மாதா வைஷ்ணோ தேவி
பயணம் – பகுதி 13
சென்ற பகுதியில் பார்க்க
வேண்டிய சில இடங்களைப் பற்றிச் சொல்லி இருந்தேன்.
உங்களுக்கும் இங்கேயெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை
வந்திருந்தால் நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறியது என்று சொல்லுவேன்!
கட்ரா நகரிலிருந்து தில்லி
செல்ல இம்முறையும் www.redbus.in தளத்தின் மூலம் தான் முன்பதிவு
செய்திருந்தோம். தில்லியிலிருந்து கட்ரா
வரும்போது கிடைத்த அனுபவங்களை இத்தொடர் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு பதிவாக
வெளியிட்டேன். அப்பதிவு படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அதன் சுட்டி – ரெட் பஸ்ஸும் சினிமாவும். அப்பயணத்தில்
கிடைத்த அனுபவம் போலவே இப்பயணத்திலும் சில அனுபவங்கள். அதை இப்பதிவில் பார்க்கலாம்!
மாலை ஆறு மணிக்கு புறப்பட
வேண்டிய பேருந்து 06.15 மணிக்கு புறப்பட்டது. சரியான சமயத்தில் புறப்பட்டால் நம்
இந்திய நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டு விடுமே! ஓட்டுனர் ஒரு மோனா சர்தார் –
அவருக்கு உதவியாளர் ஒரு சர்தார். மோனா
சர்தார் என்பவர் பகடி அணியாத பஞ்சாபி.
பயணிகள் அனைவரும் வந்ததும் பேருந்து புறப்பட்டது. இம்முறை வந்த பேருந்து
ஒரு Mercedes Benz பேருந்து.
பேருந்து ஓட்டுனர் கைகளில்
அப்படியே விளையாடியது. சர்வசாதாரணமாக 130
கிலோமீட்டர் வேகத்தினைத் தொட்டது பேருந்து.
முன் இருக்கையில் இருந்த எனக்கு அவர் ஓட்டுவதைப் பார்த்தபடியே இருந்ததில்
திகில் இருந்தாலும், அவரது திறமையில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை
பிடித்திருந்தது. பெரும்பாலான விபத்துகள் சில நொடிகளில் நடந்து விடுவதுதானே...
இருந்தாலும் அவரது வேகம் பற்றி பேருந்தில் இருந்த எவருக்குமே கவலை இருப்பது போல
தெரியவில்லை. அனைவரும் தூங்குவதிலும் பேருந்தில் ஓடிக் கொண்டிருந்த ஹிந்தி
படத்திலும் மூழ்கி இருந்தார்கள்.
சென்ற பயணத்தில் yamla pagla deewaanaa-2 பார்த்து நொந்திருந்தது உங்களுக்கு
நினைவிருக்கலாம்! இல்லையா... இதோ ஒரு அப்பதிவில் ஒரு PEEP IN!
“குத்தே, கமீனே, மே தேரா கூன் பீஜாவுங்கா” என டாய்லெட் சீட்டில் அமர்ந்து முக்கியபடியே பேசினால் என்ன குரல் வருமோ அந்த குரலில் பேசும் தர்மேந்திரா, அவரது சத்புத்திரர்களான சன்னி தியோல், பாபி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ”யம்லா, பக்லா, தீவானா பார்ட் – 2” தான் அந்த படம். படம் முழுக்க ஒரே அபத்தம். ஐம்பது பேரை ஒரே ஆளாக சன்னி தியோல் அடித்து வீழ்த்துகிறார்.
இம்முறை போட்ட படம்
தமிழிலும் வந்திருக்கிறது – சூர்யாவின் சகோதரர் கார்த்திக் மற்றும் சந்தானம்
நடித்த படம்! ஹிந்தியில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்தது – இயக்கம் –
நம்ம பிரபுதேவா - படத் தலைப்பு – ரௌடி ராதோர்.
தமிழ் படம் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்!
பெரும்பாலான பயணிகள் வைஷ்ணவ
தேவியை தரிசித்து திரும்புவர்கள் என்பதால் அனைவரின் முகத்திலும் களைப்பு. ஒரு சிலர் உட்கார முடியாது திண்டாட்டம். ஒரு பெண்மணி நடுவே காலை நீட்டியபடி உட்கார்ந்து
கொண்டார். ஓட்டுனரின் உதவியாளர் அவரை
சீட்டில் உட்காரச் சொல்லியபடியே இருந்தார்.
எல்லோரையும் முன் இருக்கையைப் பிடித்துக் கொள்ளவும் சொன்னார் – வேகத்தில்
விழுந்து விடக்கூடும் என்று இப்படி ஒரு எச்சரிக்கை.
ஜம்முவில் சிலரை
ஏற்றிக்கொண்ட பின்னர் வண்டி ஓடிய வேகம் என்னை பயமுறுத்தியது என்று தான் சொல்ல
வேண்டும். அப்படி ஒரு வேகம். பேருந்தினை ஓட்டியபடியே மெல்லிய ஒலியில்
பாட்டுக் கேட்டபடி ஓட்டிக் கொண்டிருந்தார்.
பேருந்தில் இருக்கும் அனைவரும் தூங்க, தூங்காது வந்தது நாங்கள் மூவர் தான் –
ஓட்டுனர், அவரது உதவியாளர் மற்றும் நான்!
பேருந்து அவர் சொன்னபடியெல்லாம் கேட்டது! அப்படி ஒரு வேகம்.
பஞ்சாபி பாடல்கள் ஒலிக்க
அப்பாட்டின் தாளத்திற்கு ஏற்ப இவர் இருக்கையில் இருந்தபடியே நடனமாடிக்
கொண்டிருக்கிறார். அவ்வப்போது உதவியாளரை ஒரு கையால் அணைத்து [ஓயே ஜப்பி பாவ்! – கட்டிப் புடி என்பது தான் இதன் அர்த்தம்!]
அவரையும் நடனமாட வைத்தார். ஒரு கையால் Steering பிடித்து ஓட்டினாலும் அதே வேகம். முழு இரவும் இப்படி இவரது திறமையை பார்த்தபடியே
வந்தேன் – தூங்கவே இல்லை என்பது தான் மிச்சம்.
”அது
எப்படிங்க வண்டி ஓட்டிக்கிட்டே நடனமாட முடியும்?” என்று சந்தேகம் இருந்தால் உங்களுக்காகவே யூவில் தேடி ஒரு காணொளி
இணைத்திருக்கிறேன்! இவங்க ஆடறாங்க பாருங்க!
நடுவழியில் ஒரு உணவகத்தில்
பேருந்து நிறுத்தும்போது இரவு 12 மணி. அந்த
நேரத்திலும் உணவகத்தில் அப்படி ஒரு ஜனத்திரள்.
நாங்களும் ஜோதியில் கலந்து இரவு உணவை முடித்தோம்.
சாப்பிட்ட பிறகு கொஞ்சம்
கண்களை மூடியபடி ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
வண்டி அதே வேகத்தில் சென்றது கண்களை மூடியிருந்தாலும் புரிந்தது. மாலை
புறப்பட்ட பேருந்து அனாயாசமாக வேகம் தொட்டு கட்ராவிற்கும் தில்லிக்கும் இடையே
இருக்கும் தூரத்தினை விரைவாக குறைத்தபடி இருந்தது. அதிகாலை ஐந்தரை மணிக்கே
தில்லியின் மஹாராணா பிரதாப் ISBT அருமே
எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர்.
இறங்கும்போது ஓட்டுனர் என்னிடம் கேட்ட கேள்வி – “நான் தூங்காது அவரையே
கவனித்ததை” அவரும் கவனித்திருப்பதை எனக்கு உணர்த்தியது! அவர் கேட்ட
கேள்வி இது தான் – “வேகமா ஓட்டினாலும் நல்லா ஓட்டினேனா!” என்பது தான்!
”நல்லாதான்
ஓட்டுறீங்க – ஓட்டும்போது நடனமாடுவதை மட்டுமாவது குறைத்துக் கொள்ளுங்கள்! உங்களை
நம்பி 50 பெயரின் உயிர் இருக்கிறது” என அவருக்குச் சொல்லி வந்தேன். வேகம் விவேகமல்ல என்றாலும் இப்படி வேகமாக
பயணிப்பது பிடித்திருக்கிறது!
தில்லியிலிருந்து கட்ரா வரை
சென்று அன்னை வைஷ்ணவதேவியை தரிசித்த அனுபவங்களையும் வேறு சில விஷயங்களையும்
இத்தொடரின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இத்தொடர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். விரைவில் வேறு ஒரு பயணத்தொடரோடு உங்களைச் சந்திக்கிறேன்.
பயணம் இனியது. ஆதலினால் பயணம் செவோம்!
ஜெய் மாதா [dh]தி!
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.








