக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் திருவரங்கம் இரயில் நிலையம் வந்து முன்பதிவு செய்திருந்த பல்லவன் விரைவு இரயில் வரக் காத்திருந்தேன். எத்தனை எத்தனை பயணங்களில் இப்படியான காத்திருப்பு பல பகிர்வுக்கான விஷயங்களைத் தந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். இந்தப் பயணத்திலும் பகிர்வுக்கான விஷயங்கள் நிறையவே கிடைத்தன. அப்படிக் கிடைத்த ஒரு சில விஷயங்களுடன் பதிவினைத் தொடர்கிறேன். 


அடாவடி:



படம்: இணையத்திலிருந்து...

ஜன்னல் சீட்டு தான் எப்போதும் முன்பதிவு செய்வேன். என்னவோ அது அப்படியே எனக்கே கிடைத்து விடும் என்று ஒரு நினைப்பு. எப்படியும் “நாங்க family ஆக வந்து இருக்கோம். நீங்க அந்தப் பக்கம் இருக்க aisle சீட் எடுத்துக்கோங்க!” என்று ஒருவர் வரப் போகிறார்….  அது தெரிந்தே இருந்தாலும் ஏனோ ஒவ்வொரு முறையும் ஜன்னல் சீட்டு முன்பு செய்கிறேன் - அது இரயிலாக இருந்தாலும் சரி விமானப் பயணமாக இருந்தாலும் சரி. 


இதோ பல்லவன் விரைவு ரயிலில் சென்னை நோக்கி பயணம்…. வழக்கம் போல ஜன்னல் சீட்டு தான் முன்பதிவு செய்து இருந்தேன். திருவரங்கம் இரயில் நிலையத்தில் வண்டி வந்ததும் ஏறி உள்ளே வந்தால் என் இருக்கையில் ஒரு பெண் - நல்ல உறக்கத்தில்…. பக்கத்தில் இருந்த ஆணும் உறக்கத்தில். இந்தப் பக்கம் இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர் சொன்னார் - “நீங்க ஓரத்துல இருக்க சீட்ல உட்காருங்க!” Request லாம் கிடையாது. நேரடியா order தான்… இரயில் முழுக்க அவர்களுக்கே சொந்தம் என்பது போல நிறைய பேர் வந்து இருந்தார்கள். மூடர்களிடம் பேசி பலன் இல்லை என்பதால் ஓர இருக்கையில் அமர்ந்து பயணித்தேன். 


பல சமயங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. நம் மன அமைதியை நாமே கெடுத்துக் கொள்வானேன்? 


ஊடகங்கள் செய்யும் மாயம்:


இரயிலில் அடாவடி குடும்பத்தினர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். Non Stop Nonsense :) 


ஏதோ இவர்களைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தான் இன்றைய முதல்வர் எல்லா வேலைகளையும் செய்கிறார் என்பது போல தகவல்களை பகிர்ந்தார் அவர்களில் ஒரு பெண்…. எல்லா செய்திகளும் ஏதோ ஒரு YouTube, Instagram பக்கத்தில் வெளிவந்த விஷயங்கள்… வெளியிட்டவர்களும் நிச்சயம் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அல்ல.  ஆனால் அதைப் பார்த்த இந்தப் பெண்மணி, தானே அந்த இடத்தில் இருந்து பார்த்தது போல தகவல்களை அள்ளி வீசினார்…


ஆனாலும் இவர்களைப் போல இருப்பவர்களுக்கும் கேட்பது அனைத்தும் உண்மை தான் என்று நம்பும் கூட்டமும் இருக்கிறது என்பது தான் வேதனையான உண்மை. அரசியல் தளத்தில் நடப்பவை அனைத்திற்கும் பல காரணங்கள், பல உள்குத்து விஷயங்கள் இருக்கும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்வதில்லை என்பதை எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் நம் மக்கள்…


லேட் லத்தீஃப்:



படம்: இணையத்திலிருந்து...

வடக்கில் அலுவலகம், பொது இடம் என எல்லா இடங்களுக்கும் எப்போதும் Late ஆக வருபவர்களை லேட் லத்தீஃப் என்று அழைப்பது வழக்கம். இன்றைக்கு நான் வந்த பல்லவன் விரைவு (?) வண்டி அப்படி லேட் லத்தீஃப் ஆக வந்தது. 11.30 மணிக்கு தாம்பரம் வர வேண்டிய வண்டி அங்கே வந்து சேர்ந்தது 12.30 மணி சுமாருக்கு தான். வெளியே புதிதாக கட்டுமானங்கள் நடக்கிறது போலும் - இரண்டு கிலோ மீட்டர் நடந்தது போல தெரிந்தது - அதுவும் ட்ரெக்கிங் bag உடன்! வியர்வை மழை… Red Taxi App வழி பதிவு செய்ய போக வேண்டிய இடத்திற்கு 236-257 என்று காட்டியது. துரை என்ற பெயர் கொண்ட ஓட்டுநர் வந்தார்…


வந்து இறங்கும்போது Gpay தானே என்று கேட்டு, 553 ரூபாய் என்றார்… என்னது 553/- ஆ என்றால், பிறகு சொல்கிறார்…… இல்லை இல்லை 253 தான் என்று! கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால் அவர் கேட்ட தொகையை அனுப்பி இருப்பேன். வழி முழுக்க தனக்குத் தானே புலம்பல்…  எல்லோரையும் ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே தான் இருந்தார்… சில நேரங்களில் சில மனிதர்கள். வேறென்ன சொல்ல?



படம்: இணையத்திலிருந்து...

ஒரு வழியாக சென்னை விமான நிலையத்தினை அடைந்து அடுத்த பயணத்திற்காக - அதாவது சென்னையிலிருந்து சண்டிகர் வரையிலான விமானப் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலை அணுகினேன்.  அங்கேயும், விமானத்திலும் கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

3 ஜுன் 2026


1 கருத்து:

  1. அருமையான வாசகம்.

    பயணத்தில் கிடைத்த அனுபவங்களோடேயே பதிவைக் கொண்டு செல்வது சிறப்பு.  சுவாரஸ்யமாய் இருக்கும்.  சுவாரஸ்யம் கூடும்.  அப்புறம் தனியாக பகிர்வோம் என்று தள்ளிப்போட்டால் சமயங்களில் பகிராமலேயே கூட போவோம்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....