செவ்வாய், 23 ஜூன், 2026

கதம்பம் - ரோஷ்ணி கார்னர் - முயற்சி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட பீமா காளி மந்திர், சராஹன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 13 ஜூன் 2026 : 


மகளின் கைவண்ணத்தில் சமீபத்திய ஓவியம் ஒன்று!



******


முயற்சி - 18 ஜூன் 2026 : 



முயற்சி செய்யாமல் இவ்வுலகில் எதுவுமே கிடைக்காது என்பது நாம் அறிந்தது தான்! ஆனாலும் சில நேரங்களில் மனித மனத்தின் இயல்பு ஏதேனும் ஒரு வகையில் அந்த விஷயம் எளிதாக கிடைத்து விட்டால் அல்லது நடந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று தான் எண்ணத் தோன்றும்! முயற்சியும் பயிற்சியும் தானே நம்மை முன்னேற வைக்கும் வழிகள்!


उद्यमेन हि सिध्यन्ति कार्याणि न मनोरथैः।

न हि सुप्तस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगाः।।


மேலே தரப்பட்டுள்ள இரண்டு வரிகளும் சாணக்ய நீதியில் இருந்து ‘முயற்சி’ எனும் சொல்லுக்காக எடுக்கப்பட்டது! சாணக்ய நீதி சொல்லும் விஷயங்கள் அனைத்துமே எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மனிதனை தர்மவழியில் வழிநடத்திச் செல்லும் தத்துவங்கள்! நம் திருக்குறளைப் போல இதிலும் இரண்டடியில் வாழ்க்கை நெறிகள்!


இங்கே முயற்சி குறித்த தத்துவம் சொல்லும் அர்த்தம்  என்னவென்றால் காட்டுக்கே ராஜாவான சிங்கம் என்றாலும் கூட முயற்சி செய்யாமல் அல்லது வேட்டையாடாமல் மானை அதன் வாயில் விழ வைக்க முடியாது. உண்மை தானே! அப்படி முயற்சி செய்த பின் கிடைக்கும் வெற்றிக்கும் மதிப்பும் கூடுதல் அல்லவா!


இரண்டு வருடங்களாக நான் கற்று வரும் மொழியில் அன்றாடம் எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன்! அவையெல்லாம் அர்த்தம்  பொதிந்ததாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும், அதனைக் குறித்த ஆழ்ந்த யோசனைக்குச் செல்லும் விதத்திலும் உள்ளது!


வீட்டுச்சூழல், உடல்நலம், வேலைகள் என்று நெருக்கடிகள் பல இருந்தாலும் புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பதால் தான், நான் மட்டுமல்ல என்னுடன் பயிலும் அனைவருமே ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் அன்றலர்ந்த மலர்களாக வகுப்புக்கு வருகிறார்கள்! கற்றுக் கொள்கிறார்கள்! தேர்வெழுதி அபார வெற்றியும் பெறுகிறார்கள்!


நேற்று மாலை பரபரப்பான வீட்டுவேலைகளுக்கு நடுவே வந்த இனிய செய்தியாக என் தேர்வு முடிவு வெளியானது! கணித ஃபார்முலாக்களை விட கடினமானது சமஸ்கிருத இலக்கணத்தின் நியதிகளும் வழிமுறைகளும்! சில நேரங்களில் தேர்வுக்காக படிப்பதும் அதை மனதில் நிலைநிறுத்துவதும் கடினமாக இருக்கும் போது இதோடு விட்டுடலாமே! யார் நம்மை திட்டப் போகிறார்கள்! என்றெல்லாம் தோன்றுவதும் உண்டு..🙂


ஆனாலும் மனதின் ஏதோ ஒரு உந்துசக்தியால் தொடர்ந்து கற்று வருகிறேன்! இம்முறை இறுதித் தேர்வில் 92% மதிப்பெண்களைப் பெற்று Distinctionல் பாஸ் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்! 


நேற்றைய பொழுதில் என் ஆசிரியரிடம் நன்றி தெரிவித்து மெசேஜ் செய்த போது அவர், இது உங்கள் முயற்சியால் மட்டுமே சாத்தியமானது என்று பதில் அனுப்பியிருந்தார்! இறைவனுக்கும் என் ஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

23 ஜுன் 2026


4 கருத்துகள்:

  1. இன்றைய வாசகத்தின் அறிவுரை கவனத்தில் கொள்ளத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. ரோஷ்ணியின் ஓவியம் அழகாய் இருக்கிறது.  மகளின் ஓவியத்திறமை மேலும் மேலும் மெருகேறி வருவது தெரிகிறது. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.  புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆவலும் முயற்சியும் நம்மை புதுப்பித்துக் கொண்டவ் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  4. சான்ஸ்க்ரிட் மொழித் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருப்பதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....